பதிப்புகளில்

கோவை சர்வதேச படவிழா: உலக சினிமா பெருங்காதலனை உந்தும் கனவுப் பயணம்!

சினிமா மீது பெருங்காதல் கொண்ட 'உலக சினிமா ரசிகன்' பாஸ்கரன், கோவையில் திரைப்பட ரசனையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்.

14th Nov 2017
Add to
Shares
133
Comments
Share This
Add to
Shares
133
Comments
Share

திரைப் படைப்பாளியாக விரும்பி, கால நிர்பந்தத்தால் சினிமா படைப்புகள் மீதான மக்களின் ரசனையை மேம்படுத்துவதில் தன்னை முழுமையாக உற்சாகத்துடன் ஈடுபடுத்தி வருகிறார் 'உலக சினிமா ரசிகன்' என அறியப்படும் பாஸ்கரன்.

'உலக சினிமா ரசிகன்' பாஸ்கரன்

'உலக சினிமா ரசிகன்' பாஸ்கரன்


கோவையில் திரைப்பட இயக்கம் ஒன்றை நடத்திவரும் இவர், பள்ளி மாணவர்கள் முதல் சினிமா ஆர்வலர்கள் வரை பல தரப்பினருக்கும் உலக சினிமாவை உள்ளூர் திரையில் ரசிப்பதற்கு முனைப்புடன் செயல்படுகிறார். வாரம்தோறும் சிறுவர்களுக்குத் தனியாகவும், பெரியவர்களுக்குத் தனியாகவும் திரையிடல்களைத் தவறாது ஏற்பாடு செய்து வருகிறார்.

ஒரு சமூகத்தில் தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு, மக்களின் ரசனையும் கலை சார்ந்த புரிதல்களும் படிப்படியாக மேம்பட வேண்டும். குறிப்பாக, 'ஃபிலிம் அப்ரிசியேஷன்' ஓர் இயக்கமாகவே விரிவடைய வேண்டும். சென்னையுடன் ஒப்பிடும்போது இத்தகைய இயக்கத்துக்கான சாத்தியமே குறைவாக உள்ள கோவையில் பாஸ்கரன் மேற்கொண்டுள்ள முயற்சி அசாதாரணமானது. இவரது 'கோவை ஃபிலிம் சொசைட்டி' எனும் இயக்கத்துக்குப் பின்னால் இவர் கடந்து வந்த பாதையே அதிகம் புழங்கப்படாதது.

சிறுவர்களுக்கான திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்ச்யில் இயக்குநர் பாலாஜி சக்திவேல்

சிறுவர்களுக்கான திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்ச்யில் இயக்குநர் பாலாஜி சக்திவேல்


ஒரு மழைச் சாரலுடன் கூடிய ஞாயிறு மாலை நேரத்தில், வழக்கமான திரையிடலுக்கு முன்பு உரையாடியபோது, ஃப்ளாஷ்பேக்கை நிதானமாக ரீவைண்ட் செய்தார் பாஸ்கரன்.

"தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். திருச்செந்தூரில் பி.ஏ. பொருளாதாரம் படித்தேன். வேலைக்காகவோ அல்லது அறிவுத்தேடலுக்காகவோ படிக்கவில்லை. அது எனக்குப் பிடித்த சப்ஜெக்ட். சிறுவனாக இருக்கும்போதே சினிமாதான் என் சுவாசம். அன்றைக்கு இருந்தச் சூழலில், சினிமாவுக்காக சென்னையில் திரைப்படக் கல்லூரி ஒன்று இருப்பது கூட தெரியாது. தெரிந்திருந்தால் அதில்தான் சேர்ந்து படித்திருப்பேன். அது தெரியாததால் தாத்தாவின் விருப்பப்படி இளங்கலை படித்தேன். ஆனாலும் படிப்பில் ஈடுபாடு இருந்தது.

சென்னைக்கு 1983-ல் வந்தேன். அப்போது இயக்குநர் பாண்டியராஜனின் அசோஷியேட்டாக இருந்த பொன்மணி ராஜன் எனது நண்பர். 'ஆண்பாவம்', 'மனைவி ரெடி' ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றவில்லை என்றாலும், படப்பிடிப்பு முழுவதிலுமே இருந்தேன். பிறகு, பொன்மணி ராஜனுக்கு 'ஆயுசு நூறு' என்ற படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு உருவாவதற்கு நானும் ஒரு காரணம். ஆனால், அவருடன் கருத்து வேறுபாடுகள் வலுத்தது. ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்தித்ததால் நான் கோவை வந்துவிட்டேன். வணிக சினிமாவுக்கான முயற்சி தோல்வியுற்றதால், சினிமா சார்ந்த தொழிலுக்கு மாறினேன்.

அது வீடியோ கேசட் காலம். மும்பைக்குச் சென்று ஆங்கிலப் படங்களின் வீடியோ கேசட்டுகள் வாங்கி வந்து இங்கிருக்கும் வீடியோ லைப்ரரிகளுக்கு விற்பனை செய்தேன். சினிமாவில் நேரடியாக ஈடுபட முடியாமல் போய்விட்டாலும், அது தொடர்புடைய தொழிலாகவே இதைக் கருதிச் செய்தேன். பிறகு, தமிழில் ஒரிஜினல் வீடியோ கேசட்டுகள் வர ஆரம்பித்தன. அதில் விநியோகஸ்தராக இருந்தேன். அந்த கேசட்டுகளில் விளம்பரம் சேர்க்க ஆரம்பித்தோம். கோவையிலுள்ள பெருநிறுவனங்களில் விளம்பரங்கள் அனைத்தின் வீடியோ கேசட் விளம்பரங்களுமே என் மூலமாகவே போகும். இப்படி விளம்பர ஏஜென்சியில் இயங்க ஆரம்பித்த பிறகு, விளம்பரங்களைத் தயாரிக்கவும் செய்தேன். அதன்பின் தொழில்நுட்பங்களைக் கற்க ஆரம்பித்து விளம்பரப் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

வளர்ந்துவரும் தொழில்முனைவர்களுக்கு விளம்பரப் படங்கள் எடுக்க வேண்டிய நிலை. அவர்களது போட்டியாளர்களோ பெரிய நிறுவனங்களாக இருப்பார்கள். நான் 'டிஸ்கவுண்ட்' சோப்புக்கு விளம்பரப் படம் உருவாக்குகிறேன் என்றால், 'ரின்', 'ஏரியல்' போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டிபோட நேரிட்டது. அதற்காக, அவர்களது விளம்பரப் படங்களுக்கு இணையாகவே தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு விளம்பரப் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். சிறிய நிறுவனங்கள் என்றாலும் தரமான விளம்பரப் படங்களைத் தர ஆரம்பித்தேன். உள்ளூர் நிறுவன விளம்பரங்களும் கவனம் ஈர்க்கத்தக்க வகையில் இருப்பதற்கு முக்கியப் பங்கு வகித்தேன். லோக்கல் தன்மை இல்லாமல் பார்த்துக்கொண்டேன். உதாரணமாக, ஈரோட்டில் இருந்து 'சாய்பாபா' காபிக்கு விளம்பரம் எடுத்தேன் என்றால், 'ப்ரூ' விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் பயன்படுத்துவேன். அப்படி 100-க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் படங்கள் எடுத்திருக்கேன்.

இந்தியில் முன்னணியில் இருக்கும் ஒளிப்பதிவாளர் வி.மணிகண்டன், மறைந்த ஜீவா, ரமேஷ், ரேண்டி, பாலசுப்ரமணியெம், திரு முதலான பலரும் எனது விளம்பரப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.

அந்தக் காலக்கட்டத்தில் மலேசியா சென்று அங்கிருக்கும் தமிழர்களுக்கு விளம்பரப் படங்கள் எடுத்தேன். அப்போது, திரைப்படம் எடுக்கும் முயற்சி ஒன்றை மேற்கொண்டு, அதில் தோல்வியைத் தழுவினேன். பின்னர் மீண்டும் கோவைக்கு வந்தநேரத்தில்தான் டிவிடிக்கள் உதயமாகின. இதற்குள் உலக சினிமா குறித்த அறிமுகம் கிடைத்ததால், கோவையில் உலகத் திரைப்படங்களுக்கென தனியாக ஒரு டிவிடி விற்பனையகத்தை நிறுவினேன். மும்பையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்து டிவிடிக்கள் வாங்கிச் செல்லும் அளவுக்கு அரிதான வாடிக்கையாளர்களை எனது டிவிடி விற்பனையகம் பெற்றுத் தந்தது. 

இணையம் மிக முக்கிய ஊடகமாக தடம் பதிக்க ஆரம்பித்த சூழலில் வலைப்பதிவுகள், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் இயங்க ஆரம்பித்தேன். அதன்மூலம் மிகப் பெரிய அளவில் கவன ஈர்ப்பு கிடைத்தது. கருந்தேள் ராஜேஷ் போன்றவர்கள் மூலமாக நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்" என்றார் பாஸ்கரன்.

சினிமா மீது தீரா பெருங்காதலுடன் இருந்ததால், தன் தொழிலை அதையொட்டியதாக மாற்றிக் கொண்ட பாஸ்கரன், ஒரு கட்டத்தில் உலக சினிமா மீது ஈர்க்கப்பட்டு, அதற்கான ரசனைத் தளத்தை கோவையில் வலுப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கினார்.
பள்ளியில் திரையிடலின்போது மாணவர்களுடன் உரையாடல்

பள்ளியில் திரையிடலின்போது மாணவர்களுடன் உரையாடல்


இம்முயற்சி குறித்து அவர் கூறும்போது, "உலக சினிமா ரசனையை விரிவுபடுத்துவதற்கும், தமிழில் உலக சினிமா தரத்தில் படைப்புகள் உருவாகவும் ஃபிலிம் சொசைட்டி அமைப்பதற்கான எண்ணம் உதித்தது. கோவையில் 'கோயம்புத்தூர் சினிமா க்ளப்', 'கோணங்கள் ஃபிலிம் சொசைட்டி' ஆகியவை இதற்கு முன்னோடி அமைப்புகள். அதுபோலவே ஓர் அமைப்பை தோற்றுவிக்கும் எண்ணத்தில்தான் 2016-ல் 'கோவை ஃபிலிம் சொசைட்டி'யைத் தொடங்கினேன். ஒளிப்பதிவாளர் செழியன் மூலம்தான் எனக்கு உலக சினிமா அறிமுகம் கிடைத்தது. எனவே, அவரை வைத்துதான் கோவை திரைப்பட இயக்கத்தை தொடங்கினேன்.

இந்த இயக்கத்தின் முதல் பணியாக 'சிறுவர் திரைப்பட விழா' நடத்தினோம். இயக்குநர் பாலாஜி சக்திவேல் தொடங்கிவைத்தார். கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்ட விழாவில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வந்திருந்தனர். இவ்விழா தந்த ஊக்கம்தான் சிறுவர்களுக்கான படங்களைத் தொடர்ச்சியாகத் திரையிட வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது. அதன் காரணமாக, வாரம்தோறும் சிறுவர்களுக்கான திரையிடலை நடத்தத் தொடங்கினோம். நாங்கள் நடத்திய இரண்டாவது திரைப்பட விழாவும் சிறுவர்களுக்கானதே. மூன்றாவதாக, முழுக்க முழுக்க இந்திய சினிமாக்கள் வந்த சிறந்த சிறுவர் திரைப்படங்களைத் திரையிட்டு நடத்தினோம்.

அரசு, தனியார் பள்ளிகளை அணுகி மாணவர்களிடம் நேரடியாகத் திரைப்படங்களைக் கொண்டு சேர்த்தோம். இதில் ஏறத்தாழ 6,000 மாணவர்கள் பயனடைந்தனர். மாணவர்களை நோக்கிய எங்கள் திரையிடல் பயணம் தொடரும்.

குழந்தைகள் திரைப்பட விழாவில், படங்களைக் கண்டு ரசித்த கையோடு குழந்தைகளேயே பேசவைத்தோம். அவர்கள் தங்கள் பார்வையை மிகத் தெளிவாகப் பதிவு செய்தது வியக்கவைத்தது. அதேபோல், பெரியவர்களுக்கான முக்கியத் திரையிடல்களிலும் விவாதங்கள் நடக்கும்.

சமீபத்தில் 'ஒன்பது நாடுகள்... ஒன்பது மொழி... ஒன்பது படங்கள்' என்ற கருப்பொருளில் மூன்று நாட்களுக்கு சர்வதேச திரைப்பட விழா ஒன்றை நடத்தினோம். அதில் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்தது" என்றார் மகிழ்ச்சியுடன்.

image


கோவையில் உள்ள கேசர்ஸ் பன்னாட்டுப் பள்ளியில் சனிக்கிழமைகளில் சிறுவர்களுக்கும், இந்துஸ்தான் கலை - அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமையில் பெரியவர்களுக்கான உலகத் திரைப்படங்களையும் கோவை திரைப்பட இயக்கம் வாரம்தோறும் திரையிட்டு வருகிறது.

இதன் தாக்கம் குறித்து கூறியவர், "பார்வையாளர்களின் வருகை குறைவாக இருந்தாலும், திரையிடல் குறித்த செய்திகள் மக்களை ஊடகங்கள் வாயிலாக சென்றடைகிறது. அதன் மூலமாக படங்களைப் பற்றிய தகவல்கள் போய்ச் சேருகிறது. மக்கள் அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து இணையத்திலோ அல்லது டிவிடிகள் வாங்கியோ பார்க்கின்றனர். இதுவும் ஒருவிதமான பரப்புரைதான். நல்ல படங்களை அடையாளம் காட்டுவதுதான் சினிமா ரசனையை மேம்படுத்துவதில் மிக முக்கியமானது" என்றார் தீர்க்கமாக.

திரைப்பட இயக்கத்தைத் தீவிரமாக நடத்துவதற்கும், உலக சினிமாவுக்கான ரசிகர்களை உருவாக்குவதற்கும் பொருளாதாரத் தேவை என்பது இரண்டாம் பட்சம்தான். முயற்சியும் முனைப்புடான செயல்பாடும் மட்டுமே போதும் என்கிறார் 'உலக சினிமா ரசிகன்' பாஸ்கரன்.

"பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களிடம் இருந்து அரங்குகள் கிடைக்கின்றன. 'ஆல் இந்தியா ஃபிலிம் ஃபெடரேஷன்' போன்ற அமைப்புகளிடம் இருந்தும், வெளிநாட்டுத் தூதரகங்கள் மூலமும் திரைப்படங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். நமக்கு ஈடுபாடும் முயற்சியும் மட்டுமே முக்கிய மூலதனம்" என்று சொல்லும் பாஸ்கரன், அரங்கமும் ஒளிபரப்புச் சாதனங்களும் இருக்கும் பட்சத்தில், எந்த ஊரில் இருந்து அழைப்பு வந்தாலும் நல்ல படங்களைத் திரையிடத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.

கோவைத் திரைப்பட இயக்க உறுப்பினர்கள், நண்பர்கள் நிதியுதவியுடன் குழந்தைகளுக்கான குறும்படம் ஒன்றை உருவாக்கி வரும் பாஸ்கரன், தொடர்ச்சியாக குழந்தைகளை மையப்படுத்தும் திரைப் படைப்புகளைத் தருவதற்கும் திட்டமிட்டுள்ளார்.

இந்த சினிமா பெருங்காதலனுக்கு ஓர் கனவு உண்டு. அதுவும் கோவையை மையப்படுத்திய சினிமா ரசனை சார்ந்த கனவுதான். அது:

"சென்னை, திருவனந்தபுரம் போலவே ஆண்டுதோறும் கோவையிலும் சர்வதேச திரைப்பட விழா நடத்த வேண்டும். அதுதான் உலக சினிமாவை இன்னும் பரவலாகக் கொண்டுசெல்ல வழிவகுக்கும்.

சர்வதேச திரைப்பட விழா நடத்துவதற்கு குறைந்தது ரூ.50 லட்சம் தேவை. சென்னை போலவே கோவைக்கும் அரசின் நிதி கிடைக்கும் பட்சத்தில்தான் இது சாத்தியம். இதற்கான முயற்சியில் நிச்சயம் இறங்குவேன்.

சென்னைப் பட விழாவைப் பொறுத்தவரையில், படத் தெரிவுகள் சரியாக இருக்காது. இலவசமாகக் கிடைக்கின்ற பேக்கேஜுகளை வைத்து சரிசெய்கிறார்கள். திருவனந்தபுரம் பட விழாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. உலகப் பட விழாக்களிலும், உலக அளவில் விமர்சகர்களை கவனிக்க வைத்த படங்களையும் தேடிப்பிடித்து மக்களுக்குக் காட்டுகிறார்கள். இந்த முனைப்பு துளியும் சென்னை பட விழாவில் இல்லை. கோவையில் சர்வதேசப் பட விழாவை நடத்த முடிந்தால், கேரள வழியையே பின்பற்றுவேன்.

சர்வதேச திரைப்பட விழாக்கள் மூலம் எளிய முறையில் எளிய மக்களுக்காக எடுக்கப்பட்ட தரமான சினிமாவை நம் மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். இதுதான் அசல் சினிமா என்பதைக் காட்ட முடியும். இதை நோக்கி அவர்களது ரசனையை இழுக்கும்போது, இங்கும் தரமான படைப்புகள் மிகுதியாக வெளிவரும். இந்தக் கனவை நோக்கிதான் என் பயணம் தொடரும்."
Add to
Shares
133
Comments
Share This
Add to
Shares
133
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக