பதிப்புகளில்

உயிர்களிடம் நமக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?

YS TEAM TAMIL
10th Jul 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

'பத்ரா' எனும் ஒரு நாய்க்குட்டிக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. ஆனால், நாட்டு மக்கள் அனைவரின் மன உணர்ச்சிகளையும் இவள் தூண்டியுள்ளாள். இவள், என் 'ஷேரு' போலவே இருக்கிறாள். இவளைப் பார்த்ததும், எஸ்பிசிஏ மருத்துவமனையில் நான் என் ஷேருவைப் பார்க்க சென்ற ஞாபகம், என் நினைவுக்கு வந்தது. அப்பொழுது அவனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அந்த சின்ன அறையில், அவனை சுற்றி நாய்களே இருந்தன. என்னை பார்த்ததும், என்னிடம் ஓடி வந்தான். நான் அவன் தலையை தட்டி கொடுத்தேன் . அவன் கண்களை பார்த்தபோது, என்னை நம் அபார்ட்மெண்டுக்கே கூட்டி சென்று விடுங்கள் என்று கேட்பதுபோல் இருந்தது. நான் டாக்டரிடம் பேசினேன். ஆனால் இவன் உடல்நிலை குறித்து, அவரால் உறுதியாக எதுவும் கூறமுடியவில்லை. நான் திரும்பி செல்லும்போது, பத்ராவை போலவே, அவன் கண்கள் என்னையே தேடிக் கொண்டிருந்தன. அவனுக்கு குணப்படுத்த முடியாத கொடிய கட்டி இருந்தது.

image


ஷேருவும் இவள் கலர் தான். ஆனால் இவளை விட உயரமானவன். அவன் வயது எனக்கு சரியாக தெரியாது. அவனும் என் அபார்ட்மெண்ட்டில் தான் வளர்ந்து வந்தான். நான் முதல் முறை அவனைப் பார்த்தபோது, ஆரோக்கியமாக இருந்தான். என் இரண்டு நாய்க்குட்டிகளை நான் வாக்கிங் கூட்டி செல்லும்போது, எங்களை பின்தொடர்ந்து அவனும் வருவான். அவனுக்கென்று யாரும் இல்லை. அவனே அவனைப் பார்த்து கொள்வான். சில நேரங்களில் என் நாய்க்குட்டி அவனை வம்புக்கு இழுக்கும். ஆனால் என்றுமே அதனுடன் அவன் மோதியது இல்லை. எங்களிடம் இருந்து சற்று தொலைவிலே அவன் நடந்து வருவான். வேறு எந்த நாய்களையும் எங்களை நெருங்க விடமாட்டான். என் நாய்க்குட்டிகளோடு விளையாடும் நாய்களையும், குரைக்கும் நாய்களையும் இவன் துரத்துவான். நான் பார்க்கும் போதெல்லாம் இவன் ஒரு பாதுகாவலன் போல், வேறு நாய்கள் துன்புறுத்தாதபடி என் நாய்க்குட்டிகளைப் பாதுகாப்பான். இவன் யாரையும் கடித்தது இல்லை. எனினும், அப்பார்ட்மெண்ட்டில் சிலர் இவனுக்கு எதிராக இருந்தனர். அவனை அப்பார்ட்மெண்ட்டில் இருந்து வெளியேற்ற நினைத்தனர்.

ஒரு நாள், நான் அவன் தலையை தடவி விடும்போது, அவன் முடி மிகவும் சொரசொரப்பாக இருந்தது. அதை நான் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அவனுக்கு அதிகமாக முடி கொட்டுகிறது என்பதை சில நாட்கள் கழித்துதான் உணர்ந்தேன். எனக்கு தெரிந்த கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன். எதாவது தொற்றாக இருக்கும் என்று எண்ணி, அவர் மருந்துகள் கொடுத்தார். அந்த மருந்துகளை அவன் சாப்பிட, பால் மற்றும் உணவில் அவற்றை கலந்து வைத்தேன். சில நாட்களில், நல்ல மாற்றம் தென்பட்டது. நன்கு முடிகள் வளர ஆரம்பித்தன; அவனும் ஆரோக்கியமாகத் தெரிந்தான். பின்பு ஒரு நாள் காலையில், அவன் கழுத்தில் காயம் இருப்பதை பார்த்தேன். அந்த காயம் சீழ் பிடித்து இருந்தது. அவனுக்கு வலி இருந்திருக்கும். ஆனால், அவன் அழுது இதுவரை நான் பார்த்ததில்லை. என் டாக்டரிடம் மறுபடியும் கேட்டுப்பார்தேன். காயத்தின் படங்களை டாக்டருக்கு காட்டினேன். அவர் ஒரு ஆயின்மெண்ட் கொடுத்தார். நானும் அதை அவனுக்கு போட்டுவிட்டேன். நான் தொடும் போதெல்லாம் வலித்தாலும், என்னை தடுக்காமல் வலியை பொருத்துக் கொண்டான். டாக்டர் என்னிடம் அவனை, எஸ்பிசிஏ நாய்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லமாறு பரிந்துரைத்தார். நான் அம்புலன்சுக்கு கால் செய்தேன். அவர்கள் வந்து அவனைக் கூட்டிச் சென்றனர். அவனுக்கு போக விருப்பமே இல்லை, பயந்துகொண்டே சென்றான்.

இரண்டு அடுக்கு மாடி கட்டிடத்தின் மேல் இருந்து வீசப்பட்டும், பெரியதாக காயமின்றி பத்ரா உயிர் தப்பியது, அவள் அதிர்ஷ்டம்தான். அவளது பின்னங்கால் காயத்துடன் முறிந்து உள்ளது. ஆனால் மூன்று வாரங்களில் அவள் சரியாகி விடுவாள். மேல் இருந்து வீசப்பட்டு பத்து நாட்கள் ஆகியும், இந்த மிருகத்தனமான செயலின் அதிர்ச்சியிலும், ஏற்பட்ட காயத்துடனும் எப்படி அவள் வாழ்ந்திருப்பாள் என்பது யாருக்கும் தெரியாது. கொடிய வலியை அனுபவித்து இருப்பாள். வலி குறையும் வரை, நகராமல் இருந்திருப்பாள். பத்து நாட்கள் தண்ணீர், சாப்பாடு ஏதுமின்றி அவதி பட்டிருப்பாள். இந்த பத்து நாட்கள் அவள் எப்படி வாழ்ந்திருப்பாள் என்று யாரேனும் நினைத்து பார்த்தீர்களா? சிறிய உடல் பிரச்சனைக்கெல்லாம் டாக்டரை தேடி செல்லும் நாம், இதை பற்றி எல்லாம் யோசித்து கூட பார்ப்பதில்லை. நம்மை கவனித்துக் கொள்ள, எப்பொழுதும் நமக்கென குடும்பத்தில் யாரேனும் ஒருவராவது இருப்பர். ஆனால் நாய்களுக்கு?

நான் தினமும் உணவு வைக்கும் மற்றோரு நாயும் ஒன்றிருந்தது. திடீரென என் பிளாடு இந்த நாய் வருவதை நிறுத்திவிட்டது. சில நாட்களுக்கு அவனை தேடி பார்த்தேன். ஆனால், அவன் இருப்பதற்கான ஒரு தடயமும் அங்கில்லை. ஒரு நாள் நான் என் காரில் ஏற சென்றபோது, ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அந்த நாய் என்னை நோக்கி வேகமாக ஓடி வந்தது. நானும் காரிலிருந்து இறங்கினேன். அது, காணாமல்போன அவனேதான். நான் அவனைப் பார்த்து விசில் அடித்தேன். அவன் வலியில் இருப்பது போலிருந்தான். அவனைச் சுற்றி பார்க்கும்போது, அவன் வாலில் இருந்து இரத்தம் கொட்டியது. அதன் வால் வெட்டப்பட்டு இருந்தது. இத்தனை மாதங்கள் கழித்து, இவன் எதற்கு என்னை தேடி வர வேண்டும்? என்னிடம் ஏதேனும் மருத்துவ உதவி எதிர்ப்பார்க்கிறனா? இல்லையேல், கஷ்டத்தில் இருக்கும்போது என் வீட்டில் சவுகரியமாக ஒரு இடம் கிடைக்கும் என்று அவனுக்கு தெரியுமா? என்னை நானே கேட்டுக்கொண்டேன். அவனால் பேசவோ, சொல்லவே முடியாது. நானே யூகித்து பார்த்தேன்!

மற்றொரு சம்பவமும் நடந்தது. ஒரு நாள் இரவு அலுவலகத்தில் இருந்து வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் நாய், அதன் முன்னாடி ஒரு குட்டியுடன் என் வீட்டிற்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதற்கு முன்பு, நான் அவற்றை பார்த்தது இல்லை. நிறைய நாய்களுக்கு நான் தினமும் உணவு வைப்பது உண்டு. ஆனால் இந்த நாய்களை நான் கண்டதில்லை. அவற்றின் அருகில் சென்றேன். அந்த குட்டி அசையாமல் இருந்தது. தொட்டு பார்த்தபோது, நாடி துடிப்பு இருந்தது. அதற்கு உடம்பு சரியில்லை. அந்த நாய்க்குட்டிக்கு உணவு அளித்தேன். பாலும் குடிக்க வைத்தேன். ரொம்ப சிரமப்பட்டு அந்த நாய்க்குட்டி அதன் வாலை ஒரிரண்டு முறை ஆட்டியது. பொதுவாகவே குட்டியின் அருகில் சென்றாலே, அதன் அம்மா குரைக்கும். ஆனால் அந்த தாய் நாய் குறைக்கவே இல்லை. நான் டாக்டர்க்கு போன் செய்தேன். நள்ளிரவு ஆனதால், மறுநாள் காலையில் வரச் சொன்னார்.

மறுநாள் காலை நான் எழுந்து, வெளியில் சென்று பார்த்தபோது, அந்த நாய்க்குட்டிக்கு மூச்சு இல்லை. அதன் அம்மா அதனைப் பாதுகாத்து அருகில் அமர்ந்திருந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இந்த தாய் நாயானது ஏன் அதன் குட்டியை என் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும்? என் முகவரியை அதற்கு யார் சொன்னது? வேறு இடத்திற்கு ஏன் அவை செல்லவில்லை? அவளால் கூறவும் முடியாது! அவள் மொழியும் எனக்கு புரியாது! ஆனால் மோகு மற்றும் சோட்டு ஆகிய என் நாய்க்குட்டிகளை, என்னால் புரிந்து கொள்ளமுடியும். அவை சந்தோஷப்பட்டால், எனக்கு தெரியும். அவற்றிக்கு பசி வந்தாலும், எனக்கு தெரியும். மோகுவிற்கு வயிறு சரியில்லையெனில், இரவாக இருந்தாலும் என்னை எழுப்பி வெளியே அழைத்து செல்லும்படி சொல்லும்; நான் வெகு நேரம் வெளியே இருக்கும் நிலை வந்தால், நான் அவற்றிடம், நான் சீக்கிரம் வந்து விடுவேன், கவலை படாதீர்; நான் வரும்வரை நீங்கள் யாரையும் கஷ்டப்படுத்தாமல், அமைதியாக இருக்க வேண்டும் என்றும் சொல்லுவேன். ஆனால், தெரு நாய்களை புரிந்து கொள்ளுவது கடினமாக இருக்கிறது.

மறுநாள் என் நாய்க்குட்டிகளை கண்டு பயப்படும், என் அப்பார்ட்மெண்ட் லேடி ஒருவரை பார்த்தேன். அவர் என்னிடம், உன் நாய்குட்டிகள் இங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கின்றன; அவை என்னை கடிக்கலாம் என்றார். எனக்கு சிரிப்பாய் இருந்தது. நாய்கள் கடிக்கும் என்பது பொதுவான ஒரு கருத்தாகும். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது என்னையும் ஒரு பெண் நாய் கடித்தது. இருப்பினும், அவை மீது எனக்கு இருக்கும் அன்பு, என்றுமே குறைந்தது இல்லை. ஒவ்வொரு வருடமும் அன்பு அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது. அவை இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியாது. நான் கூப்பிடும்போதெல்லாம், அவை எப்பொழுதும் அவற்றின் வாலை ஆட்டும். சில தினங்களுக்கு முன், லூதியானா எனும் ஊர்க்கு அருகில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில்ல, நான் ஒரு நாயை சந்திதேன். அது என்னுடன் கைகுலுக்கியது. பல வருடங்களுக்கு முன் என்னை கடித்த ராணி எனும் நாயும் தீயது அல்ல. அவள் பசியாக இருந்து இருக்கிறாள். அப்போழுது என் கையில் பிரட் இருந்தது. அதை பறிக்க முயன்றாள். அதனால், என்னை கடிக்க நேரிட்டது. நாய்கள், மனிதர்களை கடிக்கும் அல்லது துன்புறுத்தும் எனில், ஏன் ஷேருவும் என் நாய்க்குட்டிகளும் இதுவரை என்னை கடித்தது இல்லை? நான் உணவு வைத்த அனைத்து நாய்களுமே ஏன் என்னை கடித்ததில்லை? அவை அப்படி செய்யதில்லை. அதற்கு பதில், நான் அவற்றுடன் இருக்கும்போது, அவை சவுகரியமாக உணர்கின்றன. அவை என் மேல் தாவி குதித்தது உண்டு; என்னைப் பார்த்து குரைத்தது உண்டு. அப்படி செய்வது என்னை காயப்படுத்துவதற்கு அல்ல. அவற்றின் அன்பை வெளிப்படுத்தி, என்னுடன் விளையாட ஆசைப்படுவதை தெரியப்படுத்துவர். மனிதன்-விலங்கு மோதி கொள்வதை இதுவரை நான் பார்த்ததில்லை.

ஷேரு, அவன் கடைசி நாட்களில் அவன் வாழ்ந்த இடத்திலேயே வாழ ஆசைப்பட்டு இருக்கிறான். நான் அவனுக்கு உதவி செய்ய வேண்டுமென்றே இருந்தேன். யாருக்கு தெரியும், நான் அவனை மருத்துவமனையில் சேர்த்தது கூட, அவனுக்கு வாழ பிடிக்காமல், அவன் வாழ்நாளைக் குறைத்து இருக்கலாம்? மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் உயிரோடு இருந்தான். பின் ஒரு நாள் மதிய வேளையில், மயங்கி விழுந்தான். அவன் இறப்பைக் குறித்து டாக்டர் கூறும்போது, எனக்கு மனம் உறுத்தியது. என் வீட்டின் முன் உயிர் இழந்த நாய்க்குட்டியை நினைக்கும்போதும், குற்ற உணர்ச்சி தோன்றுகிறது. அந்த நள்ளிரவில் அவனை காப்பற்றுங்கள் என்று என்னைத் தேடி வந்த தாய் நாயிடம், அவனை அந்த இரவில் மருத்துமனைக்கு கூட்டி செல்லாததற்கு, நான் மன்னிப்பு கேட்டு ஆக வேண்டும். நான் உணவு வைத்த அனைத்து நாய்களுக்கும், அவை வசிக்க ஒரு பாதுக்காப்பான இடம் கொடுக்காமல் போனதற்கு, வருத்தப்படுகிறேன். மரியாதையுடன் உயிர் வாழும் உரிமை அவற்றிக்கும் உண்டு. சமூகம் முன்னேற்றத்தைக் குறித்து கேள்வி எழுப்பும் நாம், இவற்றின் வலிகள் மற்றும் கவலைகள் குறித்து என்றாவது புரிந்து கொண்டதுண்டா? உலகத்திலேயே அன்புமிக்க படைப்புகள் இந்த நாய்கள் தான், நான் கூறுவதை நம்புங்கள். எல்லையில்லா அன்பை மட்டுமே அவற்றிக்கு காட்டத் தெரியும்; மனிதர்கள் போல கைமாறு எதிர்ப்பார்க்கத் தெரியாது.

நாய்கள் கடிக்கும் என்பதற்காக, அவற்றை குறை கூறாத மனிதர்களை இதுவரையில் நான் பார்த்தது இல்லை. அவை கடிப்பது இல்லை என்று நான் கூறவில்லை; நாம் அவற்றை பயமுறுத்தும் போதோ, துன்புறுத்தும் போதோ, அல்லது அடிக்கும் போதுதான், அவை நம்மை கடிக்க வரும். எங்கும் உணவு கிடைக்காத நிலையில், கடும் பசியிலும், தாகத்திலும் அவை கடிக்க வரும். கிராமங்களில் எல்லாம், பழங்காலத்து பழக்கவழக்கமாகவும், மதத்தின் மூட நம்பிக்கைகளில் ஒன்றாகவும், நாய்களுக்கு உணவு அளித்து வருக்கின்றனர். அங்கு விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு இருந்து வருகிறது. ஆனால் நகரங்களில், நாம் அவற்றை அனாதைகள் ஆக்கி விட்டோம், அவர்களுக்கென பாதுக்காப்பான இடம் கொடுத்தது இல்லை; மோசமான சூழலில் அவை வாழுகின்றன, பெரும்பாலும் ரோட்டில் இருக்கின்றன; எந்த நிமிடமும் மோட்டார் வாகனங்களில் அடிப்பட்டு, நசுங்க வாய்ப்புண்டு. மனிதர்கள் ஆகிய நாம் நாய்கள் மீது நம் மிருகத்தனத்தை காட்டுகிறோம்; அவற்றை துன்புறுத்துகிறோம். அவற்றிக்கு கொடுமைகள் செய்து, அவற்றையே குறை கூறிக் கொண்டிருக்கிறோம். இப்படி சித்தரவதை அனுபவிக்க, அவை செய்த குற்றம் என்ன? 

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக