பதிப்புகளில்

வெள்ளம் மற்றும் வறட்சி: தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை குறித்த ஒரு புரிதல்!

தமிழ்நாடு ஒவ்வொரு வருடமும் வெள்ளம் மற்றும் வறட்சியை சுழற்சியாக சந்தித்து வருகிறது. பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்பை முறையாக நிர்வகிக்காதது இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

22nd May 2017
Add to
Shares
64
Comments
Share This
Add to
Shares
64
Comments
Share

தமிழ்நாடு வானிலை முரண்பாடுகளைக் கொண்டது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டதாகும். 2015-ம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளம் வந்தது. உடனுக்குடன் அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு கடுமையான வறட்சி காணப்பட்டது. வழக்கம் போல தென்மேற்கு பருவமழை சற்றே கைகொடுத்தபோதும் வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவான 440.4 மிமீ-க்கு பதிலாக மிகக்குறைந்த அளவான 168.3 மிமீ அளவே கிடைத்தது. இதனால் மாநிலத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சராசரி மழையைவிட 62 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டது.

காவேரி முதல் கொல்லிடம் வரையிலும் டெல்டா மாவட்டங்களில் எண்ணற்ற அணைகளும் நீர்பாசன கால்வாய்களும் முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. மதுரையிலுள்ள வைகை அணை முதல் திருநெல்வேலியின் மணிமுத்தாறு அணை வரை பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் சேமிப்பு மிகவும் குறைந்துள்ளது. இதன் விளைவாக பயிர் நாசமானதன் காரணமாக 102 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் அல்லது தீவிர மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பண்ணை தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள்.

பட உதவி: கூகிள்

பட உதவி: கூகிள்


தமிழ்நாட்டின் இப்படிப்பட்ட இக்கட்டான நிலைக்கு பருவமழை மட்டும்தான் காரணமா? மாநிலங்களுக்கிடையேயான நீர் பகிர்வு பிரச்சனை, குழப்பமான மத்திய-மாநில உறவு போன்ற பிரச்சனைகளில் மாநிலம் அதிகம் சிக்கித் தவிப்பதால் நிலையான உள்ளூர் தண்ணீர் வளங்கள் மற்றும் அதன் பராமரிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வரவிருக்கும் விவசாய நெருக்கடி

தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்கிற கூக்குரல் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் துவங்கியது. அந்த சமயத்தில்தான் மாநிலத்தில் 70 சதவீத குறைபாடு இருந்தது. மிகப்பெரிய புயலான வர்தா இதற்கு உதவியது.

காவேரி பிரச்சனையும் வடகிழக்கு பருவமழையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டாலும் பல ஆண்டுகளாக இருந்துவரும் அதிக தீவிரமான பிரச்சனைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் முதலிடத்தில் இருக்கும் நாடுகளில் தமிழ்நாடும் ஒன்று. ஒட்டுமொத்த 385 ப்ளாக்குகளில் 142 ப்ளாக்குகள் நிலத்தடி நீராதாரத்தை அதிகம் சுரண்டுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ரீசார்ஜைவிட நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் வளங்களின் கடுமையான பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் 33 ப்ளாக்குகள் நெருக்கடியான நிலையில் உள்ளதாகவும் மீதமுள்ள 57 ப்ளாக்குகள் நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த குடிநீர் தேவையில் 80 சதவீதமும் மாநிலத்தின் மொத்த நீர்பாசனப் பகுதியில் 70 சதவீதமும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளது என்று தெரிவிக்கிறார் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (MIDS) நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.ஜனகராஜன். மேலும் 90 சதவீத தொழில்கள் நீர் தேவைக்கு நிலத்தடி நீர்தான் ஆதாரமாக விளங்குகிறது. நிலத்தடிநீர் இன்றியமையாதது என்பதும் கிராமப்புற மற்றும் நகர்புற பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் தெளிவாகிறது.

”தற்போதைய சூழலில் நிலத்தடி நீரை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். இன்று நீர் உறிஞ்சப்படுவதும் ரீசார்ஜ் செய்ய்யப்படுவதும் பொருந்தாமல் உள்ளது. ரீசார்ஜ் செய்வதை விட உறிஞ்சப்படும் அளவு அதிகமாக காணப்படுகிறது. இந்த அளவும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.” 

இந்த முக்கிய வளத்தை அசாதாரணமாக செயல்பட்டு சிதைத்தோமானால் நிலங்கள் பாலைவனமாக மாறக்கூடிய நிலை ஏற்படலாம் என்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறையிலிருக்கும் நீர் செறிந்த விவசாய முறை மேலும் பாதிக்கப்படும் என்றும் விவரித்தார் ஜனகராஜன்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்


தமிழ்நாட்டிற்கு வரப்பிரசாதமாக விளங்கும் தொட்டிகள், ஏரிகள், குளங்கள் ஆகிய சிறு நீர் வளங்களை பராமரித்து பாதுகாப்பதுதான் நீர் பற்றாக்குறையையும் பாலைவனமாதலையும் எதிர்கொள்ள சிறந்த வழி என்கிறார் அவர். ஒவ்வொரு கிராமத்திலும் கிட்டத்தட்ட 15-20 சிறிய நீர்நிலைகளான நீர்பாசன குளங்கள், குடிநீர் குளங்கள் மற்றும் கால்நடை குளங்கள் ஆகியவை இருக்கும். மிகப்பெரிய நீர்பாசன தொட்டிகள் உட்பட மாநிலத்திலுள்ள மொத்த நீர்நிலைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவையாகும். இந்த நீர் நிலைகள் தண்ணீரை சேமிப்பதுடன் உள்ளூர் சிறு பகுதியின் காலநிலையை கட்டுப்படுத்துவதிலும் நிலத்தடி நீர் ரீசார்ஜிற்கும் உதவுகிறது. 

”சிறிய நீர் நிலைகளை பாதுகாப்பதும் பராமரிப்பதும் வறட்சிக்கு எதிராக செய்யப்படும் காப்பீடு போன்றதாகும். ஆகவே இதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.” என்கிறார் ஜனகராஜன்.

குண்டாறு வடிநிலப் பகுதியில் மதுரையைச் சார்ந்த வளர்ச்சி நிறுவனமான DHAN ஃபவுண்டேஷன் மேற்கொண்ட நீர்நிலை மேலாண்மைப் பணி இந்தக் கருத்தை வலுவாக ஆதரித்தது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் நீர்பாசனத்திற்காக பரவலாக பயன்பாட்டில் இருந்த தொட்டிகள் முறையற்ற பராமரிப்பு, பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு போன்ற காரணிகளால் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. இருப்பினும் நம்பிக்கை முழுவதுமாகச் சிதையவில்லை.

தொட்டிகளின் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் கிணறுகள் கணிசமான அளவு தண்ணீரை தக்கவைத்துள்ளதால் இழப்பு குறைவதற்கு உதவுகிறது என்கிறார் DHAN Vayalagam (Tank) Foundation தலைமை நிர்வாகி ஏ.குருநாதன். இந்த ஃபவுண்டேஷன் ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட் (HUL) நிறுவனத்துடன் இணைந்து 2008-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட நேரத்தில் குண்டாறு வடிநிலப் பகுதிகளிலுள்ள 255 தொட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டது. அந்தப் பணியின் பலன்களை தற்போது வெளிப்படையாகப் பார்க்கமுடிகிறது.

”தொட்டிகள் தூர்வாரப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதுடன் நிலத்தடி நீர் ஊறுவதற்கும் உதவும். குண்டாறு பகுதியிலுள்ள கிராமங்களில் பருவமழை தவறியபோதும் பல கிணறுகள் தண்ணீரை தக்கவைத்திருந்ததால் தண்ணீர் தேவைக்கு உதவியது. சீரமைப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 34 தொட்டிகளுக்கருகிலுள்ள பகுதிகளை ஆய்வு செய்கையில் இது தெளிவாகிறது.” என்று குறிப்பிட்டார் குருநாதன்.

இப்படிப்பட்ட சீரமைப்புப் பணிகளின் தாக்கத்தை அறிவதற்கான மதிப்பீடு தற்போது செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் உள்ளது. அலங்காரகுளம், கூடிப்பட்டி, புளியகுளம் ஆகிய மூன்று பகுதிகளில் சீரமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை ஆய்வு செய்கையில் குறைவான மழைபொழிவு இருந்தபோதும் கடந்த இரண்டு வருடங்களில் பருவமழை காரணமாக மக்காச்சோளம், மிளகாய், சோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட முடிந்தது தெரியவந்தது.

அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்கவேண்டும்

ஜனவரி மாத துவக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தபோது வறட்சி காரணமாக ஏற்படும் துயரங்களை குறைக்கும் நடவடிக்கைகளுடன் தூர்வாரும் பணிக்காகவும் சீரமைப்புப் பணிகளுக்காகவும் 3,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வருடம் முழுவதும் தொட்டிகள் மற்றும் குளங்கள் பராமரிக்கும் பணிகள் நடக்கப்படவேண்டும். அதைவிடுத்து தற்போது நிலவும் வறட்சியை கண்டவுடன் அவசரமாக அறிவிக்கக்கூடாது.

வெள்ளம், வறட்சி என்று பிரிவுபடுத்திப் பார்ப்பதற்கு பதிலாக இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றுபடுத்தி ஆய்வு செய்யவேண்டியதன் அவசர தேவை நிலவுகிறது. 2015-ம் ஆண்டின் பருவமழைக்கு முன்பே தொட்டிகளை தூர்வாரி பராமரித்திருந்தோமானால் அதற்குப்பிறகு ஏற்பட்ட வறட்சியை பெருமளவு குறைத்திருக்கலாம் என்கிறார் ஜனகராஜன். மாநிலத்தின் சமீபத்திய வறட்சி அதிகாரிகளின் அக்கறையின்மையையும் அர்ப்பணிப்பின்மையையும் காட்டுகிறது என்கிறார் அவர்.

சேமிப்பு மற்றும் ரீசார்ஜிற்கான போதுமான ஏற்பாடுகள் இல்லாததால் சென்னையில் 2015-ம் ஆண்டின் பெருவெள்ளத்தின்போது 300 டிஎம்சி அடி தண்ணீர் கடலில் கலந்துவிட்டது. இந்த நிலைக்கு முற்றிலும் முரணாக தமிழக மாநிலம் நகரத்தின் தாகத்தைத் தணிக்க கிருஷ்ணா நதியிலிருந்து 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு பக்கத்து மாநிலமான ஆந்திராவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது. 1983-ம் ஆண்டு ஆந்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தப்படி பருவமழையை முற்றிலுமாக நம்பியிருக்கும் தமிழக மாநிலத்தின் தலைநகரமான சென்னையின் நீர் தேவைக்கு ஆந்திர மாநிலம் கந்தலேறு நீர்த்தேக்கத்திலிருந்து 12 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடவேண்டும்.

அக்கறையின்மை மற்றும் அபத்தமான திட்டமிடல்

ஆனால் நகர்புறங்களில் பற்றாக்குறை என்பது முற்றிலும் மாறுபட்டதா? கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் தண்ணீர் குறித்த கண்ணோட்டம் மாறுபட்டிருப்பதாக தெரிவிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமூக சுற்றுப்புற ஆர்வலர் சுந்தர்ராஜன். பல்வேறு தேவைகளுக்கான தண்ணீர் பயன்பாட்டின் வரையறை கிராமப்புறங்களில் முக்கியம் வாய்ந்ததாகும். உதாரணத்திற்கு ஊரணி அல்லது குடிநீர் குளங்களின் பராமரிப்பு கால்நடை குளங்கள் மற்றும் நீர்பாசன தொட்டிகளின் பராமரிப்பிலிருந்து வேறுபட்டுள்ளது. இந்த வேறுபாடு மெல்ல மெல்ல மாறி இன்று கிராம மக்கள் குடிநீரை வாங்குவதைப் பார்க்கமுடிகிறது.

மதுரை மேலக்கல் அருகில் உள்ள கண்மாய்

மதுரை மேலக்கல் அருகில் உள்ள கண்மாய்


மேலும் நகரத்தின் தாகத்தைத் தணிக்க புறநகர் மற்றும் கிராமப்பகுதிகள் தொடர்ந்து சமரசம் செய்து வருகிறது. இதற்கான சிறந்த உதாரணம் புதிய வீராணம் திட்டம். தெற்குப் பகுதியில் 235 கிமீ தூரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னை நகரத்திற்கு தண்ணீர் வழங்க இந்தத் திட்டம் 2004-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த ஏரி காவேரி தொட்டி அமைப்பின் ஒரு பகுதியாகும். காவேரியிலிருந்து வரும் நீரோட்டம் குறைந்தால் தொட்டிக்குள் புகும் தண்ணீரின் அளவும் குறையும். நகரத்தின் தேவைக்காக உள்ளூர் நிலங்களுக்கான தண்ணீர் அங்கே திருப்பிவிடப்படும்போது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் நிலத்தின் வருவாயும் பாதிக்கப்படும். இந்தச் சூழலைதான் தற்போது வீராணத்திற்கு அருகே வசிக்கும் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

சென்னை நகரில் இருக்கும் சேத்துப்பட்டு ஏரி சமீபத்தில் சீரமைக்கபட்டது குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார் சுந்தர்ராஜன். புறநகர் பகுதியின் போர்வெல்களிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் படகு சவாரி வசதிக்காக ஏரியில் நிரப்பப்படுகிறது. இருப்பினும் நீர்த்தேக்கப் பகுதி பராமரிப்பு, உட்பகுதி வடிகால் பராமரிப்பு போன்ற ஏரியின் நீண்டகால சீரமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்வதற்காக ஏரியை அழகுப்படுத்தும் பணியில் மட்டுமே அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். 

”இன்று இப்படிப்பட்ட புரிதலுடைய உண்மையான அக்கறையற்ற சூழலை சந்திக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது இயற்கை முறை மற்றும் அதன் செயல்பாடு குறித்த கவனக் குறைவையே காட்டுகிறது.” என்கிறார் அவர்.

பாரம்பரிய நீர் மேலாண்மை முறைகள் மற்றும் அமைப்புகளை கடந்த சில ஆண்டுகளாக நாம் குலைத்துவிட்டோம் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக நகர்புறங்களில் பல்வேறு தொட்டிகளை ஆக்கிரமிப்பால் இழந்துவிட்டோம். இதனால் நகர்புறங்களில் வசிப்போர் மெட்ரோ நீர் அமைப்புகள் மற்றும் நகர கார்ப்பரேஷன்கள் போன்ற மையப்படுத்தப்பட்ட நீர் வழங்கும் அமைப்புகளை சார்ந்துள்ளனர். நீர்நிலைகள் குறித்த முழுமையாக பார்வை அவசியம். அவை வழங்கும் சூழலை மதித்தும் அவை ஆதரிக்கும் உயிரியல் அமைப்பை கருத்தில் கொண்டும் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். பாதுகாப்பு நடைமுறைகள், புவியியல் மற்றும் நீர்வழி நலன்கள் ஆகியவை கொள்கை ஆவணங்களில் கடுமையாக இணைக்கப்பட்டாலின்றி அடுத்தடுத்த நிகழ்வான வெள்ளம் மற்றும் வறட்சியை அழிப்பது கடினம்.

(ஆங்கில கட்டுரையாளர்: சீதா கோபாலகிருஷ்ணன். இக்கட்டுரை India Water Portal-ல் முதலில் வெளியிடப்பட்டது.)

Add to
Shares
64
Comments
Share This
Add to
Shares
64
Comments
Share
Report an issue
Authors

Related Tags