பதிப்புகளில்

ஜார்கண்ட் பகுதி பழங்குடிப் பெண்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆஹன் ஃபவுண்டேஷன்

பழங்குடிப் பெண்களின் வாழ்க்கையில் புதிய விடியலை ஏற்படுத்துகிறது ஆஹன் ஃபவுண்டேஷன்

YS TEAM TAMIL
4th Oct 2017
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
image


இந்தியாவில் இயற்கை வளங்கள் மிகுதியாக காணப்படும் மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். இந்தப் பகுதி பெண் குழந்தைகள் கடத்தல், நக்சல்கள், மனித உரிமை மீறல்கள், ஏழ்மை போன்றவற்றிக்கு பிரபலமானது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தை இறப்புகள், 68.5 சதவீதம் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள், 77 சதவீதம் முறையற்ற சுகாதாரம் என சமூக வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி மோசமான நிலையில் உள்ளது.

பழங்குடிப் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பன்மடங்காக உயர்ந்துள்ளது. அதிகாரம்ப்பூர்வமான அறிக்கைகளுக்கும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளுக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதால் நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை. ஜார்கண்ட் பகுதியின் புள்ளியியல் விவரப்படி சிஐடி அறிக்கைகள் 2001-2013-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 282 மனித கடத்தல் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கையின்படி 40,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. NCRB அறிக்கையின்படி கடத்தல் சம்பவங்கள் கடந்த வருடத்தில் 110 சதவீதம் அதிகரித்துள்ளது.

பழங்குடிப் பெண்களே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் கடத்தல்களுக்கு மத்தியில் உயிர்வாழவேண்டும் அல்லது பட்டியுடன் சாகவேண்டும். இவ்விரண்டில் ஒன்றே அவர்களது நிலை.

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள பெரும்பாலான பெற்றோர் பெண் குழந்தை பிறந்தால் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஏனெனில் அந்தக் குழந்தைகள் விற்கப்படலாம் அல்லது எட்டு வயதானதும் பெருநகரங்களுக்கு வீட்டு வேலை செய்வதற்காக அனுப்பப்படலாம். இங்கு அவர்களது குழந்தைப்பருவம் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு சிதைக்கப்படும்.

இங்குதான் ஆஹன் செயல்படுகிறது. பழங்குடிப் பெண்களுக்குத் தொழில்முனைவுத் திறன்களை வழங்குகிறது. உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கான ப்ரோக்ராம்களை உருவாக்குகிறது. இவ்வாறு அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இச்சமூகத்தினரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

மோசமான சூழலில் வளர்ந்தார்

45 வயதான ராஷ்மி திவாரிக்கு ஒன்பது வயதிருக்கும்போது அவருக்கு தெரிந்த ஒரே ஆடம்பரம் 3.5 m X 5.5 m வீட்டில் இருக்கும் ஒரு 60W விளக்கு. அவர் முதுகலை பட்டம் பெறும்வரை அந்த வீடுதான் அவரது வரவேற்பரை, படுக்கை அறை, சமையலறை அனைத்தும்.

”என் அப்பாவின் மறைவிற்குப் பின்னரே நான் பிறந்தேன். எங்களது வாழ்வாதாரத்திற்காக என் அம்மா தினக்கூலியாக பணிபுரியவேண்டியிருந்தது. என் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியை வாரனாசியில் செலவிட்டுள்ளேன்.”

பாகுபாடுகளையும் களங்கங்களையும் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் எதிர்த்து போராடவேண்டியிருந்தாலும் தன்னை எதுவும் தடுத்து நிறுத்தவில்லை என்கிறார் ராஷ்மி. ”நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது நிதி நிலையில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நான் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். என்னுடைய நிலைமையை நான் நன்கறிந்தபோதும் நான் எப்போதும் என்னை பலவீனமாக நினைத்ததில்லை. என்னையும் எனது அம்மாவையும் ‘ஏழை’ என்று முத்திரை குத்தும் உதவித்தொகையை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக எனது சுய மரியாதையை பாதுகாத்துக்கொள்ள தீர்மானித்தேன். எனக்குத் தேவையான பள்ளி புத்தகங்களையும் உடைகளையும் வாங்கிக்கொள்ள எனது நடனம் மற்றும் மிமிக்ரி திறனை சீனியர் பெண்களிடம் வெளிப்படுத்தி அதில் கிடைக்கும் தொகையை பயன்படுத்திக்கொண்டேன்.”


image


பசி, வறுமை மற்றும் பாகுபாடுகள் அவரை வலுவாக்கியது. அவர் எப்போதும் அடுத்தவர் தன்னைப் பார்த்து பரிதாபப்படுவதை விரும்பவில்லை. அமெரிக்காவில் US State Department – Fortune mentorship programme-க்குப் பிறகு சமூகத்துறையில் பணிபுரியும் விருப்பத்துடன் தனது ஆர்வத்தை ஆராயத்துவங்கினார். ஒரிசாவின் ஒரு சிறிய கிராமத்தில் நான்கு நபர்கள் அடங்கிய ஒரு பழங்குடி குடும்பத்தை சந்தித்தது திருப்புமுனையாக அமைந்தது. “அந்தக் குடும்பம் உயிர் வாழ மிகக்குறைவான உணவே இருந்தது. மூன்று பெண்களின் அம்மாவிடம் நான் உரையாடுகையில் அவரது மகள்களுடன் பேச விரும்புவதாக தெரிவித்தேன். அவரது மூன்று மகள்களுக்கும் ஒரே ஒரு நல்ல உடைதான் இருப்பதாகவும் அதனால் ஒரே நேரத்தில் மூவரையும் சந்திக்க முடியாது என்றும் ஒவ்வொருவராக சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார்.”

இதைப் பார்த்ததும் ராஷ்மிக்கு அவரது போராட்டமும் கஷ்டங்களும் நினைவிற்கு வந்தது. ஏழு வயதான பழங்குடி சிறுமிகள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு வீட்டு வேலைகளுக்காக விற்கப்படுகின்றனர். இந்தச் சிறுமிகள் 18-20 மணி நேரம் பணிபுரியவேண்டிய சூழல் ஏற்படுகிறது. ராஷ்மி தனது நோக்கம் பழங்குடி மக்களுக்கு உதவுவதுதான் என்பதை உணர்ந்தார். ஆஹன் ட்ரைபல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷனைத் (Aahan Tribal Development Foundation) துவங்க தீர்மானித்தார். பழங்குடிப் பெண்களுடன் தனது பணியை 2011-ம் ஆண்டு துவங்கினார். 2013-ம் ஆண்டு ஆஹன் நிறுவினார்.

எல்லையற்ற தடங்கல்கள்

ஜார்கண்டின் பழங்குடியினர் பகுதியில் பணிபுரிவதில் உள்ள சவால்கள் எல்லையற்றதாக இருந்தது. அவர்களை எளிதாக அணுக முடியவில்லை. பழங்குடிக் குழுவினர் மிகவும் ஒதுக்குப்புறமாக பகுதியில் வசித்தனர். அங்கு கழிப்பறை, மின்சாரம், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள்கூட இல்லை. பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நக்சலைட்கள் பெரும்பாலான இந்த பழங்குடிப் பகுதிகளில் எந்தவித வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்காமல் எதிர்த்தனர். இதனால் ஆஹனின் நடவடிக்கைகள் தாமதமானது.


image


மற்றொரு தடங்கல் குறித்து ராஷ்மி குறிப்பிடுகையில்,

அங்குள்ள மக்களுக்கு எங்களது மொழி புரியாததால் அவர்களது நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. அத்துடன் இந்தியாவிலுள்ள பெருவாரியான பழங்குடிப் பகுதிகள் குறித்து அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவை ஊடகங்களாலோ அல்லது ஆய்வுக் குழுவினராலோ வெளியுலகத்திற்கு காட்டப்படவில்லை. இப்படிப்பட்டச் சூழலில் எங்களது மொழியை புரிந்துகொள்வதுடன் இச்சமூகத்தினருக்காக நாங்கள் மேற்கொள்ள விரும்பும் வளர்ச்சிப் பணிகளில் உதவும் இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் கண்டறியவேண்டியது அவசியமானதாகும்.

மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் பயன் கிடைக்கப்பெறாதவர்கள் பழங்குடியினர். இவர்களது நிலைமையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எடுக்கப்படும் பல்வேறு முயற்சிகள் ஊழலாலும் நேர்மையற்ற ஏஜெண்டுகளாலும் சிதைக்கப்படுகிறது. எனினும் இப்படிப்பட்ட மோசமான சூழலிலும் சில நல்ல விஷயங்கள் உள்ளது என்கிறார் ராஷ்மி. ”பழங்குடிப் பெண்கள் மன உறுதி, திடம், முன்னேறுவதற்கான தீவிர வேட்கை ஆகியவை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்று நான் மதிப்பிடுகிறேன். அவர்களது வாழ்க்கை தனிப்பட்ட முறையில் சிறப்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமல்லாமல் அவர்களது ஒட்டுமொத்த சமூகமும் சிறப்பிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களிடம் காணப்படும் இந்தப் பண்பை ஊக்குவித்து அவர்களது மனநிலையையும் நம்பிக்கைகளையும் மாற்றியமைத்து சிறப்பானவர்களாக உருவாக்க முயற்சிக்கிறது ஆஹன் ஃபவுண்டேஷன்.

விவரிக்கமுடியாத வளர்ச்சி

ராஷ்மி பத்திரிக்கைத் துறையில் பின்னணி உடையவரை பிசினஸ் பார்ட்னராக இணைத்துக்கொண்டார். இதன் மூலம் பத்திரிக்கையினரின் நெட்வொக்குடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் பழங்குடியினர் பகுதியிலுள்ள உள்ளூர்த் தலைவர்களுடன் ஆஹன் ஃபவுண்டேஷனை இணைத்தனர். இதனால் அந்தப் பகுதிகளுக்குச் செல்லவும் ஆஹன் ஃபவுண்டேஷனின் நோக்கத்தை வெளிப்படுத்தவும் முடிந்தது. 


image


ராஷ்மியின் தனிப்பட்ட நிதியுடனும் முயற்சியுடனும் துவங்கப்பட்ட ஃபவுண்டேஷனின் தலைமையகம் இன்று டெல்லியில் உள்ளது. ஒரு குழு உறுப்பினர் உடன் பணியாற்றுகிறார். ஜார்கண்டில் மூன்று மையங்கள் உள்ளன. நண்பர்களிடமிருந்தும் நலம்விரும்பிகளிடமிருந்தும் நிதி பெறப்பட்டு ஆஹன் படிப்படியான வளர்ச்சியடைந்தது. ஃபவுண்டேஷன் பணிகளுக்காக நிதிக்கு இவர்களே முக்கிய பங்களிக்கின்றனர். இருந்தும் கூட்டுநிதி மூலமாகவும் அவார்டுகள் மூலமாகவும் நிதி திரட்டப்படுகிறது. 

ஆஹன் S.M.A.R.T community மாதிரியுடன் பழங்குடி பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பணிபுரிகின்றனர். அதாவது கிராமத் தலைவர் (Sarpanch), ஊடகங்கள் (Media), அதிகாரிகள் (Authority), மதத்தலைவர்கள் (Religious Leaders), பழங்குடி குடும்பங்கள் (Tribal Families) ஆகியோருடன் பணிபுரிந்து மாற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.

மேலும் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து அடிமட்ட அளவில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகின்றனர். இதன் மூலம் பழங்குடிப் பெண்கள் ஆபத்தான சூழல்களில் வளராமல் நிதி நிலையில் சுயசார்புடன் வாழ உதவுகிறது ஆஹன். அவர்களுக்கு வாழ்க்கைத் திறன்கள், தொழில்முனைவுத் திறன்கள், வேலைவாய்ப்புகள், கலை மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்றவற்றை ஏற்படுத்தி அவர்கள் தங்களது உரிமைகளை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவுகிறது ஆஹன்.

பழங்குடி பெண்களுக்கான ஒரு வருட லீடர்ஷிப் ப்ரோக்ரமாக Aahan Fellowship மற்றும் பிரத்யேகமாக பழங்குடி பெண்களுக்காக ஒரு வார ப்ரோக்ராமாக புதுடெல்லியிலுள்ள அரசியல், சமூக மற்றும் தொழில் தலைவர்களை அவர்கள் சந்திக்க வாய்ப்பளிக்கும் விதமாக Udaan போன்றவை இவர்களது குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். 


image


கிராம அளவிலான வழிகாட்டல் ப்ரோக்ராம், க்ளோபல் ட்ரைபல் மென்டரிங் வாக், ஆஹன் ஃபுட்பால் டீம் போன்றவையும் இதில் அடங்கும்.

தாக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்கிற கனவு

தன்னார்வலர்கள் மாதிரியில் செயல்பட்டு நூற்றுக்கும் அதிகமான பெண் தன்னார்வலர்கள் ஒவ்வொரு ப்ராஜெக்டிலும் பணியாற்றினர். இவ்வாறு ரான்சியிலுள்ள லாத்தேஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானா (Jauna) கிராமம் மற்றும் குந்தி (Khoonti), லபுங் (Lapung), கர்ஹ்வா (Garwa) ஆகிய பகுதிகளிலுள்ள 50 கிராமங்களிலும் சுமார் 5000 பழங்குடிப் பெண்களுக்கு ஆதரவளித்துள்ளது ஆஹன்.

”எங்களது நெட்வொர்க்கில் பங்களிக்கும் ‘ஆஹன் ப்ரேவ்ஹார்ட்ஸ்’ எனும் பழங்குடிப் பெண்களே எங்களது பலம். அவர்கள்தான் எங்களது அனைத்து முயற்சிகளையும் உருவாக்கி, திட்டமிட்டு செயல்படுத்துகின்றனர். மாற்றம் வெளியிலிருந்து ஏற்படுவதைக் காட்டிலும் சமூகத்தினுள்ளிருந்து ஏற்படவேண்டும் என்பதை நான் திடமாக நம்புகிறேன்.” என்றார் ராஷ்மி.

2019-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் 150 கிராமங்களில் பணிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது ஆஹன். ஜார்கண்டில் உள்ள சிறுமிகள் சந்திக்கும் இன்னல்களை ஆவணப்படுத்தும் 1 நிமிட வீடியோ உள்ளிட்ட Aahan Fellowship Programme போன்ற ப்ராஜெக்டுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு அரசாங்க பள்ளிகளில் ஒரு தனித்துவமான பெண் சமூகத்தை உருவாக்க விரும்புகிறது ஆஹன்.


image


”பாலினம் சார்ந்த வன்முறையிலிருந்து உயிர்பிழைத்து தங்களது வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தங்களது கிராமத்திலுள்ள மற்ற பெண்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற துணிச்சல் கொண்ட பழங்குடிப் பெண்களுக்கு ஃபெலோஷிப் அளிக்கிறது எங்களது ஃபெலோஷிப் ப்ரோக்ராம்.” இப்படிப்பட்ட முயற்சிகள் மூலம் அடுத்த இரண்டாண்டுகளில் சுமார் 20,000 பெண்களை சென்றடைய திட்டமிட்டுள்ளது ஆஹன்.

ஃபுட்பால் குழுவை விரிவுபடுத்துவது, மறுசுழற்சிக்கு உட்படுத்தபடும் துணிகள் மற்றும் மறுபயன்பாட்டிற்கு உகந்த சானிட்டரி பேட்கள் உள்ளிட்ட பொருட்களை கடைகள் அமைத்து விற்பனை செய்ய பழங்குடி தாய்மார்களை ஊக்குவிக்கப்பது, பழங்குடியினரில் மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான ப்ரோக்ராமை துவங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறது ஆஹன் ஃபவுண்டேஷன்.

நாடு முழுவதும் இந்த பிரிவினரிடம் கவனம் செலுத்த ஊக்குவிக்கவேண்டும் என்பது குறித்து ராஷ்மி குறிப்பிடுகையில்,

”பழங்குடிப் பெண்களின் எண்ணற்ற திறமைகள் கடத்தலில் ஈடுபட்டிருப்போரின் பேராசையால் இரக்கமின்றி அழிக்கப்படுகிறது. இந்தியாவில் கடத்தப்படும் சிறுமிகளில் 70 சதவீதத்தினர் பழங்குடியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கடுமையான உண்மையை உணர்ந்து பாரதத்தின் வெற்றிக் கதையில் நமது பழங்குடி சகோதர சகோதரர்களையும் நாம் இணைத்துக் கொள்ளவேண்டும்.”

ஆங்கில கட்டுரையாளர் : சானியா ராசா

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக