பதிப்புகளில்

நாட்டிற்கு தேவை மழை! மழை நீரை சேமிக்கத் தேவை 'ரெயின்ஸ்டாக்'

Gajalakshmi Mahalingam
28th Dec 2015
Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு.

-திருக்குறள்.

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். நீரை சேமிக்க நாம் புதிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை நம்முன்னோர்கள் நமக்கு வெட்டி வைத்த ஏரி, குளம், கண்மாய்களை பாதுகாத்தாலே போதும் என்பதை உணர்த்தியுள்ளது அண்மையில் பெய்த கனமழை. நீரின் அவசியத்தை வறட்சி உணர்த்தினாலும், அதை சேமிக்கும் திறன் அற்றவர்களாக இன்றைய சமூகம் இருக்கிறது என்பதே நிதர்சனம். இதை உணர்ந்து நீர் சேமிப்பை தன்னுடைய 'ரெயின்ஸ்டாக்' (RainStock) நிறுவனம் மூலம் சேவை கலந்த சமூக தொழிலாக செய்து வருகிறார் தேனியைச் சேர்ந்த தேசிங்குராஜா சக்திவேல்.

image


நீர் சேமிப்பு ஒரு ஒருங்கிணைக்கப்படாத துறையாக இருக்கும் நிலையில் புதிய தொழில்நுட்பம் + புதிய தொழில் வியூகம் வகுத்து இந்தத் துறையில் கால்தடம் பதித்துள்ள சாதனை இளைஞரும், ரெயின்ஸ்டாக் அமைப்பின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சக்திவேலிடம் கலந்துரையாடியது தமிழ் யுவர்ஸ்டோரி:

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்யும் தன்னார்வலராக பணியாற்றிவிட்டு தேனி திரும்பியவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடலைத் தொடங்கியபோது உற்சாகமாக பேசினார் சக்திவேல்.

“நமக்கு ஏராளமான மழை கிடைத்த போதும் நமக்கு ஏன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது? அவற்றை நாம் முறையாக சேமிக்காததே இதற்கு காரணம் என்கிறார் இந்த இளம்தொழில்முனைவர். எதிர்காலத் தண்ணீர்த் தேவையை மக்கள் தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்ளும் முயற்சி தான் ரெயின்ஸ்டாக் டெக்& கன்சல்டன்சி (பி) லலிமிடெட். ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனமான ரெயின்ஸ்டாக், மழைநீர் சேமிப்பு மற்றும் வீணாகும் நீரை இயற்கை முறையில் மறு சுழற்சி செய்யும் பணியை செய்து கொடுக்கும்” என்கிறார் அவர்.
image


சிறு வயதில் தொடங்கிய ஆர்வம்

“சிறு வயது முதலே இயற்கை, மரம், செடி, கொடி, குளம், குட்டை என்று திரிந்தவன் நான். புது வகைத் தாவரங்களை வளர்ப்பதென்றால் குழந்தைப் பருவம் முதலே எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் கிராமம் முழுவதிலும் செடிகள் நடும்திட்டத்திற்கு தன்னார்வலராக சென்றுள்ளேன், அதோடு எங்கள் உறவினர்களின் தோப்புகளை பராமரித்து வந்துள்ளேன்” என்று தன் பிள்ளைப்பருவ செயல்களை நினைவுக் கூர்கிறார் சக்திவேல். இயற்கையோடு ஒட்டிஇருப்பது எப்போதும் தாயின் மடியில் அரவணைப்போடு இருப்பதற்கு சமம் என்பதை உணர்ந்திருக்கிறார் அவர்.

பழனியில் பாலிடெக்னிக் படிப்பை முடித்து விட்டு பி.இ. படிப்பதற்காக மதுரை வந்தார் சக்திவேல். “நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது நேட்டிவ் லீட் நிறுவனர் சிவராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் ‘வைகை நதி சேமிப்பு’ திட்டத்தை பற்றி கூறினேன், இந்தத் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட சிவராஜாவும் என்னுடைய கல்லூரி நிர்வாக இயக்குனரும் தந்த ஊக்குவிப்பால் மற்ற மாணவர்களை சேர்த்துக் கொண்டு செயல்பாட்டில் இறங்கினேன். ஆனால் அந்தத் திட்டம் மிக சவாலானது என்பதோடு பெரிய அளவில் எடுத்துச் செல்ல முடியாததால் அவை முழுமை பெறவில்லை” என்று சொல்கிறார் சக்திவேல். எனினும் முயற்சியை கைவிடாமல் பேராசிரியர் அரவிந்த் மற்றும் தான் படித்த கல்லூரி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய நீர்நிலைகளான கண்மாய், ஏரி, குளங்களை சுத்தப்படுத்தும் களத்தில் இறங்கினார். துரதிஷ்டவசமாக அந்த செயல்பாடுகளும் முழுமை பெறவில்லை.

தோல்விகளில் கற்றுக் கொண்டவை

தொடர் தோல்விகள் மனிதனின் வெற்றிப் பாதைக்கு வழிவகுக்கும் என்பதற்கு விதிவிலக்கல்ல சக்திவேல். நீரை சேமிப்பதற்கு ஒருங்கிணைந்தத் துறை ஒன்று இல்லை என்ற கேள்விக்கு அவர் கண்டுபிடித்த விடை தான் 'ரெயின்ஸ்டாக் டெக்& கன்சல்டன்சி (பி) லிமிடெட்'. மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட வறண்ட நிலங்கள், வீடுகளை மழை நீர் சேமிப்பு மண்டலங்களாக மாற்ற வேண்டும் என்பதே அவரின் நோக்கம்.

“இந்தியாவிற்கு வரப்பிரசாதமாக இருக்கும் மழைநீரை நாம் சேமித்து வைப்பதில்லை. ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமாக பெய்யும் மழையை மனிதர்கள் முறையாக சேமிக்காததால், அவை தொழிலதிபர்கள் கையில் சிக்கிக் கொண்டு தண்ணீர் காசிற்கு விற்கப்படும் அவலநிலை உள்ளது”

என்று சொல்கிறார் அவர்.

ஏன் தேவை ரெயின்ஸ்டாக்?

மழைநீர் சேமிப்பை ரெயின்ஸ்டாக் அமைப்பு மூலம் சேவையாக செய்து வந்த சக்திவேல், 2014ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் அதை ஒரு தொழிலாக செய்து வருகிறார். மழை நீர் சேமிப்பு முறையை தொழில்நுட்ப உதவியுடன் மண்ணின் வளம் மற்றும் எந்த இடத்தில் அவற்றை சேமித்து வைக்கலாம் என்ற ஆலோசனை, கட்டுமானத்தையும் உருவாக்கித் தருகிறார் இந்தப் பொறியாளர். வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மழைநீரை சேமித்து மறுபயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என்பதே ரெயின்ஸ்டாக்கின் நோக்கம். “மழைநீரை சேமிக்க வேண்டும் என்று அரசு கடுமையான சட்டங்கள் விதித்தாலும் மக்கள் அதை முறையாக பின்பற்றவில்லை. வீடுகளில் நாம் ஏற்படுத்தி இருக்கும் மழைநீர் சேமிக்கும் இடங்களை ஆண்டுக்கு ஒரு முறை சரிபார்க்க வேண்டும், அப்போது தான் அது அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும். சிலருக்கு மழைநீர் சேமிப்பு ஏற்படுத்திய இடமே மறந்துவிட்டது” என்கிறார் சக்திவேல். தனி வீடுகளில் கவனம் கொள்ளாமல், ஒரு தெருவையே உள்ளடக்கி மழைநீர் சேமிப்பை ஏற்படுத்தும் கம்யூனிட்டி பேக்கேஜ்களை செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

image


ஜியோசயின்ஸ் முறையில் அனைவருக்கும் ஏற்ற விலையில் கம்யூனிட்டி பேக்கேஜ் திட்டங்களாக இவற்றை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு மழைநீர் சேமிப்பு மையத்தை ஏற்படுத்த வேண்டும், இது கட்டுமானம் தொடர்புடைய பணி என்பதால் நிர்ணய விலை கிடையாது. ஆனால் குறைந்த பட்சம் ரூ.5000 முதலே நாங்கள் இந்தச் சேவையை வழங்கி வருகிறோம் என்கிறார் அவர். மதுரையில் 35 வீடுகளைச் சேர்த்து ஒரு கம்யூனிட்டி பேக்கேஜை உருவாக்கி வெற்றி கண்டுள்ளதாகக் கூறுகிறார் அவர்.

கடந்த ஆண்டு உலக தண்ணீர் தினத்தின் போது மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நீரின் மாசுபாடு, போர்வெல் அளவு, நிலத்தடி நீர்மட்டம் உள்ளிட்டவற்றின் தரம் மற்றும் (TDS, Ph) அளவை ஆராய்ந்து நாங்கள் வெளியிட்ட தோராய திட்ட வடிவம், பலருக்கும் பலன் அளித்துள்ளது என்கிறார் சக்திவேல். பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரெயின்ஸ்டாக் நிறுவனம் ஒரு தொண்டு அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. ரெயின்ஸ்டாக் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் மேனேஜிங் ட்ரஸ்டியாகவும் சக்திவேல் உள்ளார்.

ரெயின்ஸ்டாக்கின் மற்ற சேவைகள்

மழைநீர் சேமிப்பு மட்டுமல்ல, வீட்டில் சமையலறை, குளியலறையில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் நீரை மறுசுழற்சி செய்யும் பணியையும் மேற்கொண்டிருக்கிறார் சக்திவேல். “நாம் பயன்படுத்தி வெளியேற்றும் நீரில் 70% மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடியவை. எனவே வீணாகும் நீரை RBS தொழில்நுட்ப முறையில் மறுசுழற்சி செய்கிறோம், அதாவது ஆற்றைக் கடந்து வரும் அழுக்கு நீரை நாணல் புல்லின் வேரில் உள்ள பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்துவது போல, பயன்பாட்டு நீரை சுத்தப்படுத்தி நிலத்தடி நீரின் அளவை உயர்த்துவது, தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவது போன்றவற்றிற்கு மறுசுழற்சி செய்வதே இதன் சிறப்பு. இதற்கு மின்சாரம் தேவையில்லை, நீரை மறுசுழற்சி செய்யும் போது sludge எனப்படும் சகதிகள் ஏற்படாது” என்கிறார் அவர். நீர் நிலைகளை சுத்தப்படுத்துவதோடு விவசாய நிலங்களுக்கு உதவும் திட்டங்களையும் வகுத்து வருவது அவரின் மைல்கல்லில் ஒன்று எனலாம். 

“கனமழையால் வயல்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி விவசாயப் பயிர்கள் அழிந்து விடுவதைக் கண்டு விவசாயிகள் கவலை அடைவதைப் போக்க எங்களின் புதிய கண்டுபிடிப்பான ஷாஃப்ட் (SHAFT) உதவுகிறது. ஷாஃப்ட்டை, வயலின் ஒரு மூலையில் பொருத்திவிட்டு, அதிக நீர் வயலில் தேங்கும் போது வரப்பை திறந்து தண்ணீரை அதில் விட்டுவிட்டால் போதும், உபரி நீரை அது உறிஞ்சி, பயிரை காக்கும் என்பதே இதன் சிறப்பு.”

முதலீடும் வளர்ச்சியும்

ரெயின்ஸ்டாக்கிற்கான தொடக்ககால முதலீட்டிற்கு தனது நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.3 லட்சம் நிதி பெற்றதாகக் கூறுகிறார் சக்திவேல். மழைநீர் சேமிப்பு எளிதில் லாபம் சம்பாதிக்கும் துறையில்லை, என்பதால் இதில் இது வரை பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியவில்லை என்று சொல்கிறார் அவர். ரெயின்ஸ்டாக் நிறுவனம் மக்களிடம் பெற்று வரும் வரவேற்பை அடுத்து நேட்டிவ் ஏஞ்சல் நெட்வொர்க் மூலம் தொழில்நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் முதலீடு நிதி கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சக்தி.

“ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு தற்போது தான் எங்களுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி கிடைத்திருக்கிறது. இது அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க உதவியாக இருக்கும். ஏஞ்சல் முதலீடு மூலம் முதலீட்டாளர்கள் உதவியுடன் மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் நீர் சேமிப்பு குறித்த ஆய்வுகள், மற்றும் முன்மாதிரிகளை திரட்டும் வாய்ப்பும் கிடைத்ததாகக் கூறுகிறார் சக்திவேல். இதன் மூலம் பல்வேறு தொழில் வாய்ப்புகள் கிடைத்த போதும், அகலக் கால் வைக்க விரும்பவில்லை என்கிறார் அவர். ஒவ்வொரு இடத்திலும் நீர் சேமிப்பை ஏற்படுத்தும் போது புதுப்புது சிக்கல்கள், அனுபவம் ஏற்படும். அவற்றிற்கு தீர்வு கண்டு ஒவ்வொரு நீர் சேமிப்பு முறையிலும் ஒரு நிரூபிக்கப்பட்ட மாதிரியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். அப்போது தான் விரிவாக்கம் செய்யும் போது அது கைகொடுக்கும் என்று வியாபார விஸ்திகரிப்பு பற்றி வியூகம் வகுத்துள்ளார் இந்த இளம் தொழில்முனைவர்.

ரெயின்ஸ்டாக் குழு

2014ம் ஆண்டு படிப்பை முடித்து வெளிவந்த பொறியாளர் நண்பர்கள் பலர் கைநிறைய சம்பளம் பெற்று வளமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சமூக சேவை எண்ணத்தோடு பணியாற்றி வரும் சக்திவேலின் ஆர்வத்தைக் கண்டு அவருடைய பேராசிரியர் அரவிந்தும் ரெயின்ஸ்டாக் நிறுவனத்தின் இணை நிறுவனராக இணைந்து பணியாற்றி வருகிறார். இவர்களோடு சேர்ந்து சக்திவேலின் கல்லூரித் தோழி கங்காதேவி இந்நிறுவனத்தின் ஆலோசகராகவும் மக்களுக்கு மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துபவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் பொது நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகளில் அந்தந்த பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள், தன்னார்வலர்களை இணைத்து சேவை புரிந்து வருகிறது இந்தக்குழு.

சக்திவேலும் சவால்களும்

மழைநீர் சேமிப்பு பற்றி யாருக்கும் தெரியாமல் இல்லை, ஆனால் இதற்காக செலவு செய்ய வேண்டுமா என்ற மனஓட்டம் மக்கள் இடத்தில் காணப்படுகிறது. எதிர்காலத்தில் ஏற்படப் போகும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்க இதுவே சிறந்த வழி என்பதை மக்களுக்கு உணர வைப்பது உண்மையிலேயே சவாலானது என்கிறார் சக்திவேல். மக்களின் இந்த எண்ணத்தை மாற்றுவதற்காக நாங்கள் குறைந்த விலையில் அவர்களுக்கு பணிகளை செய்துத் தரவும் தாயாராக இருக்கிறோம் என்கிறார் அவர். மேலும் குளம், குட்டைகளை தூர்வாரும் போது பல்வேறு அரசியல் தலையீடுகள், ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்ற அச்சுறுத்தல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

image


சமூக சேவை பற்றி நகரவாசிகளே புரிந்து கொள்ளாத நிலையில் கூலித் தொழிலாளர்களான சக்திவேலின் பெற்றோர் மட்டும் இதைப் பற்றி புரிந்து கொள்வது எந்த வகையில் சாத்தியம். “மரம், மட்டை, குளம், குட்டை என்று பணம் சம்பாதிக்காமல் ஊதாரித்தனமாக திரிவதாக மற்றவர்கள் கேலி செய்வதைப் பார்த்து என் பெற்றோர் என்னைப் பற்றி கவலையடைந்தனர், ஆனால் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் என்னைப் பற்றி வரும் செய்திகளைக் கண்டு தற்போது அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டதாக பெருமைப்படுகிறார் சக்திவேல். அவர், 2015ம் ஆண்டு சங்கம்-4ல் மதுரையின் 'நம்பிக்கை நாயகன்' விருதையும் பெற்றுள்ளார்.

நீர் சேமிப்பு ஒருங்கிணைக்கப்படாத துறையாக இருப்பதற்கு தனியார் நிறுவனங்களின் சூழ்ச்சி, அரசின் செயல்பாடுகள் என தண்ணீர் அரசியல் நீண்டு செல்கிறது. அனைத்து சவால்களையும் உடைத்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நிஜ வாழ்வின் நம்பிக்கை நாயகன் சக்திவேல்.

இணையதள முகவரி: RainStock

Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share
Report an issue
Authors

Related Tags