பதிப்புகளில்

'ஆற்றல் அகாடெமி'- மதிப்பெண் வேட்டைக்கு இல்லாமல் அறிவியலை ஆத்மார்த்தமாய் நேசிக்கும் மாணவர்களுக்கான இடம்!

sneha belcin
16th Apr 2016
Add to
Shares
21
Comments
Share This
Add to
Shares
21
Comments
Share

“உங்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாதென சொல்கிறார்கள் என்றால், நீங்கள் தொழில் முனைவராகப் போகிறீர்கள் என்பதற்கான முதல் அறிகுறி அது” - பால தண்டபாணி அதிகம் நம்பும் வாக்கியம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

பொள்ளாச்சி அருகே ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பாலா. “எங்களுடையது ஓர் NPL குடும்பம். அதாவது வறுமைக் கோட்டிற்கு அருகில் உள்ள குடும்பம். எனக்கு எந்த சிறப்புத் திறன்களுமே கிடையாது. விளையாட்டு, படிப்பு என எதிலுமே தனிச்சிறப்போடு இருக்காதலால் ரொம்ப ஒதுக்கப்பட்ட குழந்தையாக நான் இருந்தேன். தனியாக இருந்தேன். எனவே ஒருநாள் வீட்டிற்கு போய், நான் படிக்க மாட்டேன் எனச் சொன்னேன். அதனால், அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அதன் பிறகு, பதினொன்றாம் வகுப்பில் கோவை கார்மெல் கார்டன் பள்ளியில் சேர்ந்தேன்”, என்று தன் குழந்தைப்பருவத்தை விவரிக்கிறார் பால தண்டபாணி.

பின்னாளில் ஆற்றல் அகாடெமி தொடங்க, இளம் வயதிலேயே கல்வி முறையின் காரணமாய் பாலாவிற்கு நேர்ந்த இந்தத் தனிமையும் ஒரு காரணமாய் இருந்திருக்கிறது. பாலா, தன் வாழ்வின் திருப்பு முனையாக நினைப்பது, கார்மல் கார்டன் பள்ளியில் படித்த அந்த இரண்டு வருடங்களைத் தான். அவரது தந்தை தவறிவிட்டதால் தோன்றிய பொறுப்புணர்ச்சியும் கூட அதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம் எனவும் நினைக்கிறார்.

image


அதன் பிறகு கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்து, பட்டம் பெற்ற கையோடு, கோவையிலும் பெங்களுரிலுமாய் ஆறு வருடங்கள் ‘தயாரிப்புத்’ துறையில் வேலை செய்த அனுபவத்தோடு சிங்கப்பூர் சென்றிருக்கிறார்.

சிங்கப்பூர் சென்றது டாலருக்காகத் தான் என அப்பட்டமாய் தெரிவிக்கும் பாலா, அங்கு தான் கற்றதையும் சொல்கிறார். “ சிங்கப்பூர் போன்ற நாடுகள் எல்லாம் எப்படி இயங்குகின்றன என ஒரு புரிதல் ஏற்பட்டது. நாம் அங்கு சென்று தேவையான அளவு டாலர் சம்பாதித்த பிறகு, அந்த ஊருக்கு எதாவது செய்ய வேண்டுமே என ஆசை வந்தது. அதற்காக சிண்டா என ஒரு அமைப்பை அணுகிய போது, ‘குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்றார்கள்.

பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு சென்றுக் கொண்டு, சொந்த வீடு, கார் எல்லாம் வைத்திருந்தும், அவர்களின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்காது அக்குழந்தைகளுக்கு ஆறு மாதம் நான் அங்கே கற்பித்தேன். அப்போது தான் ஏன் இதை நாம் நம் ஊரிலேயே செய்யக் கூடாது எனத் தோன்றியது.” 

எனவே, திரும்பி பெங்களூரு வந்தேன். மற்றோரு ‘தத்துவ முதிர்ச்சி’ அல்லது ஏதோ ஒன்றின் காரணமாய் எனக்கு அந்த வேலை செய்வதிலும் விருப்பம் இல்லாமல் போனது. ஒரு புரொஃபஷனல் செட் அப்பிற்கு நான் சரியாக பொருந்த மாட்டேன் எனத் தெரிந்தது. அதனால், 'எனேபில் இந்தியா' என்றொரு அமைப்பு வழியே, கண் பார்வை அல்லாதவர்களுக்கு கணினி அறிவியல் பயிற்றுவித்தேன். ஆனால், அந்த வருமானத்தில் நிலைத்திருக்க முடியவில்லை. எனவே, என்னுடைய கல்லூரி நண்பர் ஒருவரோடு சேர்ந்து பெங்களூரில் ‘வாக்கியா’ என்னும் ஒரு நிறுவனத்தை தொடங்கினேன். அது க்ரியேட்டிவ் ப்ரொடெக்ட் வடிவமைப்பு நிறுவனம்.”

இந்தக் காலத்தில் தான், தானொரு சிறந்த பயிற்றுனர், எழுத்தாளர் என்பதை பாலா புரிந்துக் கொண்டிருக்கிறார். ஜாவா, சி++ போல, இந்தியாவில் முதல் முறையாக ஒரு ப்ரொக்காமிங் மொழியை உருவாக்கி, பேடண்ட் உரிமம் பெற அமெரிக்காவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

“இந்த ஸ்டார்ட் அப் தொடங்கி விட்டு ஆறு வருடங்கள் நிலைத்திருந்தோம். ஏனெனில், அப்போது ஸ்டார்ட்-அப் மேல் யாருக்கும் அவ்வளவு பெரிய ஆர்வம் இருந்திருக்கவில்லை. நிதி திரட்டுவதும் கடினமாய் இருந்தது”

ஆற்றல் அகாடெமி

“நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த வரை யாராவது எனக்கு பயிற்சிக் கொடுத்தால் அதை நான் கற்றுக் கொள்வேன். ஆனால், தொழில்நுட்ப ரீதியான ஆய்வு எதையும் என்னால் செய்ய முடியவில்லை. அப்போது தான் கற்றலில் என் பயணம் தொடங்கியது.

நம் ஊரில் இருந்து ஆய்வு என எதுவும் போவதில்லை. ஸ்மார்ட் கார்டு, ஏடிஎம் கார்டு என எதை நாம் தேய்த்தாலுமே மூன்றாம் தரப்பினரை சார்ந்து தான் இருக்கிறோம். ஒவ்வொரு முறை ஏடிஎம் கார்டை தேய்க்கும் போது, விசா கார்டாகவோ வேறெதாகவொ இருக்கும் போது, ஒரு செண்ட் அல்லது இரண்டு செண்ட் அமெரிக்காவிற்கு போகிறது. மொபைல் ஃபோனிலிருக்கும் ஒரு பார்ட் கூட இந்தியாவில் உற்பத்தியானது கிடையாது. அதன் கவரை கூட நாம் தயாரிப்பதில்லை. இதற்குக் காரணம், அடிப்படை அறிவு நம்மிடம் இல்லை. இதைவிட தெளிவாய் வரையறுக்க வேண்டுமானால், நாம் ‘டிஜிட்டல் அடிமைகள்’ எனச் சொல்லலாம். ஆனால், கல்வி என்பது , “கற்றல், ஆய்வு மற்றும் தொழில் முனைவின்” கலவையாகத் தானே இருக்க வேண்டும்? ” - இந்தக் கேள்விக்கான பதிலாய் பிறந்தது தான் ஆற்றல் அகாடெமி கற்றலில் ஓர் மாற்றுப் பார்வை. மேலும், ஆற்றல் அகாடெமி, 23 வருட அனுபவத்திற்கு பிறகு பிறந்த குழந்தை!

image


கோவையில் இயங்கிவரும் ஆற்றல் அகாடெமியை, “ஒரு ட்யூசன் வகுப்புப் போல தொடங்கினீர்கள் அல்லவா..?” என்ற போது,

“ட்யூசன் வகுப்பென சொல்ல மாட்டேன். ட்யூசன் வகுப்பென்றால் ‘அதை செய்; இதை செய்’ என மிக கட்டுப்படுத்தப்பட்ட சூழல் இருக்கும். பள்ளி வகுப்பறையில் என்ன நடக்குமோ அதே தான் அங்கேயும் நடக்கும்.

ஆனால் , ‘ஆற்றல் அகாடெமியில்’ முதல் வகுப்புகளில் அந்த மாணவரை பற்றிய புரிதல் உண்டாக்குவோம். எங்களின் நம்பிக்கைபடி ஒவ்வொரு மாணவருக்குள்ளும் திறமை இருக்கும். எங்களுடைய முக்கியக் குறிக்கோளே மாணவரின் இயற்கையான திறமையை கண்டுபிடிப்பது தான். 

வகுப்பின் தொடக்கத்தில் இரண்டு மணி நேரங்கள் வேண்டுமானால் எதாவது கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் நடக்கலாம். பிறகு, அவர்களாகவே வருவார்கள், வாசிப்பார்கள். சந்தேகம் இருக்கும் போது என்னைக் கேட்பார்கள். அப்போது தான் என் தலையீடல் வரும். என் தலையீடு எப்படி இருக்கும் என்றால் - சில சோதனைகள் செய்துப் பார்க்கச் சொல்வேன். அவ்வளவு தான். அதற்காக, ஒரு சின்ன லேப் போல செட் செய்து வைத்து கருவிகள், உபகரணங்கள் எல்லாம் அமைத்து வைத்திருக்கிறோம்.”

image


நாங்கள் பேசிக் கொண்டிருந்த போதே, சிறு பெண்ணொருத்தி, வெகு இயல்பாய் உள்ளே வந்து, சில கனமான புத்தகங்களை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். உண்மையில், மூன்றாம் தலைமுறை மாணவி ஒருத்தி, பாடப் புத்தகம் அல்லாமல், வேறொரு புத்தகம், அதுவும் அறிவியல் புத்தகம் ஒன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தது வியப்பளிப்பதாய் தான் இருந்தது. ஆற்றல் அகாடெமியின் வகுப்பறை என்பது ஒரு ஆலோசனைக் கூடத்தைப் போலவே இருக்கும் என நான் யூகித்துக் கொள்கிறேன். அங்கே, நிசப்தத்திற்கு மத்தியில் ஒரே ஓர் குரல் அதிகாரத்துடன் ஒலிக்காமல், பல்வேறு இளம் குரல்களும், மனங்களும் கேட்கப்படும் எனவும் கற்பனை செய்துக் கொள்கிறேன்.

பாலா தொடர்கிறார் ,

”எங்களுடன் நாலைந்து நாட்கள் செலவிடும் குழந்தைகளுக்கு கற்றல் குறித்த பயம் போய்விடுகிறது. ஏனெனில், எங்களிடம் எளிமையான முறை இருக்கிறதே. எதையுமே மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ”

ஆற்றல் அகாடெமி - மதிப்பெண் வேட்டையில் இருக்கும் மாணவர்களுக்கான இடம் கிடையாது. அறிவியலை ஆத்மார்த்தமாய் நேசிக்கும் மாணவர்களுக்கான இடம். வருடத்திற்கு முப்பது மாணவர்கள் மட்டும் தான் அதிக பட்சமாய் அனுமதிக்கப்படுகின்றனர். பல சோதனைகள் செய்துப் பார்த்து, தீர்க்கமாய் அறிவியல் கற்கும் அந்தப் பயணத்தில் மதிப்பெண் என்பது மிகச் சிறிய புள்ளியாகி போகிறது. மேலும், இங்கு வரும் மாணவர்கள் தொழில் முனைவிற்குள் முதல் அடியை எடுத்து வைப்பதும் இவ்விடத்திலேயே தான். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போதே, உள் அறைக்குள் இருந்த மாணவர்கள், 3டி ப்ரிண்டர் போன்ற அடுத்தக் கட்ட தொழில்நுட்பங்களில் ஆய்வுகள் செய்துக் கொண்டிருந்தனர். மேலும், பாலா, கற்றலில் ஆர்வம் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இச்சேவை அனைத்தையும் இலவசமாய் அளிப்பதற்கும் தயாராக இருக்கிறார். இங்கே, ஆற்றல் அகாடெமி, சமூக நலனுக்காக செயல்படும் முன் முனைவாகவும் திகழ்கிறது!

image


ஆரம்பக்கட்டத்தில் பாலா ஆற்றல் அகாடெமியை ஒன்றிரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு தனது வீட்டில் நடத்தி வந்தார். இதனை கண்ட பெற்றோர்களில் ஒருவர் வாடகைக்கு தனது இடத்தை பாலாவுக்கு அளித்தார். துணை நிறுவனர்கள் என யாரும் இல்லாத போதிலுமே, துணையாகவும் ஆதரவாகவும் பலர் இருந்ததாய், இருப்பதாய் சொல்கிறார். 

சவால்கள்

‘கல்வி, ஆய்வு, தொழில்முனைவு’ மூன்றும் மூன்று வேறு துறைகள், அவை அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதே சவால் தான். பாலா ஐஐடி, ஐஐஎம்- கல்வி நிறுவனங்களில் படிக்காமல், எளிய பின்புலமும், மனது நிறைய ஆர்வமும் மட்டுமே கொண்டிருப்பவர். பின், அடிக்கடி பயிற்சித் தேர்வுகள் எல்லாம் வைக்காமல் மதிப்பெண்கள் பெற வைப்போம் என நம்பிக்கையளித்தலும் ஒரு சிக்கலாய் தான் இருக்கிறது.

ஆனாலும் ஆற்றல் அகாடெமியின் இணையதளத்தில், இங்கு சேர்ந்து படிக்கும் மாணவர்கள் அளித்திருக்கும் ஒப்புதல்கள் மூலமே இந்த கற்றல் முறை எவ்வளவு வலிமையானது என்பதை நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது. 

இப்படி சளைக்காமல் ஓடிக் கொண்டே இருக்க ஊக்கம் எங்கிருந்து வருகிறதென்றபோது, ”சார் கென் ராபின்சன், சால் கான், சுகாதா மித்ரா, அரவிந்த் குப்தா, அருணாச்சாலம் முருகானந்தம், பேரா.வி பாலகிருஷ்னண் (ஐஐடி), பேரா.கிருஷ்ண குமார்(யேல் பல்கலைக்கழகம்) , டாக்டர் மைக்கேல் குமார் (காருண்யா)” - என மிக நீண்டதொரு பட்டியல் வழியே, நாற்புறத்திலிருந்து தான் ஊக்கத்தை எடுத்துக் கொள்வதை சொல்லாமல் சொல்கிறார்.

எதிர்கால திட்டங்கள்

கோவையில் அறிவியல் நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றொரு ஆசை இருக்கிறது பாலாவிற்கு. மேலும், கல்வியும் தொழில் முனைவும் ஒன்றுக்கொன்று நெருங்கியே இருப்பதனால், ஆற்றல் அகாடெமியும் தொழில் முனைவிற்கு வெகு அருகிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. டெலி ரோபோடிக்ஸ் புராஜெக்ட் ஒன்றிற்கான ப்ரோட்டோ-டைப்பை இன்னும் ஒரு மாத காலத்தில் பெறுவதற்காய் காத்திருக்கிறார்கள். 

முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை மக்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் போல இல்லை இன்றைய ஆசிரியர்கள். இன்றையக் கல்வியுமே, மிகப் பெரிய கேள்விக் குறி தான். பாலா - ஓர் மிகச் சிறந்த ஆசிரியர் - இந்தியக் கல்விச் சூழலுக்கு மத்தியில், ’ஆற்றல் அகாடெமியை’ பாமரர்க்கு சாதகமாய் இயக்குவார் என நம்புகிறேன்.

இணையதள முகவரி: AatrralAcademy

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'இந்திய கல்வி முறை மாறினால், வேலை வாய்ப்பின்மை குறையும்'- 'Coursee' நிறுவனர் சிதம்பரேசன் சக்தி 

செயல்முறைக் கல்வி மூலம் குழந்தைகள் வாழ்வில் ஏற்றத்தை தரும் 'ஃப்ளின்டோபாக்ஸ்' 

'சுவரில்லா பள்ளி', 'கல்கேரி' : இந்திய மாற்றுக் கல்வி முறை பள்ளிகள்!

Add to
Shares
21
Comments
Share This
Add to
Shares
21
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக