பதிப்புகளில்

தலித் உறுதுணை நாயகன் 'ராஜா' அன்று நடைபாதை கடை.. இன்று ரூ.60 கோடி பிசினஸ்!

YS TEAM TAMIL
10th Feb 2016
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

வீட்டை விட்டு ஓடியபோது ராஜா நாயக் வயது 17. வறுமையின் பிடியில் வாடும் பல லட்சக்கணக்கானவர்களில் ஒருவராக வாழ்க்கையை முடித்துக்கொள்ளாமல் புதிய தொடக்கத்தை நோக்கி எடுத்த நம்பிக்கை ஓட்டம் அது.

"நான் பணம் சம்பாதிக்கணும். நான் நிறைய பணம் சம்பாதிக்கணும். அதில் மட்டும்தான் என் முழு கவனமும் இருந்தது" என்ற ராஜாவுக்கு இப்போது வயது 54. பெங்களூருவில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் பேட்டியைத் தொடங்கினார். 

"என்னையும், என்னுடன் பிறந்த 4 பேரையும் பள்ளிக்கு அனுப்புவதற்கு என் பெற்றோரால் முடியவில்லை என்பதை அந்தச் சின்ன வயதிலேயே என்னால் உணர முடிந்தது. என் அப்பாவுக்கு நிலையான வருவாய் எதுவும் இல்லை. என் அம்மா வீட்டில் இருக்கும் பொருட்களை அவ்வப்போது அடகு வைத்துதான் எங்களை வளர்த்தார்" என்று நினைவுகூர்கிறார் ராஜா.
image


அந்த பதின்ம பருவத்தில் தன் நண்பர்களுடன் எப்படியாவது அடித்துப் பிடித்து சினிமாவுக்குப் போகும் ராஜா, 1978-ல் 'திரிஷூல்' என்ற இந்தி படத்தைப் பார்த்தார். கையில் அஞ்சு பைசா கூட இல்லாத அமிதாப் பச்சன், ரியல் எஸ்டேட் அதிபராக உருவாகிறார்.

திரையரங்கில் இருட்டில் படம் பார்த்துக்கொண்டிருந்த அந்த மூன்று நேரத்தில் மனதில் புதிய வெளிச்சம் பாயத் தொடங்கியதை உணர்ந்தார்.

"அந்தக் கதை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது எனக்கு நிஜமாகவே பட்டது. உடனே, என் கனவுகளும் நிறைவேறுவது சாத்தியம் என்று நம்பிம்பினேன். நானும் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் அதிபராக விரும்பினேன்."

இப்படி தனக்கு ஊக்கம் தந்த நிகழ்வை விவரித்தபோது ராஜாவின் கண்களில் அதே நம்பிக்கையை பார்க்க முடிந்தது.

அதே நம்பிக்கையில் மும்பைக்கு முதல் ஓட்டம் பிடித்தார். அப்போது அது பம்பாய். ஆனால், எதுவும் நினைத்தபடி எளிதாக அமையவில்லை. தாக்குப் பிடிக்க முடியாமல் இதயம் நொறுங்கியவராக வீடு திரும்பினார். ஆனால், சரியான திருப்பத்துக்காக காத்திருப்பதை மட்டும் அவரது மனம் நிறுத்தவில்லை.

இன்று... சர்வதேச ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொடர்புடைய 1998-ல் தொடங்கப்பட்ட 'எசிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்', அக்‌ஷய் என்டர்பிரைசஸ், ஜலா பெவரேஜஸ், ப்யூட்டி சலூன் - ஸ்பா மையங்களுடன் பெங்களூரில் மூன்று இடங்களில் இயங்கும் 'பர்ப்பிள் ஹேஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.60 கோடி வர்த்தகத்தைப் பார்க்கிறார் ராஜா. இதர மூன்று இயக்குநர்கள் - பார்ட்னர்களுடன் சேர்ந்து 'நியூட்ரி பிளானட்' நிறுவனத்தையும் கவனிக்கிறார். இவற்றுடன், கலாநிகேதன் கல்வி மையத்தின் கீழ் வறுமை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக பள்ளிகளையும், ஒரு கல்லூரியையும் நடத்தி வருகிறார்.

கர்நாடகா பிரிவின் "தலித் இந்தியன் சாம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்" (டிஐசிசிஐ) தலைவராகவும் செயல்படும் ராஜா, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பெருங்கனவுகள் மெய்ப்பட தங்கள் அமைப்பு தூண்டுதலாக இருப்பதாகச் சொல்கிறார். "அவர்கள் தங்கள் கனவுகளை நிஜமாக்கும் வாய்ப்புகளைக் காட்டுகிறோம்" என்கிறார்.

ஆரம்பம்...

கர்நாடகாவின் கிராமம் ஒன்றில் இருந்து புலம் பெயர்ந்த தலித் குடும்பத்தின் பிறந்தவர் ராஜா. 17 வயது வரை பெங்களூருவைத் தவிர வேறு எதுவுமே அவருக்குத் தெரியாது. "இப்போது போல் அல்ல. 70, 80களில் பெங்களூரு ஒரு தூங்கும் நகரம். அப்போது எனக்கு தீபக் எனும் பஞ்சாபி நண்பன் (இப்போது உயிருடன் இல்லை) இருந்தான். அவனது அப்பா அடிக்கடி மாற்றலாகும் அரசு ஊழியர் என்பதால், அவனுடன் பல இடங்கள் சுற்றித் திறிந்திருக்கிறேன். நாங்கள் ஒரே பகுதியில் வசித்தபோது, அவனுடன் தான் அதிக நேரம் இருப்பேன்."

பியூசி முதலாண்டிலேயே படிப்படை நிறுத்திய ராஜா, தீபக்கை கூட்டாளியாக்கி நடைபாதையில் சட்டை விற்க முடிவு செய்தார். "நடைபாதைகளில் நிறைய கடைகள் இருப்பதைக் கண்டோம். அவர்கள் தங்கள் பொருட்களை விற்றுத் தருவதற்காக எங்களுக்கு காசு கொடுக்கவும் முன்வந்தார்கள். அப்போதுதான் நாமே ஏன் இதை தொழிலாகச் செய்யக்கூடாது என்ற எண்ணம் உதித்தது" என்று தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு குறித்து குதூகலத்துடன் நினைவுகூர்ந்தார் ராஜா.

இருவரும் சேர்ந்து ரூ.10,000 திரட்டினர். ஜவுளி நகரமான திருப்பூர் சென்றார்கள். "என் செலவுக்கு கொடுப்பதற்காக, அம்மா கொஞ்சம் பணத்தை கிச்சன் டப்பாக்களில் ஒளித்து வைத்திருப்பது உண்டு. அதையெல்லாம் சேர்த்து தொகையைத் திரட்டினோம். திருப்பூரில் உபரி சட்டைகளை தலா ரூ.50 விலைக்கு வாங்கினோம். அவற்றை மூட்டையாக கட்டி அரசு பேருந்து மூலம் பெங்களூர் எடுத்து வந்தோம். போஸ்க் அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் கடை போட்டோம். எங்கள் வீட்டுக்கு அருகே இருப்பதாலும், பலரது கவனத்தை ஈர்க்கும் என்பதாலும் அந்த இடத்தைத் தேர்வு செய்தோம்.

image


அது ஒரு கச்சிதமான திட்டம். நாங்கள் வாங்கிய சட்டைகள் பெரும்பாலும் நீலம் அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தன. போஸ்க் நிறுவன ஊழியர்களின் சீருடை நீல நிறம். மதிய உணவு இடைவேளை நேரத்தில் கடையில் கூட்டம் அள்ளியது. ஒரு சட்டை ரூ.100-க்கு விற்றோம். ரூ.5 ஆயிரம் லாபம் கிடைத்தது. என் வாழ்க்கையில் அந்த அளவுக்கு நான் பணத்தைப் பார்த்தது இல்லை. நான் மலைத்துப் போய்விட்டேன்" என்று சிலிர்க்கிறார் ராஜா.

இந்த வெற்றி தந்த போதையில் நண்பர்கள் இருவரும் மேலும் முதலீடு செய்து, வெவ்வேறு இடங்களில் பல்வேறு விதமான பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். அந்தச் சூழலை ராஜா இப்படிச் சொல்கிறார்...

"நாங்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்றோம். அது ஆரம்பம்தான். கையில் நிறைய பணத்தைப் பார்க்கும் வரை ஓயாமல் உழைத்தோம்."

கதர் ஆடைகள், உள்ளாடைகள் முதலானவற்றை கிலோ கணக்கில் வாங்கி, இரண்டு பணியாளர்களை வைத்துக்கொண்டு பெரிய அளவில் ஆடைக் கண்காட்சி கூட நடத்தினார்கள். நடைபாதை கடைகளில் அவர்கள் விற்காத பொருட்களே இல்லை. மூன்றே ஆண்டுகளில் அவர்கள் ஒரு முழுமையான தொழில் நிறுவனத்தைத் தொடங்கினர்.

இருவரும் சேர்ந்து கோலாப்புரி காலணி நிறுவனத்தை அமைத்தனர். 

"இப்போது வரை, என்னிடம் யாருமே நான் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று கேட்டது இல்லை. செருப்புத் தொழிலில் பெரும்பாலும் தலித் சமூகத்தினரே ஈடுபடுவதால், அப்போது சாதி பற்றிய கேள்வியை நான் எதிர்கொண்டேன்" என்று தன் தொழிலுக்குள் சாதி அடையாளம் காணப்பட்டது குறித்து விவரித்தார்.

துணிந்து நில்...

"நாங்கள் செய்த எந்தத் தொழிலிலும் பணத்தை இழந்தது கிடையாது" என்கிறார் ராஜா. அதேவேளையில், தன் நண்பர் பெங்களூரை விட்டுச் செல்ல வேண்டியிருந்ததால், தொழிலை ராஜாவே பார்த்துக்கொள்ளும் நிலை வந்தது. 1991-ல் ராஜா பேக்கேஜிங் தொழிலை அக்‌ஷயா என்டர்பிரைசஸ் என்ற பெயரில் இன்னொரு கூட்டாளியுடன் தொடங்கினார். அதுபற்றி அவர் சொன்னபோது குறிப்பிட்ட முக்கிய விஷயம்...

"எந்த வகையில் வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றை சாதகமாக்கிவிடுவோம்."

ரியல் எஸ்டேட் தொழிலும் வலுக்கத் தொடங்கிய காலக்கட்டம அது. சொத்துகள் மீது ராஜா முதலீடு செய்யத் தொடங்கினார்.

எல்லாரையும் போலவே பணம் சம்பாதிக்க வேண்டும் எண்ணம் இவருக்கும் இருந்தது. அதற்கான முயற்சிகளைக் கையாண்ட விதத்தில்தான் இவர் மாறுபடுகிறார். தன் கண் முன்னே வந்த அனைத்து வாய்ப்புகளையும் வருவாய் ஆக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார். அதற்கு கடின உழைப்பை வழங்கிட அவர் தவறவில்லை என்பதே இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது.

"பல மனிதர்கள் போலவே நானும் பல இன்னல்களைச் சந்தித்தேன். ஆனால், பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை கொண்ட தொழிலில் ஈடுபடும்போது துணிச்சலுடன் செயல்படுவதுதான் என் அதிர்ஷ்டம்" என்கிறார் ராஜா. தனக்கு நெருக்கமான சிலரால் ஏமாற்றப்பட்டிருந்தாலும், அதுபற்றி விரிவாகச் சொல்ல மறுத்துவிட்டார்.

"மக்களிடமும் மாணவர்களிடமும் பேசும்போது நான் குறிப்பிடும் ஒரே விஷயம் இதுதான்: என் வாழ்க்கையை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இது அனைத்துமே அதிர்ஷ்டவசமானது."

ராஜா இப்படிச் சொன்னாலும், இவரது வளர்ச்சியை வெறும் அதிர்ஷ்டம் என்று மட்டும் எப்படிச் சொல்ல முடியும்? அவர் சொல்வது உண்மையென்றால், தைரியமான முடிவுகளுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் துணை நிற்கும் என்பது அர்த்தம். ஏனென்றால், 'உங்கள் கனவுகள் நிறைவேற வேண்டும் என்றால், துணிச்சலான முடிவுகள் எடுக்கத் தயங்கக் கூடாது' என்பது ராஜாவின் மந்திரச்சொல்.

"நான் வளர்த்த காலக்கட்டத்தைப் பார்க்கும்போது, என் சுற்றத்தாரும் நண்பர்களும் இன்னமும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள் - ஏதோ ஒரு நிறுவனத்தின் ஊழியராகவோ அல்லது தொழிலாளியாகவோ இருக்கிறார்கள். சில நேரங்களில் என்னிடம் அவர்கள் பண உதவி கேட்பதும் நான் செய்வதும் உண்டு. ஆனால், நான் சிறுவனாக இருந்த காலத்தில், என்னைவிட அவர்களது நிலை நன்றாக இருந்தது என்பதே நிதர்சனம். அவர்களது பெற்றோர் வேலைக்குச் சென்றனர், அவர்கள் பள்ளிக்குச் சென்றனர். ஆனால், எனக்கு அந்த இயல்பு வாழ்க்கை கிட்டவில்லை. ஆனால் இன்றோ நான் தேச அளவிலான விஐபிக்களுடன் மேடையைப் பகிர்கிறேன். இதற்கு காரணம் பணம் மட்டுமே. கடின உழைப்பால்தான் அந்தப் பணம் கிட்டியது. கடந்த 35 ஆண்டுகளாக மதிப்பான நிலைக்கு உயர முடிந்தது" என்று தனது துணிச்சல் தந்த பலன்களை அடுக்கினார் ராஜா.

நிதானம் தழுவிய ஆத்திர இளைஞர்

எந்தச் சூழலிலும் சாதி சார்ந்த பாகுபாடுகளை தாம் சந்திக்கவில்லை என்கிறார் ராஜா. அரசியல் ரீதியாக சரியாக இருந்தாலும், சில நேரங்களில் வார்த்தைகளை விட மவுனம் நிறைய பேசுவது உண்டு.

image


பெங்களூருவில் அப்போது தாம் வசித்த சிறிய வீடு இன்று நான்கு மாடி கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது. தனது அலுவலகமாக இயங்கும் அந்தக் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் அவரது பள்ளி செயல்படுகிறது.

தன் படிப்பை முடிக்க முடியவில்லையே என்ற இயலாமைதான் இப்போது ஒரு பள்ளியையே தொடங்க வித்திட்டுள்ளது. "நான் கொஞ்சம் பணம் சம்பாதிக்கத் தொடங்கியதும். ஒரு வாடகை வீட்டில் சில ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தி நர்சரி பள்ளி நடத்தினேன்" என்றார்.

ஒரு காலத்தில் ஆத்திரக்கார இளைஞராக இருந்ததைச் சொன்னவர், அதன்பின் மென்மையாகப் பேசும் இயல்புடைய தொழில்முனைவராக உருவெடுத்ததையும் விவரித்தார்.

நம் சமூகத்தில் தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து தண்ணீரோ, உணவுப் பொருட்களோ வாங்கிச் சாப்பிடுவதை குறைவாக நினைக்கும் போக்கும் இன்னமும் பார்க்க முடியும். இந்த அவலத்துக்கு பதில் சொல்லும் நோக்குடன், இவர் ஆரம்பித்த பாட்டில் குடிநீர் நிறுவனமான ஜாலா பெவரேஜஸ் இப்போது மிகவும் பிரபலம்.

________________________________________________________________________படிக்க வேண்டிய தொடர்பு கட்டுரை:

ரோல்ஸ்ராய்ஸ் வைத்திருக்கும் முடிதிருத்துனர்!

________________________________________________________________________

image


காதல் பாதை...

பல்வேறு தொழில் நிறுவனங்களில் கவனத்தை குவிப்பதற்கும், திடமாக செயல்படுவதற்கும் ராஜாவுக்கு உறுதுணையாக இருக்கிறார் அவரது காதல் மனைவி அனிதா. தனது 16-வது வயதில் ராஜாவின் பள்ளியில் வேலை கேட்டு வந்த அனிதா, பள்ளிப் படிப்பை நிறுத்திய வறுமையில் வாடிய தலித் குடும்பத்தைச் சேர்ந்தப் பெண். அவரது தந்தை ஆட்டோ டிரைவாக இருந்தார். பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த அனிதா, பின்னர் நிர்வாக ரீதியிலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு உறுதுணைபுரிய ஆரம்பித்தார்.

"நாங்கள் உண்மையில் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் பள்ளி ஊழியர் ஒருவர் மட்டும்தான் சாட்சி."

என்று தன் காதல் பாதையை விவரித்தவர், இன்று வரை தன்னிடம் முறையான திருமணச் சான்றிதழ் இல்லை என்றார் சிரித்துக்கொண்டே.

மகிழ்வான நிறைவு...

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஒரு தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து அதிகம் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. அதேவேளையில், ராஜா போன்றோரின் கதைகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு உந்துசக்தியாகத் திகழ்வதையும் மறுக்க முடியாது.

"நான் இடஒதுக்கீடு சலுகைகளை வைத்து இந்த உச்சத்தை எட்டவில்லை. என் பிள்ளைகள் மூவரும் கூட இடஒதுக்கீடு சலுகை பெற அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு ஆடம்பரம் வேண்டாம் என்பதற்காக என் பள்ளியில்தான் அவர்களைச் சேர்த்தேன். என்னைப் பொறுத்தவரையில், ஒரு நல்ல பள்ளியில் நல்ல ஆங்கிலம் சொல்லித்தர வேண்டும் என்பது முக்கியம்."

ஒரு தலித் ஆக தாம் நாடுவது சலுகைகளை அல்ல; தொடர்புகளை மட்டுமே என்கிறார் ராஜா.

"என் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அரசு வேலைகளின் பின்னுக்குச் செல்வது அதிகரித்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. சுயவேலைவாய்ப்பு என்பதை அவர்கள் கண்டுகொள்வது இல்லை. அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து டிஐசிசிஐ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். நாங்கள் வேலையை உருவாக்கவே அன்றி, வேலையைத் தேட விரும்பவில்லை" என்கிறார் அவர்.

தன் பதின்ம வயதில் பார்த்த திரைப்படம் தந்த உந்துதல் தொடங்கி பல ஆண்டுகள் உழைப்பையும் முயற்சியையும் விதைத்து முன்னேறியதை மூன்று மணி நேரம் விவரித்த ராஜாவுக்கு இன்னமும் ஒரு பெரிய கனவு உண்டு.

"ரூ.100 கோடி வர்த்தகம் கொண்ட நிறுவனர்கள் பட்டியலில் இடம்பெற விரும்புகிறேன்" என்றார் உற்சாகம் குறையாமல்.

ராஜாவால் இது சாத்தியமே. ஏனெனில், "தொழில் என்று வந்துவிட்டால் பணம் மட்டும்தான் பேசும்" என்று அவர் அடிக்கடி சொல்வது உண்டு.

ஆக்கம் - தீப்தி நாயர் | தமிழில்: கீட்சவன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற சாதரண நிலையில் இருந்து தொழிலில் வெற்றியடைந்தவர்கள் தொடர்பு கட்டுரை:

பண்ணைத் தொழிலாளி ஜோதி ரெட்டி கோடீஸ்வரியான கதை!

ஆங்கிலத்தில் பேச தெரியாத வெங்கட் மாரோஜு உலகளாவிய சமூக நிறுவனத்தின் தலைவரான கதை!

Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக