பதிப்புகளில்

தொழில்முனைவோர் ஆகிய 4500 ஊரக இளைஞர்கள்; வேலைவாய்ப்பு கிடைத்த 1.75 லட்சம் பேர்- சாதித்த 'பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்'

17th May 2016
Add to
Shares
425
Comments
Share This
Add to
Shares
425
Comments
Share

டில்லி யுனிவர்சிட்டியிலிருந்து கற்றுத் தேர்ந்தவர், இயற்பியலிலும், பொறியியலிலும் ந்யூயார்க் பல்கலைகழகத்திலிருந்து இரண்டு முதுநிலை பட்டங்கள் பெற்றவர். அமெரிக்காவின் ஏடி & டி - பெல் லெபாரட்டரிசில், தொலைத் தொடர்புத் துறையில் தன் பணி வாழ்க்கையை துவக்கியவர், வெற்றிகரமான இருபது வருட பணிவாழ்விற்குப் பிறகு, எண்பதுகளின் இறுதியில், தேசத்தின் தேவையை உணர்ந்து இந்தியா திரும்பியவர். முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர், ஆர். வெங்கட்ராமனின் மகளும், ஷிரோமனி விருது, இந்திய அரசின் சமூக தொழில் முனைவு விருது உட்பட பல விருதுகளை பெற்றவருமான, “பாரதிய யுவ சக்தி டிரஸ்டின்” துணை நிறுவனர், லஷ்மி வெங்கடேசன் தான் அவர். 

சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஏழ்மை நிலையிலுள்ள இளம் தொழில் முனைவர்களை ஊக்குவிக்கும் 'பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்', தன் வெற்றிகரமான வெள்ளி விழாவை 2017 ல் கொண்டாட இருக்கிறது. இப்படி, பல விருதுகளையும், பாராட்டுக்களையும் அள்ளியிருக்கும், லஷ்மி வெங்கடேசனுடன் தமிழ் யுவர்ஸ்டோரி சார்பாக நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 

image


24 வருடங்களுக்கு முன், 'பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்' இணை நிறுவராய் தொடங்கினீர்கள். எப்படி இந்த எண்ணம் உங்களுக்கு வந்தது?

சிறப்பான கல்வி பின்புலம் கொண்டிருந்த குடும்பத்தில் நான் பிறந்த போதிலுமே, என் தந்தை (முன்னார் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்) யாரையும் சாராமல் வளரவும், சுயமாய் முடிவுகளை எடுக்கவும் எங்களை அனுமதித்தார், அதற்கு ஆதரவாகவும் இருந்தார். பெண்கள், மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வது அரிதாய் இருந்த எழுபதுகளின் இறுதியில் கூட, நான் பொறியியலில் முதுநிலை படிக்க வெளிநாடு செல்வதாய் சொன்ன போது உடனே அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், ஒரு நாள் என் தேசத்திற்காக நான் திரும்ப வருவேன் என்பது, எனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது.

1990ல் என் தந்தையோடு, அரசுப் பயணமாக இங்கிலாந்திற்கு சென்றிருந்த போது, வழக்கமான அரசு விருந்தின் போது, வேல்ஸ் நாட்டின் இளவரசர் சார்ல்ஸ் அருகே அமரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர், இங்கிலாந்தில் அவருடைய திட்டம் ஒன்றைக் குறித்துச என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சமூகத்தில் பின் தங்கியிருக்கும், பள்ளி இடைநின்ற இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை வெற்றிகரமான தொழில் முனைவர்களை மாற்றுவது தான் அந்த திட்டம். 

மேலும், அந்த திட்டத்தில் உருவான முதல் கோடீஸ்வரர் இந்திய மரபினர் என்றும் தெரிந்துக் கொண்டேன். இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்தது, நான் உடனேயே ஏன் இந்தியாவில் இதுபோன்ற வெற்றிக் கதைகளை உருவாக்க முடியாது? என நினைத்தேன்...

இந்த யோசனை என்னை எந்த அளவுக்கு உந்தியதென்றால், நான் அமெரிக்காவில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இந்தியாவில் இதைத் தொடங்க முடிவு செய்தேன். தொண்ணூறுகளில், நிலையான பணிகளோடு ஒப்பிடுகையில் தொழில் முனைவு சிறந்த தேர்வாக இருந்திருக்கவில்லை. எனினும், நான் இதை ஜேஆர்டி டாட்டாவிடம் பகிர்ந்து கொண்டு ஆலோசனைக் கேட்டேன். அவர் உடனே அதை ஏற்றுக் கொண்டு, என் வழிகாட்டியாகவும், ஸ்தாபகத் தலைவராகவும் ஆனார். எனக்கு இளவரசர் சார்லஸின் ஆதரவும் இருந்தது, இப்படியாக, 'பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்' (BYST) 1992 ல் பிறந்தது. 

பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் பணிகள் என்ன? இந்தியாவின் பின்தங்கிய மக்களிடம் எப்படி தொழில் முனைவை அறிமுகப்படுத்தினீர்கள்?

பாரதிய யுவ சக்தி டிரஸ்ட், பின் தங்கியிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு வணிக யோசனைகளை வழிகாட்டுதலோடு எடுத்துசெல்ல உதவும் ஒரு லாப நோக்கமற்ற ஒரு அமைப்பு. இதன் மையக் கருத்து, வேலை தேடுபவர்களையே வேலையை படைப்பவர்களாய் மாற்றுவது தான்.

நாங்கள், தனித்துவம் வாய்ந்த ‘குரு- சிஷ்யர்’ பரம்பரை உறவு மாதிரியை பின்பற்றுகிறோம். இதில் வழிகாட்டும் மென்டர், தொழில் முனைவருக்கு பயிற்சியளித்து, ஆதரவளித்து, அவரை மேற்பார்வை செய்து, தொழில் இணைப்புகளை உருவாக்கிக் கொள்ள உதவிசெய்து, அவர்கள் சுயமாய் நிற்கும் வரை துணை நின்று அதன் வழியே வேலைவாய்ப்பையும் வளத்தையும் உருவாக்கி சமூகத்திற்கு பங்களிக்கிறோம்.

image


நிதி பின்புலம் மற்றும் துணை ஈடு ஏதும் கேட்காமல், விண்ணப்பதாரர்களை தொழில் தொடங்க ஊக்குவிக்குறோம். இவ்வழியே, விதை நிதியை அவர்களுக்கு லோனாக அளிக்கிறோம். அதை அவர்கள் தனியாகவோ, வங்கிகள் அல்லது வேறு நிறுவனங்களில் வழியே பெரும் கடனோடு சேர்த்துமே பயன்படுத்திக் கொள்ளலாம். சிறு தொழில்களுக்கென சிறப்பாக வழங்கப்படும் வட்டி விகிதத்தில் தான் இந்த கடன்தொகை அளிக்கப்படுகிறது. 

எங்கள் முதல் பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் அலுவலகத்தை டில்லியில் தொடங்கி, தற்போது தமிழ்நாடு, கிராமப்புற ஹரியானா, ஒடிசா, அஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விரிவடைந்திருக்கிறோம். மேலும், இன்றுவரை நாங்கள் ஏறத்தாழ 4200 தொழில் முனைவர்களை உருவாக்கி, 175000 மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கிறோம் என்பதையும், எங்கள் டிரஸ்ட் ஆதரித்து உதவிய தொழில் முனைவர்களில் 10% பேர்கள் இன்று கோடீஸ்வரர்கள்.

தொழில்முனைவோரை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? பின்தங்கிய மக்களை தொழில் முனைவை ஏற்றுக் கொள்ளவைப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன..?

பாரதிய யுவ சக்தி டிரஸ்டின் கவனம் எப்போதுமே, ஓர் தொழில் யோசனையும், அதை வழிநடத்த ஆர்வமும், திறமையும், பொறுப்பும் இருக்கும் 18 லிருந்து 35 வயது வரையுள்ள நபர்கள் மீது தான் இருக்கும்.

தொடக்கத்தில், நாங்கள் கிரமங்களுக்கும், அடிமட்ட அளவில் இருக்கும் அரசு சாரா நிறுவனங்கள், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகள் ஆகியவைகளுக்குச் சென்று, இளைஞர்களை தேர்வு செய்தோம். கிராம மக்கள் நாங்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், அல்லது வேலைக்கு ஆட்கள் எடுக்கும் கார்ப்பரேட்கள் என சந்தேகப்பட்டது தான் சவாலாய் இருந்தது. ஆனால், நாங்கள் அவர்களை சமாதானப்படுத்தி, அவர்களுடைய முன்னேற்றத்திற்கு தொழில் முனைவு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கினோம். 

கிராம இளைஞர்களும் புத்திசாலிகள் தான், அவர்களாலும் கோடீஸ்வரர்களாக முடியும், ஆனால் அவர்களுடைய யோசனைகளை எங்கே சென்று துவக்குவார்கள், அவர்களுக்கு அறிவுரைக்க யார் இருக்கிறார்கள்? இது தான் விடுபட்டிருந்த இரண்டு முக்கிய பகுதிகள். அதை நாங்கள் அறிந்து நடந்தோம். எங்கள் திட்டத்தில் உறுதியாக இருந்தோம், அது, இந்திய இளைஞர்களை வலிமைப்படுத்துதல்!

முதல் வருடத்திலேயே, தங்கள் மொத்த வருவாயை ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சமாய் உயர்த்திக் காட்டினார்கள். சொல்லப் போனால், முதல் தொழில் முனைவோரில் ஒருவர், ஏழு வருடத்தில் கோடீஸ்வரரானார். 

உங்கள் அமைப்புக்கு வழிகாட்டிகள் (Mentors) எப்படிக் கிடைக்கிறார்கள்?

முன்னரே சொன்னது போல, BYST குரு-சிஷ்ய உறவின்படி இயங்குகிறது, இதில் வழிகாட்டியின் பணி மக முக்கியமானது. பின் தங்கிய முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு, வழிகாட்டிகள் தான் உலகை காட்டும் ஜன்னல். ஆரம்பத்தில், இந்த தொழில் முனைவோரை வழிகாட்ட முன்வர கார்ப்பரேட் துறை சார்ந்தவர்களை சமரசப்படுத்துவது கடினமாய் தான் இருந்தது, ஆனால், பிறகு ஜேஆர்டி டாடா, இந்த யுக்தியின் மேல் கொண்டிருந்த நம்பிக்கையினால், அதை கையிலெடுத்து பலருக்கு ஊக்கமாய் இருந்து, இத்திட்டத்தை செயல்படுத்த முழு துணிவையும் அளித்தார்.

வணிகத் துறையில், கிராமங்களில் வழிகாட்டிகள் செய்ய வேண்டிய ஆற்றல் பகிர்வை குறித்து விளக்கினோம். தொடங்கியவுடன் பல லட்சாதிபதிகளை பார்த்தோம், பல வழிகாட்டிகள் வரத் தொடங்கினர், இது எங்களுக்கு ஊக்கமளிப்பதாய் இருந்தது. வழிகாட்டிகளும், சமூகத்திற்கு திருப்பிச் செய்ய இது தான் வழி என உணர்கின்றனர். 70 - 75 % வழிகாட்டிகள் சிறிய அளவிலான வணிக பின்புலம் உடையவர்கள் தான், தொழில் முனைவோரை சரியான பாதையில் வழிநடத்துகிறார்கள். வழிகாட்டிகளிடம், முதல் இரண்டு வருடங்களுக்கு ஆதரவாய் இருக்க வேண்டும் எனச் சொன்னோம், ஆனால், பலர் 10-12 வருட உறவை வளர்த்திருக்கிறார்கள். இன்று, தொழில் முனைவோரை சென்றடைய 40- 60 கிலோமீட்டர் வரை பயணிக்கத் தயாராக இருக்கும் 4000 தன்னார்வலர்கள் எங்களிடம் வழி காட்டிகளாய் இருக்கிறார்கள். 

தொழில்முனைய எந்த மாதிரியான யோசனைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? ஊக்கமளிக்கும் BYST ன் வெற்றிக் கதைகள் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

கைவினையிலிருந்து உயர் தொழில்நுட்பம் வரை, எதுவாக இருந்தாலுமே ஆதரிப்போம். ஒரு தொழில் முனைவோருக்கு சுயமான யோசனை இருந்தால், நாங்கள் அவரை ஆதரிப்போம். உள்ளூர் பஞ்சாயத்து, உள்ளூர் குழுக்களின் உதவியோடு ‘பிசினஸ் ஐடியா போட்டிகள்’ நாங்கள் நடத்துவோம். கிராம இளைஞர்களிடம், உங்களுடைய வியாபார திட்டம் என்ன? என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். அதனால், நாங்கள் கேட்பதே அவர்களுக்கு பெரிய ஊக்கமாகத் தான் இருக்கும். பெரும்பாலும், தங்கள் அன்றாடத் தேவைகளை சமாளித்துக் கொள்ள மட்டுமே எதையாவது தொடங்க நினைக்கும் இளைஞர்களை காண்போம். ஆனால், வழிகாட்டிகள் அவர்களுடைய திட்டத்தை சரியான பாதையில் செலுத்துவார்கள். இன்று, இதைப் போல பல தொழில் முனைவோர் தரத்திலும், மேன்மையிலும் சிறந்து விளங்கி ஈடுபாட்டோடு இருந்து வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். 

எங்களுடன் பணிபுரிந்த முதல் தொழில் முனைவரை இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. டில்லியைச் சேர்ந்த ப்ரதீப் லம்பா, அவர் அட்டைப் பெட்டிகள் தயாரித்து, அதை ஹரியானாவில் தொழிலாகத் தொடங்கினார். நாங்கள் அளித்த வழிகாட்டியின் உதவியோடு, வெகு விரைவில் யுக்தியைக் கண்டுக் கொண்டு, பெட்டிகளை எலெக்ட்ரானிக் சாதனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை பேக் செய்யலாம் என முடிவெடுத்தார். வழிகாட்டியால் வேகமாய் வளர்ந்தவர்களில் அவருமொருவர். துரதிர்ஷ்டவசமாக ஒரு தீ விபத்தில் அவர் ஏறத்தாழ எல்லாவற்றையும் இழந்த நிலைக்கு சென்று விட்டார், ஆனால், அவருடைய துணிச்சல், வழிகாட்டியின் ஆதரவோடும் ஒவ்வொரு படியாய் எடுத்து வைத்து இன்று தொழிலை வெற்றிகரமாய் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதைப் போலவே, ஹைதராபாதைச் சேர்ந்த பார்வையற்ற ஸ்ரீகாந்த போல்லா, அவரும்ம் BYST ஆல் வழிநடத்தப் பட்டிருக்கிறார். இன்று, அவர் எங்கள் எல்லோருக்கும் ஊக்கமளிப்பவராக இருக்கிறார். BYST-ன் தூதர் போல அவர், தொழில் முனைவோரின் உலகிற்கு, எல்லா சிக்கல்களையும் எதிர்த்து வெற்றிப் பெற்ற தன் கதையைச் சொல்கிறார். இந்த வருடத்தின் சர்வதேச சமூக தொழில் முனைவர் விருதையும் அவர் தான் பெற்றார். 

image


BYST இன் 25 ஆவது வருடத்திற்குள் காலெடுத்து வைக்கிறீர்கள், சமூக தொழில்முனைவுடன் உங்கள் தொடர்பை எப்படி உணர்கிறீர்கள்? 

இந்தத் துறையில் தொடர்ந்து 24 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறேன் என்பதே இது என்னை அடிப்படையில் எப்படியோ உற்சாகப்படுத்துகிறது என்பதற்கு சான்று, இல்லையென்றால் ஒருவரால் இதைச் செய்ய முடியாது. அதுவும் வருமானும் என்று நான் எதுவும் எடுத்துக்கொள்ளாமல், தன்னார்வலராக இதைச் செய்ய முடியாது. இது அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட திட்டமும் அல்ல, சத்தமின்றி நாட்டின் பலப் பகுதிகளில் நடந்துக் கொண்டிருக்கும் புரட்சி, நாங்கள் எந்த விதமான புகழ் வெளிச்சத்திற்காகவும் வேலை செய்யவில்லை. 

எங்கள் தொழில்முனைவோர் விருதுகள் பெறுவதையும், வெளிநாடுகளுக்கு பயணிப்பதையும் பார்ப்பது என்னை மகிழ்ச்சியாக்குகிறது. ஜேஆர்டியின் வாக்கு , “ நாம் ஆதரிக்கும் ஒவ்வொரு தொழில் முனைவோரோடும், ஒரு வேலை வாய்ப்பை உருவாக்குகிறோம், அது பெருகிக்கொண்டிருக்கும்...” என்பது இன்று உண்மையானதில் மகிழ்ச்சி. BYST ன் மொத்த குழு, வழிகாட்டிகள், இளம் தொழில் முனைவோர், ஊழியர்களால் சாத்தியப்பட்ட வெற்றி இது. அவர்கள் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள், நான் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன்.

மேலும், இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்ன திட்டமிட்டிருக்கிறீர்கள்?

BYST நாடு முழுவதும், இடவலமாகவும், செங்குத்தாகவும் விரிவடைகிறது, மேலும் மக்களை சென்றடைந்து பயிற்சியளிக்க ஒரு வழிகாட்டுதல் மையத்தை நிறுவவும் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் இது ஒரு நாடு தழுவிய இயக்கமாய் மாறாமல், வெறும் யோசனையாக மட்டுமே இருந்துவிட்டால் வருத்தமளிப்பதாய் இருக்கும். மேலும், இந்த தேசம் பின் தங்கிய மக்களின் ஆற்றலை உணராமல் தேவைகளை மட்டும் அங்கீகரித்தால், இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் கனவு முழுமையடையாது. குறிப்பிட்ட மக்களை நோக்கியுள்ள இந்த மாதிரி, பெரிய அளவிலான வழிகாட்டுதல் இயக்கங்களாக உருவாகி, இந்திய ஊரக இளைஞர்களை மேம்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

தேசிய அளவில் இருக்கும் அரசுத் திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்து, இந்தியாவின் கிராமங்களில் இருக்கும் இளைஞர்களை சென்றடைய, எங்கள் வெற்றிக் கதைகளை வெளிப்படுத்த நினைக்கிறேன். திட்டத்தின் அளவில், நாங்கள் ஒரு முக்கியப் பங்கை ஆற்றி, அரசை ஏற்றுக் கொள்ளவைக்கும் முயற்சிகளை எடுப்போம். 

ஒரு மிக நீண்ட பயணத்திற்குப் பிறகு, இத்திட்டம் தற்போது, நாங்கள் ஸ்தாபக நிறுவனராய் இருக்கும் 'யூத் பிசினஸ் இண்டர்நேஷனல்' என்னும் பொது இணையத்தால் 42 நாடுகளில் இருக்கிறது. அதில் நாங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் இதையொத்த நிகழ்வுகளை நடத்தி, பயிற்சியளிக்கிறோம். நாங்கள் திட்டங்களையும், நிகழ்வுகளையும், வழக்குரைகளையும் பரிமாற்றம் செய்துக் கொள்கிறோம், ஆச்சரியம் என்னவெனில் எல்லா இடத்திலும் பிரச்சனைகள் ஒன்றாகத் தான் இருக்கிறது. 42 நாடுகளில், இந்தியா வழிகாட்டுதலில் சிறந்த மாதிரியாக விளங்குகிறது; தற்போது வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகளின் வழிகாட்டுநர்களுக்கும் உதவுகிறது.

என்னைப் பொறுத்தவரை கிராமப்புற இளைஞர்களை வழிகாட்டக்கூடிய அடைக்காக்கும் மையங்களும், (Incubation centers) வழிகாட்டிகளும் பெரிய அளவில் இந்தியா முழுதும் உருவெடுக்கவேண்டும். இத்தகைய சூழல் உருவானால் மட்டுமே ஊரக இந்தியா வளர்ச்சியடைந்து முன்னேறமுடியும்.

இணையதள முகவரி: BYST

Add to
Shares
425
Comments
Share This
Add to
Shares
425
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக