விடாமுயற்சியும், தொழில் தர்மமும், வாடிக்கையாளர் நல்லுறவும் கையில் இருந்துவிட்டால், வணிக உலகில் நீடித்த வளர்ச்சி சாத்தியமே என்று நிரூபித்தவர்கள் சிலரே. அவர்களுள் ஒருவர் கோபி நடராஜன்.
"ஒமேகா ஹெல்த்கேர்" என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரும் இணை நிறுவனருமான அவர், படிப்படியாக முன்னேறி இந்நிலையை அடைந்திருக்கிறார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் கடந்து வந்த பாதை, சுய தொழில் கனவுள்ள தமிழ் இளைஞர்களுக்கு ஒரு பாலபாடம். அவர் தமிழ் யுவர்ஸ்டோரிக்கு அளித்த நேர்காணல் இது:
உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்
நான் சென்னைவாசிதான். எனது தந்தை இந்தியன் ஏர்லைன்ஸில் பணிபுரிந்தவர். எனக்கு 5 சகோதரர்கள். இரு சகோதரிகள். நாங்கள் மொத்தம் 8 பிள்ளைகள். சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி விலங்கியல் படித்தேன். பின்னர் மேலாண்மை குறித்த குறுகிய காலப் பயிற்சிகளை மேற்கொண்டேன்.
உங்கள் இளம் வயதுக் கனவு என்னவாக இருந்தது?
மருத்துவராக ஆக வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் எனது தந்தையாரின் திடீர் மறைவு காரணமாக அதில் மாற்றம் ஏற்பட்டது. எனது சித்தப்பா, என்னை கம்ப்யூட்டர் புரோகிராமிங் கற்றுக்கொள்ளச் சொன்னார். அதன்படி கற்றுக்கொண்டேன். அதன்பிறகு நோவா கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன்.
அதன்பிறகு என்ன நடந்தது?
1982 வாக்கில் நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். 4 ஆண்டுகள் அங்கு வேலை செய்தேன். பின்னர் சிறிய அளவில் ஒப்பந்தப் பணிகளைச் செய்யத்தொடங்கினேன். 2002 ஆம் ஆண்டுவரை இப்படித்தான் போய்க்கொண்டிருந்தது.
சொந்தத் தொழில் ஆர்வம் எப்படி வந்தது?
1988 ஆம் ஆண்டிலிருந்தே நான் மருத்துவத்துறைக்கான சேவைப்பணிகளையே செய்து வந்திருக்கிறேன். நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் மற்றும் இணைத்தல் துறையில் இரண்டு ஆண்டுகள் அனுபவமும் கிடைத்தது. அதன்மூலம் ஒரு நிறுவனத்தை எப்படி மதிப்பிடுவது என்ற பட்டறிவு எனக்குக் கிடைத்திருந்தது. இதை வைத்து சொந்தத்தொழில் தொடங்கினால் என்ன என்று யோசிக்கத் தொடங்கினேன் இந்நிலையில் 2001 ஆம் ஆண்டில் அனுராக் ஜெயின் என்பவருடன் சேர்ந்து சுய தொழில் முயற்சியில் இறங்கினேன்.
துவக்க முதலீடு எவ்வளவு?
நானும் அனுராக் ஜெயினும் உழைப்பை முதலீடாகப் போட்டோம். அனுராகின் உறவினர் ஒருவர் 2.5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தார். நகைத்தொழில் செய்துவந்தவர் அவர். ஆல்பா என்பது அந்த நிறுவனத்தின் பெயர். மருத்துவத்துறைக்குத் தேவையான மென்பொருள் தீர்வுகளை அளிக்கும் நிறுவனம் அது. முதலீடு கிடைத்தவுடன் அமெரிக்காவில் இருந்த நான்கைந்து சிறிய நிறுவனங்களை எங்களது நிறுவனம் வாங்கியது.
புதிய நிறுவனம் நன்றாக வளர்ந்ததா?
நன்றாகவே வளர்ந்தது. ஆனால் அவரது குடும்பத்துக்குள் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக அந்தத் தொழிலில் இருந்து நானும் அனுராகும் வெளியே வந்துவிட்டோம்.
ஒமேகா ஹெல்த்கேர் தொடங்கப்பட்டது எப்போது?
2003 ஆம் ஆண்டில், சில ஆயிரம் டாலர்கள் கொண்டு சொந்த முதலீட்டில் "ஒமேகா ஹெல்த்கேர்" தொடங்கப்பட்டது. எங்களுக்கு அமெரிக்காவில் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் நல்லுறவு இருந்தது. அந்த நம்பிக்கையில் வணிக செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்தோம். தில்லியில் உள்ள முதலீட்டாளர்களிடம் முதலீடு திரட்டுவதற்காகப் பேசிவந்தோம்.
தில்லியிலிருந்து முதலீடு கிடைத்ததா?
இல்லை, பெங்களூருவிலிருந்து கிடைத்தது. மணிப்பால் குழுமம் தெரியுமில்லையா? அக்குழுமத்தின் தலைவர் ரஞ்சன் பாய் எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தார். மணிப்பால், 250 இருக்கைகள் கொண்ட கால் செண்டர் ஒன்றை நடத்திவந்தது. அந்த அலுவலகம் எங்களுக்குத் தரப்பட்டது. 1.5 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அவர்கள் முதலீடு செய்தனர். நானும் அனுராக் ஜெயினும் எங்கள் அனுபவம், வாடிக்கையாளர் தொடர்பு ஆகியவற்றை முதலீடு செய்தோம். நிறுவனம் நல்ல நிலையை அடைந்தது.
பின்னர் என்ன நடந்தது?
18 மாதங்கள் சுமூகமாகக் கடந்த நிலையில் அவர்கள், நிறுவனத்தை விற்க முடிவுசெய்தனர். நல்ல வளர்ச்சி வாய்ப்புள்ள நிறுவனத்தை இழக்க நாங்கள் தயாராக இல்லை. எனவே ஒரு அமெரிக்க நிறுவனத்தை அணுகி, ஒரு தொகையைக் கடனாகப் பெற்றோம். அந்தப் பணத்தைக்கொண்டு ஒமேகாவின் அனைத்துப் பங்குகளையும் நானும் அனுராகும் சேர்ந்து வாங்கிவிட்டோம். நிறுவனம் எங்களது கைக்கு முழுவதுமாக வந்துவிட்டது.
பின்னர் தொழில் நன்கு வளர்ந்ததா?
சொன்னால் நம்ப மாட்டீர்கள். குறுகிய காலத்தில் 3 மடங்கு வளர்ச்சியை நாங்கள் அடைந்தோம். இந்நிலையில் கடன் தொகையைச் சமாளிப்பதற்காக தனியார் நிதியம் ஒன்றின் முதலீட்டைப் பெற்றோம். சிறிது காலம் கழித்து (2006இல்) அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹெல்த் எட்ஜ் இன்வெஸ்ட்மெண்ட் பார்ட்னர்ஸ்' என்ற நிறுவனத்தின் முதலீட்டைப் பெற்றோம்.
எவ்வளவு காலம் அந்த முதலீட்டாளர் உங்களிடம் இருந்தார்?
2013 வரை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறுவனத்தை 8 மடங்கு வளர்ச்சிக்குக் கொண்டு சென்றோம். 2013இல் அவர்கள் வெளியேறிய பிறகு தனி நபர் முதலீட்டாளர் ஒருவரைக்கொண்டு அவர்களது இடத்தை நிரப்பினோம். நிறுவனத்தின் வருவாய் இருமடங்கானது.
திருச்சிக்கு கிளை பரப்பியது எப்படி?
எல்லோரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்றாலே சென்னை, கோவை என்று மட்டும்தான் நினைக்கிறோம். அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் திருச்சியில் கிளையைத் திறந்தோம். அதில் கடுமையான இழப்பைச் சந்தித்தோம். திறன்வாய்ந்த பணியாளர்களைக் கண்டறிவதில் இருந்த சவால்களே காரணம். ஒரு கட்டத்தில் திருச்சி அலுவலகத்தை மூடிவிடலாமா என்றுகூட நினைத்தோம். பின்னர் மனிதவளப் பிரிவில் நாராயணன் என்ற திறமையான தலைமையைக் கொண்டுவந்த பிறகு திருச்சியும் லாபமீட்டத் தொடங்கிவிட்டது. 250 பேரில் இருந்து இப்போது 3000 ஊழியர்களாக திருச்சி கிளை வளர்ந்திருக்கிறது.
எங்கெல்லாம் உங்களுக்கு அலுவலகங்கள் இருக்கின்றன?
சென்னை, திருச்சி, பெங்களூரு, பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் இருக்கின்றன. மொத்தம் 9800 ஊழியர்கள் எங்களிடம் பணிபுரிகின்றனர்.
படிப்படியாக முன்னேறியிருக்கும் ஒமேகா, இன்று எவ்வளவு வருவாய் ஈட்டுகிறது?
இன்று நாங்கள் 72 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டுகிறோம்.
உங்கள் வெற்றியின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
இந்த வெற்றிக்கு எங்களது முதலீட்டாளர்கள் முக்கியக் காரணம். 7 ஆண்டுகளாக எங்களுக்கு அவ்வளவு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். சொந்தக் காரணம் என்றால், அது என் மனைவி விஜி கிருஷ்ணன் அவர்கள்தான். அவர் செய்த தியாகம்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்திருக்கிறது. நான் இத்தனை ஆண்டுகளில் அதிகம் வீட்டில் இருந்ததே இல்லை. பெரும்பாலும் பயணம், கூட்டம், திட்டமிடல் என்றுதான் நாட்கள் கழிந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எனது குடும்பத்தைப் பராமரிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, எனக்கு ஆதரவாக இருப்பது என்று பல வழிகளிலும் அவர் என்னைத் தாங்கியிருக்கிறார். அவரின்றி இவ்வெற்றி இல்லை.