பதிப்புகளில்

பொருளாதாரத்தில் பின்தங்கிய 3,500 பேரை அரசு ஊழியராக்கிய வட்டாட்சியர் மாரிமுத்து!

சனி, ஞாயிறுகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தும் வட்டாட்சியர் மாரிமுத்து 10 ஆண்டுகளில், பின்தங்கிய 3,500-க்கும் மேற்பட்டோர் அரசுப் பணியில் சேர உறுதுணைபுரிந்துள்ளார்.

11th Jul 2017
Add to
Shares
995
Comments
Share This
Add to
Shares
995
Comments
Share

வருவாய்த் துறை அலுவலகம் முன்பு செருப்புத் தைக்கும் வயதான தொழிலாளி அவர். ப்ளஸ் டூ படித்த தன் மகனோ உள்ளூர் ரவுடிகளுடன் சுற்றித் திரிவதில் அவருக்கு பெரிய வருத்தம். தந்தை பேச்சை மட்டுமல்ல; யாரையுமே மதிப்பதில்லை. கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில், அதிகாரி ஒருவரை சந்திக்கிறான் அந்த இளைஞர். அதிகாரி பக்குவமாக பேசினார்.

image


"என்ன படிச்சிருக்க தம்பி?"

"ப்ளஸ் டூ"

"வேறென்ன தெரியும்?"

"டைப்ரைட்டிங்"

"ஒரே ஒரு உதவி பண்ணு. இந்த வாரம் சனிக்கிழமை என் பயிற்சி வகுப்புக்கு வா. ஓரமா நின்னு மட்டும் ரெண்டு மணி நேரம் கவனி. நீ வேற எதுவும் செய்ய வேண்டாம். ஜஸ்ட் வேடிக்கை மட்டும் பாரு. அது போதும்."

"சரி."

அந்த இளைஞன் அதே சனிக்கிழமை பயிற்சி வகுப்புக்குச் சென்று வேடிக்கைப் பார்த்தான். காட்சிகள் மாறியது.

இரு ஆண்டுகளுக்குப் பின்...

எங்கு தன் தந்தை செருப்புத் தைத்து வந்தாரோ அதே வருவாய்த் துறை அலுவலகத்தின் உள்ளே பேனா பிடித்து அரசுப் பணியாளராக சேர்ந்தார் அந்த இளைஞர்.

தனி ஒருவரின் 10 ஆண்டு கால முயற்சி

இந்த இளைஞரைப் போலவே தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 3,500-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்களை உருவாக்கிய அந்த அதிகாரி, ராஜபாளையம் வட்டாட்சியர் (தாசில்தார்) மாரிமுத்து (வயது 50). டி.என்.பி.எஸ்.சி. அனைத்துத் தேர்வுகளுக்கான பயிற்சிகள், யுபிஎஸ்சி, வி.ஏ.ஓ., ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் ஏழ்மைப் பின்னணி கொண்ட 2,000-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். வர்த்தக நோக்கு இல்லாததால் பெயரிடப்படாத இந்தப் பயிற்சி மையத்தை, விருதுநகர் ஆட்சியரகத்தின் வருவாய்த் துறை சங்க கட்டிடத்தில் 10 ஆண்டுகளாக தனி ஒருவராக நடத்தி வருகிறார் வட்டாட்சியர் மாரிமுத்து.

ஏழ்மையும் இல்லாமையும்தான் இந்த அர்ப்பணிப்பு மிக்க தொடர் முயற்சிக்குப் பின்னாள் இருப்பவை. தான் கடந்து வந்த பாதையை விவரிக்கும்போது ஆங்காங்கே கலங்கிடத் தயங்கவில்லை.

"நான் வறுமை சூழந்த குடும்பத்தில் இருந்து வந்தேன். வறுமை என்றால் சாதாரண விவசாயக் குடும்பம் இல்லை. அப்பா 40 ஆண்டுகளாகப் படுத்தப் படுக்கையாக இருந்தார். அம்மா என்னை வளர்த்தெடுத்தார். அப்பா தச்சு வேலை செய்பவர். கலை நுணுக்கம் வாய்ந்த வேலைகளில் ஈடுபடுபவர். ஒருநாள் வேலைக்கு போய் வந்தவுடன், வீட்டின் முன்பு உள்ள கட்டிலில் படுத்தார். அந்தக் கட்டிலில் படுத்திருந்த மண்ணுளிப் பாம்பு, அப்பாவின் உடம்பு முழுவதையும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அப்போது சிகிச்சை பெரிய அளவில் எடுக்க வாய்ப்பு இல்லாமல் போனது. அதிலிருந்து படுத்தப் படுக்கையாகிவிட்டார்.

image


அதன்பின், ராஜபாளையத்தில் இருந்து மீண்டும் சொந்த ஊரான கூமாப்பட்டிக்கு திரும்பிவிட்டோம். அம்மா வேறு வழியில்லாமல் விவசாயக் கூலி வேலைக்குப் போக ஆரம்பித்தார். தினமும் 16 கிலோ மீட்டர் நடந்து போய் வேலை செய்வார். நான் அப்போது ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் சோறாக்கி வைத்துவிட்டு தூங்கிவிடுவேன். அம்மா காய்கறிகள் வாங்கிவந்து குழம்பு வைத்துவிட்டு என்னை எழுப்பி இரவு உணவு தருவார். வீட்டுத் திண்ணையில் உள்ள மடக்குக் கட்டிலில் அப்பா படுத்துக் கிடப்பார். அதன் அருகே உள்ள நாலடி இடத்தில்தான் நான் இருபது ஆண்டு காலம் தூங்கினேன். அதுவே பழக்கமாகிவிட்டதால் இப்போது கூட கால்களை மடித்துதான் தூங்குகிறேன்.

நான் படிப்பில் எப்போதும் முதல் மாணவன். என்னுடைய சொத்து என்று நான் சொல்லிக்கொள்வது என் எழுத்துதான். என் கையெழுத்து எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, ஆலங்குளத்தில் உள்ள சிமென்ட் ஆலையில் ஓராண்டு பயிற்சி வேலை செய்தேன். அதன்பின் அங்கேயே டியூஷன் எடுத்தேன். அப்போது 10 மணி நேரத்துக்கும் மேலாக கடுமையாகப் படிப்பேன். மூன்று ஆண்டு காலம் எல்லா சப்ஜெக்ட்டையும் ஆழமாகப் படித்து அரசு வேலைக்கான தேர்வுக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அப்போது என்னை நான் தயார் செய்துகொண்டதுதான் இப்போதும் யாருக்கு வேண்டுமானாலும் பயிற்சி அளிக்க வித்திட்டது" என்கிறார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 200-க்கு 200 முழு மதிப்பெண் வாங்கியவர், இன்ஸ்பெக்டர் என்ற வார்த்தை மீது கொண்ட ஈர்ப்பினாலேயே வருவாய்த் துறை ஆய்வாளர் பணியை டிக் செய்திருக்கிறார். 1994-ல் வேலைக்குச் சேர்ந்தார். முதலில் திருமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் சேர்ந்தார். பிறகு, சொந்த மாவட்டமான விருதுநகருக்கே வந்தார். இப்போது வட்டாட்சியராக உயர்ந்திருக்கிறார்.

மக்களை அணுகும் விதம்

தான் கடந்து வந்த பாதையே ஓர் அரசு அதிகாரி எப்படி மக்களை அணுகுவது என்ற அனுபவப் பாடத்தையும் கற்றுத் தந்திருக்கிறது.

image


"இரண்டு கண்களில் இடது கண் எப்போதும் நம் பழைய வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்; வலது கண்தான் தற்போதைய முன்னேறிய வாழ்க்கையைக் கண்டு அனுபவிக்க வேண்டும்.

ஏழை விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும்போது, மனுவை ஓலை மாதிரி சுருட்டிக்கொண்டு வருவார்கள். அதை எப்படி எடுத்து வருவது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ஊழியர்கள் சிலர் கண்டுகொள்ளாததையும் கண்டிருக்கிறேன். அதுபோன்ற மக்களைப் பார்க்கும்போது என் அம்மா நினைவுக்கு வருவார்.

நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மாவும் இப்படித்தானே ஏதும் அறியாதவராக சான்றிதழ்களுக்கு அலைந்திருப்பார் என்பதை என் மனக்கண்ணில் பார்ப்பேன். உடனே, அவர் போன்றே ஏதுமறியாது நிற்கும் மக்களிடம் மனுக்களைப் பெற்று என்னால் இயன்றதை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டதும் என் அனுபவ வாழ்க்கைக் கற்றுத் தந்த பாடம்தான்" என்கிறார் மிகத் தெளிவாக.

மனுக்களுடன் வரும் பெரியவர்களை அன்போடு 'அய்யா' என்று அழைத்து மதிப்புடன் வேண்டியதைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர், வயதில் சிறியவர்களை 'வாங்க தம்பி' என்று வாஞ்சையோடு விளிப்பார்.

எப்படி நடக்கிறது இலவச பயிற்சி வகுப்பு?

இலவச பயிற்சி வகுப்புகளின் செயல்பாடுகளையும் பின்னணியையும் குறித்து விரிவாகப் பேசிய வட்டாட்சியர் மாரிமுத்து, "2003-ல் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். டெஸ்மா சட்டம் மூலமாக பல லட்சம் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அப்போது, ரூ.4000 ஊதியத்தில் தமிழகம் முழுவதும் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் போராடினார்கள். அதன் தொடர்ச்சியாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், அந்தப் பணியாளர்களுக்கு வேலை உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்

அப்போது நான் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுருந்திருந்து வந்தேன். ஒரு பள்ளியில் வகுப்பறை ஒன்றைக் கேட்டுப் பெற்று, பாதிக்கப்பட்ட 150 பேரை திரட்டி பயிற்சி வழங்கினேன். அதில், 145 பேர் தேர்ச்சி பெற்று நிரந்தரப் பணியாளர் ஆனார்கள். பயிற்சிக்கு சரியாக வராததால் நாங்கள் தேர்ச்சி பெறவில்லை என்று எஞ்சிய அந்த 5 பேர் நேரில் வந்து வருந்தினர். இந்தத் தகவல் பரவியதும் மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் பலரும் நேரில் என்னைப் பாராட்டித் தள்ளினர். அந்த நிகழ்வுதான் என்னுடைய பயிற்சிப் பட்டறைக்கு உந்துதலாக இருந்தது.

அதன்பின் 2007-ல் வி.ஏ.ஓ. தேர்வு முறை வந்தது. அந்தக் காலக்கட்டத்தில் எனது பயிற்சிப் பட்டறையைத் தொடங்கினேன். அப்போது 75 பேருடன் இந்தப் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த் துறை சங்க கட்டிடத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகளை 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறேன்" என்கிறார்.

சொந்த வேலைகளைப் பொருட்படுத்தாது, சனி - ஞாயிறுகளில் தவறாமல் வகுப்பு எடுப்பார். இப்போது 2,000 பேர் பயன்பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்கள். படிப்பு முடித்துவிட்டு கட்டிட வேலை, பட்டாசு ஆலைப் பணிகள், மில்களில் வேலை, பெயின்டிங் வேலை முதலான சிறு சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள்தான் இவரிடம் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஓர் ஞாயிற்றுக்கிழமை தன் அண்ணன் வீட்டுத் திருமணம். பயிற்சி வகுப்பைத் தவிர்க்கக் கூடாது என்பதற்காக, அந்த நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ளாமல் விட்ட ஒரு நிகழ்வே மாரிமுத்துவின் அர்ப்பணிப்புக்குச் சான்று.

தனி ஒருவராக இவர் பயிற்சி அளிக்கும் விதமே வியப்புக்குரியது. முதலில் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக வாசகங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து, பயிற்சிக்கு வருபவர்களை உத்வேகத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்வார். அப்படி அவர் அனைவரையும் குழுவாக உரக்கச் சொல்லவைக்கும் வரிகள்:

நான் சாதிக்கப் பிறந்தவன்...
நான் சாதிக்கவே பிறந்தவன்!
நான் வாழும் காலத்திலும்
நான் வாழ்ந்த பின்னரும்
என் பெயரை நிலைநாட்டிச் செல்வேன்!
நான் தெருவில் இறங்கி நடக்கும்போது
இச்சமுதாயம் என்னை கைக்கூப்பி வணங்க வேண்டும்;
அதற்கு, என்னைத் தகுதிப்படுத்துவேன்!
நான் பிறந்தது இறப்பதற்கல்ல...
சாதிப்பதற்கே! சாதிப்பதற்கே! சாதிப்பதற்கே!

அனைத்து விதமான அரசுத் தேர்வுகளுக்கும் உரிய பாடங்களை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் புரியும் விதமாக மிக எளிய முறையில் பயிற்சி எடுத்து வருவது இவரது தனிச் சிறப்பு.

"இப்போதைய இளைஞர்களை விஷயம் இல்லாமல் 10 நிமிடத்துக்கு மேல் கட்டிப்போட முடியாது. அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தால்தான் இருப்பார்களே தவிர, இலவசம் என்பதால் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

என் பயிற்சிப் பட்டறை, தமிழகத்திலேயே சிறந்தது என்பதைச் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணிபுரிபவர்களில் 200 பேர் என்னுடைய பயிற்சிப் பட்டறையில் இருந்து வந்தவர்கள். என்னிடம் இருந்து சென்றவர்களில் 3,500-க்கும் மேற்பட்டோர் வி.ஏ.ஓ.வில் கணிசமான அளவு, வருவாய்த் துறையில் அதிகமானோர், ஊரக வளர்ச்சித் துறை, கால்நடைத் துறை, காவல் துறை, வேளாண் துறை, வணிக வரித்துறை முதலான அரசு துறைகளில் அதிகாரிகள், ஊழியர்களாக உள்ளனர்" என்கிறார் பெருமிதத்துடன்.

image


ஆடு மேய்த்த இளைஞர் இன்று வி.ஏ.ஓ!

கலையரசி ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். ஏழு பெண்பிள்ளைகள் உள்ள வறுமை மிகு குடும்பத்தில் இவர் இரண்டாவது பிள்ளை. இவருக்கும் கடைசி தங்கைக்கும் மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. உடல் ரீதியில் உள்ள பல குறைபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, வட்டாட்சியர் மாரிமுத்துவின் பயிற்சியின் உறுதுணையுடன் இன்று கிராம நிர்வாக அதிகாரியாக திண்டிவனத்தில் பணியைத் தொடங்கியிருக்கிறார்.

"இளைஞர்களைக் கனவு காணச் சொன்னார் கலாம். அந்தக் கனவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் எங்கள் மாரிமுத்து சார்,"

என்று உணர்வுபூர்வமாகச் சொல்கிறார் கலையரசி. மாம்பூ எனும் பெண், பார்வையில் பாதிப்பு உடையவர். அம்மா துப்புறவுப் பணியாளர். இவரிடம் பயிற்சி பெற்ற பின், ஒரே ஆண்டு முயற்சியில் குரூப் 2-வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

"எழுத்தறிவித்தவன் இறைவன் என்று சொல்வார்கள். எனக்கு எழுத்தைத் தாண்டி வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்தவர் இவர்தான்" என்று நெகிழ்கிறார் மாம்பூ.

டிகிரி முடித்துவிட்டு வறுமை காரணமாக அப்பாவுக்குத் துணையாக அவ்வப்போது ஆடு மேய்த்து வந்த ராமமூர்த்தி இப்போது கிராம நிர்வாக அதிகாரி.

"நான் பிகாம் படித்திருக்கிறேன். அப்பாவுக்கு துணையாக அவ்வப்போது ஆடு மேய்ப்பேன். ஒருமுறை ஆடு மேய்த்துக்கொண்டே மாரிமுத்து சாரின் பயிற்சி வகுப்பை தூரத்தில் இருந்து கவனித்தேன். பிறகு, என்க்கும் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அவரிடம் இலவசமாக பயிற்சி பெற்றேன். என்னால் கிராம நிர்வாக அதிகாரியாக உயர முடிந்தது. அவர்தான் இதைச் சாத்தியப்படுத்தினார்" என்கிறார் ராமமூர்த்தி.

அடுத்து என்ன?

"திங்கள் முதல் வெள்ளி வரை அரசுப் பணிகள். சனி, ஞாயிறுகளில் பயிற்சிப் பட்டறை. மீண்டும் திங்கள்கிழமை வழக்கமான பணிகள். இப்படியாக இயங்குகிறேன்.

image


வறுமைச் சூழல் காரணமாக, படித்து முடித்த பலரும் சிறு சிறு வேலைகளைச் செய்து, அதிலேயே தன் வாழ்க்கையை முடக்கிக் கொள்கின்றனர். அதை என்னால் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும்; அவர்கள் மூலம் சமூகம் பயன்பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

பசியின் கொடுமையை பரிபூரணமாக உணர்ந்தவன். வறுமையைப் போக்குவது என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம். எனக்குத் தெரிந்த வழியில் நான் செய்கிறேன். இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்பெற இயன்றவரையில் வழிவகுப்பேன். என் பணி ஓய்வுக்குப் பின்னரும் இதைத் தொடர்வேன்" எனும் வட்டாட்சியர் மாரிமுத்து சொன்னபோது, 'நாம என்ன பண்ணிட்டு இருக்கோம்?' என்ற யோசனையுடன் குற்ற உணர்வு துளிர்த்தது எனக்கு.

Add to
Shares
995
Comments
Share This
Add to
Shares
995
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக