பதிப்புகளில்

தரமான தண்ணீருக்கான உத்தரவாதத்தை தொழில்நுட்ப உதவியுடன் சாத்தியமாக்கும் வருண் ஸ்ரீதரன்

Gajalakshmi Mahalingam
19th Feb 2016
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் இடம்பெயர்தல் பெரும்பான்மையானவர்களின் வாழ்வியலாகிவிட்டது. அப்படி, புதிய பகுதிகளில் அமைக்கப்படும் குடியிருப்புகளுக்குத் தேவையான நீரை கொண்டு சேர்ப்பதில் போதுமான கட்டமைப்புகள் வளராமல் இருப்பது எதார்த்தமான உண்மை. இந்த சிக்கலை தீர்க்க வழி பிறக்காதா என்று ஏங்கியவர்களுக்கு வரப்பிரசாதமாக "கீரீன்விரான்மென்ட்" 'Greenvironment' நிறுவனத்தின் திட்டங்கள் திகழ்கிறது. உங்கள் அப்பார்ட்மெண்ட் எதுமாதிரியான பகுதியில் அமைந்திருந்தாலும், தண்ணீருக்கு இனி பிரச்சனை இருக்காது என்கிறார்கள் கிரீன்விரான்மென்ட் நிறுவனத்தினர்.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீர் சுத்திகரிப்பு, வழங்கீடு, நீரின் தரம் ஆகிய தரவுகளை நீங்கள் இணையம் வழியே பார்க்கலாம் என்கிறார்கள் அவர்கள். சுமார் 3000 கோடி மதிப்புள்ள இந்தத் துறையில் நுழைந்து தடம் பதித்து வருவது பற்றி கிரீன்விரான்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர், வருண் ஸ்ரீதரனை பிரத்யேகமாக பேட்டி கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி. அதன் சாரம்சம் இதோ:

அடுக்குமாடி குடியிருப்புகளில் நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்பது விதி, ஆனால் அப்படி அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையங்களின் தரம் பற்றிய அச்சம் அவற்றை பயன்படுத்தும் பலருக்கும் இருக்கும். இதற்கு ஸ்மார்ட்டான தீர்வை வழங்குவதே கிரீன்விரான்மென்டின் சிறப்பு என்று தன்னுடைய நிறுவனம் பற்றி அறிமுகம் கொடுத்தார் பொறியியல் பட்டதாரியான வருண் ஸ்ரீதரன்.

image


“மக்களுக்கு உதவும் வகையிலான ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கி அதன் மூலம் நீர் மேலாண்மையில் சிறப்பான சேவையையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குவதே கிரீவிரான்மென்டின் சாராம்சம். குடிநீருக்காக நாம் போர்வெல், கிணறுகள், பொது விநியோக திட்டம் அல்லது மினரல் வாட்டர் நிறுவனங்களை நம்பியே இருக்கிறோம். தரமான தண்ணீரை வழங்க பயன்படுத்தும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தரமான நீரை உற்பத்தி செய்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்" என்கிறார் வருண். 

அதே போன்று அடுத்த அத்தியாவசியமான விஷயம் வீணாகும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது. ஏனெனில் 2025ம் ஆண்டுக்குள் இந்தியா நீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாய கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது” என்று எச்சரிக்கிறார் வருண்.

கிரீன்விரான்மென்ட் வழங்கும் சேவை

2012ம் ஆண்டு ஆகஸ்ட், 'கிரீன்விரான்மென்ட்'டை தொடங்கிய போது நாங்களும் மற்ற நிறுவனங்களைப் போல நீர் சுத்திகரிப்பு நிலையங்களை கட்டமைத்து கொடுத்து வந்தோம். தமிழகத்தில் நாமக்கல், திண்டுக்கல் சென்னை உள்ளிட்ட இடங்களில் இரண்டு ஆண்டுகளாக இது போன்ற பணிகளையே செய்து வந்தோம், ஆனால் நாளடைவில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு ஸ்மார்ட்டான தீர்வு காணும் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினோம் என்கிறார் கேரளாவைச் சேர்ந்த வருண். 

'நீர்மேலாண்மைக்காக நாங்கள் உருவாக்கியுள்ள தயாரிப்பு, நீரின் தரம் மற்றும் அளவீடுகளை ஆன்லைன் ரியல் டைம் கண்காணிப்புத் திட்டம் இணையதளம் வழியாக கண்காணிக்க முடியும். இது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் புதிய வகை என்று கூட சொல்லலாம்.' கிரீன்விரான்மென்ட்டின் புதிய பரிமாண வளர்ச்சி பற்றி மேலும் தொடர்ந்த வருண் அதற்கு ஒரு உதாரணத்தையும் கூறினார்.

image


200 வீடுகளுக்கும் மேல் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தங்களது வளாகத்திற்குள்ளாகவே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை கட்டாயம் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கப்படும் நிலையங்கள் ஆபரேட்டர் மூலம் இயக்கி குடிக்கத்தக்க நீர் மற்றும் மறுசுழற்சி நீரை குடியிருப்புவாசிகளுக்கு வழங்குகின்றனர். ஆனால் அந்த நிலையங்கள் உற்பத்தி செய்யும் நீரின் தன்மை மற்றும் அளவு பற்றிய தெளிவில்லாமல் இருந்தனர் குடியிருப்புவாசிகள். ஏனெனில் நீரின் உற்பத்தி அளவு தெரியாத நிலையில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும், அப்போது அவர்கள் நிலைமையை சமாளிக்க பெரும் தொகையை செலவிட்டு தண்ணீரை பெரிய பெரிய லாரிகளில் கொண்டுவர வேண்டும். ஆனால் இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்கான வழியே எங்களது ரியல் டைம் மானிடரிங் என்கிறார் வருண்.

நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் ஆபரேட்டரை செல்போன் செயலி மூலம் நாங்கள் இணைக்கிறோம், இதனால் குடியிருப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் எவ்வளவு நீரை மறுசுழற்சி மூலம் உற்பத்தி செய்கிறது நீரின் PHஅளவு உள்ளிட்ட விவரங்களை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இணையம் மூலம் கண்காணிக்க முடியும் என்று தங்களின் தயாரிப்பு பற்றி விளக்குகிறார் அவர். தொடர்ந்து பேசுகையில்,

இந்தியாவில், நீரை சுத்திகரித்தல், வடிகட்டுதல், ஓட்டம், அழுத்தம் மற்றும் அளவு என பல அம்சங்களைக்கொண்டு கட்டமைத்து பராமரிக்கப்படும் துறையின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய் ஆகும். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி, சமூகத்திற்கான குடிநீர், தொழிற்சாலைக்களுக்கான நீர் சுத்திகரிப்பு என எங்களது திட்டம் தனித்துவம் வாய்ந்தது". 

அதேபோல் ஏராளமான சந்தை வாய்ப்புகளைக் கொண்டது என்றும் சொல்கிறார் வருண்.

சென்னையில் தற்போது சோழிங்கநல்லூர், ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் எங்களின் ஸ்மார்ட் நீர் மேலாண்மை சேவையை வழங்கி வருகிறோம். பராமரிப்பு செலவோடு கூடுதலாக 10 சதவீதம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுவதால் வாடிக்கையாளர்களும் அதை திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றனர் என்கிறார் வருண். ஏனெனில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு தண்ணீரை பயன்படுத்துகிறோம், என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பதால் எங்களின் திட்டம் அவர்களுக்கு ஏறத்தாழ 8 லட்சம் ரூபாய் வரை செலவை மிச்சப்படுத்துகிறது என்பதை வாடிக்கையாளர்கள் உணர்ந்துள்ளதாக பெருமையோடு கூறுகிறார் புரட்சி நாயகன் வருண்.

image


சவால்கள்

நீரின் தேவையைப் பொருத்து சுத்திகரிப்பு நிலையங்களும் பெருகிவிட்ட நிலையில் எங்களது தயாரிப்பு பற்றி முதலில் வாடிக்கையாளர்களுக்கு புரிய வைப்பது சற்று கடினமானதாகவே இருந்ததாகச் சொல்கிறார் வருண். ஆனால் எங்கள் சேவையை பெற்ற பிறகு வாய்வழி விளம்பரம் மூலமே பல வாடிக்கையாளர்கள் கிடைத்ததாகப் பெருமைப்படுகிறார் அவர். கிரின்விரான்மென்ட் குறுகிய காலத்தில் இத்தனை சிறப்பை பெறுவதற்கான முக்கிய காரணமாக வருண் கருதுவது அவர்களின் குழுவினரையே. 

கிரீன்விரான்மென்டிற்கு தொடக்க காலம் மூதல் வழிகாட்டி வருபவர் Dr. லிஜி பிலிப், இவர் சுழலியல் பொறியியல் நிபுணத்துவம் பெற்றவர் என்று கூறும் வருணின் நிறுவனத்தில் அவருடைய தந்தை ஸ்ரீதரன் நாயர் இணைநிறுவனர் பொறுப்பை வகிக்கிறார். இவர் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை கவனித்துக் கொள்கிறார். இவர்களைத் தவிர நிதிக்கொள்கையில் 11 ஆண்டு அனுபவம் பெற்ற சார்ட்டட் அக்கவுண்டன்ட் தாமஸ் ஆலோசகராகவும், வோடஃபோன் இந்தியா மற்றும் Panasonic போன்ற நிறுவனங்களில் விற்பனை மற்றும் சந்தைப் படுத்தும் பிரிவில் பணியாற்றிய முடம்மது தாவூத் வியாபார மேம்பாட்டிற்கான பணிகளையும் கவனித்து வருகின்றனர் என்கிறார் வருண். எங்களுடைய ஸ்டார்ட் அப் குழுவில் நீர் மற்றும் வீணாகும் நீரை மறுசுழற்சி செய்வதில் சிறந்து விளங்கும் வல்லுனர்கள் சதீஷ்குமார் மற்றும் லதா கண்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

image


இவர்கள் நீரின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து, அவற்றை நிலைத்திருக்கச் செய்யும் வகையில் தொழில்நுட்ப உதவியை வழங்குகிறார்கள், இதுவே எங்கள் ஸ்மார்ட் வாட்டர் மேனேஜ்மென்ட் என்கிறார் வருண். இது தவிர ஆர்வம் உள்ள சூழலி பொறியியல் பட்டதாரிகள் மற்றும் புதிய எண்ணங்கள் கொண்டவர்களுடன் கைகோர்த்து கிரீன்விரான்மென்ட் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறார் அவர்.

சிவில் என்ஜினியரிங் டூ தொழில்முனைவு

நம்மைச் சுற்றி சுத்தமான மற்றும் பாதுகாப்பான சற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் சிவில் என்ஜினியரான வருண் ஸ்ரீதரன். கேரளாவின் வடபகுதியைச் சேர்ந்த வடகரையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், தந்தையின் பணி மாறுதல் காரணமாக சென்னைக்கு இடம்பெயர்ந்ததால் இவரது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு சென்னையிலேயே அமைந்துவிட்டது. 

‘அனைத்திலும் துறுதுறுவென செயல்படுவது என்னுடைய சிறப்பு, படிப்பில் எப்படி சுட்டியாக இருப்பேனோ அதே போல மற்ற செயல்களிலும் என்னை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. பள்ளி கல்லூரி சார்பில் நடைபெறும் TNCA லீக் போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் ஸ்பின்னராக ஒரு கலக்கு கலக்கி இருக்கேன்’ என்று இளமைக்கால நினைவுகளை அசைவு போடுகிறார் வருண்.

பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் 2009 ம் ஆண்டு என்னுடைய முதல் ப்ராஜெக்ட்க்கான அடிக்கல் நாட்டப்பட்டது, அதுவே என்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றியது என்று கூட சொல்லலாம் என்கிறார் வருண். ஆம் நான் என்னை ஒரு சிவில் என்ஜினியராக செதுக்கிக் கொள்ளாமல் சூழலி பொறியாளராக மாற வேண்டும் என்று என்னுடைய இலக்கை நிர்ணயித்துக் கொண்டேன். ஐஐடி மெட்ராஸ் பல ஆண்டுகளாக தொழில்முனைவு கனவை பலருக்கும் விதைக்கும் இடமாக விளங்குகிறது அதற்கு நானும் விதிவிலக்கல்ல, நான் சில நிபுணர்களின் கலந்துரையாடலில் பங்கேற்றேன், அப்போது எனக்குள் எழுந்த ஆழ்ந்த கேள்வி என்னால் சொந்தமாக எதையும் தொடங்கமுடியதா என்பதாக இருந்தது. சுகாதாரமான நீருக்கான தேவையை நிதர்சனத்தில் உணர்ந்ததால் அவற்றை மறுசுழற்சி செய்து பாதுகாப்பான நீராக்க முடியும் என்று நம்பினேன். இந்தியாவில் நிலவும் இந்த பிரச்சனைக்கு என்னிடம் தீர்வும் சரியான அறிவும் இருப்பதாக நம்பினேன்.

image


சூழலியல் பொறியாளராக மாறிய தருணம்

உயர்சிறப்பு பெற்ற ஐஐடி மெட்ராஸில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை பொறியியல் துறை நிபுணரான Dr. லிஜி பிலிப்புடன் இணைந்து துணை திட்ட அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதிலும் வீணாகும் நீர் நிர்வாகத்தை நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பகிர்ந்துகொடுப்பதற்கான விதிகளை வகுத்துக் கொடுக்கும் திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து நான் மத்திய கிழக்கு நாடுகளில் பணிணுயாற்ற சென்று விட்டேன். அங்கு சர்வதேச சூழலி பொறியியல் நிறுவனம் ஒன்றில் 2 ஆண்டுகள் செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றினேன். என்னுடைய தொழில்முனைவு கனவை அடையும் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்கான மைல்கற்களை ஏற்படுத்துவதற்கு நான் பணியாற்றிய அனுபவங்கள் உறுதுணையாக இருந்தன. கடைசியாக நான் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது, 2012ம் ஆண்டு UAE-ல் இருந்து இந்தியா திரும்பி என்னுடைய தொழில்முனைவு கனவு பற்றி குடும்பத்தாரிடம் எடுத்துரைக்க முடிவு செய்தேன் என்று கூறுகிறார் வருண்.

என்னுடைய முடிவிற்கு அப்பா உடனடியாக பச்சைக் கொடி காட்டியதோடு “நீ எட்ட நினைக்கும் கனவை அடைய நாங்கள் உதவுகிறோம்” என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறினார். என்னுடைய தந்தைக்கு மார்க்கெட்டிங் துறையில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ளது. அதோடு அவர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் இணைந்து 6 ஆண்டுகள் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இணை நிறுவனராக இருந்த அனுபவமும் இருந்தது. என் அப்பாவின் நண்பர் நிதி திட்டமிடல் மற்றும் நிதி திரட்டலில் அனுபவம் மிக்கவர். 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி எங்கள் நிறுவனத்தை உருவாக்குவதற்காக Dr லிஜி பிலிப்பை தொடர்பு கொண்டோம். அவர் உதவியுடன் ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல் மூலம் இன்குபேஷன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து எங்களது நிறுவனத்தை முன்எடுத்துச் செல்ல என்னுடைய சகோதரர் அருண் ஸ்ரீதரன், கோகுல் கிருஷ்ணன் மற்றும் மார்க்கெட்டிங் வல்லுநரான முகம்மது தாவூத் ஆகியோர் ப்ரொமோட்டார்களாக கிடைத்தனர் என்று சொல்கிறார் வருண்.

தைரியமான முடிவு

முதல் தலைமுறை தொழில்முனைவர் என்றாலே குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் அனுமதி கிடைப்பது சற்று கடினம் தான். அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை பார்த்த நான் வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் ஒரு ஸ்டார்ட் அப் செய்ய விரும்புகிறேன் என்பதை ஏற்றுக் கொள்ள சிறிது தயங்கினார்கள். ஏனெனில் அந்த சமயம் தான் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது என்று வாழ்க்கையில் போராடத் தயங்காத வருண் கூறுகிறார். 6 மாதங்களுக்குப் பின் திருமணம் நடக்க இருந்த நிலையில் நான் தொடக்க நிலை தொழில்முனைவர் தான் என்பதை உணர்ந்து கொண்டு என் மனைவி பல்லவி எனக்கு உறுதுணையாக நின்றார். பின்னர் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் மனைவியின் முழு ஒத்துழைப்போடு நம்பிக்கையோடு என் தொழில்முனைவு வாழ்வில் அடிஎடுத்து வைத்தேன். ஒரு வழியாக அனுமதி கிடைத்தாலும் அடுத்த சிக்கல் தலை தூக்கியது, எல்லோருக்கும் வருவது போல நிறுவனத்திற்கான நிதியை திரட்டுவதில் தொடங்கியது அடுத்த பிரச்சனை. என் தந்தை தொழில்முனைவு கனவிற்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு கொடுத்தாலும் ஸ்டார்ட் அப்க்கு முதலீடு செய்யும் அளவு அவரிடம் நிதி கையிருப்பு இல்லை. எங்கள் நிறுவனத்திற்கான முதல்கட்ட முதலீடாக ரூ.1 லட்சத்தை உறவினரிடம் இருந்து பெற்றேன், மேலும் என் பள்ளித் தோழர்கள் சிலரும் முதல்கட்ட முதலீட்டிற்கு உதவியதாக தெரிவிக்கிறார் லட்சியத்தில் உறுதியாக இருந்த வருண் ஸ்ரீதரன்.

முதலீடும் எதிர்காலத்திட்டமும்

முதல் ஆண்டு நாங்கள் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியோடு சுயமுதலீட்டு முறையில் சந்தையில் எங்கள் நிறுவனத்தின் இருப்பை உணர்த்தினோம். 2ம் ஆண்டு அதிர்ஷ்டவசமாக எங்களது செயல்பாட்டை கண்டு ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் கிரெடிட் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தை முதலீடாக அளித்தது, அதோடு ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல் மூலம் இன்னோவேஷன் சீட் நிதியாக ரூ. 5 லட்சமும் கிடைத்தது, இவை எங்கள் தொழிலை கட்டமைக்க உதவியது. இதைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டு இறுதியில் எங்களது தொழில் ஆலோசகராகவும் மாறிய செந்தில்நாதனிடம் இருந்து ரூ.10 லட்சம் ஏஞ்செல் முதலீடு கிடைத்தது. ஸ்மார்ட் நீர் மேலாண்மைக்கான திட்டத்தை தொடங்கிய போது இன்குபேட்டர்களின் ஆதரவில் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி கழக நிதியிலிருந்து சாஃப்ட் கடனாக ரூ.20 லட்சம் கிடைத்தது என்று தன்னுடைய வளர்ச்சிக்கு உதவியவர்களை நினைவுகூர்கிறார் வருண்.

வருங்கால வாடிக்கையாளர்களை குறி வைத்து செய்யப்படும் எங்கள் வியாபாரயுக்திகளை புரிய வைப்பதில் போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் பஞ்சமில்லை. வீணாகும் நீரை சுத்திகரிக்கும் திட்டங்களுக்கான கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு மாதிரிகளை நாங்கள் உருவாக்குகிறோம். ஆனால் இந்தத் துறையில் வெற்றி காண்பது அவ்வளவு எளிதல்ல ஏனெனில் இத்துறையில் ஆரோக்கியமற்ற போட்டி நிலவும் நிலையில் எங்களுக்கான வாய்ப்புகள் அவர்களுக்கு ஒரு திருப்புமுனை திட்டங்களாக இருக்கும் என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் எங்களது IoT தயாரிப்புகளுக்கு சிறப்பான செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை பின்பற்றுகிறோம், அவை சந்தையில் தனித்துவம் வாய்ந்ததாகவும், வருமானத்தை ஈட்டக் கூடியதாகவும் தற்போது மாறி வருகிறது.

image


கிரீன்விராண்மென்ட் தன்னுடைய குறுகிய கால பயணத்தில் நீர் தேவை மற்றும் வீணாகும் நீர் மேலாண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பலனாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஸ்மார்ட் திட்டங்களை கட்டுபடியாகும் விலையில் நாங்கள் வழங்குவதால் அது அவர்களின் பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்று வாடிக்கையாளர்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். தற்போது சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் எங்களது சேவையை வழங்கி வருகிறோம். மேலும் முருகப்பா குழுமத்தின் நிறுவனங்களோடு கைகோர்த்து அவற்றில் நீர் மேலாண்மையை ஏற்படுத்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என்று தனது வியாபார வளர்ச்சியை பட்டியலிடுகிறார் வருண். அடுத்தகட்டமாக பெங்களூர், கொச்சியில் எங்களின் தொழில்நுட்பச் சேவையை விரிவாக்கம் செய்வதோடு மத்திய அரசு அறிவித்துள்ள 20 ஸ்மார்ட் நகரங்களுக்கும் இதை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எதிர்காலத் திட்டம் என்கிறார் வருண்.

இளம் தொழில்முனைவு பயணம்

அனுபவசாலிகளின் அனுபவமும் அரசின் ஊக்கமுமே தன்னை மென்மேலும் பட்டை தீட்டி வைரமாக ஜொலிக்கச் செய்வதாகக் கூறுகிறார் வருண். “மத்திய இளைஞர் நலன் துறை 2015ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற முதல் பிரிக்ஸ் இளைஞர் மாநாட்டில் இந்தியாவின் தொழில்முனைவு சமூகம் சார்பாக பங்கேற்கும் வாய்ப்பை தனக்கு வழங்கியது மறக்க முடியாது என்கிறார் வருண். அந்த மாநாட்டில் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எடுத்துக் கூறும் வாய்ப்பு கிடைத்தது, ஒரு வாரம் நடைபெற்ற அந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடியது உண்மையில் என் தொழில்முனைவு அனுபவத்திற்கு மகுடம் சூட்டியது. இதைத் தொடர்ந்து 2016ம்ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியாவின் அறிமுக விழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தாக சொல்கிறார் வருண். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் தனக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தாக கூறுகிறார் அவர்.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவும் நிலையில் ஒரு வேலையை தேடி அலையாமல் வேலைகளை உருவாக்கும் தொழில்முனைவு மாதிரியையே நான் விரும்புகிறேன். இளம் தொழில்முனைவர்களுக்கு நான் சொல்வது – 

“நீங்கள் எதை கற்றுக்கொண்டிருக்கிறீர்களோ, அவை உங்கள் அனுபவத்திலிருந்து வந்ததவை. தெரிந்துகொண்டவைகளையே மேலும் ஆராய்ச்சிக்குள்ளாக்கத் தேவையில்லை. உங்களது ஆசானை அடையாளம் காணுங்கள் அதோடு, சிறந்த கவனிப்பாளராக இருங்கள்: அதுவே உங்கள் நிலையை உயர்த்தும்.”

இணையதள முகவரி: GreenvironmentIndia

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

'இளைஞர்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிப்போம்': ‘கமல் கிசான்’ நிறுவனர் தேவி மூர்த்தி
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags