பதிப்புகளில்

கிருஷ்ணகிரியில் கணினி நிறுவனம் நடத்தும் செல்வ முரளி உருவாக்கிய ’விவசாயம்’ செயலிக்கு விருது!

4th May 2017
Add to
Shares
667
Comments
Share This
Add to
Shares
667
Comments
Share

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கியுள்ள குறுஞ்செயலிக்காக 2015 ஆண்டுக்கான முதலமைச்சரின் ’கணினித் தமிழ் விருது’ கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் என்னும் ஊரைச் சேர்ந்த கணிணிப் பொறியாளர் செல்வ முரளிக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டது. கணினி வழியில் தமிழ் மொழியை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பணிகளில் ஈடுபட்டு, தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது அளிக்கப்பட்டு வருகிறது. விருதை பெற்றுள்ள செல்வ முரளி தனது செயலி உருவாக்கம் பற்றியும் தன் வருங்கால திட்டங்கள் குறித்தும் தமிழ் யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்தவை.

image


image


நமக்கு முந்தைய ஒரு சமூகத்தினருக்கு கணினிகள் ஆங்கிலத்தில் இருந்தது பெரிய பிரச்னையாக இருந்தது. ஆனால் ஆன்டிராய்டு திறன்பேசிகள் வந்தபின்னர் எல்லா மொழிகளிலும் வரத்தொடங்கியது. அதாவது குறுஞ்செயலிகள் எல்லாம் ஒரு ஐகான் இருக்கும். அதை சொடுக்கினால் குறுஞ்செயலிகள் திறக்கப்பட்டுவிடும். அதுபோலவே விவசாயம் செயலியும், ஏர் உழும் படத்தினை சொடுக்கினால் விபரங்கள் எல்லாம் தமிழிலேயே இருக்கும். எனவே இங்கே ஆங்கிலம் தேவையில்லை. இதுவே விவசாயம் குறுஞ்செயலி உருவாகக்காரணம். 

இந்தக்காரணங்களை எடுத்துக்கொண்டு இயற்கை விவசாயத்தினை முன்னெடுத்துச் சென்ற இயற்கை வேளாண்மை விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அய்யா அவர்களை திருவண்ணாமலையில் சந்தித்து இது குறித்து விவாதித்தோம். அப்போது அவரும் இதன் தேவை அனைவருக்கும் உண்டு என்று கூறி சில ஆலோசனைகளை கொடுத்தார், மேலும் விரைவில் இந்தப்பணியை ஆரம்பிக்கச் சொல்லியிருந்தார். அவர் கொடுத்த ஊக்கத்தாலேயே நாங்கள் நம்பிக்கையுடன் இந்த குறுஞ்செயலியை உருவாக்கினோம். 

image


செயலி உருவாக்க அதற்கான தொழில்நுட்ப அனுபவம் கல்வித்தகுதி உள்ளதா?

பி.எஸ்.சி கணினி அறிவியல் முடித்துவிட்டு, தற்போது எம்ஏ மொழியியல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவருகிறேன். மேலும் கணினி சார்ந்த சில சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறேன். 2010 முதல் விசுவல்மீடியா டெக்னாலஜிஸ் என்ற பெயரில் இணையத்தள சேவை வழங்கும் நிறுவனத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து நடத்திவருகிறேன். 

இணையம் வந்தபின்னர் எங்கிருந்து வேண்டுமானாலும் நிறுவனங்கள் செயல்படலாம் என்பதற்கு முன்னுதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எனும் சிற்றூரிலிருந்து எங்கள் நிறுவனத்தினை நடத்திவருகின்றோம்.

மேலும் எங்கள் குடும்பமும் விவசாய குடும்பம்தான். அப்பா தானிய வியாபாரி. எனவே எனக்கும் சிறு வயதில் இருந்து எல்லா விதமான தானியங்களையும், அதன் தரம்பிரிக்கும் முறை பற்றியும் தெரிந்ததிருந்தது என்பதால் உடனே களமறிங்கவிட்டோம்.

விவசாயத்துறையின் தற்போதைய நிலை மோசமாக உள்ள நிலையில் உங்கள் ஆப் மூலம் என்ன உதவிகள் கிடைக்கும்?

விவசாயத்துறையின் மோசமான நிலை சற்று சிரமம்தான் என்றாலும் இந்த சூழ்நிலைக்கு நாமே காரணம் என்பதை மறுக்க முடியாது. பருவ நிலை மாற்றம் காரணமாக விவசாயம் சீரழிந்துவருகிறது என்றும் தெரிந்து பல குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் விலைவாசி குறிப்பிட்ட அளவு ஏறுகிறது. புதிதாக விவசாயம் செய்வதற்கு யாரும் தயாராக இல்லாத சூழ்நிலையில் ஏற்கனவே விவசாயம் செய்யும் நபர்களும் வெளியேறுவது வளர்ச்சிக்கு உகந்தது அல்ல, இந்த சூழ்நிலையில் நாம் விவசாயி்களுக்கு கொடுக்கவேண்டியது நம்பிக்கை. விவசாயத்துறையிலும், விவசாயப் பொருட்களின் கழிவுகளிலும் பல நூற்றுக்கணக்கான புதிய தொழில்வாய்ப்புகள் நாள்தோறும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. எனவே விவசாயி்களுக்கு முதலில் நம்பிக்கை கொடுக்கவேண்டியது அவசியம். அதைத்தான் நாங்கள் கொடுக்க முயற்சி செய்துவருகிறோம். 

எங்கள் ஆப் விவசாயம் நஞ்சில்லா விவசாயத்துக்கு தேவையான தகவல்களை தொகுத்து தமிழில் வழங்குகின்றோம். மேலும் தமிழகம் முழுதும் இருந்து ஒரு நாளைக்கு 20 முதல் 30 நபர்கள் விவசாயம் சம்பந்தமான கேள்விகளைக்கேட்கிறார்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விபரங்களை வாங்கியும் தருகிறோம். மேலும் யாரேனும் ஏதேனும் விளைப்பொருட்கள்/விதைகள் கேட்டால் அதை எங்களுடன் இணைப்பில் உள்ள நபர்களிடம் தொடர்புகொண்டு வாங்கித்தருகிறோம். 

விவசாயம் சம்பந்தமான சில ஆராய்ச்சிகளையும் நாங்கள் செய்துவருகிறோம். அதில் ஒன்று வெற்றியும் பெற்றிருக்கிறது. தற்போது மூன்று லட்சம் விவசாயிகள் வரை இந்த குறுஞ்செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த வருடத்தில் 10 லட்சம் பேரை அடையவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். 

நீங்கள் சந்தித்துள்ள சவால்கள்? ஆப் தயாரிக்க முதலீடு எங்கு பெற்றீர்கள்?

சவால்கள் என்பது கணினிப் பற்றியே தெரியாத ஒருவர் எப்படி இந்த குறுஞ்செயலிகளை பயன்படுத்துவார் என்பதும், இரண்டாவது அவருக்குத் தேவையான செய்திகளை எப்படிக்கொடுத்தால் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்பதும் தான். எனவே இதில் ஸ்லைடர் முறையில் செய்திகளை வைத்து இருக்கிறோம். பதிவு செய்யும் வசதி இருந்தால் அது சிரமமாக இருக்கும் என்பதால் பதிவு செய்த வசதியை நீக்கிவிட்டோம். செயலியை திறந்தாலே செய்திகள் வரும்படி செய்துவிட்டோம்,.

நாங்கள் நஞ்சில்லா விவசாயித்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? அல்லது செயற்கை உரம் கொண்டு செய்யும் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா என்று கேள்வி எழுந்தது. அந்த சூழ்நிலையில் எங்களுக்கு செயற்கை உரம் செய்யும் உற்பத்தி செய்த சில நிறுவனங்களின் டீலர்கள் விளம்பரம் தருவதாக சொன்னார்கள். ஆனாலும் நாங்கள் நஞ்சில்லா விவசாயத்திற்கே முன்னுரிமை கொடுத்தோம்.

தகவல்களையும், ஆய்வுக்கட்டுரையும் தமிழில் கொடுப்பது சற்று சிரமமாக இருந்தது. ஏனெனில் நாங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும்போது பல விவசாய சொற்களுக்கு முறையான கலைச்சொற்கள் இல்லாமல் இருந்தது. 

முதலீடு

எங்கள் நிறுவனத்திற்கு இரண்டு துணை நிறுவனங்கள் உள்ளன. இணையத்தள சேவை, இணையத்தள வடிவமைப்பு, குறுஞ்செயலி உருவாக்கம், பத்திரிகை வடிவமைப்பு போன்ற பணிகள் செய்துவருகிறோம். இவற்றில் கிடைக்குக் வருமானத்தை தேவைப்படும்போது விவசாயத்திற்கு பயன்படுத்தினோம்.

விவசாயம் நன்கு வளர்ந்தபின் இணைய விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டலாம். ஆனால் அதைவிட பல மடங்கு நாங்கள் செலவு செய்திருக்கிறோம் என்றாலும் எங்கள் நிறுவனத்தில் இருந்து வரும் இதர வருவாய்களில் இந்த செலவுகளை நாங்கள் ஈடுகட்டிவருகிறோம். சில நேரங்களில் ஏற்படும் பற்றாக்குறைக்கு நண்பர்கள் கடன் கொடுத்து உதவுகிறார்கள். இதுவரை 9 மதிப்பு முறை விவசாயம் குறுஞ்செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை இன்னமும் பயனாளர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் வடிவமைப்புகளை அதிக பொருட்செலவில் செய்துவருகின்றோம்.

image


தமிழக அரசின் விருது கிடைத்தது பற்றி? 

தமிழக அரசு விருது பெற்றது ஒரு சிறப்பான தருணம் என்றே கருதுகிறேன். ஏனெனில் எனது தொழில்முனைவு சற்றே வித்தியாசமானது . 

மென்பொருள் துறையில் வேலைக்குச்சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும். ஆனால் தொழில்முனைவில் ஈடுபட்டது என் வீட்டாருக்கு விருப்பமில்லை. அதுவும் நிறுவனத்தை கிராமத்தில் இருந்துதான் நடத்துவேன் என்று சொன்னது அவர்களுக்கு இன்று வரை விருப்பமில்லை. சரி அதோடு நில்லாமல், மீண்டும் விவசாயத் துறைக்கு வந்தது அவர்களுக்கு சற்றும் விருப்பமில்லை. 

மேலும் உறவினர்களுக்கும் விருப்பமில்லை. பலரும் பலவிதமாக பேசினார்கள். இதனால் பெற்ற பல இழப்புகளை இந்த விருது சற்றே ஈடுகட்டியிருக்கிறது. குறிப்பாக எங்கள் ஊழியர்களுக்கும். கிராமத்தில் சாப்ட்வேர் கம்பெனியா? அது சாதாரண கம்ப்யூட்டர் சொல்லித்தரும் கம்பெனியா இருக்கும் என்று சொன்னவர்களே அதிகம். குறிப்பாக இந்தப் பிரச்னையை எங்கள் ஊழியர்களுக்கும் எதிர்கொண்டார்கள். இப்போது அவர்களுக்கும் இந்த விருது மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பல நேரங்களில் அதிகமான செலவு இருப்பதால் இதை விற்றுவிடுவதற்கு கூட முயற்சி செய்திருக்கிறேன். ஆனாலும் கடைசி நேரத்தில் உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். இந்த நம்பிக்கைக்க இப்போது ஊக்கம் கிடைத்திருக்கிறது.

வருங்கால திட்டங்கள் என்ன?

அக்ரிசக்தி எனும் புதிய விவசாய சார்பு நிறுவனம் மூலம் விவசாயத்திற்கு புதியப்புதிய ஆராய்ச்சிகளை நடத்தவும், விவசாயத்துறையில் பல தொழில்முனைவோர்களையும் உருவாக்கவும், விவசாயிகளுக்காக ஹைபர் லோக்கல் மார்க்கெட் முறையில் இணையத்தள வர்த்தக தளத்தினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம்.கொஞ்சம் நிலங்களை ஒப்பந்ததிற்கு எடுத்து விவசாயம் சம்பந்தமான தரவுகளை ஆராயவும் இருக்கிறோம் . மேலும் விவசாயம் இடம் இருந்து அதற்கான பணம் இல்லாமல் இருப்பவர்களை, விவசாயத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பவர்களுடன் இணைப்போம். 

இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?

நம்முடைய பல பணிகளுக்கு இடையில் சமூகம் சந்திக்கின்ற பிரச்னைகள் என்னென்ன, அடுத்த 5 வருடங்களில் நாம் சந்திப்போகின்ற நமது சமூகம் சந்திக்கப்போகின்ற பிரச்னைகள் என்னென்ன? என்பன பற்றி ஆராய்ந்து அதற்காக அவ்வப்போது சிலமணித்துளிகளை செலவிட்டால் நலன் கிடைக்கும்.

 ஏனெனில் நம் முன்னோர்கள் நமக்கு ஆரோக்கியமான சமூதாயத்தினை கொடுத்துவிட்டுதான் சென்றார்கள். ஆனால் நாம் இப்போது அவற்றினை வீணடித்துவிட்டோம் என்றாலும் நம் அடுத்த தலைமுறைக்கு ஓரளவேனும் சிறந்த சூழ்நிலைகளை உருவாக்கிக்கொடுக்கவேண்டியது அவசியம்.

விவசாயத்துறையில் பல புதிய தொழில்முனைவோர்கள் உருவாகவேண்டும், உருவாக்கப்படவேண்டும். ஒரு துறை வளரவேண்டுமானால் அதில் பல தொழில்முனைவோர்கள் ஈடுபடவேண்டும். விவசாயம் அழியும் நிலைக்கு செல்ல இதுவும் ஒரு காரணம். மேலும் நீர் மேலாண்மையை நெறிப்படுத்தவேண்டும். நீர் விரயத்தினை செய்யும் எல்லா நுட்பங்களையும் உடடினடியாக தடை செய்யப்படவேண்டும்.

ஒரு வீட்டில் 50% தண்ணீர் துணி துவைப்பதற்கே செலவு ஆகிறது. ஆனால் அதில் டீடர்ஜெண்ட் இருப்பதால் மறு சுழற்சிக்கு வாய்ப்பு இல்லை. குறைந்த பட்சம் 30 லிட்டர் தண்ணீர் ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு செலவு ஆகிறது என பார்த்தால் தமிழகம் முழுதும் உள்ள பல கோடிக்கணக்கான வீடுகளில் வீணாகும் தண்ணீர் எத்தனை கோடி லிட்டர் இருக்கும்?, அதன் பின் குளிப்பதற்கு?. இதிலயே பல தொழில்வாய்ப்புகள் இருக்கின்றது. 

அடிப்படை தேவைகள் அனைத்தும் மறுசுழற்சிக்கு பயன்படும் வகையில் இருக்கவேண்டும். எனவே விவசாயம் சார்ந்த வாய்ப்புகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. இப்போதைக்கு விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் மிகஅத்தியாவசிய தேவை நம்பிக்கை. விவசாயம் செய்தால் கடனில்லாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கை. அதை சுய தொழில்முனைவோர்களால் சாத்தியப்படுத்த முடியும். 

Add to
Shares
667
Comments
Share This
Add to
Shares
667
Comments
Share
Report an issue
Authors

Related Tags