பதிப்புகளில்

இந்திய சந்தையில் வெற்றி பெற என்ன தேவை?

உலக வங்கி, இந்தியாவை வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக மீண்டும் குறிப்பிட்டுள்ளது. இந்திய மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது நல்ல செய்தி என்றாலும், அவை புதுமையை புகுத்துவதில் தான் வெற்றி இருக்கிறது. 

YS TEAM TAMIL
14th Jun 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

இந்த ஆண்டு துவக்கத்தில் ஃபேஸ்புக் நிறுவன சர்வதேச அரசியல் மற்றும் அரசு அணுகல் பிரிவுக்கான இயக்குனர் கேத்தி ஹார்பத் இந்தியாவுக்கு வருகை தந்த போது, அவரது நெருக்கமான நிகழ்ச்சி நிரலில் ராய்பூரும் இடம்பெற்றிருந்தது. புதுயுக சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் விஜயம் செய்யக்கூடிய நகரம் அல்ல தான்.

அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள இந்திய சந்தையில், நிறுவனங்கள் தகுந்த திட்டம் வைத்திருக்க வேண்டும். (படம்; ஷட்டர்ஸ்டாக் )

அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள இந்திய சந்தையில், நிறுவனங்கள் தகுந்த திட்டம் வைத்திருக்க வேண்டும். (படம்; ஷட்டர்ஸ்டாக் )


ஆனால், ஃபேஸ்புக்கின் கேத்தி, தனது முதல் இந்திய பயணத்தில் அதன் உட்புறங்களை தேடிச்சென்றார். அவரது நிறுவனம் இந்தியாவில் அடுத்த அரை கோடி மக்கள்தொகையை இலக்காக கொண்டுள்ளது.

அண்மை புள்ளிவிவரப்படி, ஃபேஸ்புக் அதன் மொத்த 2.19 தினமும் தீவிரமாக பயன்படுத்தும் பயனாளிகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஃபேஸ்புக் 270 மில்லியன் தீவிர பயனாளிகளை கொண்டுள்ளது. (2014 ஃபேஸ்புக் கையகப்படுத்திய வாட்ஸ் அப் 1.5 பில்லியன் தீவிர பயனாளிகளை கொண்டுள்ளது. இந்தியாவில் 200 மில்லியன் பயனாளிகளை பெற்றுள்ளது).

சட்டிஸ்கரில் கிராம அளவிலான தொழில்முனைவோர்களுக்காக ஃபேஸ்புக் நிறுவனம் அர்பணித்துள்ள 7,000 ஃபேஸ்புக் பக்கங்களை அறிமுகம் செய்வதற்காக, கிராமப்புற டிஜிட்டல் முனைவோர் மாநாட்டில் அவர் மேடையேறிய போது, ஃபேஸ்புக்கின் அடுத்த மிகப்பெரிய சந்தையில் கவனத்தை கொண்டுள்ள வெகுசில அதிகாரிகளில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

"இந்த சந்தை பெரியது, இந்தியாவில் மேலும் விரிவாக்கம் செய்வதற்கு கிராமப்புறங்களில் கவனம் செலுத்தி, இந்த நுகர்வோரின் தேவைக்கான சேவைகளை உருவாக்குவது அவசியம்,”

என்று அவர் கூறிய போதும் நானும் என் சகாவும், அந்த மாநாட்டு கூட்டத்தின் நடுவே இடத்தை தேடிக்கொண்டிருந்தோம்.

ஃபேஸ்புக்கின் கேத்தி தனது இந்திய சகாவுடன் 

ஃபேஸ்புக்கின் கேத்தி தனது இந்திய சகாவுடன் 


இந்தியாவின் கிராமப்புற சந்தையில் கவனம் செலுத்தும் சிலிக்கான் வேலி நிறுவனம் ஃபேஸ்புக் மட்டும் அல்ல: கடந்த சில ஆண்டுகளில் கூகுள், லிங்க்டுஇன், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் நோக்கதை தெளிவாக உணர்த்தியுள்ளன. இந்த ஆடுகளத்தில் தான் அவை களமிறங்கி விளையாட விரும்புகின்றன.

அண்மையில், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனம் ரெயில் நிலையங்களில் வழங்கும் இலவச வை-ஃபை வசதி மூலம் பிரதானமாக படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற கேரள மாநிலத்தின் சுமை தூக்கும் தொழிலாளியின் ஊக்கம் மிகு உதாரணத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

கடந்த 20 ஆண்டிகளில் தெரிய வரும் விஷயம் என்னவெனில், வளர்ச்சியை நாடும் சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் காந்தமாக இந்தியா இருக்கிறது என்பது தான்.

தினமும் வளர்ச்சி

உலகை இந்தியா ஈர்க்கக் காரணம் என்ன? இந்தியாவின் மிகப்பெரிய பலமாக அதன் மனித வளம் மற்றும் திறமை மிக்கவர்கள் விளங்குகின்றனர். இந்தியாவின் 120 கோடி மக்கள் தான் அதன் சொத்து. புதிய சந்தையை நாடும் நிறுவனங்களுக்கு இது சரியான இலக்காக அமைகிறது.

இதில் முக்கிய விஷயம் என்னவெனில் நகர்ப்புற சந்தை எல்லாம் தாழ்வாக தொங்கும் பழங்கள் தான். பாரதம் என குறிப்பிடப்படும் கிராமப்புற இந்தியாவை நோக்கி செல்லும் நிறுவனங்களுக்கே வெற்றி காத்திருக்கிறது.

2018 ஜூம் 8 ம் தேதி வெளியிட்ட கணிப்பில், உலக வங்கி “இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் அம்சங்கள் மங்கி வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் 2018-19 ல் 7.3 சதவீத ஜிடிபி வளர்ச்சியை பெறும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சி பெறும் என குறிப்பிட்டிருந்தது. இது வேகமாக வளரும் பொருளாதாரம் எனும் அடைமொழியை உறுதிப்படுத்துகிறது.

“இந்தியா நன்றாக செயல்படுகிறது. வளர்ச்சி துடிப்பாக இருக்கிறது. நுகர்வு சிறப்பாக உள்ளது. முதலீட்டு வளர்ச்சி அதிகமாக உள்ளது. இந்த எண்கள் அனைத்தும் ஊக்கம் அளிக்கிறது,”

என்று உலக வங்கியின் வளர்ச்சி வாய்ப்புகள் குழு இயக்குனர் அய்ஹான் கோஸ், தி மிண்ட் நாளிதழிடம் தெரிவித்தார்.

உள்ளூர் வெற்றி

சரி, இந்த வேகமான பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற என்ன தேவை? இதற்கு எளிதான பதில்கள் இல்லை.

மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் கம்மின்ஸ் இந்தியாவின் முன்னாள் தலைவரும், பரோடா வங்கி தலைவருமான ரவி வெங்கடேசன் தனது 2013 புத்தகமான கான்குவரிங் தி சோஸ்: வின் இன் இந்தியா, வின் எவ்ரிவேர், புத்தகத்தில் இதற்கான பதிலை அளிக்க முற்பட்டுள்ளார். பிரமிட் மீது ஏற முடியாவிட்டால் இங்கு வெற்றி பெற முடியாது என அவர் கூறுகிறார். நிறுவனங்களுக்கு உள்ளூர் சேவை மற்றும் உள்ளூர் வர்த்தக மாதிரி தேவை என்பதோடு, உள்ளுர் மனநிலையும் வேண்டும்.

இமெயில் மூலம் எனக்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு கூறுகிறார்: 

“இந்தியா நூறு கோடி பயனாளிகள் கொண்ட தேசம் அல்ல. இந்தியா உண்மையில் பல நாடுகளை கொண்டது. ஆஸ்திரேலியாவை மேல் பகுதியில் கொண்ட பொருளாதார பிரமிட்டை இந்தியா பெற்றுள்ளதாக கூறலாம். இது 25 மில்லியன் பணக்காரர்களை கொண்டது. அதன் பிறகு வியட்னாம் அளவுக்கு, 90மில்லியன் வசதி படைத்த மக்கள் உள்ளனர். பின்னர் பிரேசில் அளவுக்கு 200 மில்லியன் முன்னேறும் இலக்கு கொண்டவர்கள் உள்ளனர். இறுதியாக நூறு கோடி பேர் கொண்ட ஆபிரிக்கா போல உள்ளது. இந்த பிரமிட்டின் நடுப்பகுதியில் தான் பொக்கிஷம் உள்ளது.”

வெற்றி பெற, விலை மற்றும் செயல்பாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இந்த பிரிவை வெல்ல வேண்டும் என்றும் அவர் மேலும் சொல்கிறார். இரண்டாவதாக இங்கே வெற்றி பெற மிகுந்த ஈடுபாடு மற்றும் உறுதி தேவை. 

“இரண்டு ஆண்டுகளில் செய்யலாம் என நினைக்கும் விஷயங்களுக்கு 5 ஆண்டுகள் தேவை. தொடர் ஆச்சர்யங்கள் மற்றும் ஏற்ற இறக்கம் இருக்கும். மென்மையான அல்லது உறுதி இல்லாத இதயம் கொண்டவர்களுக்கான சந்தை அல்ல இது. என்னுடைய வழிகாட்டியான, இந்துஸ்தான் யூனிலீவர் தலைவர் டாக்டர்.அசோக் கங்குலி, இந்தியாவை வாயில் நீர் ஊற வைக்கும் வாய்ப்புகள் மற்றும் கண்ணில் நீர் வர வைக்கும் சவால்கள் கொண்ட தேசம் என குறிப்பிடுவது வழக்கம்.”

இந்த விசித்திர மனநிலையே சர்வதேச மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது. ஊழல் கூக்லி, குழப்பம், நிர்வாக சிக்கல்கள், மோசமான உள் கட்டமைப்பு ஆகிய இந்த அதிக வாய்ப்புள்ள சந்தையின் பிரச்சனைகளை எதிர்கொள்ள அவற்றிடையே திட்டம் இருப்பதில்லை.

மறைந்திருக்கும் கோப்பை

இப்போது மேலும் அதிக எண்ணிகையில் மக்கள் ஆன்லைனில் இணைந்து வரும் நிலையில் – இந்தியாவில் 500 மில்லியன் இணைய பயனாளிகள் உள்ளனர்- சர்வதேச மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இணையத்தை பயன்படுத்தி புதுமையை புகுத்தி வெற்றி பெறுவது எப்படி? இதற்கு ரகசிய வழி இருந்தால், இதுவரை யாரும் அதை வெளியே சொல்லவில்லை.

வீடியோ ஸ்டிரீமிங் மேடையான ஹாட்ஸ்டார், அண்மையில் ஐபிஎல் போட்டிகளுக்கான பிரத்யேக உரிமை பெற்று வெற்றி பெற்றதை எடுத்துக்கொள்வோம். அதற்கு 202 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்தனர். கடந்த ஆண்டின் 33 மில்லியன் பார்வையாளர்களைவிட இது 51 சதவீதம் அதிகம்.

இந்தியா, வாய்ப்புகள்,சவால்களின் தேசம் 

இந்தியா, வாய்ப்புகள்,சவால்களின் தேசம் 


ஹாட்ஸ்டார் (ஜியோ) ஐபிஎல்லை பயன்படுத்தி கட்டணச்சேவை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை உருவாக்கி அமேசான் மற்றும் நெட்பிலிக்ஸ் போட்டியை சமாளித்தது. இந்தியாவில் கிரிக்கெட் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது எளிய பாடம்.

கூகுளின் பரிவர்த்தனை செயலியான தேஜ், அதன் இண்டெர்நெட் சாத்தி திட்டம் மற்றும் ரெயில்வயர் திட்டம் ஆகியவை, நிறுவனம் அடுத்த நூறு கோடி பயனாளிகள் என குறிப்பிடும் பரப்பை நோக்கி அமைந்தவை. மோசமான இணைப்பு கொண்ட பகுதிகளுக்கான லிங்க்டுஇன் லைட் சேவை, அமேசானின் உள்ளூர் கோஷம், உபெரின், உபெர் லைட் செயலி ஆகியவை இதே போன்றவை தான். ஐகியா, வால்மார்ட் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவின் மொபைலில் முதலில் இணையும் நுகர்வோரை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

தொலைபேசி உரையாடலில், லைட்ஸ்பீட் இந்தியா பாட்னர்ஸ் பங்குதாரர் அக்‌ஷய் பூஷன், இந்தியாவில் நுழைந்த பல நிறுவனங்கள் உள்ளூர் மயமாக்கல் சோதனையில் தோல்வி அடைந்ததாக குறிப்பிடுகிறார். 

“அதிக வருமானம் கொண்ட, முதல் 50 மில்லியன் வாடிக்கையாளர்களை குறி வைத்து மேற்கத்திய மாதிரியை பிரதியெடுப்பதே வழக்கமாக இருக்கிறது.” 

இந்திய நிறுவனங்கள் பற்றியும் இதே கருத்தை கூறலாம். மிகச்சில நிறுவனங்களே அடுத்த 500 மில்லியன் இணைய பயனாளிகளை சென்றடையும் திட்டத்தை கொண்டுள்ளன.

அக்‌ஷயின் முதலீட்டு நிறுவனம், தான் முதலீடு செய்துள்ள, இந்தியாவின் சமூக வலைப்பின்னல் தேவைக்கான பதிலான ஷேர்சேட் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. பலரும் ஆங்கிலத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்நிறுவனம் 14 இந்திய மொழிகளில் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

நுகர்வோர் மனநிலையை புரிந்து கொள்வதில் தான் வெற்றி தோல்வி இருக்கிறது.

"சீனாவில் கூட சமூக ஊடக பரப்பில் புதிய வரவான கெய்ஷோ மற்றும் பிண்டுவோடு, மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்கு நகரங்களில் தான் பிரபலமாக உள்ளன. அந்த நுகர்வோரில் இவை கவனம் செலுத்தின. இத்தகைய புதுமைகள் நமக்கு மேலும் தேவை என்கிறார் அவர்.

புதிய ஆட்டம் புதிய விதி

மீடியா வெளிச்சத்திற்கு வெளியே, இந்தியாவுக்காக புதுமையை உருவாக்கி கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப்கள் இருக்கின்றன. நீண்ட தூர தொலைபேசி அழைப்பில், பெங்களூருவைச் சேர்ந்த மார்பக புற்றுநோய் சோதனை ஸ்டார்ட் அப்பான ’நிறமை’ இணை நிறுவனர் நிதி மாதூர், அவர்கள் விரிவாக்க திட்டம் மெட்ரோ நகரங்களில் இருந்து துவங்குவதாகவும், டேராடூடுனுக்கு விரிவாக்கம் செய்வது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் உற்சாமாக சொல்கிறார்.

“எங்களுடைய தீர்வுகள் குறித்து இந்தியாவின் சிறிய நகரங்களில் இருந்து நிறைய விசாரிப்புகள் வருகின்றன. குறிப்பாக டேராடூன் விஷயத்தில் உத்தரகாண்டின் கடினமான பகுதிகளில் எங்கள் சேவை அறிமுகமாகிறது என மகிழ்ச்சி கொள்கிறேன்” என்கிறார் அவர். 

நிதி; சான்பிரான்சிஸ்கோ நகரில் இருக்கிறார். அங்கு தான் கூகுள் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டத்தில் நிறமை தேர்வானது. இந்த லாஞ்ச்பேடில் சோஷியல் காப்ஸ், பேபிசக்ரா மற்றும் எம் பானி ஆகிய மேலும் 3 இந்திய ஸ்டார்ட் அப்கள் உள்ளன.

இந்தியா திரும்பும் போது அதிக பணிகள் காத்திருப்பதாக கூறும் நிதி, வடகிழக்கு உள்ளுட்ட பகுதிகளை அடையும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முன்னுரிமை என்கிறார்.

நிதி மாதூர் தனது குழுவினருடன் 

நிதி மாதூர் தனது குழுவினருடன் 


அவரது புத்தகம் வெளியான பிறகு மாறியிருக்கும் விஷயங்கள் பற்றிய கேள்விக்கு, ரவி வெங்கடேசன்,

”எங்கும் நிறைந்திருக்கும் ஸ்மார்ட்போன், ஜியோவின் இணையப் புரட்சி, ஆதார் அடையாள அட்டை, யுபிஐ, ஜி.எஸ்.டி என இந்தியா உலகின் முன்னணி தேசிய உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. ஆழ் கல்வி தொழில்நுட்பம் பெரிய மாற்றமாக இருக்கும். ஒரு சில விஷயங்கள் மாறாத நிலையில் ஒட்டுமொத்தமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது,” என்று பதில் அளிக்கிறார்.

இந்த சூழலில், ஒரு நிறுவனம் வெற்றி பெற பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மட்டும் போதாது. கிரிக்கெட் போலவே ஓடி ஓடி ரன் எடுப்பதிலும் தான் வெற்றி உள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் / தமிழில்; சைபர்சிம்மன் 

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags