பதிப்புகளில்

போதிப்பவர்களும் சாதிக்கலாம்...

உலக சாதனை படைத்த சர்வதேச வாழ்வியல் பயிற்றுனர் உதய சான்றோன்!

27th Mar 2018
Add to
Shares
290
Comments
Share This
Add to
Shares
290
Comments
Share

ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து, வறுமையால் படிப்பை பாதியிலேயே நிறுத்திய உதய சான்றோன், இன்று உலக சாதனை படைத்த சர்வதேச வாழ்வியல் பயிற்றுனராக, ஆயிரக்கணக்கில் வெற்றியாளர்களை உருவாக்கிய பெருமையுடன் தானும் வெற்றியாளராக வலம் வருகிறார்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாகட்டும், மர பொருட்களாகட்டும் வீட்டில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உயிரற்ற பொருட்களுக்கே குறிப்பிட்ட கால இடைவேளையில் சர்வீஸ் எனப்படும் புதுப்பிக்கப்படும் பயிற்சி தேவைப்படுகிறது. அப்படி இருக்கையில் இந்த இயந்தரமான வாழ்க்கையில் ஏறக்குறைய நடமாடும் உயிருள்ள இயந்திரமாகிப் போன மனிதர்களுக்கு அவ்வப்போது மனதிற்கும், உடலிற்கும் புத்துணர்ச்சி பயிற்சிகள் தர வேண்டாமா? இதைத் தான் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த முன்னணி சர்வதேச வாழ்வியல் பயிற்றுனரான உதய சான்றோன்.

விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் உதய சான்றோன். ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்ததால், சிறு வயது முதலே கஷ்டத்தோடு வாழ்க்கைப் போராட்டம் நடத்தியுள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது உதய சான்றோனால். அம்மாவின் நகைகளை அடகு வைத்து ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். காலத்தின் கட்டாயத்தால் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதனால் பன்னிரண்டாம் வகுப்பு என்ற கல்வித் தகுதியோடு வேலை தேடி கடந்த 1995-ம் ஆண்டு சென்னை வந்தார். ஆரம்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக மாதம் ரூ.600 சம்பளத்தில் வேலை கிடைத்தது. புதிய இடம், குறைவான வருமானம், எதிர்காலத்தை நினைத்து பயம் என அவரின் நாட்கள் கடந்து வந்தன. அப்போது தான் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. ஆம், மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனரும், தன்னம்பிக்கை எழுத்தாளர், சிந்தனையாளருமான எம்.எஸ்.உதயமூர்த்தியின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.

image


அதனைத் தொடர்ந்து தான் பார்த்து வந்த உதவியாளர் வேலையையும் ராஜினாமா செய்த உதய சான்றோன், சுமார் மூன்று ஆண்டுகள் உதயமூர்த்தியிடம் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்தார். உதயமூர்த்தியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அவரது புத்தகங்களைப் படிப்பது, அவருடன் பேசுவது என அவரது நாட்கள் கடந்தன.

“நான் ஏன் ஏழையாகப் பிறந்தேன் என்ற கோபம், கேள்வி எப்போதும் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அப்போது தான் உதயமூர்த்தி ஐயாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது நட்பு என் கேள்விகளுக்கு பதிலைத் தேடி தந்தது. எண்ணங்களை மேம்படுத்தினால் நிச்சயம் வாழ்க்கையில் உயரலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. வாழ்க்கையில் உயர வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது,”

என தன் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறார் உதய சான்றோன். சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டதும், பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் தன் படிப்பை தூசி தட்டியுள்ளார். வேலை பார்த்துக் கொண்டே 2001ல் தொலை தூரக் கல்வி மூலம் பிபிஏ, அதனைத் தொடர்ந்து எம்.பி.ஏ. படித்து முடித்தார். பின்னர் வாழ்வியல் திறன் மேம்பாட்டில் முனைவர் பட்டம் பெற்று டாக்டரானார் அவர்.

உதயமூர்த்தி உடன் உதய சான்றோன்

உதயமூர்த்தி உடன் உதய சான்றோன்


படிப்பு ஒருபுறம் இருக்க, தொடர்ந்து பல்வேறு தொழில்களில் அவர் ஈடுபட்டு வந்தார். ஆரம்பத்தில் சாலையில் வைத்து சாப்ட் டாய்ஸ் விற்பனை செய்துள்ளார். சென்னையில் மட்டும் சுமார் 4 லட்ச பொம்மைகளை அவர் விற்றுள்ளாராம். ரோஜாக் கூட்டம் படத்தில் ஸ்ரீகாந்த் காரில் வைத்து பொம்மைகள் விற்பது போன்ற ஒரு காட்சி வரும். அக்காட்சி தனது விற்பனை உக்தியைப் பார்த்து வைக்கப்பட்டது என்கிறார் உதய சான்றோன்.

பின்னர் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மேனேஜர் ஆனார். ரூ. 200க்கு பொம்மைகளை விற்று வெற்றி கண்ட அவருக்கு, ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வீடுகளை விற்றுக் காட்ட வேண்டிய சவால் ஏற்பட்டது. அதிலும் வெற்றி பெற்றார். பின்னர் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி ஒன்றில் சேர்த்தார். ஏழு ஆண்டுகள் அங்கு வேலை பார்த்த உதய சான்றோன், எம்.டி.ஆர்.டி (Million Dollar Round Table) மெம்பர் ஆனார். இதற்கிடையே பல்வேறு பயிற்சி மேடைகளில் பங்கு பெற்று பேசியுள்ளார் அவர். அப்போது தான் தனக்குள் இருந்த பயிற்சியாளரை அவர் அடையாளம் கண்டு கொண்டார்.

“உதயமூர்த்தி ஐயாவின் தேர்ந்த மாணவன் நான் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை அதிகம். ஒவ்வொரு வேலையாக மாறிய போதும், மேலும் மேலும் வளர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வேரூன்றத் தொடங்கியது. அதற்கான தேடல்களாகவே அந்த வேலைகள் எனக்கு அமைந்தன. அப்போது தான் எனக்குள் இருந்த தன்னம்பிக்கை பயிற்சியாளரை நான் கண்டு கொண்டேன்.

“ஒவ்வொரு பணியிலும் எனக்கு கீழ் இருந்தவர்களை ஒருங்கிணைத்து, அவர்களைத் திறமையாக வேலை பார்க்க வைத்துள்ளேன் என்பது எனக்கு மேலும் நம்பிக்கையை அளித்தது. அதனைத் தொடர்ந்து முழு நேர பயிற்சியாளராக முடிவு செய்தேன்,” என்கிறார் உதய சான்றோன்.

இதற்கிடையே 2005-ல் அவருக்கு திருமணம் ஆனது. மனைவி, குழந்தைகள் என குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய கட்டாயம் இருந்தபோதும், தனது இலக்கு எது என்பதை தெளிவாக உணர்ந்தார் உதய சான்றோன். பாண்டிச்சேரியில் நேரடியாக ஆளுமைத்திறன் பயிற்சியாளராக களம் இறங்கினார் அவர். 

போதிப்பவர்கள் சாதிப்பதில்லை என்ற கருத்தை மாற்றி, போதிப்பவர்களால் தான் சாதிக்க முடியும் என்ற புது மொழிக்கு வாழும் உதாரணம் ஆனார்.

ஆளுமைத் திறன், விற்பனைத்திறன், ஸ்ட்ரெஸ் மேனெஜ்மெண்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப் பன்முகத் தலைப்புகளில் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சிகள் அளிக்கத் தொடங்கினார். தன்னைப் போலவே தன் சமூகமும் மாற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு சேவையைத் தொடங்கிய உதய சான்றோன், இன்று உலக சாதனை புரிந்த சர்வதேச இளம் தன்னம்பிக்கை பயிற்சியாளராக வலம் வருகிறார்.

“வாழ்க்கையில் தோற்றவர்கள் நடுத்தெருவிற்கு வந்து விடுவார்கள் என்று கூறுவார்கள். ஆனால், நடுத்தெருவில் இருந்து தான் நான் என் வாழ்க்கையையே தொடங்கினேன். மாதம் ரூ.600 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்தது என் வாழ்க்கை. இன்று மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறேன். என்னால் முடியும் என்றால் நிச்சயம் உங்களாலும் முடியும் என்பது தான் என்னிடம் பயிற்சிக்கு வருபவர்களுக்கு நான் கற்றுத்தரும் முதல் வாழ்க்கைப்பாடம். 

என்னிடம் வரும் சாதாரண மனிதர்களையும் சாதனையாளர் ஆக்க வேண்டும் என்பது தான் என் இலக்கு. குறைந்த பட்சம் ஆயிரம் தொழில்முனைவர்களையாவது உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை,” 

எனக் கூறும் உதய சான்றோன், ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பயிற்சிகள் அளித்துள்ளார்.

image


வெறும் பயிற்சியாளராக மட்டும் இருந்தால் போதாது, ஏதாவது உலக சாதனை புரிய வேண்டும் என விரும்பிய உதய சான்றோன், 2014-ம் ஆண்டு தொடர்ந்து 72 மணி நேரம் பயிற்சி நடத்தினார். நான்கு பகல், மூன்று இரவு என தொடர்ச்சியாக அவர் நடத்திய பயிற்சி வகுப்பில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால் மேலும் அவர் பிரபலமானார்.

முன்னணி வாழ்வியல் பயிற்சியாளராக உள்ள உதய சான்றோன், எழுத்தாளர், சமூக சேவகர், தன்னம்பிக்கை பேச்சாளர் எனப் பன்முகத் திறமையாளராக உள்ளார். தன்னம்பிக்கை குறித்த புத்தகங்களை எழுதியுள்ள இவர், பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்வியல் பயிற்சிகளை நடத்தியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களைக் கொண்டு குழுவாக, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் வாழ்வியல் பயிற்சிகளை உலகம் முழுவதும் அவர் நடத்தி வருகிறார்.

இந்தத் துறையில் 12 ஆண்டுகால அனுபவம் கொண்டவரான உதய சான்றோன், இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வாழ்வியல் பயிற்சி அளித்துள்ளார். சிறு, குறு தொழில் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாட்டு வாழ்வியல் பயிற்சியாளர்களை அழைத்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும், அப்போது செலவு பெருமளவில் குறையும் என்கிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக சான்றோர் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம், கிராமத்து ஏழைக் குழந்தைகளுக்கு வாழ்வியல் தன்னம்பிக்கை பயிற்சிகளை தந்து வருகிறார். இது தவிர அகரம், முகவரி, தீஷா பவுண்டேஷன் போன்றவற்றுடனும் சேர்ந்து அவர் பணி புரிந்து வருகிறார். தற்கொலைக்கு முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை மனம் மாற்றி நல் வாழ்க்கை வாழ வைத்துள்ளார்.
image


இவர் தனது வாழ்வின் லட்சியங்களாக இரண்டைக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று குடியரசுத் தலைவர் கையால் விருது வாங்குவது. மற்றொன்று ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவது. இதற்காக ‘நம்பிக்கை விதைகள்’ என்ற அமைப்பின் மூலம் விதைகள் மற்றும் மரக்கன்றுகளைத் தரும் சமூகசேவையையும் உதய சான்றோன் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“விவசாயியான என் அப்பா நிலங்களை உழுது பயிர் செய்தார். நான் மனங்களை உழுது நம்பிக்கையைப் பயிர் செய்கிறேன். அது நிச்சயம் வெற்றி எனும் கனியைப் பறித்துக் கொடுக்கும். சிறு குறு நிறுவனங்கள் உட்பட பல முன்னணி நிறுவனங்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளிப்பதை கடமையாக வருமானத்திற்காக மட்டுமல்லாமல், உள்ளார்ந்த அன்போடு ஈடுபாடோடு செய்து வருகிறேன். அதுவே என்னை இந்த அளவிற்கு வாழ்வில் முன்னேற்றியுள்ளது. நம்மால் முடியும் என்ற நம்பிக்கையே நம்மை வாழ்வில் உயர்த்தும், சாதனைகள் புரிய வைக்கும்,” என்கிறார்.

‘விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்குவதில்லை’ என மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் வழியில், மக்கள் மனதில் நம்பிக்கை விதைகளை உற்சாகமாக விதைத்து வருகிறார் உதய சான்றோன்.

இவரது தன்னம்பிக்கை வார்த்தைகளை http://www.udhayasandron.com/ என்ற அவரது இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

Add to
Shares
290
Comments
Share This
Add to
Shares
290
Comments
Share
Report an issue
Authors

Related Tags