பதிப்புகளில்

சிறுவயதில் பிச்சை எடுத்த காஜி ஜல்லாலுதின், 500-க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் ஊக்கமிகு கதை!

YS TEAM TAMIL
14th Jul 2017
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

காஜி ஜல்லாலுதினுக்கு ஏழு வயது இருக்கும். அன்றைய நாள் அவரது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாள் என்று நினைத்தார். அவரது வீட்டை நோக்கி ஓடினார். மகிழ்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. பள்ளியில் அவரது வகுப்பில் முதலிடம் பிடித்துவிட்ட மகிழ்ச்சியான தகவலைத் தெரிவிக்க வீட்டுக் கதவை நோக்கி அவசரமாக விரைந்தார். ஆனால் அந்தக் கதவுகளுக்கு மறுபுறம் முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழல் நிலவியது. அவரது குடும்பம் மிகுந்த கஷ்டத்தில் இருந்தது.

”என்னுடைய அப்பாவிடம் பணம் இல்லை. நான் பள்ளிக்குச் செல்லவேண்டாம் என்றும் படிப்பை நிறுத்திவிடவேண்டும் என்று அப்பா என்னிடம் சொன்னார்.” என்று நினைவுகூர்ந்தார் காஜி.

ஒரு மிகப்பெரிய வெற்றிக்கதையின் துவக்கமாகவே அந்தத் தருணம் அமைந்தது.

image


பின்னணி

அடுத்த வேளைக்கு உணவில்லை. தங்குமிடம் இல்லை. இந்த அளவிற்கு மோசமான பணக்கஷ்டத்தில் இருந்தது காஜியின் குடும்பம். 

”சுந்தர்பன்ஸ் பகுதியில் இருந்த எங்களது கிராமத்தை விட்டு வெளியேறி கொல்கத்தாவின் மௌலானா பகுதிக்குச் சென்றோம். நடைபாதையில் படுத்து உறங்கினோம். தெருவில் பிச்சை எடுத்தோம்.” என்றார் காஜி.

நடைபாதையில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவரது அப்பா இறந்துவிட்டார். மீண்டும் சுந்தர்பன்ஸ் பகுதியிலிருந்த கிராமத்திற்கே சென்றுவிட முடிவெடுத்தார் அவரது அம்மா. இதற்கிடையில் காஜி தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது. இளம் வயதிலேயே பணிக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார் காஜி. கைகளால் இழுத்துச் செல்லும் ரிக்ஷாவை ஓட்டினார். இளம் வயதான 12 வயதிலேயே கடினமாகப் பணிபுரியத் துவங்கினார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் 17-18 வயதாகும் வரை தொடர்ந்து இந்தப் பணியைச் செய்துவந்தார். 17-18 வயதில் அவருக்கும் திருமணம் ஆனது.

வகுப்பறை நாட்கள் அவரது வாழ்க்கையிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. காஜியின் நாட்கள் தொடர்ந்து நகர்ந்து சென்றாலும் கிராமத்துப் பள்ளியில் அவர் பயின்ற வகுப்பறை அவரது மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. 

”என்னுடைய படிப்பைத் தொடர முடியாததை நினைத்து எப்போதும் கவலையடைவேன். ஒவ்வொரு நாளும் இதே போன்ற நிலைமை எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கும் என்று வியந்தேன். நான் எப்போது பணக்காரனாக நல்ல நிலைமையை அடைகிறேனோ அப்போது எந்த ஒரு குழந்தையும் கல்வியை இழக்கவேண்டிய நிலை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன்.” 

பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற உந்துதல் இரு மடங்கானது. அவர் கைகளால் வண்டியை இழுத்து பணிபுரிந்து வந்த நகரத்தில் அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரது பெயர் மொஹமத் சேமி. அவர் அலஹாபாத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு டாக்ஸி ட்ரைவர். கார் ஓட்டுவதற்கு கற்றுத்தருமாறு அவரிடம் கோரினார் காஜி. கிட்டத்தட்ட 1979-ம் ஆண்டு, அவருக்கு 19 வயதானபோது டாக்ஸி ஓட்டத் துவங்கினார்.

image


குழந்தைகள் வறுமைக்கு பலியாகி அவதிப்படுவதை நினைத்து வருந்தினார். அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு மேலும் காலம் தாழ்த்தவேண்டாம் என்கிற எண்ணத்தில் சுந்தர்பன்ஸில் ஒரு கமிட்டியை உருவாக்கினார். அதற்கு ’சுந்தர்பன் டிரைவிங் கமிட்டி’ என்று பெயரிட்டார். சமுதாயத்தில் நலிந்து வாடுகின்ற 10 இளைஞர்களை உறுப்பினர்களாக கண்டறிந்து இணைத்தார். 

”வண்டியை ஓட்டுவதற்கு கற்றுக்கொடுத்து வேலை வாங்கிக் கொடுப்பேன் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அதற்குப் பதிலாக அவர்கள் ஒவ்வொரு மாதமும் அவர்களது ஊதியத்திலிருந்து ஐந்து ரூபாய் தருவதாகவும் இரண்டு குழந்தைகளின் படிப்பிற்கு உதவுவதாகவும் உறுதியளிக்கவேண்டும் என்று கூறினேன். அந்த இரண்டு குழந்தைகளும் கமிட்டியில் உறுப்பினராவார்கள். அவர்கள் இரண்டு பேருக்கு கற்றுக்கொடுப்பார்கள். சேகரிக்கப்படும் நன்கொடைகள் பள்ளியில் சேருவதற்கு வழியின்றி தவிக்கும் குழந்தைக்கு அளிக்கப்படும்.” என்று விவரித்தார்.

கருணையின் வலிமை

இந்த மாடல் வெற்றிகரமாக செயல்பட்டது. கமிட்டியின் அளவு பத்திலிருந்து இருபதாக உயர்ந்தது. இருபது நாற்பதானது. இவ்வாறு அதிகரித்து கிட்டத்தட்ட 500 உறுப்பினர்களாக அதிகரித்தது. இவர்கள் அனைவரும் ஓட்டுநர் பணியை மேற்கொண்டனர்.

”என்னுடைய கிராம மக்கள் அத்தனை பேரும் டேக்ஸி, டாங்கா, ரிக்ஷா, பெரிய மற்றும் சிறிய கார்கள் என அனைத்தையும் ஓட்டுகின்றனர்.” என்றார் காஜி.

சேகரிக்கப்படும் தொகையைக் கொண்டு குழந்தைகளுக்கு துணிகள், சீருடைகள், புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கவேண்டும் என்பதே அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும். அதற்குப் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. காஜி அவரது டாக்ஸியில் ஏறும் பயணிகளிடம் பேசினார். நன்கொடைகளைக் கோரினார். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து பலர் தங்களுக்கு அறிமுகமில்லாதவர்களுக்கு உதவி புரிந்து வந்தனர்.

இந்த மாடல் சிறப்பாக செயல்பட்டது. காஜி இன்னும் பெரிதாக கனவு கண்டார். அடுத்து ஒரு பள்ளியைத் திறந்தார். 

”பள்ளி அமைப்பதற்காக என்னுடைய கிராமத்து மக்களிடம் சிறிய நிலம் அளிக்குமாறு கேட்டேன். ஆனால் அனைவரும் மறுத்துவிட்டனர். என்னுடைய ஓட்டுநர் பணி மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு என்னுடைய இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினேன். இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு வீட்டை 1998-ல் கட்டினேன். என்னுடைய குடும்பத்துடன் ஒரு அறையில் வசித்தேன். மற்றொரு அறையை பள்ளியாக மாற்றினேன். பள்ளியின் பெயர் இஸ்மாயில் இஸ்ராஃபில் இலவச ப்ரைமரி பள்ளி. என்னுடைய இரண்டு மகன்களின் பெயரையும் இணைத்து பள்ளியின் பெயரை வைத்தேன்.” என்றார் அவர்களின் பெயரிலேயே பள்ளி பதிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கான ஸ்டேஷனரி, சீருடைகள், உணவு, ஆசிரியர்களுக்கான சம்பளம் என அனைத்திற்கும் நன்கொடை வந்துகொண்டே இருந்தது. பள்ளியும் விரிவடைந்து நான்காம் வகுப்பு வரை உள்ள பள்ளியாக முன்னேறியது.

கனவுகள் நிறைவேறத் துவங்கின

சில காலங்களுக்குப் பிறகு ஒரு நாள் டாக்ஸியில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது நான்கு சகோதரர்களைக் கொண்ட ஒருவர் தங்களது நிலத்தை விற்பனை செய்யப் போவதை அறிந்தார். காஜி அவர்களை அணுகினார். ஒரு சகோதரர் மொத்த நிலத்தில் தனது பகுதியை மட்டும் விற்பனை செய்தார். அதை காஜி வாங்கினார். இந்த இடம் அவரது வீட்டை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இந்த நிலத்தில் பள்ளியை கட்டினார். சமூகத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் விரிவுபடுத்த விரும்பினார்.

பலரை அணுகியும் பலனில்லை. இறுதியில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் நிலத்தை வாங்க முன்வந்தார். பள்ளி கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கினார். கட்டுமானப் பணிகள் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. காஜி பள்ளியைத் திறந்து நான்கு ஆசிரியர்களை பணியிலமர்த்தினார். அதன்பிறகு ஆசிரியர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது. 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். 2012-ம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.

image


இரண்டு பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 400 குழந்தைகள் படித்தனர். 

“என்னுடைய பங்கு எதுவுமே இல்லை. எனக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிலர் சிமெண்ட் வழங்கினர். சிலர் செங்கல் வழங்கினர். இவ்வாறு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”

2011-ம் ஆண்டு மேலும் கொஞ்சம் நிலத்தை வாங்கினார். மூன்றாவது கட்டிடம் முடிவடையும் தருவாயில் இருந்தது. அதற்கு உதவிக்கரம் தேவைப்பட்டது. 

”அதிகம் கஷ்டப்படும் நிலையில் இருக்கும் சில குடும்பங்கள் சுந்தர்பன்ஸ் பகுதியில் இருந்தன. உடுத்த துணியும் உண்ண உணவும் இன்றி மக்கள் தவித்தனர். இதேபோல தொடர்ந்து இயங்கினோமானால் 15 வருடங்களில் நிலைமை மேம்பட வாய்ப்புள்ளது.” என்றார்.

காஜி இத்தகைய கல்விச்சூழலை உருவாக்குவதற்கு முன்பு ஒரு அரசுப் பள்ளி இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவில் இருந்தது. கல்வியின் தரம் சிறப்பாக இல்லை. “நான் உருவாக்கிய பள்ளி என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. மற்ற பள்ளிகளில் ஒரு சில குறைபாடுகள் உள்ளது. என்னுடைய பள்ளி பெரிதாகவும் முற்றிலும் சிறப்பாக இயங்கும் நிலையிலும் உள்ளது.” என்றார்.

நீங்களும் உதவிக்கரம் நீட்டலாம்

காஜிக்கு தற்போது 65 வயதாகிறது. இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இருந்தும் நன்கொடைகள் பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அவரது இளைய மகனும் டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். இவரது வருமானம் நாள் ஒன்றிற்கு 400 ரூபாய். இதிலிருந்து 200 ரூபாய் பள்ளியின் வளர்ச்சிப்பணிக்காக நன்கொடை அளிக்கிறார். மூன்றாவது பள்ளி மட்டுமல்லாமல் ஒரு ஆதரவற்றோர் இல்லமும் கட்டி வருகிறார். தண்ணீர் விநியோகத்திற்கும் சுந்தர்பன்ஸ் சாலை பழுதுபார்க்கும் பணிகளுக்கும் 2 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

மேலும் சில கனவுகளையும் நிறைவேற்ற விரும்புவதாக தெரிவிக்கிறார் காஜி. அவரது மாணவர்களில் ஒருவர் வெற்றிகரமான ஆட்சியராகவோ, வழக்கறிஞராகவோ, பொறியாளராகவோ உருவாவதை பார்க்க விரும்புகிறார். 

“மாணவர்கள் பிற நலிந்த மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று விரும்புகிறேன். இதுதான் என்னுடைய கனவு. அத்துடன் மக்களுக்கு வாகனம் ஓட்டவோ அல்லது கம்ப்யூட்டர் செண்டர் நடத்தவோ பயிற்சியளிக்க விரும்புறேன். மாணவர்கள் பட்டப்படிப்பு வரை முடிக்கும் அளவிற்கு ஒரு கல்வி நிறுவனத்தை ஒரு நாள் உருவாக்க விரும்புகிறேன்.” என்றார்.

இந்த மாத இறுதியில் மெர்க்கின் நியூரோபியன் ஃபோர்ட் (Merk’s Neurobian Forte) அவரது முயற்சியை பாராட்டி ஒரு விருதை வழங்க உள்ளது. நீங்களும் இவரது பயணத்தில் கைகோர்த்து உங்கள் சார்பில் நன்கொடையளிக்கலாம்.

பெயர் – சுந்தர்பன் ஆர்ஃபனேஜ் மற்றும் சோஷியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட்

அக்கவுண்ட் எண் – 1096011062636

கிளை – மயூக் பவன், சால்ட் லேக், கொல்கத்தா – 700091

IFSC Code – UtbIOMBHD62

Branch code – MBHD62

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags