பதிப்புகளில்

என்.பி.ஏ. கூடைப் பந்து போட்டியில் விளையாடிய முதல் இந்தியர்: அப்பாவின் கனவை நனவாக்கிய 22 வயது ‘சோட்டு’

அமெரிக்காவின் பாஸ்கெட் பால் அமைப்பான என்.பி.ஏ. நடத்தும் போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற சத்னம் சிங் பமாரா, தற்போது 2017 ஃபிபா ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணியில் விளையாட இருக்கிறார். 

29th Nov 2017
Add to
Shares
94
Comments
Share This
Add to
Shares
94
Comments
Share

7 அடி 2 அங்குலம்... இது தான் சோட்டு என்று அழைக்கப்படும் சத்னம் சிங்கின் உயரம். மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவரை நாம் சந்தித்தோம். அங்கிருந்த உயரமான மனிதரைவிட ஒரு அடி உயரமாகவே இருக்கிறார் 'சோட்டு' சிங் பமாரா. சதைப்பிடிப்பை சரிசெய்ய கைகால்களை நீட்டியபடி இருந்தார் அந்த உயர்ந்த மனிதர். ஒருவேளை ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டே இருந்ததால் இந்த சதைபிடிப்பு ஏற்பட்டிருக்குமோ என்னவோ. ஏனெனில் அந்தளவிற்கு ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

பேட்டி என்றதும் உற்சாகத்துடன் தயாரானார் 22 வயதே ஆன சத்னம். அமெரிக்காவின் டல்லாஸ் மேவரிக் பாஸ்கெட் பால் அணிக்காக கடந்த ஏழு ஆண்டுகளாக விளையாடிவிட்டு, மீண்டும் தாயகம் திரும்பி இருக்கிறார் இந்த பஞ்சாப் வாலிபர்.

சத்னம் சிங் பமாரா பிறந்தது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான பலோகி எனும் ஊரில் தான். சத்னமுக்கு ஒன்பது வயது இருக்கும்போதே அந்த ஊரின் உயரமான மனிதர் அவர் தான். சத்னமின் தந்தை பல்பீர் சிங் தான் அந்த ஊரின் இரண்டாவது உயரமான மனிதர்.

பட உதவி: John Loomis

பட உதவி: John Loomis


ஒரு சாதாரண விவசாயியின் மகனான பல்பீர் சிங்குக்கு, தான் ஒரு சிறந்த பாஸ்கெட் பால் வீரராக வர வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவரது தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. அவரது ஆசை நிறைவேறாமல் போனாலும், தனது மகனுக்கு பாஸ்கெட்பால் விளையாடுவதற்கான உடலமைப்பு இருப்பதை பார்த்து அவருக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. தனது ஆசையை மகன் நிறைவேற்றுவான் என நம்பிக்கையில் சத்னமுக்கு பாஸ்கெட் பாலை அவர் அறிமுகப்படுத்தினார்.இதுபற்றி கூறும் சத்னம்,

”நான் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன். என்னை பாஸ்கெட்பால் வீரரக ஆக்க வேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. நான் வெற்றி அடைந்தபோது, என் தந்தையின் கனவு நனவானது. என்னுடையதும் தான்," என்கிறார்.

தந்தை ஏற்படுத்திக்கொடுத்த சிறிய திடலில் தான் முதன் முதலில் சத்னம் பாஸ்கெட்பால் விளையாட்டை பயின்றார். முதலில் அது வாலிபால் விளையாட அமைக்கப்பட்ட திடல் என சத்னம் நினைத்தார். பிறகு தான் அது பாஸ்கெட் பாலுக்கானது என அவருக்குத் தெரிந்தது. முதலில் தடுமாறினாலும், தந்தையின் கண்களில் இருந்த நம்பிக்கை, சத்னமை கொண்டு மேற்கொண்டு விளையாட உத்வேகம் கொடுத்தது.

"முதல் ஆறு மாதம் பாஸ்கெட் பால் விளையாடப் பிடிக்கவில்லை. ஆனாலும் விளையாடிக் கொண்டே இருந்தேன். அதன் பிறகு தான் நான் இந்த விளையாட்டை நன்றாக விளையாடுவதை உணர்ந்தேன். மாநில அளவில் நடைபெற்ற பாஸ்கெட்பால் போட்டியில் வெற்றி பெற்றேன். அது தான் எனக்கு மேற்கொண்டு விளையாட நம்பிக்கையை அளித்தது," என்கிறார் சத்னம்.

சத்னமின் வெற்றியால் பெருமையடைந்த அவரது தந்தை பல்பீர் சிங், மகனை உலகளவில் ஒளிரச் செய்ய வேண்டுமென முடிவு செய்து, லூதியானா பாஸ்கெட்பால் அகாடமியில் அவரைச் சேர்த்தார். அங்கு 14 முதல் 18 வயதுடையவர்களுக்கு பாஸ்கெட்பால் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

வயது தடையில்லை:

அப்போது 6 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட சோட்டு, தனது 18 சைஸ் ஷூவை அணிந்து பயிற்சி மேற்கொண்டார்.

மிக விரைவிலேயே, இந்திய இளையோர் பாஸ்கெட் பால் அணியில் இடம்பிடித்தார் சத்னம். 2009-ம் ஆண்டு மலேசியாவில் ஆசிய ஃபிபா போட்டியில் 16 வயதுக்கு கீழ்பட்டோர் அணியில் இந்திய அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் இந்திய அணி ஏழாவது இடத்தை பிடித்திருந்தாலும், சத்னமுக்கு இது ஒரு புது அனுபவத்தை அளித்தது.

"அடுத்த சில ஆண்டுகள், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அழைப்பு வந்தது. எனது உலகில் யாரும் வெகு தொலைவில் இல்லை," என்கிறார் சத்னம்.

ஆனால் சத்னமின் மனம் அமெரிக்கா சென்று என்.பி.ஏ. போட்டிகளில் விளையாட வேண்டும் என்றே கனவு கண்டுகொண்டிருந்தது. அதேவேளையில், சத்னமின் கனவை நனவாக்கும் வகையிலான சில முன்னேற்றங்கள் நிகழத்தொடங்கின. சர்வதேச என்.பி.ஏ. தலைவராக பதவியேற்ற ஹேதி உபேராத், டிராய் என்பவரை என்.பி.ஏ. அமைப்பின் இந்தியாவுக்கான இயக்குனராக நியமித்தார். இந்தியாவில் உள்ள சிறந்த பாஸ்கெட்பால் வீரர்களை கண்டறியும் வேலையை செய்யத் தொடங்கினார் டிராய்.

நான்கு மாதங்கள் கழித்து, ஐ.எம்.ஜி. ரிலையன்ஸ் எனும் ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் கம்பெனி, கோப் பிரையன்ட் போன்ற சிறந்த பாஸ்கெட்பால் வீரர்களை உருவாக்கிய ஐ.எம்.ஜி. பாஸ்கெட்பால் அகாடமிக்கு, இந்தியாவில் இருந்து, 13 வயதுக்கு உட்பட்ட நான்கு வீரர்கள் மற்றும் நான்கு வீராங்கனைகளை அனுப்பி பயிற்சி அளிப்பதற்காக நிதியுதவி அளிக்க முன்வந்தது. இந்த தகவல் லூதியானா பாஸ்கெட்பால் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த 14 வயது முதல் 24 வயதுடையவர்களுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நடைபெற்ற தேசிய கூடைபந்து போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றபோது தான், டிராயின் கவனத்தை ஈர்த்தார் சத்னம். இந்தியாவில் இருந்து சத்னமை தேர்வு செய்யலாம் என முடிவு செய்தார் டிராய்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 'எல்லையற்ற பாஸ்கெட் பால்' எனும் முகாமுக்கு சத்னமை தேர்வு செய்து அனுப்பியது இந்திய கூடைப்பந்து சம்மேளனம். அப்போது சத்னமை கவனித்த இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஹரிஷ் சர்மா, இந்திய வீரர்கள் விளையாடும் ஒரு போட்டியில் சத்னமை பங்குபெற செய்தார். இந்த போட்டியில் பங்குபெற சத்னமுக்கு வயது ஒரு தடையாக இருந்தாலும், அவரின் அபாரமான திறமை, ஹரிஷ் சர்மாவை இந்த முடிவை எடுக்க செய்தது. இந்தியாவின் 'யோ மிங்' சத்னம் தான் என உறுதியாக அவர் நம்பினார்.

மொழிப் பிரச்சினை:

"இன்றைய தேதியில், என்.பி.ஏ. கனவுடன் 10 முதல் 20 லட்சம் மாணவர்கள் வரை பாஸ்கெட்பால் விளையாடுகிறார்கள். நான் கோடியில் ஒருவன். எனது ஆங்கிலம் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என எனது பயிற்சியாளர்கள் என்னிடம் கூறினார்கள்," என இது குறித்து நினைவு கூறுகிறார் சத்னம்.

முதலில் தடுமாறினாலும், ஒரு சில வாரங்களிலேயே குழுமொழியை கற்றுக்கொண்டு, பயிற்சி ஆட்டங்களின்போது மற்ற வீரர்களைத் தொடர்பு கொள்ள பழகிவிட்டார் சத்னம்.

"ஆங்கிலம் தான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. நான் அங்கு சென்றபோது என்னால் ஆங்கிலம் பேச முடியவில்லை. அவர்கள் பேசுவதும் எனக்கு புரியவில்லை. எனது ஆசிரியர்கள் மிகவும் கடினமாக போராடினார்கள். ஆரம்ப நாட்களில், எனக்கு புரிய வைப்பதற்காக செயல்வழி கற்றல் முறையை அவர்கள் கையாண்டார்கள்," என்கிறார்.

ஆங்கிலம் பிடிபட சத்னமுக்கு மூன்றாண்டுகள் ஆனதாம். ஆனால், அதன்பிறகு தனது விளையாட்டு மேலும் சிறப்பானதாக மாறியதாக அவர் கூறுகிறார்.

2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஃபிபா ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினார் சத்னம். 2014 -2015 காலகட்டத்தில் மட்டும், அமெரிக்காவின் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஐ.எம்.ஜி. அணிக்காக விளையாடிய போட்டிகளில், 9.2 புள்ளிகள், 8.4 ரீபவுன்ட்ஸ், 2.2 பிளாக்ஸ் என்ற சராசரியை வைத்திருந்தார் சத்னம் சிங். ஆனால் அவரது ஆங்கிலத் திறன் தான் அவரை என்.சி.ஏ.ஏ. போட்டிகளில் பங்குபெற படியாமல் தடுத்தது. ஒருவழியாக 2015 ஏப்ரலில் என்.பி.ஏ. போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார் சத்னம். அதன் பிறகு சத்னம் செய்தது எல்லாமே வரலாறு தான்.

முதல் இந்தியர்:

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் அந்த வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்காவின் என்.பி.ஏ.வில் விளையாடுவதற்கான வரைவுப் பட்டியலில் 52வதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வாய்ப்பை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சத்னம் சிங் பமாரா.

டல்லாஸ் மேவரிக் அணியில் தேர்வு செய்யப்பட்டு, அந்த அணியின் மைய ஆட்டக்காரராக விளையாடினார் நம்ம நாட்டு சோட்டு. அதுமட்டுமல்ல, 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு, எந்தவொரு தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்காமல், வயது வரம்பின்றி நேரடியாக உயர்நிலை பள்ளியில் இருந்து என்.பி.ஏ. போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையும் சத்னமுக்கு உண்டு.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற என்.பி.ஏ. சம்மர் லீக் போட்டியில் தான் டெல்லாஸ் மேவரிக் அணிக்காக முதன் முதலில் விளையாடினார் சத்னம். அதன் பிறகு, டெக்சாஸ் லெஜன்ட்ஸ், டி லீக் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடினார். அந்த போட்டிகளில் 9 நிமிடங்களில், 4 புள்ளிகள், 3 ரீபவுன்ட்ஸ், ஒரு அசிஸ்ட் என விளையாடி சாதனை படைத்தார் இந்தியாவின் சோட்டு.

"என்.பி.ஏ.வில் விளையாடியது ஒரு மிகச்சிறந்த அனுபவம். நான் முதன்முதலில் கூடையில் பந்தை போட்ட நிமிடத்தை மறக்கவே முடியாது," என்கிறார் சோட்டு.

2015 - 2016 காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக விளையாடிய 9 போட்டிகளில், சராசரியாக 7.9 நிமிடங்களில் 1.5 புள்ளிகள், 1.5 ரீபவுன்ஸ்கள் பெற்றுள்ளார். 2017 அக்டோபரில் டெக்சாஸ் லெஜன்ட்ஸ் அணியில் மீண்டும் இடம்பிடித்த சத்னம், தற்போது டெல்லாஸ் மேவரிக் அணிக்காக மீண்டும் களமிறங்கி உள்ளார். மொத்தம் 42 போட்டிகளில் போட்டிகள் டெக்சாஸ் லெஜன்ட்ஸ்க்குகாகவும், டெல்லாஸ் அணிக்காக போனிக்ஸ் சன்ஸ் அணியை எதிர்த்தும் சம்மர் சீசனில் விளையாடினார் சத்னம்.

பொறுமையும், பயிற்சியும் முக்கியம்:

சில நேரங்களில் திறமை இருந்தும் ஓரங்கட்டப்பட்டார் சத்னம். ஆனால், அதுபற்றித் தனக்கு கவலையில்லை என்கிறார் அவர். அதற்கு அவர் கூறும் காரணம், 

”பொறுமையாக இருக்க வேண்டுமென எனது பயிற்சியாளர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். மற்ற லீக் போட்டிகளில் விளையாடுவதும், தொடர்ந்து பயிற்சி செய்வதும் அவசியம் என்றும் எனது பயிற்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்."

சோட்டுவின், டெல்லாஸ் மேவரிக் அணியுடனான மூன்றாண்டு கால ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடைகிறது.

"நான் மீண்டும் அங்கு செல்வேன் என நம்புகிறேன். ஒராண்டுக்கு 9 முதல் பத்து போட்டிகளை விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அதேவேளையில், இந்திய அணிக்காகவும் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அதனால் தான் நான் மீண்டும் இந்தியா வந்தேன்," என்கிறார் சத்னம்.

இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கவுள்ள சத்னமுக்கு, இந்திய பாஸ்கெட் பால் பற்றிய காட்சிகள் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறதாம்.

"இந்தியாவில் பாஸ்கெட்பால் விளையாட்டின் நிலை ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, தற்போது அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. இது ஒரு இரவில் நடந்ததல்ல, என்.பி.ஏ. மற்றும் டி லீக் வீரர்களை இங்கு மீண்டும் அழைத்து வந்துள்ளது எளிதானது அல்ல. ஆனால் அது நடந்திருக்கிறது. பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன," என நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்னம்.

2017 ஃபிபா ஆசிய சாம்பியன்சிப் போட்டிக்காக மீண்டும் இந்திய அணியில் விளையாடுகிறார் சத்னம். அதேவேளையில் மீண்டும் டெல்லாஸ் மேவரிக் அணியில் இடம்பெறும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது.

ஒளிமயமான எதிர்காலம்:

இந்தியாவின் பிரபல விளையாட்டான கிரிக்கெட்டுடன் போட்டி போடுவது சத்னமுக்கு ஒன்றும் பெரிய தடையாக இல்லை.

"கிரிக்கெட்டும், பாஸ்கெட்பாலும் வேறு வேறானவை. கிரிக்கெட்டில் நீங்கள் வெறுமனே நிற்பீர்கள். பந்து சரியாக உங்களை நோக்கி வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஆனால் பாஸ்கெட்பால் அப்படியல்ல. முதுகுதண்டு உடையும்... ஏதாவது ஒன்று நடக்கும். எனது மூக்கில் இருந்து மூட்டு வரை அறுவை சிகிச்சை நடைபெறாத இடமே இல்லை. எனவே இரண்டு விளையாட்டும் ஒன்றுடன் ஒன்றாக தனித்தனிப் பாதையில் இயங்கும்," என்கிறார் சத்னம்.

“இந்தியாவில் பாஸ்கெட்பால் விளையாட்டு நிச்சயம் பிரபலமாகும். அதனால் தான் நான் இங்கிருக்கிறேன். எனது விளையாட்டையும், இந்தியாவில் பாஸ்கெட் பாலையும் மேம்படுத்தவே," என்று கூறும் சத்னமின் கண்களில் நம்பிக்கை மிளிர்கிறது.

ஆங்கில கட்டுரையாளர்: பிஞ்சல் ஷா

Add to
Shares
94
Comments
Share This
Add to
Shares
94
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக