மேலதிகாரிகளே!! நீங்கள் ஊழியர்களிடம் பகிரங்கமாக பகிரக்கூடாத 5 விஷயங்கள்!

  By YS TEAM TAMIL|3rd Aug 2016
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Share on
  close

  ஒரு தொழில்முனைவோராகவோ அல்லது நிர்வாகியாகவோ பொறுப்பேற்று வேலை பார்ப்பது, எளிதான காரியம் அல்ல. ஒரே குறிக்கோளை நோக்கி நீங்கள் உங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து வழிநடத்தி, பயிற்சியளித்து, ஊக்குவித்துக் கொண்டே இருக்கவேண்டும். முதலாளி என்பவன் அவனால் செய்யமுடிந்ததை செய்துவிட்டு சென்றுவிடுவான்; அதிகாரிகள் மற்றும் மேலதிகாரிகளை கணக்கில் எடுத்து கொள்ளும் அளவிற்கு ஊழியர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று முதலாளிகள் குறித்து ஒரு கட்டுக்கதையே உண்டு. ஆனால் முதலாளிகளிடம் ஏற்றுக்கொள்ள முடியாத சில எதிர்மறையான நடத்தை, குழுவின் மனஉறுதியை மட்டும் பாதிப்பது அல்லாமல், நிறுவனத்தின் வளர்ச்சியையும் அது பாதிக்கும்.

  image


  மறுபக்கம், முதலாளிகளும் மனிதர்கள் தான், மற்றவர்களைப் போல் அவர்களுக்கும் கெட்ட நேரங்கள் அமைகிறது. ஆனால், ஒரு முதலாளியாகவோ அல்லது மேலதிகாரியாகவோ உங்களுக்கும் சில மீறக்கூடாத எல்லைகள் உண்டு. உங்கள் நாள் எவ்வளவு மோசமாக அமைந்தாலும் சரி அல்லது நீங்கள் கோபமாகவோ அல்லது விரக்தியாகவோ இருந்தாலும் சரி, ஊழியர்களிடம் அதை காட்டிக்கொள்ளக் கூடாது என்று சில அடிப்படை விஷயங்கள் உண்டு. ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவராய் ஒரு முதலாளி இருக்க வேண்டும். மனதை புண்படுத்தும் வகையிலான ஒரு வார்த்தை கூட, விசுவாசத்துடன் பணிசெய்யும் ஊழியர்களுக்கு அதிருப்தி மற்றும் வெறுப்பைத் தந்துவிடும். அதனால் ஒரு முதலாளியாய் நீங்கள் உங்கள் ஊழியர்களிடம் சொல்லக் கூடாது என ஐந்து விஷயங்களை இக்கட்டுரையில் கீழே கூறியுள்ளோம்:

  "என் பணியை வெறுக்கிறேன்..."

  உங்களுக்கு நீங்கள் செய்யும் பணி மற்ற பணிகளைவிட சிறந்ததாகவோ அல்லது எளிதாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக உங்கள் கோபங்களை உங்கள் ஜுனியர்களிடம் நீங்கள் வெளிபடுத்தலாம் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் ஒரு தலைவன் என்பதை என்றுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஊழியர்களை நன்கு வழிநடத்தி, பணியில் அவர்களது முழு திறனையும் பயன்படுத்தி சிறந்த வெளிபாட்டைக் கொண்டு வருவது முதலாளியின் கடமையாகும். உங்களுக்கு உங்கள் பணி பிடிக்கவில்லை என்பதை உங்கள் குழுவிடம் வெளிபடுத்துனீர் எனில், பின் அவர்கள் உங்களை எப்படி ஏற்றுக் கொள்வர்? வேலையை செய்து முடிக்க அவர்களுக்கு எப்படி ஆர்வம் இருக்கும்? உங்கள் பதவிக்காக செய்யவேண்டிய ஒரு சில விஷயங்கள், உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவற்றை உங்கள் கீழ் உள்ளவர்களிடம் சொல்லாதீர்கள். நீங்கள்  விரக்தியடைந்ததாக உணர்ந்தால், உங்கள் சீனியர்களிடமோ அல்லது சக அதிகாரிகளிடமோ பேசிக்கொள்ளுங்கள். ஒரு முதலாளியாய் இதை முதலில் புரிந்து கொள்ள தவறிவிடாதீர்கள்!

  "நீங்கள் உங்கள் பணியை சரியாக செய்யவில்லை எனில், வேறொருவரை என்னால் எளிதில் இடமாற்றம் செய்ய முடியும்"

  இவ்வாறு கூறுவது உங்கள் ஊழியர்கள் மீது உங்களுக்கு எவ்வளவு தாழ்வான மதிப்பு இருக்கிறது என்பதையே வெளிப்படுத்தும். ஊழியர்களை எளிதில் இடமாற்றம் செய்யமுடியும் என்ற எண்ணமோ அல்லது அவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்ற எண்ணமோ முதலாளிக்கு இருந்தால், பின் அவர்களை பணிசெய்ய ஊக்கப்படுத்துவது கடினமாகிவிடும். இதனால் நல்ல ஊழியர்கள்கூட வேறு பணி தேடி செல்வர்; திறன் குறைந்தவர்கள் அப்பணிக்கு இடமாற்றம் செய்யப்படுவர். இந்த மாற்றம்தான் ஏற்படும். வேலையை எப்படி மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்று அவர்களுக்கு பொறுமையாக மரியாதையுடன் எடுத்துரையுங்கள். அவர்கள் திறன் மீது இருக்கும் நம்பிக்கையை அவர்களிடம் கூறுங்கள்; மேலும் சிறப்பாக அவர்களால் செயலாற்ற முடியும் என்று சொல்லுங்கள்.

  "உங்களுக்கு எப்படி உதவி செய்வதென்று தெரியவில்லை / நீங்களே வழி கண்டு பிடியுங்கள், இது என் பணியல்ல"

  சிக்கல் ஏற்படும்போது, உடன் துணை நிற்காத முதலாளி மற்றும் நிர்வாகியை விட ஆறுதலற்ற தலைவர் எவருமில்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் உங்களிடம் தீர்வு இருக்காது. ஆனால் தீர்வை பெற உங்களால் அவர்களுக்கு துணை நின்று, வழிகாட்டி, ஆலோசனை வழங்க முடியும். நல்ல தலைவர்கள் அவர்கள் செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்றுக் கொள்வர்கள். பொறுப்பற்று இருப்பதாலோ அல்லது குறைகளை கூறித் தள்ளுவதாலோ, நீங்கள் ஒரு ஒழுங்கற்ற எடுத்துக்காட்டாய் தான் திகழ்வீர்கள்; பிற்காலத்தில் அதற்காக வருத்தமும் படுவீர்கள்.

  "அவர் சிறப்பாக வேலை செய்யும்போது, உங்களால் ஏன் முடியவில்லை?"

  உங்கள் ஊழியர்களையும், அவர்கள் பணியையும் ஒப்பிட்டு பேசுவதை முழுமையாக நிறுத்தி விடுங்கள். ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட திறன் உண்டு; பணிக்கு அவர்களைத் தேர்ந்தெடுத்ததற்கும் வேறுபட்ட காரணங்கள் உண்டு. தேவையில்லாமல் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட்டு பேசுவதால், பணி இடத்தில் அவசியம் இல்லாத போட்டியும் பொறாமையும் தான் வளரும். அத்துடன், ஒரு ஊழியரை பற்றி மற்றொரு ஊழியரிடம் குறை கூறக்கூடாது. ஒருவரிடம் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமான பழக்கம் இருந்தாலும் சரி, அவர்களிடம் மற்றொருவரைப் பற்றி வீண்பேச்சுக்கள் மேற்கொள்வது, மேலதிகாரி பண்பு அல்ல; அது அறிவற்ற செயலாகும். இச்செயல்கள் மன உறுதியை உடைத்து, வேலை உற்பத்தியை குறைத்து, பணியிடத்தில் விஷத்தன்மையை தான் பரப்பும்.

  "பரவாயில்லை, இது சாதாரண வாடிக்கையாளர் / விற்பனை மட்டுமே..."

  அதிகமாக பணம் தரும் அல்லது பெரிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நன்கு பணி செய்து தாருங்கள் என்று உங்கள் ஊழியர்களிடம் என்றுமே கூறாதீர்கள்; அப்படி கூறுவதையும் பாராட்டாதீர்கள். உயர்ந்த பெரிய வாடிக்கையாளர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறும் போதும்கூட, தவறுதலாக இவ்வார்த்தைகளைப் பயன்படுத்தி விடாதீர்கள். அது தானாகவே சிறிய வாடிக்கையாளர்களிடம் அவர்கள் போக்கை மாற்றிவிடும். குறைந்த வாடிக்கையாளர் சேவைக்கு தள்ளிவிடும். எந்தமாறியான வாடிக்கையாளர்களை நாம் தேர்ந்தேடுத்து கொள்ள வேண்டும் என ஊழியர்களுக்குள் மோதல்களும் உள் அலுவலக அரசியலும் வளர்ந்துவிடும். சிறிய தொகை பணி தரும் வாடிக்கையாளரின் சேவையில் இருக்கும் ஒரு சின்ன தவறை கூட கவனிக்காமல் இருக்காதீர்கள். அந்த தவறு பெரிய இழப்பைத் தந்திருக்காவிடிலும், அதனை அவர்கள் மறுபடியும் செய்யாதவாறு உறுதி செய்துகொள்ளவேண்டும். கவனிக்காமல் விட்டுவிட்டால், மொத்த வாடிக்கையாளர்களில் 20 சதவீதமான வாடிக்கையாளர்களுக்கு செய்து தரப்படும் செயலை நீங்கள் துல்லியமாக கவனிப்பது இல்லை என்றாகிவிடும்; அது ஊழியார்களின் செயல் திறனையும் குறைத்துவிடும்.

  உங்கள் ஊழியர்களிடம் நல்ல தொடர்பை மேற்கொள்ளவேண்டியது உங்கள் வேலை ஆகும். ஒரு சிறந்த முதலாளி, நல்ல எடுத்துக்காட்டாய் இருப்பான்; நல்ல செயல்களை ஊக்குவிப்பான்; குழுவின் சாதனைகளைப் பாராட்டுவான்; பொது இடங்களில் ஊழியர்களைத் தலை குனிய வைக்க மாட்டான். தவறு நடந்தால் கத்தி கூச்சலிடுவதற்கு முன், ஊழியர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் தேவைகளுக்கு உதவுபவனாய் இருங்கள். ஊக்கம் மற்றும் விசுவாசம் உள்ள ஊழியர்களால் மட்டுமே நிறுவனத்திற்கு வெற்றி சேர்க்க முடியும் என்பதை என்றுமே நினைவில் வைத்து கொள்ளுங்கள். 

  கட்டுரையாளர்: மாண்டி மாஜித் | தமிழில்: நந்தினி பிரியா

  இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

  Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome