பதிப்புகளில்

அன்று மதிப்புக்குரிய தேவதாசிகள்... இன்று சீரழிக்கப்படும் பாலியல் அடிமைகள்!

YS TEAM TAMIL
3rd Jul 2017
Add to
Shares
41
Comments
Share This
Add to
Shares
41
Comments
Share

கடவுளின் மணப்பெண்ணாக கருதப்பட்டவரே 'தேவதாசி'. இந்தப் பெண்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, சமூகத்தில் மதிப்புக்குரியவர்களாகவும் நடத்தப்பட்டனர். ஆனால், இன்றோ அவர்கள் பாலியல் அடிமைகளாக நசுக்கப்படுவது அவலத்தின் உச்சம்.

யார் இந்த தேவதாசிகள்?

தேவதாசி அல்லது தேவரடியார் என்பதற்கு 'கடவுளின் சேகவர்' என்று பொருள். இந்தப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்தவர்கள். இவர்கள் கடவுளை திருமணம் செய்துகொண்டு கடவுளின் திருப்பணிக்காகவே வாழ்ந்தவர்கள். இன்னும் சொல்லப் போனால், இவர்கள் சக மனிதர்களை திருமணம் செய்து கொள்ளவோ அல்லது அவர்களிடம் தங்கள் குடும்பத் தேவையையோ பணத்தேவையையோ பூர்த்தி செய்யக்கூடாது. ஆனால், திருமணமான அல்லது திருமணமாகாத ஆணுடன் இவர்கள் குறுகிய காலமோ அல்லது நெடுங்காலமோ பந்தம் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. இவர்கள் ஆடல், பாடல் முதலான 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பர். கோவில்களிலும் செல்வந்தர்கள் முன்பும் தங்கள் ஆடல், பாடல் போன்ற கலையை சிறப்பாக வெளிப்படுத்தி பொன், பொருள், நிலம் போன்ற விலைமதிப்பு மிக்க பொருட்களை பரிசாகப் பெறுவர். இன்னும் சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதும் கடவுளுக்காக அர்ப்பணித்துவிட்டு தனிமையில் வாழ்வர்.

 பட உதவி: The Modern Rationalist மற்றும் Cargo Support

 பட உதவி: The Modern Rationalist மற்றும் Cargo Support


தேவதாசி முறை என்பது ஏழாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவில் குறிப்பாக சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலத்தில் அதிகம் வளர்ந்து வந்தது. அந்தக் காலகட்டத்தில் தேவதாசிகள் சமுதாயத்தில் மிகுந்த மதிப்போடும், மரியாதையோடும் இருந்துள்ளனர். எல்லா புனித சடங்குகளிலும், விசேஷங்களிலும், விழாக்களிலும் அழைக்கப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டனர். கோயில்களும் அரசர்களும் செழித்து இருந்தது வரை இவர்களும் அதிக மதிப்போடு இருந்தனர்.

நவீன இந்தியாவில் தேவதாசிகளின் நிலை என்ன?

இன்றைய நிலையில் தேவதாசிகள் பாலியல் அடிமைகள் என்ற அளவில்தான் நடத்தப்படுகின்றனர். நான்கு, ஐந்து வயதில் கடவுளுக்கு தேவதாசியாக கோயில்களில் விடப்படும் குழந்தைகளின் நிலையும் இதுவே. ஒட்டுமொத்தமாக கணக்கெடுத்தால் பெரும்பாலானோரும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். பெரும்பாலும் இந்தியாவில் தீண்டத்தகாத சாதியாக நசுக்கப்படும் மடிகா, வால்மீகி சாதியை சார்ந்தவர்களே இந்நிலைக்கு ஆளாகின்றனர். இவ்வகை தேவதாசிகள் இந்தியாவில் கர்நாடகம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் அதிகம் காணப்படுகின்றனர். இவர்களை மகாராஷ்டிராவில் மாதங்கி என்றும், ஆந்திரம், தெலங்கானாவில் ஜோகினி அல்லது மதம்மா என்றும், கர்நாடகத்தில் தேவதாசி என்றும் அழைக்கின்றனர்.

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களால் தேவதாசி முறைக்குள் வலுக்கட்டாயமாக உட்படுத்தப்படுகின்றனர். இம்முறையில் குழந்தைகள் மூலம் கிடைக்கும் வருமானம்தான் பெற்றோர்களின் இந்தப் போக்குக்கு முக்கியக் காரணம். இவர்கள் பெரும்பாலும் சாதிய அடிப்படையில் ஊருக்குள் நுழையவோ, தங்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்தவர்களாகவும், படிப்பறிவு இல்லாதவர்களாவும் இருக்கின்றனர். இவர்கள் துப்புறவுத் தொழில் செய்யவே அனுமதிக்கப்படுகின்றனர். எனவே பணத்தேவைக்காகவும், வருமானத்துக்காவும் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை தேவதாசி முறையில் ஈடுபடுத்தி, பாலியல் தொழில்புரியும் அவலநிலைக்கு ஆளாகின்றனர்.

பட உதவி: Comedymood

பட உதவி: Comedymood


குடும்பம் பெரிது. ஆனால், வாழ்வதோ மிகச் சிறிய கூரை வீடு அல்லது ஒற்றை அறை வீடு. தன் பாலியல் தேவைக்காக வருகின்ற ஓர் ஆணுடன் தங்கள் வீட்டுப் பெண்பிள்ளையை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு, எல்லாம் முடியும் வரை மொத்தக் குடும்பமும் வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் நிலையைச் சொல்லக் கேட்பதற்கே பகிரங்கமாக இருக்கிறது. பெண்பிள்ளை என்றாலே செலவுதான் என்று பார்க்கப்படும் ஒரு சமூகத்தில் தேவதாசி முறையில் ஈடுபடும்போது, பெண்பிள்ளைகளை பணம் ஈட்டும் சொத்தாகவே கருதுகின்றனர்.

தேவதாசியாக ஒருவர் உருவாவது எப்படி?

எல்லம்மா என்ற பெண்தெய்வதுக்காக, அதிகளவில் பெண்கள் தேவதாசி முறையில் அர்ப்பணிக்கப்படுகின்றனர். இந்த எல்லம்மா தெய்வத்துக்கு ரேணுகா, ஜோகம்மா, ஹோலியம்மா போன்ற பெயர்களும் உண்டு. வடகர்நாடகாவில் உள்ள எல்லம்மா கோயிலில் நடக்கும் சவுண்டட்டி திருவிழாவில் தேவதாசி முறையில் பெண்களை அர்ப்பணிப்பர்.

சவுண்டட்டி திருவிழா அக்டோபர் முதல் பிப்ரவரிக்குள் பலமுறை நடைபெறும். பெண்களை நவம்பர் மாதம் முதலே தேவதாசிகளாக ஒப்புக்கொடுப்பர். பெற்றோர்கள் தங்களுக்குப் புனிதமாகக் கருதும் ஒருநாளில், தங்கள் பெண்பிள்ளைகளை அலங்கரித்துக் கொண்டுவருவர். மூத்த தேவதாசிகளால் இவர்களுக்கு மேற்கொண்டு சடங்குகள் செய்யப்படும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தை பருவத்தை எட்டியவுடன் தங்கள் சமூகத்திடம் தகவல் தெரிவிப்பர். இதனால், நல்ல வசதி நிறைந்த செல்வந்தர்கள் இந்தப் பெண்பிள்ளைகளை தங்கள் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டு, பதிலுக்கு அந்தப் பிள்ளையின் பெற்றோரின் குடும்பச் செலவை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். கன்னிப் பெண்களுக்கு அதிக மவுசும், நல்ல விலையும் கொடுக்க முன்வருவர்.

சட்டரீதியிலான நடவடிக்கைகள்?

இந்திய சுகந்திரத்துக்கு முன்பும், பின்னும் தேவதாசி முறையை தடுக்க பல சட்டங்களை கொண்டுவரப்பட்டன. கடந்த 20 வருடங்களாக தேவதாசி முறை முற்றிலும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு வரை 4,50,000 தேவதாசிகள் இருப்பதாக, தேசிய மனித உரிமைகள் ஆணைய ஆய்வு தெரிவிக்கிறது. நீதிபதி ரகுநாதன் தலைமையிலான மற்றொரு ஆணையத்தின் ஆய்வுப்படி ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் 80,000 பெண்கள் தேவதாசிகளாக இருப்பது தெரியவருகிறது.

தேவதாசி முறையில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கு, இது சட்டத்துக்கு புறம்பானது என்றும், தங்களை இந்தச் சட்டம் மூலம் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்று கூட தெரியாத அறியாமையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாத வரை வெறும் கடுமையான சட்டங்கள் மூலம் மட்டும் தேவதாசி முறையை தடுக்க முடியாது. தேவதாசி முறையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கைக்கும், சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை பெறும் தேவதாசிகளுக்கும் உள்ள பெரிய எண்ணிக்கை வேறுபாடே, வெறும் சட்டம் மட்டும் இந்த முறையை ஒழிப்பதற்குப் போதாது என்பதை உணர்த்துகிறது. இந்த மக்களுக்கு கல்வி, வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு உரிய விழிப்புணர்வும் கொடுக்கப்பட வேண்டும்.

பட உதவி;  National Museums Liverpool

பட உதவி;  National Museums Liverpoolஇந்த தேவதாசி முறையில் குழந்தைகள் இளம்வயதில் என்ன நடக்கிறது என்ற புரிதல் இல்லாமலே இந்த அவலச் சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். 11, 12 வயதில் பருவம் அடையும் இந்தப் பெண்குழந்தைகள் 15 வயதுக்குள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த இளம் வயதில் அவர்களுக்கு பாலியல் உறவுப் பாதுகாப்பு குறித்தும், பாலியல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வும் கிடைப்பதில்லை.

தேவதாசிகளுக்கு எய்ட்ஸ் மற்றும் பாலியல் சார்ந்த உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் தவிர்க்க முடியாது. இத்துடன், இளம் வயதிலேயே குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்புக்கு பணம் ஈட்டுதல் போன்ற நிர்பந்தங்களால் இந்த முறையில் இருந்து இவர்களால் வெளிவரவே முடியாமல் போகிறது. பிஞ்சு வயதிலேயே புதிய தேவதாசிகள் பலரும் உருவாவதால், வயது அதிகரிக்கும் தேவதாசிகள் ஒதுக்கப்படுகின்றனர். அதாவது, முப்பது வயதை எட்டிய தேவதாசிப் பெண்களை செல்வந்தர்கள் அணுகுவதில்லை.

வெற்று உடம்பை வைத்து பணம் ஈட்டுவதைத் தவிர வேறு ஏதும் தெரியாத இந்தப் பெண்கள் தங்கள் பணத்தேவைக்காக லாரி டிரைவர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட ஆண்களிடம் வெறும் 20, 30 ரூபாய்களுக்கு உடம்பை விற்கத் தயாராகின்றனர். இதனால், ஹெச்.ஐ.வி. பரவும் முக்கிய இடமாகவே இந்திய நெடுஞ்சாலைப் பகுதிகள் உருவெடுக்கின்றன. சாதி, பாலினப் பாகுபாடு, பொருளாதார நிலை போன்ற பல காரணங்களால் இந்தப் பெண்கள் தேவதாசி முறையில் சிக்கி சீரழிகின்றனர்.

கீழேயுள்ள வீடியோவில் தேவதாசி முறையில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் பற்றி தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். தேவதாசி முறையில் பெண்கள் மட்டுமல்ல; அம்முறையில் ஈடுபடும் ஆண்கள் படும் கஷ்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஐந்து ஆண்டுகள் முன்பு படமாக்கப்பட்டது என்றாலும், இதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதில் வெளிக்கொணரப்பட்ட உண்மைகளும் இன்றளவும் பொருத்தமானதாக உள்ளது.


ஆங்கில கட்டுரையாளர்: கிருதிஹா ராஜம் | தமிழில்: கீட்சவன்

Add to
Shares
41
Comments
Share This
Add to
Shares
41
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக