பதிப்புகளில்

தொழில் பயணத்தை உச்சம் நோக்கி கிரண் மஜும்தார் ஷா!

siva tamilselva
26th Aug 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

"நீ வளர்ந்தால் தன்னம்பிக்கையுடன் கூடிய வெற்றிகரமான, கிரன் மஜும்தார் ஷா போல வளர வேண்டும்" என்று என் அம்மா சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. என் அம்மாவிற்கு, எனக்கு, இன்னும் இந்தியாவில் உள்ள இது போன்ற லட்சக்கணக்கானவர்களுக்கு, கிரண் உண்மையாகவே ஒரு ரோல்மாடல்தான். இதுவரையில் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இல்லாத ஒரு துறையில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர். மாற்றம் ஏற்படுத்துவதற்கான மாறா விருப்பமும் துணிச்சலும் அவரிடம் இருந்தது. சாதித்தும் காட்டியவர்.

சமீபத்தில் அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை மிகவும் ஈர்த்த ஒரு பெண்மணியுடன் நடந்த உள்ளப்பூர்வமான உரையாடல் அது. வேடிக்கை, நகைச்சுவை, சீரியஸ் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்த ஒரு நபர் அவர். இந்த பேட்டியை படியுங்கள். நான் அவரைப் பற்றிச் சொல்லும் உண்மையான அர்த்தத்தை நீங்களே புரிந்து கொள்வீர்கள். இது எங்கள் உரையாடலின் முதல் பகுதி (இது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது). விரைவில் அவர் சொன்ன மேலும் பல அறிவுப்பூர்வ தகவல்களுடன் வருகிறேன்.

தனது தாயாருடன் கிரன் மஜும்தார்

தனது தாயாருடன் கிரன் மஜும்தார்


யுவர் ஸ்டோரி: உங்கள் சொந்த முயற்சியில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், எல்லாம் முழுமை பெற்று விட்டது என்று உங்களால் சொல்ல முடியுமா அல்லது இன்னும் செய்வதற்கு மிச்சம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அப்படி இருந்தால் அது என்ன?

கிரண்: எந்த ஒரு தொழில்முனைவரும் பயணம் முடிந்து, சாலையின் இறுதிக்கு வந்து விட்டதாக நினைப்பதே இல்லை. ஒரு தொழில் முனைவரின் வாழ்க்கை ஒரு தொடர் பயணம் என்றுதான் நான் நினைக்கிறேன். சேருமிடத்திற்கு வந்து விட்டோம் என்று நாம் நினைக்கும் இடங்கள் உண்மையில் மைல்கல்கள்தான். எங்கே நம்மைக் கொண்டு செல்லும் என்று தெரியாத ஒரு பாதையில் தான் நாம் பயணிக்கிறோம். எனவே அது புதியதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு பயணம் தான். உற்சாகம் மிகுந்த பயணம். நாம் அறியாத இலக்குகளுக்கு கூட்டிச் செல்வதோடு நமக்கு புதிய பாதைகளையும் திறந்து விடும் பயணம். தொழில் முனைவர் எல்லோருக்கும் பயணம் இப்படித்தான் இருக்கிறது.

“நான் ஒன்றும் வித்தியாசமானவள் அல்ல என்றுதான் நினைக்கிறேன். நான் தொழில் தொடங்கியதே எதிர்பாராமல் கிடைத்த ஒரு வாய்ப்புத்தான். மது வடிப்பு மாஸ்டராக வேண்டும் என்பதுதான் என் கனவு. மது உற்பத்தி நிறுவனத்தை நிர்வாகம் செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் இது நிறைவேறாது என்று 1978ல் எனக்கு தெரிந்து விட்டது. அடுத்து நமக்கு எது சாத்தியமோ அதைச் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதன்பிறகு எதிர்பாராத விதமாகத்தான் இந்த தொழிலை ஆரம்பித்தேன். இதுவும் பயோ டெக் சம்பத்தப்பட்ட தொழில் என்பதால்தான் இதற்கு ஓகே சொன்னேன். ஏனெனில் (எனது கனவான) மது வடிப்புத் தொழிலும் பயோ டெக் சம்பந்தப்பட்டதுதானே. பயோடெக் ஒரு உற்சாகமான துறை. அதற்கு முன்பு நான் தொழில் எதுவும் செய்ததில்லை. ஒரு புதிய தொழில் தொடங்குவது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் அது புதியதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு பயணம்தானே. புதியதைக் கண்டுபிடிக்க கிளம்பி விட்டேன்."
பயோகானில் பணிபுரியும் கிரண்

பயோகானில் பணிபுரியும் கிரண்


இப்படித்தான் அந்த முடிவை எடுத்தேன். தொழிற்சாலைக்கான நொதிகள் (Enzymes) தயார் செய்ய ஆரம்பித்தேன். அவற்றில் பெரும்பாலான நொதிகள் உண்மையில் மது தயாரிப்புக்கானவை, அது எனக்கு அறிமுகமானதுதான். புதிய தொழிலைத் தேர்வு செய்வதற்கான காரணமாகவும் அது அமைந்தது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் நான் இப்போதும் மது தயாரிப்பு வேலையோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பில்தான் இருக்கிறேன். ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒன்றோடுதான் எனது தொழில் இருந்தது. பெரும்பாலான தொழில்முனைவர் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அறிமுகமான, கொஞ்சம் புரிதலுடைய தொழிலைத்தான் தொடங்குகிறார்கள். அதைப் பற்றிய ஒரு சிறு விஷயமாவது தெரியாமல் ஒரு தொழிலைத் தொடங்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை. செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருப்பது முக்கியமானது. செய்யும் தொழில் பற்றி ஒரு நல்ல புரிதல் வேண்டும். எனது தொழில் ஒரு முன்னணி தொழில். அதில் நான் முன்னோடியாக இருந்தேன். காரணம் இதில் எனக்கு வழிகாட்டிகள் யாரும் இல்லை.(சிரிக்கிறார்). யாரும் எனக்கு வழிகாட்டவோ அல்லது என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லித்தரவோ இல்லை.

யுவர்ஸ்டோரி: இன்று நீங்கள் பலருக்கு உதாரணமாக இருக்கிறீர்கள். உங்களை முன்மாதிரியாக கொண்டு எவ்வாறு நாங்கள் வாழ்க்கையில் அர்த்தம் தரக்கூடிய செயலில் ஈடுபடவேண்டும்?

கிரண்: பின்னோக்கிப் பார்த்தால்., அது ஒரு வகையில் மிகவும் துணிச்சலானதுதான். ஏனெனில் அதில் இருந்து என்ன எனக்குக் கிடைக்கும் என்றெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. எல்லாமே சுலபமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதவர்கள், தைரியசாலிகள், சவாலை எதிர்கொள்பவர்கள்தான் உண்மையில் ஒரு தொழில்முனைவர். போராடுவதற்கு விரும்புகிறீர்கள், சவாலை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள், ஆனால் அதை விட முக்கியம், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் எனது நோக்கம் ஒரு மேலாளராக என்னை நிரூபிப்பதுதான். நீ ஒரு பெண், மது தயாரிப்புத் தொழிலில் உனக்கு வேலை தரமாட்டோம் என்றார்கள். ஒரு பெண்ணால் ஒரு தொழிலை, எந்தத் தொழிலை வேண்டுமானாலும் நடத்த முடியும் என்று காட்டுவதில் நான் தீர்மானமாக இருந்தேன்.

image


இதுதான் நான் மேற்கொண்ட சவால். எனது நோக்கம், நொதிகளை உருவாக்குவது. பயோ டெக்னாலஜி சார்ந்த ஒரு தொழிலை கட்டமைப்பது. ஒரு தொழில் முனைவராக நீங்கள் சவாலை விரும்ப வேண்டும். ஏதோ ஒன்று உங்களை இயக்க வேண்டும். அது ஒரு ஃப்லிப்கார்ட், ஒரு பயோகான் அல்லது ஒரு இன்ஃபோசிஸ் என்று ஏதோ ஒன்று உங்களை இயக்குகிறது. அதுதான் உங்களுக்கு ஒரு நோக்கத்தையும் சவால் மீதான ஆர்வத்தையும் கொடுக்கிறது.

"என்னைப் பொருத்தவரையில், யாரும் பயோ டெக்கை அடிப்படையாக வைத்து ஒரு தொழிலைத் தொடங்கவில்லை என்று நினைத்தேன். அதைச் சாத்தியமாக்கிக் காட்ட வேண்டும் என்பதுதான் எனது சவாலாக இருந்தது. பெண்களால் தொழில் தொடங்கி நடத்த முடியும் என்று காட்ட விரும்பினேன். இது பசுமை சார்ந்த தொழில், இது ஒரு புதிய கருத்தாக்கம். கெமிக்கல் தொழில்நுட்பத்திற்குப் பதிலாக என்சைம் தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் உலகைப் பசுமையாக்குவது எப்படி என்றும் சொல்வது. நான் எனது தொழிலைத் தொடங்கும் போது இதுதான் எனது நோக்கமாக இருந்தது."

இது இன்ஃபோசிஸ் தொடங்கியது போலத்தான். உண்மையில் அந்த நேரத்தில் ஒரு சாப்ட்வேர் சேவை நிறுவனம் ஒன்றை தொடங்குவதுதான் அவர்களின் நோக்கம். ஆனால் அவர்கள் ஒய்2கே சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது. “நாங்கள் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்பவில்லை. நாங்கள் முதல் தலைமுறை தொழில்முனைவர். இதில் இருந்து எங்களால் உண்மையில் ஒரு தொழிலை உருவாக்க முடியும்.” என்று அவர்கள் சொன்னார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம், ஒரு சவால் உள்ளது. நீங்கள் ஒரு தொழிலை கட்டமைக்க விரும்பினால், அது இயல்பாக ஒரு கண்டுபிடிப்புக்கான பயணமாகவே இருக்கிறது. அடிப்படையில் பிரச்சனைகளை எப்படிக் கையாள்வது என்று கற்றுக் கொள்கிறீர்கள். எப்படிப் பிரச்சனைகளைத் தீர்ப்பது என்று கற்றுக் கொள்கிறீர்கள், தொழில் தொடர்பான விவகாரங்களை எப்படிக் கையாள்வது என்று கற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் முதன் முதலாக தொழிலைத் தொடங்கும் போது இவை எல்லாமே உங்களுக்கு மிகுந்த அன்னியமானவைதான்.

பயோகான் அடிக்கல் நாட்டு பூஜை

பயோகான் அடிக்கல் நாட்டு பூஜை


யுவர் ஸ்டோரி: ஏதேனும் பெரிதாகச் செய்ய வேண்டும் என்று எப்போதும் விரும்பிக் கொண்டே இருக்கிறீர்களா?

கிரண்: ஆரம்பத்தில் நீங்கள் இப்படி எல்லாம் நினைக்க முடியாது. ஒருசிலர் அப்படி நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. நான் செய்வது வெற்றிகரமாக அமைய வேண்டும் என்றுதான் நினைத்தேன். எனக்கு தொழில் பின்னணி எதுவும் இல்லை. தொழில் பின்னணி கொண்ட பலர் இருக்கிறார்கள். ஒரு தொழிலைத் தொடங்குவது, நடத்துவது மற்றும் அதில் தனது பங்கைப் புரிந்து கொள்வதில் அவர்களில் இருந்து நான் வேறுபடுகிறேன். காரணம் நான் இதற்கு முற்றிலும் புதியவள். நானே மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. எனது சொந்தப் படிப்பை நானே உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. வேலைகளைப் பற்றிப் படிக்க வேண்டியிருந்தது.

யுவர் ஸ்டோரி: தனிமையாக உணர்கிறீர்களா?

கிரண்: இல்லை. சவாலின் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கும் வரையில் உங்களுக்குத் தனிமை உணர்வே ஏற்படாது. நீங்கள் இளைஞர். உங்களுக்குள் ஏராளமான ஆர்வம் இருக்கிறது. நிறைய செய்ய ஆசைப்படுகிறீர்கள். கடினமான பணிகளுக்கு தயாராக விரும்புகிறீர்கள். எனக்கு பயமில்லை. நான் எதையும் செய்ய தயாராகவே இருந்தேன். கம்பெனி ஆரம்பிக்கும் போது அந்த அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. இந்தியா முழுவதும் நான் பேருந்திலும், ரயிலிலும்தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. விமான டிக்கெட் வாங்க முடியவில்லை. எங்கே போக வேண்டுமானாலும் குறைந்த பட்ஜெட்டில்தான் போக வேண்டும். “நீ ஒரு தனி மனுஷி, பெண்,எல்லா பகுதிக்கும் தொழிற்சாலைகளுக்கும் நீயாகவே போய் வருகிறாய்” என்று எனது பெற்றோர் அப்போது கவலைப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. பஞ்சாப்பில் அகாலிதள் போன்ற பல பிரச்சனைகள் இருந்த கடினமான நேரம் அது. இருந்தாலும் நான் தனியாகப் போவதையே வழக்கமாக வைத்திருந்தேன். வழக்கமாக நான் பேருந்துகளில்தான் போவேன். எதைப் பற்றியும் கவலைப்பட்டது கிடையாது. எல்லா ஆண்களும் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் டிரைவர் என்மீது அக்கறை உடையவர். எங்க போறீங்க மேடம் என்று கேட்பார். நான் இறங்க வேண்டிய இடத்தைச் சொன்னதும் வாசலில் பேருந்தை நிறுத்தி இறங்குங்கள் என்பார். என்னிடம் பணம் இல்லை. ஆனால் அதைக் கடந்து வந்த பாதை வேடிக்கையானது.

தன் குடும்பத்துடன் கிரண்

தன் குடும்பத்துடன் கிரண்


யுவர்ஸ்டோரி: உங்களை பயமறியாதவராக வளர்த்ததில் உங்களின் பெற்றோர்களின் பங்கு என்ன?

கிரண்: எனக்குள் எனது பெற்றோரின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது. எனது தந்தை நவீன காலச் சிந்தனை உடையவர். அவர் மது தயாரிப்பு நிபுணர். எனவே அவர் தனது குழந்தைகளில் ஒருவர் மது தயாரிப்பு நிபுணராக வேண்டும் என்று விரும்பினார். என்னை அதைத் தேர்வு செய்யச் சொன்னார். எனக்கும் அது பிடித்திருந்தது. ஆனால் நான் பெண்ணாயிற்றே. ஆனால் அவர் சொன்னார், “நீ ஏன் அதைச் செய்யக் கூடாது. எல்லாவற்றுக்கும் மனசுதான் காரணம். நீ ஒரு சிறந்த மது தயாரிப்பு நிபுணராக முடியும்.” இப்படி நம்பிக்கையை வளர்த்தவர் அவர். நல்ல மதிப்பீடுகள் பலவற்றை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தார். “ஒவ்வொருவரிடமும் நல்ல அம்சங்கள் உண்டு. ஒரு நல்ல மேலாளர் தனக்குக் கீழே வேலை பார்க்கும் மனிதரிடம் உள்ள நல்ல அம்சங்களை வெளியே கொண்டு வர வேண்டும். நீ ஒரு மேலாளராக, நல்ல அம்சங்களை வெளியே கொண்டு வர வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார். நான் இதை ஒரு அறிவுரையாகவே எடுத்துக் கொண்டேன்.

பெற்றோருடன் கிரண்

பெற்றோருடன் கிரண்


அற மதிப்பீடுகள் பற்றி அவர் என்னிடம் வலியுறுத்தி வந்தார். “குறுக்கு வழியில் செல்வதில் அர்த்தமில்லை. ஒரு தொழிலை நல்ல விதமாகவும் செய்யலாம், கெட்டவிதமாகவும் செய்யலாம். ஆனால் என் மகள் நேர்மையான வழியில் தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனது குழந்தை நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்று அவர் அடிக்கடி சொல்வார்.

குழந்தையாக கிரண்

குழந்தையாக கிரண்


என் அம்மாவும், அப்பா போலத்தான். சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பார். நான் என்ன கேட்டாலும் செய்ய தயாராக இருந்தார். அப்பா இறந்ததற்குப் பிறகு, தனது எண்ணங்களை நல்லபடியாக பராமரிக்க, சொந்தமாகத் தொழில் ஒன்றைத் தொடங்கினார். (அவர் ஒரு போதும் எங்கும் வேலை பார்த்ததில்லை. வீட்டைத்தான் பராமரித்துக் கொண்டிருந்தார்). தனது 82வது வயதிலும் தனது சொந்தத் தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார். “அல்சைமர், டிமென்ஷியா போன்ற மறதி நோய்களெல்லாம், மூளையை எப்போதும் சுறு சுறுப்பாக வைத்திருக்காதவர்களுக்குத்தான் வரும். நான் என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்க விரும்புகிறேன். நான் ஒரு தொழிலை நடத்தினால், என் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்” என்று அம்மா ஒரு நாள் சொன்னார் (வாஞ்சையுடன் சிரிக்கிறார்)

(கிரணின் அம்மா ஜீவெஸ் என்ற பெயரில் ஒரு ஆட்டோமெட்டிக் லாண்டரி தொழிலை நடத்தி வருகிறார். அவரைப் பற்றிய கட்டுரையும் விரைவில் வர இருக்கிறது.)

யுவர் ஸ்டோரி: வெற்றிகரமான தொழில் முனைவர், ஒரு முன்மாதிரி, இதில் ஒரு பெண்ணாக உங்களது அனுபவம் எப்படி? வளர்ந்து வரும் பெண்களுக்கு, உங்கள் அனுபவத்தில் இருந்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கிரண்: மது தயாரிப்பு படிப்புக்கு ஆஸ்திரேலியா போன போது, அங்கு எனக்கு எல்லாமே நான்தான். என் வகுப்பில் நான் மட்டும்தான் பெண். அது எனக்கு மாற்றத்திற்கான நேரமாக இருந்தது. ஏனெனில் எனக்குத் தேவையானவற்றை நானேதான் செய்து கொள்ள வேண்டும் என்று அப்போது சட்டென்று உணர்ந்தேன். படிப்பில் நான்தான் வகுப்பில் முதல் மாணவி. இத்தனைக்கும் என்னோடு படித்தவர்கள் எல்லாம் மது தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வந்தவர்கள். மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள். ‘பெண்ணாக இருப்பது ஒன்றும் ஊனமுற்ற தன்மையோ வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையோ இல்லை’ என்று நினைத்தேன். உண்மையில் ஒரு பெண்ணாக இருந்தது எனக்குள் நம்பிக்கையை வளர்க்க உதவியாகத்தான் இருந்தது.

நான் பெண்களிடம் எப்போதும் “எல்லாவற்றிற்கும் உங்களது மனசுதான் காரணம், நீங்கள் பெண்ணாக இருப்பதால், ஒரு சிலவற்றை உங்களால் செய்ய முடியாது என நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? எதை நீங்கள் செய்ய முடியாது? சொல்லுங்களேன் பார்ப்போம்” என்றுதான் கேட்க விரும்புகிறேன்.

நீங்கள் பெண்கள்., அதனால் உங்களுக்குப் பிரச்சனைகள் உள்ளன என்று நீங்களே நினைக்கும் படியாக உங்களைச் சுற்றும் விமர்சனங்களைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாது. இதுதான் நீங்கள் முதலில் கற்க வேண்டியது. நான் இதை எளிதாகக் கற்றுக் கொண்டு விட்டேன். நான் தொழில் நுட்பத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவள் என்று கண்டு பிடித்தேன். இதுவே எனக்கு ஏராளமான நம்பிக்கையைக் கொடுத்தது. மது தயாரிப்பு தொழிலுக்குப் போகும் போது, அந்தத் தொழில் சார்ந்த நிபுணர்களுடன் பழகும் போது, அவர்களது மொழியில் நான் பேச வேண்டும். அவர்களோடு என்னால் நன்கு பேச முடிந்தது. அவர்களைக் காட்டிலும் எனக்கு அந்தத் துறையில் அதிகம் விஷயம் தெரியும் என்பதால் அந்த உரையாடலில் எனது பேச்சுத்தான் பெரும்பாலான நேரங்களில் தூக்கலாக இருக்கும். நான் எனது பலத்தை நம்பி வேலை செய்தேன். உங்களது பலத்தை நம்பி வேலை செய்யுங்கள். அதனால் வரும் பலனை அனுபவியுங்கள்.

“நீங்கள் பெண்கள், பாவம் என்று உங்களை யாராவது நினைத்தால் என்ன… உங்களுக்கு உதவி செய்வார்கள்… அதை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று நான் அடிக்கடி சொல்வேன் (சிரிக்கிறார்). உங்களுக்கு அது தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் எடுத்துக் கொள்ளுங்கள். அரசு அலுவலங்களில் உள்ள அத்தனை சலுகைகளையும் பெற்றுக் கொள்வதை நான் வழக்கமாகவே வைத்திருந்தேன். உரிமங்கள் பெறுவதற்காக நான் அங்கு செல்வேன். எனக்கு நினைவிருக்கிறது, ஒருமுறை ஒரு உயர் அதிகாரியிடம், இங்கே என்னை மிரட்டுவது போல உணர்கிறேன் என்றேன். அவர் ஏன் என்று கேட்டார். நான் உங்களுக்காக வெளியே காத்திருக்கும் போது, சில தரகர்கள் வந்து, என்னிடம் இந்த அனுமதியைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கடவுளே எனக்கு பயமாக இருக்கிறது. அப்படி நான் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பிறகு எப்படித்தான் நான் தொழில் செய்வது என்று தெரியவில்லை” என்றேன். அந்த அதிகாரி உடனே, இல்லை.. இல்லை.. நீங்கள் யாரையும் நம்ப வேண்டாம். லஞ்சம் கொடுக்க வேண்டாம்.” என்றார். நான், அப்படி என்றால் மகிழ்ச்சி என்றேன். அதற்கு அவர், “இனிமேல் என்னைப் பார்க்க வந்தால் வெளியே காத்திருக்க வேண்டாம். என் அறையிலேயே உட்கார்ந்திருங்கள். உங்களை யாரையும் ஏமாற்ற விடாதீர்கள். யாருக்கும் ஒருபோதும் நீங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை” என்றார்

அரசு அலுவலகங்களுக்கு நல்ல பக்கங்களும் உண்டு. அங்கு நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அதைப் பார்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஒவ்வாருவரும் மோசம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அப்படி எல்லாம் இல்லை. பெரும்பாலான அரசு ஊழியர்கள் நல்லவர்கள், உதவக் கூடியவர்கள் என்று என்னால் சொல்ல முடியும். இப்போது கூட எனக்கு நினைவிருக்கிறது, எனக்கு அனுமதி கிடைத்த போது, அந்த அதிகாரி எனக்கு, “வாழ்த்துக்கள், உங்களது நிறுவன உரிமத்திற்கு அனுமதி அளித்திருக்கிறோம்” என்று தந்தி அனுப்பியிருந்தார்.

image


இது போலத்தான் பெங்களூரிலும். தொழிற்துறை செயலாளர் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். அங்கு நிறையப் பேர் காத்திருப்பார்கள். ஆனால் என்னை மட்டும் முதலில் உட்காரச் சொல்வார்கள். காரணம் நான் மட்டும்தான் பெண். பெண் என்பதால் கிடைக்கும் மகத்தான சலுகை அது. நாம் கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டும்.

நான் ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை. எனது சகல திறமைகளையும் பயன்படுத்த வேண்டும். சக ஆண் நண்பர்கள் என்னிடம், ‘உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது’ என்பார்கள். இது ‘நியாயமே இல்லை. நீங்கள் லஞ்சமே கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் கொடுக்கிறோம்’ என்பார்கள். ஒரு முறை, ஒரு நபரைக் குறிப்பிட்டு ‘இவரா, இவர் மோசமானவர். நான் சவால் விடுகிறேன். அவருக்கு லஞ்சம் கொடுக்காமல் முடியுமா என்று நான் பார்த்து விடுகிறேன். குறைந்த பட்சம் 10 சதவீதமாகவது கேட்பார். கொடுக்கவில்லை என்றால் உங்களால் செக் வாங்க முடியாது’ என்று ஒருவர் சொன்னார். நான் எதையுமே செய்யாமல் அந்த நபரிடம் செக்கை வாங்கி வந்து விட்டேன். உடனே அவர், ‘இது நியாயமே இல்லை. உங்களுக்கு மட்டும் எப்படி செக்கை கொடுத்தார். எங்களுக்கு அப்படித் தருவதில்லையே’ என்றார். ‘நான் பெண் என்பதால் என்னிடம் லஞ்சம் கேட்க அவருக்கு தைரியமில்லை’ என்று சொன்னேன். ‘ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், எந்த வேலையாக இருந்தாலும் நானே நேரடியாகச் செல்கிறேன். ஆனால் நீங்களெல்லாம் உங்கள் பியூனை அனுப்புவீர்கள் அல்லது கிளார்க்குகள் அல்லது உதவியாளர்களை அனுப்புவீர்கள். வேலை நடக்கிறது சரிதான். அதனால் அவர்களிடம் பணம் கேட்கிறார்கள். ஆனால் நீங்களே சென்றால், யார் உங்களிடம் பணம் கேட்கப் போகிறார்கள். எனக்கு நானே கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் இது. அதை உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை நீங்களே செய்யுங்கள்.’

அப்பா ஒரு விஷயத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அரசாங்கத்திடமிருந்து நீ எதையாவது கேட்கிறாய் என்றால் அது உன் சொந்த சுயநலத்திற்காக இருக்கக் கூடாது. பதிலாக ஒட்டுமொத்த உன் துறைக்கே பயனுடையதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதை நான் கடைப்பிடிக்கிறேன். இப்போது நான் அரசு அலுவலகத்திற்கு - அது மாநில அரசோ மத்திய அரசோ - சென்று பேசும் போது, பயோகான் உங்களுக்கு அவசியம் என்று பேச மாட்டேன். பயோகானுக்கு உங்கள் தேவை அவசியம் என்பேன். ஒரு வேளை பயோகான் உங்களுக்குத் தேவை இல்லாமல் கூடப் போகலாம். ஆனால் இந்தத் தொழில் வளர வேண்டும் என்று பேசுவேன். ஏனெனில் நான் இந்தத் தொழில் வளர்ச்சியடைய வேண்டும் என விரும்புகிறேன்.

பிறர் வளர்ச்சிக்காக சிந்தியுங்கள்.. உங்கள் அபாரமான வளர்ச்சியைப் பாருங்கள்

image


இப்போது, முதலாளித்துவத்துக்கு ஆதரவான பிரதமர் நரேந்திரமோடியின் நடவடிக்கைகளில் நான் பங்களிக்கிறேன். நான் நிறையப் பார்த்திருக்கிறேன். அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவில் சந்தேகம். நான் மிக மோசமானவற்றைப் பார்த்து வருகிறேன். ஒரு சில இலவசங்களுக்காக தொழில்துறையினர் அரசின் மீது ஊழல் கறை படிய விடாப்பிடியாக முயற்சிக்கின்றனர். இது தவறு. பொதுவாக உங்களது தொழில் துறையின் வளர்ச்கிக்காக நீங்கள் முழுமையாக செயல்பட்டால், அதன் மூலம் உங்களுக்குக் கிடைப்பது கிடைக்கும். விடுங்களேன். உங்களுக்கு மட்டுமல்ல. மற்றவர்களும் உங்களைப் போல பலன் அடையட்டும். நிறையப் பேர் கிரண் ஒரு முட்டாள். தொழில் எப்படி நடக்கிறது என்று அவளுக்குத் தெரியாது என்று நினைக்கிறார்கள். அவை மதிப்புகளுக்கு முக்கியம் தந்து நான் வளர்ந்த விதம். உங்களுக்காக மட்டுமல்ல ஒவ்வொருவருக்காகவும் கேட்டுப்பாருங்கள். அதன்பிறகு அது ஏற்படுத்தும் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags