பதிப்புகளில்

பணிபுரியும் தனிநபர்களுக்கு நேருக்கு நேர் கடன் தரும் தொழில்முனைவு நிறுவனம்!

17 கோடி ரூபாய் கடன் புத்தகத்துடன் மத்திய வருவாய் பிரிவினருக்கு கடன் வழங்க தொடங்கப்பட்டுள்ளது 'OpenTap' நிறுவனம்!

Induja Raghunathan
17th Nov 2016
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க, மாற்று நிதியுதவி செய்யும் தொழில்முனைவு நிறுவனம் ‘ஓபன் டாப்’ (OpenTap), சென்னையில் தங்களது நிறுவனத்தின் தொடகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர்களிடம் 17 கோடி ரூபாய்கான கடன் புத்தகம் கையில் உள்ளதாகவும், அதை நாட்டில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் கடனாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் ‘OpenTap’ இணை நிறுவனர் செந்தில் நடராஜன் தெரிவித்தார். மேலும் தங்களின் செயல் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக, திருச்சி ராக்சிட்டி பின்லீஸ் லிமிடெட் என்ற கடனளிக்கும் நிறுவனத்துடன் கைக்கோர்த்து, கூட்டுவகிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார். 

image


பொதுவாக இந்தியாவை பொறுத்தவரை, பணிபுரிபவர்கள் கடன் வாங்க தங்களின் ஊழியர்கள், வங்கிகள், வட்டிக்கடைகள் மற்றும் கடனளிக்கும் நபர்களை அணுகுகின்றனர். ஆனால் வங்கிகளில் ஒருவர் கடன் பெற, பல ஆவணங்களை தந்து நீண்டகால காத்திருப்புக்கு பின்னரே கடன் கிடைக்கும் நிலை உள்ளது. அதுவும் பலசமயங்களில் வங்கிகளால் மறுக்கப்படுவதும் உண்டு. அதேபோல் வெளிநபர்கள் மற்றும் வட்டிக்கடைகளில் வாங்கும் கடனுக்கு ஈடாக, பொருள் அல்லது சொத்தை வைத்தே கடன் வாங்கமுடியும், அதுவும் அதிக வட்டிவிகிதத்தில் என்றார். ஒருவருக்கு அவசர காலத்திற்கு கடன் தேவைப்பட்டால் உடனே அதை பெற சரியான வழியோ, நிறுவனமோ இல்லாததன் அவசியத்தை உணர்ந்தே ‘OpenTap’ நிறுவனம் நிறுவ முடிவு செய்தோம் என்றார் செந்தில் நடராஜன். 

“கடன் பெற நினைப்போர், எங்களின் சுலபமான படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து தாங்கள் பணிபுரியும் நிறுவனம் மூலம் எங்களிடம் விண்ணப்பித்தால், அவரின் அடையாள சான்றுகள், வருமான விகிதம், கடன் பெறும் காரணம் என்று அனைத்தையும் பரிசீலித்து 72 மணி நேரத்தில் கடனை வீட்டுவாசலுக்கே சென்று அளித்துவிடுவோம்,” என்றார். 

வங்கிகளில் இருந்து கடன் பெற தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களே எங்களின் இலக்கு என்று அவர் தெரிவித்தார். சென்னை, பெங்களுரு, நாசிக் போன்ற நகரங்களில் தற்போது தங்களின் பணிகளை தொடங்கியுள்ள இவர்கள், பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடன் உதவி செய்யும் இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளனர். 

“சுமார் 200 மில்லியன் இந்தியர்கள் கடன் உதவி பெற சரியான இடமில்லாமல் தவிப்பதாக எங்கள் கணக்கெடுப்பில் தெரியவந்தது. அதனால் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் கடன் உதவி அளித்தால், வட்டியை அவர்களின் சம்பளத்தில் கழித்து அதை எங்களிடம் நிறுவனம் அளித்துவிடும் முறை இருதரப்பினருக்கும் சாதகமான ஒன்றாக இருக்கும்,” என்றார். 

ஒரு வருட காலத்துக்கு ரூ.50,000 வரை கடன் எல்லையை நிர்ணயித்துள்ளனர் இவர்கள். கடனை பெற ஊழியர்கள் தங்களின் வருமான சான்றிதழ் மட்டும் அளித்தால் போதுமானதாகும் என்றும் அதற்கு மாற்று ஈடுகள் எதுவும் கேட்பதில்லை என்றார். பணபரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைனில் நடைபெறும் என்றும், திரும்ப வசூலிக்க முறையான வழிகள் மட்டுமே தாங்கள் பின்பற்றுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பெரிய தயாரிப்பு மையங்கள் என்று பலரும் தங்கள் பணியாளர்களுக்கு ஓபன் டாப், கடன் வழங்கி உதவவேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்தார் செந்தில். தற்போதைக்கு பணிபுரியும் வர்கத்தை மட்டும் தங்கள் வாடிக்கையாளர்களாக கொள்ள விரும்பும் இவர்கள், வருங்காலத்தில் ஓரளவு ஸ்திரமான தொழில்முனைவர்களுக்கும் கடனளித்து உதவ யோசிப்போம் என்றார். 

OpenTap இணை நிறுவனர் செந்தில் நடராஜன்

OpenTap இணை நிறுவனர் செந்தில் நடராஜன்


கூட்டு நிதி தளம் மூலம் தங்களின் பணத்தை கடனாக பிறருக்கு அளிக்க முன்வருவோரையும் ஓபன் டாப் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டு, தங்களின் கடன் புத்தக தொகையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். 

“2021ஆம் ஆண்டு முடிவிற்குள் இந்திய ரூபாய் 5000 கோடி அளவிற்கு அதிகரிக்கச் செய்து அதிகமானோர்க்கு கடனளித்து உதவுவதே எங்களின் லட்சியம் ,” என்றார் செந்தில். 

கடந்த ஓர் ஆண்டாக தங்களது நிறுவனத்தை கட்டமைத்து வந்துள்ள ஓபன் டாப், கோவை, புனே, அகமதாபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா என பல ஊர்களுக்கு தங்களின் சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் பிறந்த ஓபன் டாப்பின் இணை நிறுவனரான செந்தில் நடராஜன், வால் ஸ்ட்ரீட், பார்க்லேஸ் வங்கி மற்றும் ஜேபி.மார்கன் உள்ளிட்ட பிரபல சர்வதேச நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் நிதி மேலாண்மை பிரிவுகளில் பணிபுரிந்து 22 ஆண்டுகள் அனுபவமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags