பதிப்புகளில்

8 செயலிகள், சமூக தேடல் பொறி உருவாக்கி இந்தியாவின் பில் கேட்ஸ் ஆக முற்படும் இளைஞர்!

22nd Mar 2018
Add to
Shares
324
Comments
Share This
Add to
Shares
324
Comments
Share

பொதுவாக பதின் பருவத்தினர் ஒரு வேலையை செய்யாமல் இருப்பதற்கு பல்வேறு காரணம் கூறுவார்கள். வேலையை தள்ளிப்போடுவார்கள். அவ்வாறு இல்லாமல் கடினமான நேரங்களில் மனமுடைந்து போகாமல் செயல்படும் 15 வயதான அபிக்கின் அணுகுமுறையே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தின் ஒரு சிறிய நகரான சல்சாவைச் சேர்ந்தவர் அபிக். ஊட்லாபாரியில் உள்ள டான் பாஸ்கோ ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளியில் ஒரு சராசரி மாணவனாகவே இருந்தார். 2011-ம் ஆண்டு முதல் முறையாக கம்யூட்டருக்கு அறிமுகமானபோது அவரது வாழ்க்கை முழுமையாக மாறிப்போனது.

image


பெரு நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே பெரிதாக சாதிக்கமுடியும் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால் அபிக் செயலிகளை உருவாக்கும் பணியையும் சொந்த தேடல் பொறியை உருவாக்கும் பணியையும் அவரது சிறிய நகரில் இருந்தே துவங்கினார்.

இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம்

அபிக்கின் அம்மா ஷெஃபாலி சாஹா பள்ளி ஆசிரியை. அவரது அப்பா அலோக் சாஹா ஒட்டு பலகை வர்த்தகர். அபிக் தொழில்நுட்பப் பிரியர். இவருக்கு 11 வயதில் இருந்தே ப்ரோக்ராமிங்கில் ஆர்வம் இருந்து வருகிறது. இணையதள வடிவமைப்பின் கோட்பாடுகள் குறித்த முதல் வகுப்பிற்கு சென்ற பிறகு விரைவிலேயே கோடிங் உலகினுள் நுழைந்தார்.

புதிய பாடத்தில் அதீத ஆர்வம் இருக்கும்போதும் அந்த வருடம் அவரது வகுப்பிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் தோல்வியடைந்த ஒரே மாணவர் இவர்தான். நம்பிக்கை இழந்தாலும் மனமுடைந்து போகாமல் அந்த பாடத்தை மேலும் கடினமாக உழைத்து கற்றுக்கொள்ள தீர்மானித்தார். 

”நான் அடுத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வை மிகச்சிறப்பாக எழுதினேன். இது எனக்கு ஊக்கமளித்தது,” என்றார்.
image


ப்ரோக்ராமிங்கில் கவனம் குறைந்து இணையதள வடிவமைப்பில் ஆர்வம் ஏற்பட்டது. “இணையதள பக்கத்தை வடிவமைப்பதற்கு நான் எடுத்துக்கொண்ட முயற்சியைப் பார்த்து என் ஆசிரியர் என்னை பாராட்டினார். அதே சமயம் நான் ப்ரோக்ராமிங் கற்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். என்னைப் பொருத்தவரை C++ மற்றும் இதர நிரலாக்க மொழிகள் (programming languages) சலீப்பூட்டவதாகும். ஆனால் தொடர்ந்து நடந்தவை இன்னும் எனக்கு ஆச்சரியமூட்டுகிறது.”

ப்ரோக்ராமிங் குறித்த அவரது புரிதல் மோசமாகவே இருந்ததால் அபிக் அந்த பாடத்தை கற்பதை நிறுத்திவிடலாம் என்று கூட யோசித்துள்ளார். ஒரு மென்பொருள் டெவலப்பரை சந்தித்தபோதுதான் அவரது எண்ணம் மாறியது. அந்த டெவலப்பர் ப்ரோக்ராமிங்கின் முக்கியத்துவத்தையும் சாத்தியக்கூறுகளையும் விவரித்தார். அத்துடன் விஷுவல் ஸ்டூடியோவை அறிமுகப்படுத்தினார். இது மென்பொருள் உருவாக்குவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கச் சூழலாகும் (IDE).

"ப்ரோக்ராமிங்கை தீவிரமாக கற்கத் துவங்கினேன். கோடிங் திறனை மேம்படுத்திக்கொண்டேன். தர்க்கரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டேன். இந்த திசையில்தான் பயணிக்கவேண்டும் என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.”

அபிக் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது பகுதியைச் சேர்ந்த நண்பர்களின் உதவியுடன் ‘அர்னாபிக் கார்ப்’ (Arnabhik Corp) என்கிற வலைதளம் உருவாக்கும் நிறுவனத்தை நிறுவினார். அப்போது அவரது வயது 13. இந்நிறுவனம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றபோதும் நல்ல வருவாய் ஈட்டித் தந்தது. சர்வதேச வாடிக்கையாளர்களிடம் இருந்து ப்ராஜெக்டுகள் வந்தது. இதனால் 30-க்கும் அதிகமான வலைதளங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

”நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டதால் நான் தொடர்ந்து செயல்பட தீர்மானித்தேன்,” என்றார்.

அடுத்தகட்ட வளர்ச்சி

2014-ம் ஆண்டு அபிக் நிறுவிய வலைதளம் உருவாக்கும் நிறுவனம் கோடிங் செய்ய இரண்டு கம்யூட்டர்களை வாங்க உதவியது. அத்துடன் முதல் சர்வரையும் ப்ராட்பாண்ட் இணைப்பையும் வாங்கினார். இதுதான் அபிக் தனது திறன்களை வெளிப்படுத்த ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

முதலில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளைப் பார்த்து அடிப்படை மென்பொருள் பயன்பாடுகளை உருவாக்கத் துவங்கினார். அத்துடன் ஆராய்ந்து பிரச்சனைகளுக்கு தீர்வுகளை உருவாக்கினார். பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார். தனது பள்ளியில் இருந்த கம்ப்யூட்டர்களை பாதுகாக்க வைரஸ் எதிர்ப்பிற்காக ‘Seren’ உருவாக்கினார். 2015-ம் ஆண்டு அவரது பிறந்தநாளின் போது அபிக்கின் அப்பா அவருக்கு ஒரு ஸ்மார்ட்ஃபோன் பரிசளித்தார். இது அவருக்கு அடுத்த மைல்கல்லாக அமைந்தது. 

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தியதில் எதிர்காலத்தில் செயலிகள்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது என்பதை புரிந்துகொண்டு ஆண்ட்ராய்டுக்கான செயலி உருவாக்குவதை கற்கத் துவங்கினார்.

சுயமாக பயிற்சி செய்த பிறகும் பல மணி நேரம் ஆராய்ச்சி செய்து புதிய யோசனைகளை தீவிரமாக ஆராய்ந்த பிறகும் அபிக் தனது முதல் 2D விளையாட்டு செயலியான ’Birdingo’ உருவாக்கினார். அதன் பிறகு அடுத்தடுத்து ஐந்து செயலிகளை உருவாக்கினார். அவை Math++, Abcd planet ஆகிய இரண்டு கல்வி செயலிகள், கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் அல்லது நிரல்மொழி உருவாக்குதல் குறித்த இலவச வீடியோ பயிற்சியளிக்கும் i-Learn என்கிற கற்றல் செயலி, 3D Task 24 என்கிற 3D விளையாட்டு செயலி, இலவல ஹோஸ்டிங் வலைதளத்தை மக்கள் எளிதாக பெற உதவும் செயலியான Arnabhik Website Builder ஆகியவை ஆகும்.

அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டும் வெற்றிகரமாக இருந்தது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி ’க்ரீன்கல்சர்’ (GreenCulture) என்கிற விவசாய செயலியை அறிமுகப்படுத்தினார். 

இந்தச் செயலி பயிர், நிலங்கள், சிறப்பான விவசாய நுட்பங்கள் ஆகியவை குறித்த சமீபத்திய தகவல்களை விவசாயிகளுக்கு அளித்து நிகழ் நேர அடிப்படையில் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க உதவும். 

இறுதியாக ’Reming God’ என்கிற ஞாபகமூட்டும் செயலியை உருவாக்கினார். வருங்காலத்திற்கு திட்டமிடப்பட்டதை நினைவூட்ட உதவும் இந்த செயலி 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் சொந்த சமூக தேடல் பொறி

2016-ம் ஆண்டு தனது செயலிகளை அறிமுகப்படுத்திய பிறகு அபிக் Lino என்கிற தனது சொந்த ப்ரோக்ராமிங் நிரல்மொழியை உருவாக்கத் துவங்கினார். “தொழில்நுட்பத்தை உருவாக்க பல்வேறு நிரல்மொழிகளை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஒன்றுபட்ட நிரல்மொழியை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டேன். இணையதளத்தின் கட்டமைப்பை புரிந்துகொள்ள முற்பட்டபோது என்னுடைய ஆராய்ச்சியில் பல தடங்கல்கள் ஏற்பட்டது.”

தரமான உள்ளடக்கம் இல்லாதது பிரச்சனை அல்ல. ஸ்பேம், போலியான தளங்கள், மால்வேர், தொடர்பற்ற உள்ளடக்கம், ஊடுருவும் பாப் அப் விளம்பரங்கள் போன்றவையே அவரது ஆராய்ச்சியின் வேகத்தை குறைத்தது. குறிப்புச் சொல்லைக் கொண்டு தேடும் போது தேடு பொறியின் முதல் பக்கத்தில் தொடர்பற்ற தகவல்களைக் கொண்ட தளங்களே இடம்பெற்றது.

இணையதளத்திற்காக டெவலப்பர்கள் உருவாக்கியதை மாற்றுவதற்கு முன்பு இணையதளத்தில் இருந்து பயனர்கள் எதை எதிர்பார்க்கிறார் என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதை அபிக் உணர்ந்தார். இதற்காக இவர் அறிமுகப்படுத்தியது தான் Origgon. இந்த தேடல் பொறி SEO விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னணி தளங்களை பட்டியலிட்டது. 

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தேர்வு செய்த முன்னணி தேடல்களே இதில் பட்டியலிடப்படும்.
image


வெற்றிகரமாக லினோ உருவாக்கிய பிறகே தேடல் பொறியை அறிமுகப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. இதற்கான பணியைத் துவங்கியபோது எனக்கு நிதித் தேவை எழுந்தது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு ஏஞ்சல் முதலீட்டாளரை முகநூல் வாயிலாக சந்தித்தேன். இவர் 21 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். இது இந்த ப்ராஜெக்ட் வணிகமாக மாற உதவியது,” என்றார் அபிக்.

”வலைதளங்களின் தொகுப்பை ஒவ்வொன்றாக பட்டியலிடவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். மற்ற தேடு பொறிகளிலிருந்து தகவல்களை சேகரித்து அதில் தேவையற்ற தளங்களை நீக்கிவிட்டு சிறந்த தளங்கள் மட்டுமே பட்டியலிடப்படவேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் சர்வரை பயன்படுத்துகையில் உங்களது அடையாளமோ அல்லது உங்களது ஐபி முகவரியோ கண்காணிக்கப்படாது,” என்றார். 

அதன் பிறகு தேர்வுகளை முடித்ததும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அபிக் மும்பைக்கு மாற்றலானார். ஆகஸ்ட் மாதம் ஆரிகான் (Origgon) என்கிற தேடல் பொறியை அறிமுகப்படுத்தினார். முறையாக பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் சமூக தேடல் பொறியாகும்.

பசியுடன் இருப்போருக்கு உணவளிக்கும் முயற்சி

மக்களின் உண்மையான கருத்துக்களைப் பயன்படுத்தி வலைதளங்களை தரவரிசைப்படுத்த விருப்பக் குறியீடுகள், பின்னூட்டம், பகிர்தல் போன்ற சின்னச் சின்ன விஷயங்களையும் Origgon ஆராய்கிறது. கவனிக்கப்படாத இந்தத் தகவல்கள் மதிப்பு சேர்க்கும். உண்மையான உள்ளடக்கத்தை வலைதளத்திற்கு கொண்டு வரும். இந்த செயல்முறையில் முறையற்ற தொகுப்புகளால் தொலைந்து போன எண்ணற்ற சிறந்த தளங்களை கண்டறியமுடியும். அத்துடன் தனிப்பட்ட மதிப்புரைகளுடம் கிடைக்கும். இது நமது தீர்மானங்களை எளிதாக்குகிறது.

Origgon உருவாக்கும் நம்பிக்கை காரணி முக்கியமானதாகும். அபிக் விவரிக்கையில், 

“மக்கள் பார்க்கும் உள்ளடக்கம் ஏற்கெனவே ஒருவர் பார்த்து விருப்பக் குறீயிடு வழங்கிய அல்லது பகிர்ந்துகொண்ட அல்லது பின்னூட்டம் இடப்பட்ட உள்ளடக்கம் என்பதால் அவை நம்பகத்தன்மையுடன் இருப்பதை நாங்கள் உதவுகிறோம்." 

"பிங் (Bing) மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக முற்றிலும் வெளிப்படையாக செயல்படுகிறோம். ஒவ்வொரு தேடலின் முடிவிலும் உலகளவிலும் சமூக ஊடக வட்டத்திலும் அதற்கான விருப்பக்குறியீடுகள், பின்னூட்டங்கள், பகிர்வுகள் போன்றவற்றை தெளிவாக பார்க்கலாம். நீங்களும் விருப்பக் குறியீட்டையோ அல்லது பின்னூட்டங்களையோ பதிவு செய்யலாம் என்பதால் இந்த தேடல் பொறியானது சமூக ஊடகங்களுக்கு இணையான சூழலை ஏற்படுத்துகிறது," என்றார்.

Origgon பலன்கள் இன்னும் நீள்கிறது. இந்த தேடல் பொறியை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் பயனர்களுக்கு உகந்த தேடல்கள் உங்களுக்கு கிடைப்பதுடன் பசியோடு இருப்போருக்கு உணவளிக்கவேண்டும் என்கிற அபிக்கின் நோக்கத்திற்கும் நீங்கள் உதவுகிறீர்கள். இந்த முயற்சி அக்டோபர் மாதம் 3-ம் தேதி துவங்கப்பட்டது. 

ஒவ்வொரு 5,000 தேடல்களுக்கும் இந்நிறுவனம் அரசு சாரா நிறுவனங்களின் மதிய உணவிற்கு 10 கிலோ கோதுமை மாவு தானமாக வழங்குகிறது. எனவே ஆரிகான் வாயிலான உங்களது ஒவ்வொரு 50 தேடல்களுக்கும் ஒரு ஏழையின் வயிறு நிறைகிறது.

இன்று Origgon குழுவில் மூன்று நபர்கள் மட்டுமே உள்ளனர். தேடல் பொறியின் அடுத்த நிலையை உருவாக்கும் பணிக்காக நிபுணர்களை பணியிலமர்த்த நிதி உயர்த்த திட்டமிட்டு வருகின்றனர். அபிக் கூறுகையில், ”தளங்கள் உருவாகும் விதத்தையும் பயன்படுத்தப்படும் விதத்தையும் மாற்றுவதே என் நோக்கமாகும். இதன் மூலம் உங்களையும் என்னையும் போன்ற நபர்களின் மதிப்பீடுகளையும் கொண்ட ஒரு அனுபவமாக மாற்ற விரும்புகிறேன்.

இதை சாத்தியப்படுத்த எங்களது வணிகத்தை பெரியளவில் மக்களிடையே எடுத்துச் சென்று எங்களது மார்கெட்டிங் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தி ஆரிகானை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். இதற்காக 7 மில்லியன் அமெரிக்க டாலர் நிதித் தேவை உள்ளது. எனவே ஒரு இந்திய தேடல் பொறியை உலகளவில் சிறந்த தேடல் பொறியாக உருவாக்க ஏஞ்சல் முதலீட்டாளர்களின் உதவி தேவைப்படுகிறது.

Origgon மூலம் குறைந்த பட்சமாக ஒரு மில்லியன் தேடல்கள், ஒவ்வொரு திரையிலும் நீல நிறத்துடன் காணப்படும் 10 இணைப்புகள் போன்றவற்றை உருவாக்கியதைத் தாண்டி இந்த இளம் தொழில்முனைவோர் இந்தியாவின் பில் கேட்ஸ் ஆகி தனது ஸ்டார்ட் அப் வாயிலாக சமூக நலனில் பங்களிக்க விரும்புகிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : சானியா ராசா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
324
Comments
Share This
Add to
Shares
324
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக