குறைந்த முதலீட்டில் துவங்கக் கூடிய, சுற்றுச் சூழலுக்கு நட்பான 10 வர்த்தகங்கள்!

நீடித்த வளர்ச்சி வாய்ப்பு கொண்ட வர்த்தகங்கள் வெறும் லாபத்தை மட்டும் அளிப்பவை அல்ல, சுற்றுச் சூழலுக்கும் நட்பான இந்த வர்த்தக வாய்ப்புகள் இதோ...

10th Oct 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

அதிக அளவிலான மாசு, இயற்கை வளங்களை அளவில்லாமல் பயன்படுத்துவது மற்றும் பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகள் நம்முடைய சுற்றுச்சூழலை மெல்ல சீரழித்து வருகிறது.

தொழில்

இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, நீடித்த வளர்ச்சி நோக்கில்லாத வர்த்தகங்கள் மற்றும் தொழில் முறையாகும். ஆறுகளில் தீங்கான கழிவுகளை கலக்க அனுமதிப்பது அல்லது கழிவுகளை சரியான முறையில் மறுசுழற்சி செய்யாதது என நீண்ட காலமாக நாம் தவறான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். 


இருப்பினும், ஆர்வம் உள்ள தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், பல விதங்களில் பசுமை முயற்சிகளை பின்பற்றலாம், மறுசுழற்சி பொருட்களைப் பயன்படுத்தி எரிசக்தியை சேமிக்கலாம். நீடித்த வளர்ச்சி முறை சார்ந்த வர்த்தகங்கள் லாபத்தை மட்டும் அளிப்பதில்லை. நல்ல விதமான சுற்றுச்சூழல் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பயனாளிகளும் அதிக விலை கொடுக்கத்தயாராக உள்ளனர்.


குறைந்த விலையில் நீங்கள் துவங்கக் கூடிய சுற்றுச்சூழலுக்கு நட்பான வர்த்தக ஐடியாக்களை இங்கே பட்டியலிட்டுள்ளது:


ஆர்கானிக் ஸ்டோர்

ஆரோக்கியமான வாழ்க்கை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், ஆர்கானிக் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆர்கானிக் சங்கிலித்தொடர் கடைகள் மற்றும் தனிநபர் நலன் கடைகள் இருந்தாலும், இவற்றில் இன்னும் இடம் இருக்கவே செய்கிறது. ஒரு ஆர்கானிக் உற்பத்தியாளராக நீங்கள் அழகுக் கலை பொருட்கள், ஸ்னேக்ஸ், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம்.


நீங்கள் செய்ய வேண்டியவை: தேவையான அனுமதி மற்றும் உரிமங்களை பெற்று, கொஞ்சம் நிதி திரட்டி, பொருத்தமான இடம் தேர்வு செய்து (ரூ.10,000 ரூ.1 லட்சம் வரை வாடகைக்கும் எடுக்கலாம்) அதை நிர்வகிக்க ஊழியர்களை அமர்த்திக்கொள்ளலாம்.


கழிவு மறுசுழற்சி

சுழற்சி பொருளாதாரம் எனும் கருத்தாக்கம் இந்தியாவுக்கு புதிது என்றாலும், இது பிரபலமாகி வருகிறது. கழிவுகளை அகற்றும் அதே வேளையில், அவற்றை மறுசுழற்சி செய்ய புதுமையான வழிகளை நாடுவதாக இது அமைகிறது. இதுவே கழிவு மறுசுழற்சி வர்த்தகமாக அமைகிறது.


ஆனால் நீங்கள் துவங்குவதற்கு முன், மறுசுழற்சி செய்ய வேண்டிய பொருளை கண்டறிய சந்தை ஆய்வு செய்வது நல்லது. அலுமினியம் ஸ்கேர்ப்பில் துவங்கி, பாட்டரிகள், ஜவுளி, காகிதம் என எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.


உலக அளவில், இரண்டாவதாக அதிகம் மறுசுழற்சி செய்யப்படும் உலோகமான அலுமியம் நல்ல தேர்வாக இருக்கும். துத்தநாகம், லித்தியம் அயர்ன் மற்றும் ஈயம் ஆகியவை இருப்பதால் பேட்டரிகளும் நல்ல வாய்ப்பு தான். காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் பல கிரேட்கள் இருப்பதால், மறுசுழற்சி செய்து பலவிதங்களில் பயன்படுத்தலாம். கட்டுமான கழிவுகளும் பலவிதங்களில் இருக்கின்றன.


நீங்கள் தேர்வு செய்யும் வாய்ப்புக்கு ஏற்ப இருப்பிடம் போன்றவற்றை தீர்மானித்து செயல்பட வேண்டும்.

தொழில்

பிளாஸ்டிக்கில் இருந்து ஆடைகள்

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் (சிபிசிபி) 2017ல் வெளியிட்ட அறிக்கைபடி, இந்தியாவில் தினமும் 25,940 டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகிறது. தனிநபர் ஒருவருக்கு, சராசரியாக 11 கிலோ பிளாஸ்டிக் பயன்பாடாக இது அமைகிறது.  


பாட்டில்கள், பைகள், சாஷேக்கள் என ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருட்கள் இதற்கு முக்கியக் காரணம். இவற்றில் பெரும்பாலானவை உயிரி நோக்கில் மக்காதவை என்றாலும் மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை. பிளாஸ்டிக் பாட்டில்களை உடைத்து தூளாக்கி, இழையாக்கலாம். இந்த இழைகளை ஜவுளியாக்கலாம். இந்த துணிகள் மீது இயற்கை வண்ணம் பூசலாம்.


இந்த வகை வர்த்தகத்திற்கு, நிலம், இயந்திரம் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான முதலீடு மட்டும் தேவை.


பர்னீச்சர்கள்

உங்களுக்கு வடிவமைப்பில் நாட்டம் இருந்தால், அப்சைக்கிள் பர்னீச்சர்களில் கவனம் செலுத்தலாம். ஏலம் போன்றவற்றில் பழைய பர்னீச்சர்களை வாங்கி, அவற்றை மாற்றி அமைத்து நவீனமாக்குவது தான் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.


அப்சைக்கிள் பர்னீச்சர்களுக்கான சந்தை பெரிது. இவற்றை சிலர் பழங்காலப் பொருட்கள் என பார்த்தாலும், மற்றவர்கள் நல்ல விலையில் கிடைக்கும் சிறந்த வடிவமைப்பு மிக்கவையாக கருதலாம்.


இந்த வர்த்தகத்தை நிறுவுவதற்கான செலவு குறைவு தான். மூலப்பொருட்களை வாங்கி, பணியிடம் அமைத்து, வடிவமைப்பாளர்கள், தச்சர்கள் மற்றும் விற்பனையாளர்களை நியமித்துக் கொள்ள வேண்டும்.


பயன்படுத்திய புத்தகங்கள்

காகித உற்பத்தி, விவசாய விரிவாக்கம் மற்றும் மர பயன்பாட்டிற்காக ஆண்டுதோறும் 3.5 பில்லியன் மரங்கள் வெட்டப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்புக் கழகம் தெரிவிக்கிறது.


காகித உற்பத்தியின் போது, நிறைய ஆற்றல் மற்றும் பசுமை போர்வை இழப்பு உண்டாகிறது என்றாலும், புதிய புத்தகங்களை வாங்குவதை விட பழைய புத்தகங்களை பயன்படுத்துவதே நீடித்த வழியாக இருக்கும். பயன்படுத்திய பொருட்களை விற்பது நல்ல வர்த்தக வாய்ப்பாக அமையும். இளம் தலைமுறையை கவர டிஜிட்டல் மேடையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


உயிரி எரிபொருள்

இந்தியாவில் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு அதிகமாக இருக்கிறது. உலகில் மூன்றாவது அதிகமாக படிம எரிபொருள் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்கிறது.


படிம எரிபொருளுக்கு மாற்றாக உயிரி எரிபொருள் அமையும். இவற்றை தாவிரங்கள் மற்றும் விலங்கு கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படலாம். ஒரு இடத்தை தேர்வு செய்து வர்த்தகம் செய்யலாம்.


உயிரி எரிபொருள் தயாரிக்க, மெத்தனால், காட்டாமணக்கு எண்ணெய், டிஸ்டில்டு வாட்டர், ஹைட்ரோ மீட்டர், எடை இயந்திரம், கோனிகல் பிளாஸ்க், வர்த்தக மற்றும் வெடிபொருள் உரிமம் உள்ளிட்டவை தேவை.


மின்னணு பொருட்கள்

செல்போன், லேப்டாப், மற்றும் டிவிகள் பழுதானவுடன் மாற்றப்படுகின்றன. எனினும், இவற்றை பழுது பார்த்து புதுப்பித்து பயன்படுத்தலாம்.


இந்த பழைய பொருட்களை குடியிருப்புகள் மற்றும் உள்ளூர் கிடங்குகளில் இருந்து சேகரிக்கலாம். பின்னர் இவற்றை உரியவர்கள் கொண்டு பழுது பார்க்கலாம். புதுப்பிக்கப்பட்ட பொருட்களை நேரடியாக அல்லது ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம். எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறி விற்பனை செய்யலாம்.

தொழில்

எரிசக்தி ஆடிட்டிங்

நிறுவனத்தில் எரிசக்தி பயன்பாடு தொடர்பான ஆய்வு எனர்ஜி ஆடிட்டிங்காக அறியப்படுகிறது. இதன் மூலம் எரிசக்தி விணாவதை தடுக்கும் வழிகளை கண்டறியலாம்.


எரிசக்தி பயன்பாட்டை சீரமைக்க வல்லுனர்கள் உதவி தேவை. எனவே, நிறுவனங்கள் இதற்கான நபர்களை ஒப்பந்தம் செய்கின்றன. இத்தகைய தேவை உள்ள துறைகளை கண்டறிந்து அதை பூர்த்தி செய்து பலன் பெறலாம்.


சுற்றுச்சூழல் நட்பு பொம்மைகள்

பெரும்பாலான பொம்மைகள் பிளாஸ்டிக்கால் செய்யபப்டுகின்றன மற்றும் நச்சுத்தன்மை மிக்கவை. இந்த பொம்மைகளை பயன்படுத்திய பின் தூக்கி வீசும் போது அவை சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.


இவற்றுக்கு மாற்றாக, மரம், மூங்கில், மறுசுழற்சி பொருட்களில் பொம்மைகள் செய்யலாம். இவை சுற்றுச்சூழலுக்கு நட்பானவை. நீங்கள் இத்தகைய பொம்மைகளை வாங்கி அல்லது உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.  


சோலார் பேனல்கள்

மறுசுழற்சி எரிசக்தி சந்தையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோலார் பேனல்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இத்தகைய தேவையை ஆய்வு மூலம் அறிந்து சோலார் பேனல்கள் அமைத்துக்கொடுக்கலாம்.


மின்சார பணிகள், கட்டுமானம் மற்றும் சோலார் மின்சக்தியில் திறன் மிக்க ஆட்கள் தேவை. விநியோகிஸ்தர்கள், அலுவலக இடம், டெலிவரி வாகனங்கள், உரிமங்களை பராமரிக்கும் அமைப்பு ஆகியவை இருந்தால் இந்த வர்த்தகத்தை திறம்பட மேற்கொள்ளலாம்.


நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கும் போது பேனல்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம்.


ஆங்கில கட்டுரையாளர்: ரோஷினி பாலாஜி | தமிழில் :சைபர்சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India