Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

இம்முறை 78 பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கும் நிலையில், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பத்து முகங்கள்.

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Wednesday May 29, 2019 , 5 min Read

நடந்து முடிந்த தேர்தலில், 78 பெண் சட்டமன்ற உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பியிருக்கிறது இந்தியா. சோனியா காந்தி, மேனகா காந்தி ஆகிய அனுபவசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், ஹேமா மாலினி போன்ற நட்சத்திரங்களும் இம்முறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். அடுத்த ஐந்து வருடங்களுக்கு, நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரபர்த்தி போன்ற புது முகங்களும் சட்டங்கள் இயற்றும் செயல்பாட்டில் பங்கு கொள்வார்கள்.

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான முகங்களின் பட்டியல் இதோ:  

politicians

ரம்யா ஹரிதாஸ், கனிமொழி கருணாநிதி, சுமலதா, அபரஜிதா சாரங்கி, அகதா கே சங்மா

ரம்யா ஹரிதால், ஆலத்தூர், கேரளா, காங்கிரஸ்

‘ஆலத்தூரின் தங்கை’ என்று அழைக்கப்படும், 32 வயதான ரம்யா ஹரிதால், 3.2 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் பெற்று, இடது ஜனநாயக முன்ணணியின் பி.கே.பிஜூவை 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். ரம்யா, கேரளாவின் இரண்டாவது தலித் பெண் பாராளுமன்ற உறுப்பினர். 1971 ஆம் ஆண்டு அடூரில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பார்கவி தங்கப்பன் தான் கேரளாவின் முதல் தலித் பெண் பாராளுமன்ற உறுப்பினர்.

தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒருவரின் மகளாக வளர்ந்த கதையையும், ‘இந்திரா ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் கிடைத்த வீட்டில் வளர்ந்த கதையையும் மக்களிடம் பகிர்ந்த ரம்யா, அவர்களின் இதயத்தை வென்றார். ‘நின்னே காணான் எனெக்காலும் சந்தம் தோணும் குஞ்சிப்பெண்ணே’ என்ற பாடலையும் தன்னுடைய பிரச்சாரத்தின் போது பாடி மக்கள் மனதை கவர்ந்திருக்கிறார்.

கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி, தமிழ்நாடு, திமுக

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள், திமுகவின் கனிமொழி தூத்துக்குடியில் 5.6 லட்சம் வாக்குகள் பெற்று, பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜனை 3.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். கனிமொழி, திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் தலைவர். இவர் தேசிய பத்திரிக்கை ஊழியர்கள் சங்கத்தின் முதல் பெண் தலைவரும் ஆவார் .

கவிஞரும், பத்திரிக்கையாளருமான கனிமொழி; பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கை சமூக மக்களுக்கு முன்னேற்றத் திட்டங்கள் பல வகுத்திருக்கிறார். மேலும், தமிழக கிராமங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திமுக எடுக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதும் கனிமொழி தான்.

சுமலதா, மண்டியா, கர்நாடகா, சுயேட்சை ( பாஜக ஆதரவு)

நடிகரும் சுயேட்சை வேட்பாளருமான சுமலதா; மண்டியாவில், ஏழு லட்சம் வாக்குகளுக்கு மேல் வென்று ஜனதாதலை சேர்ந்த நிகில் குமாரசுவாமியை 1.2 லட்சம் வாக்கு விகிதத்தில் வீழ்த்தினார். பாஜகவின் ஆதரவோடு வெற்றி பெற்ற சுமலதா, வெற்றிக்கு பிறகு பாஜகவோடு இணைவாரா மாட்டாரா என்பது குறித்த செய்தி இன்னும் வெளியாகவில்லை.

1979 ஆம் ஆண்டு, தன்னுடைய பதினைந்து வயதில் ‘திசை மாறிய பறவைகள்’ எனும் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார் சுமலதா. இதற்காக சிறந்த புதுமுகம் என்றும் பாராட்டப்பட்டார். நடிகரும் அரசியல்வாதியுமான அம்பாரீஷோடு திருமண பந்தத்தில் இருந்தார். 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தான் இவர் அரசியலில் நுழைகிறார்.

அபரஜிதா சாரங்கி, புபனேஷ்வர், ஒடிசா - பாஜக

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அபரஜிதா; புபனேஷ்வரில் 4.8 லட்சம் வாக்குகள் வென்று, 238,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜு ஜனதாதல் கட்சியின் அருப் மோஹன் பட்நாயக்கை வீழ்த்தியிருக்கிறார். இவர், 25 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ்-ஆக சேவை செய்த பிறகு, 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

தனக்கு ஒரு ’பெரிய தளம்’ வேண்டும் என நினைத்ததால் தான் அரசியலில் இறங்க முடிவு செய்தததாக The Printக்கு அளித்த பேட்டியில் அபரஜிதா தெரிவித்திருக்கிறார். மேலும் இவர், புபனேஷ்வரின் ஊரக முன்னேற்ற அமைச்சகத்தில் இணைச் செயலாளராக 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார்.

அகதா கே சங்மா, துரா, மேகாலயா – தேசிய மக்கள் கட்சி

அகதா சங்மா, மூன்று லட்சம் வாக்குகள் வென்று, காங்கிரஸின் முகுல் சங்மாவை 64,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இவர், தேசிய மக்கள் கட்சியை நிறுவிய பி ஏ சங்மாவின் மகள்.

2009 ஆம் ஆண்டு,15 ஆவது மக்களவையில் இடம் பெறும் இளம் மத்திய அமைச்சர் ஆனார் அப்போது 29 வயதாகியிருந்த அகதா கே சங்மா. மாநில ஊரக முன்னேற்ற அமைச்சர் பதவியில் சில காலம் இருந்த அவர், பிறகு, 2012 அக்டோபரில் அமைச்சரவை மாற்றியமைத்த போது பதவி விலகினார். வழக்கறிஞரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான அகதா ஒரு புகைப்படக் கலைஞரும் கூட.

woman politicians

ஜோதிமணி சென்னிமலை,ப்ரினீத் கௌர்,பூணம் மகாஜன்,மஹுவா மொய்த்ரா,சுப்ரியா சுலே


இதையும் படிங்க: முதன்முறை எம்.பி. ஆன மகிழ்ச்சி: நாடாளுமன்றம் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம் நடிகைகள்!


ஜோதிமணி சென்னிமலை, கரூர், தமிழ்நாடு – காங்கிரஸ்

காங்கிரஸின் ஜோதிமணி, 6.9 லட்சம் வாக்குகள் வென்று நான்கு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவின் தம்பிதுறையை 4.2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இவர் அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 43 வயதான ஜோதிமணி, 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார்.

ஆனால், இரண்டு முறையுமே அதிமுக வேட்பாளர் இடம் தோற்றார். 1996 ஆம் ஆண்டு, தன்னுடைய 22 ஆவது வயதில் க.பரமத்தி பஞ்சாயத்து ஒன்றியத்தின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ஜோதிமணி, 1996 தொடங்கி 2006 வரை அப்பதவி வகித்தார். மேலும், இவர், தலித் மக்கள் தொகை நிரம்பியிருக்கும் பகுதிக்கு தண்ணீர் வசதி உருவாக்கிக் கொடுத்த அனுபவம் பற்றியும், தன்னுடைய பின்புலம், பயணம் பற்றியும் ’நீர் தொடங்கும் முன்’ என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

பிரினீத் கௌர், பட்டியாலா, பஞ்சாப், காங்கிரஸ்

காங்கிரஸ் வேட்பாளரான ‘மஹாராணி’ பிரினீத் கௌர் (அப்படித்தான் உள்ளூரில் அழைக்கப்படுகிறார்) பட்டியாலாவில் 5.3 லட்சம் வாக்குகள் வென்று, ஷிரோமணி அகாலி தல் கட்சியின் சுர்ஜித் சிங் ரக்ராவை 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

ப்ரினீத் கௌர் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மனைவியும், பட்டியாலா அரச வம்சத்தை சேர்ந்தவரும் ஆவார். 1999 ஆம் ஆண்டு, 13வது மக்களவை போட்டியிட்ட இவர், அதில் வென்று, 2014 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசியலுக்கு வரும் முன், இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் தன்னார்வலராக இருந்தார். மேலும், மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கு ‘சஞ்சிவனி’ எனும் அமைப்பை பட்டியாலாவில் தொடங்கி நடத்தினார்.

பூணம் மஹாஜன், வட-மத்திய மும்பை, மஹாராஷ்டிரா, பாஜக

மறைந்த ப்ரமோத் மஹாஜனின் மகளான பாஜகவின் பூணம் மஹாஜன், வட-மத்திய மும்பையில் 4.8 லட்சம் வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் ப்ரியா தத்தை 1.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

பூணம் மஹாஜன், 2016 ஆம் ஆண்டு முதலேயே, பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா எனும் பாஜகவின் இளைஞரணி தலைவராக இயங்கி வருகிறார். இவர் மஹாராஷ்டிர மாநில விலங்குகள் நல ஆணையத்தின் தலைவரும் கூட. இந்தியாவில், சுகாதாரத்தை முன்னிறுத்த இயங்கிவரும், ஸ்வச்சாலை (Swachhalay) எனும் அரசு சாரா அமைப்பையும் நடத்தி வருகிறார்.

மஹுவா மொய்த்ரா, கிருஷ்ணநகர், மேற்கு வங்காளம் – திரிணாமுல் காங்கிரஸ்

வங்கி ஊழியராக இருந்து அரசியல்வாதியான திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா கிருஷ்ணானகரில் 6.1 லட்சம் வாக்குகள் பெற்று, எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கல்யாண் சௌபேவை 632,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2008 ஆம் ஆண்டு லண்டனில் இருக்கும் ஜே பி மோர்கனில் தான் வகித்து வந்த துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த மஹுவா மொய்த்ரா, அரசியலில் இணைந்தார். முதலில் காங்கிரஸ் வழியே அரசியலில் நுழைந்தாலும், 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இணைவதாக முடிவு செய்தார். 2016 மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மஹுவா, 16,000 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

சுப்ரியா சுலே, பாராமதி, மஹாராஷ்டிரா – நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி

நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான ஷரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே, 6.8 லட்சம் வாக்குகள் வென்று, எதிர்த்து போட்டியிட்ட கஞ்சன் ராகுல் கூலை 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

சுப்ரியா சுலே, 2011 ஆம் ஆண்டு பெண் சிசுக்கொலைக்கு எதிராக ஒரு மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும், 2012 ஆம் ஆண்டு, அவரின் வழிகாட்டுதலுக்கு கீழ், நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி , இளம் பெண்கள் பெண் மைய சிக்கல்களை தீர்க்க ‘நேஷனலிஸ்ட் யுவதி காங்கிரஸ்’ எனும் கட்சி தொடங்கப்பட்டது. மேலும் சுப்ரியா பெண் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகளை பாராட்ட ‘ஆல் லேடிஸ் லீக்’ (All Ladies League) அமைப்பின் விருதையும் பெற்றிருக்கிறார்.

அதிகளவு பெண்கள் 17வது மக்களவைக்கு தேர்வாகியிருக்கும் நேரத்தில், இம்முறை அரசு பெண்-மைய பிரச்சினைகளை வலுவாக கையாளும் எனும் நம்பிக்கை உண்டாகி இருக்கிறது. வருகின்ற ஐந்து ஆண்டுகளில், தேர்வாகியிருக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய பெண்களின் குரலை ஒரு பெரிய மேடையில் எதிரொலித்து, உண்மையான மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று நம்புவோம்.

ஆங்கில கட்டுரையாளர் : சாஷா ஆர் | தமிழில் : ஸ்னேஹா