84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் 100 வயது பிரேசில் தாத்தா!
84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ள 100 வயது பிரேசில் முதியவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
மனித மனம் எப்படி ஒரு இடத்தில் நிலையாக இருக்காதோ அதைப் போலத் தான் சிலர் எந்த நிறுவனத்திலும் சேர்ந்தார் போல பணியாற்ற மாட்டார்கள். ஒரு வேலையை விட்டு மற்றொரு வேலைக்குச் செல்ல காரணங்கள் புதிது புதிதாக வரும், அதில் பிரதானமானது அதிக சம்பளம்.
யதார்த்தம் இப்படி இருக்க 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்திருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த 100 வயது தாத்தா.
ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள்
பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வால்டர் ஆர்ட்மன் என்பவர் தன்னுடைய 26வது வயதில் பணியில் சேர்ந்துள்ளார். கடைமட்ட ஊழியராக சேர்ந்த வால்டர், படிப்படியாக முன்னேறி விற்பனை மேலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளையும் பணியின் முதல் நாள் என்ற உற்சாகத்துடன் பணியாற்றி வந்திருக்கிறார் இவர்.
இதனையடுத்து, 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றியுள்ள வால்டரின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது உலக மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இப்போது அவருக்கு 100 வயது ஆகிறது. குறையாத உற்சாகத்துடன் இன்றும் பணிக்கு வந்து செல்கிறார் வால்டர். அவருக்கு சக ஊழியர்கள் வாழ்த்துகளை தெரிவித்திருப்பதோடு, அவரை மிகவும் மரியாதையுடனும் நடத்துகின்றனர்.
தொழில் ரகசியம்
“அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் வெற்றி நிச்சயம்,” “பணியை விரும்பி செய்தால் ஒரே நிறுவனத்தில் நீடிக்க முடியும்” என்கிறார் வால்டர். “நான் பயிற்சி செய்கிறேன்,” அதுவே என்னுடைய ரகசியம். “நீங்கள் உங்களுடைய பணியை விரும்பிச் செய்ய வேண்டும், என்கிறார்.
நான் ஆர்வத்துடனும், போராடத் தயங்காத உத்வேகத்துடனும் பணியாற்றினேன். கடமைக்கே என்று செய்தால் எந்த வேலையும் நீடிக்காது, உங்களால் அந்தப் பணியில் நீண்ட நாட்கள் இருக்க முடியாது என்றும் வால்டர் செய்தித்தாள்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
ஆரோக்கியம்
வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமானவரல்ல, உடல் ஆரோக்கியத்திலும் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறார் வால்டர். வயிற்றுக்கு ஒவ்வாத உப்பு, சர்க்கரை கலந்த உணவை அவர் உட்கொள்வதில்லை. மேலும், தினசரி உடற்பயிற்சி செய்வதிலும் வால்டர் தவறுவதில்லையாம்.
உடலையும், உள்ளத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்தால் எட்ட நினைக்கும் இலட்சியம் எட்டிப் போகாது என்று செயலில் நிரூபித்திருக்கிறார் இந்த பிரேசில் தாத்தா.