113 வயதிலும் வீதிவீதியாகச் சென்று மிட்டாய் விற்கும் தஞ்சை தாத்தா!

113 வயதிலும் சாலைகளில் பல கிலோமீட்டர் தொலை அலைந்து, மிட்டாய் விற்று, ஓயாத உழைப்புக்கு உதாரணமாக விளங்கும் தஞ்சை மிட்டாய் தாத்தா!

10th Oct 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

உழைப்பவர்களுக்கு மட்டுமே உண்ணும் உரிமை உண்டு என்றார் தேசப் பிதா காந்தியடிகள். ஆனால் இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் மனித உழைப்பு குறைந்துவிட்டது. இதுவே பெருகிவரும் பல்வேறுவிதமான நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வையில் நனைந்து உழைப்பவன் நோய்நொடியின்றி இறுதி வரை ஆரோக்கியமாக வாழ்கிறான்.


ஆனால் ஏசியில் அமர்ந்து நோகாமல் வேலை பார்க்கும் இன்றைய இளைஞர்களுக்கு 30 வயதை தாண்டியதும் பிபி, சுகர் என ஊரில் உள்ள அனைத்து நோய்களும் வந்துவிடுகிறது. இன்னும் சிலரோ தனது படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை வேண்டும் என சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு உழைக்காமல் பொழுதை போக்கி வருகின்றனர்.


உழைப்பின் அருமையை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாய், தனது, 113 வயதிலும் சாலைகளில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு அலைந்து, மிட்டாய் விற்று, அதில்வரும் சொற்ப வருமானத்தில் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகிறார் தஞ்சை பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் மிட்டாய் தாத்தா.

thatha

தஞ்சாவூர் மாவட்டம் ஆடக்காரத் தெருவில் வசித்து வரும் இந்த மிட்டாய் தாத்தாவின் உண்மையான பெயர் அபுசாலி. பர்மாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த 63 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருகிறார். தேங்காய் மிட்டாய், இஞ்சி மிட்டாய், குளுக்கோஸ் மிட்டாய்களைத் தயாரித்து வீதிவீதியாக காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை விற்று வருகிறார். நாள் முழுவதும் அலைந்து திரிந்து விற்றாலும் இவருக்கு கிடைப்பதென்னவோ நூறு அல்லது நூற்றிருபது ரூபாய்தான். ஆனால் இந்த வருமானத்தைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக அவர் கூறுகிறார்.

இந்த வயதிலும் தன்னால் இவ்வாறு அலைந்து திரிந்து மிட்டாய் விற்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நல்ல உழைப்பொன்றே என்கிறார் இவர்.

இதுகுறித்து அவர் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பர்மாவில் மளிகைக் கடை நடத்தி வந்தேன். மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. திடீரென எங்கள் நல்வாழ்க்கையில் இடி விழுந்ததுபோல, அங்கு நடைபெற்ற போரில் என் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.


இதில் மனம் உடைந்த நான் நடைப்பிணமானேன். இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறி கப்பல் மூலம் தமிழ்நாடு வந்தேன். இங்கு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் சிறிதுகாலம் டீக்கடைகளில் பணியாற்றினேன். பின்பு தஞ்சாவூருக்கு வந்தேன்.

இங்குள்ள மக்கள் மிகுந்த அன்பானவர்கள். இங்கு எனக்குக் கிடைத்த ஓர் நண்பர் மிட்டாய் செய்யும் தொழிலை எனக்கு கற்றுக் கொடுத்தார். கடந்த 63 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழும் நான் 20 ஆண்டுகளாக இந்த மிட்டாய் தொழிலைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார்.
தாத்தா

குழந்தைகளிடம் விற்பனை செய்யும் மிட்டாய் தாத்தா | பட உதவி - தினமலர்

50 வயதில் பர்மாவை விட்டு வெளியேறியவர் தற்போது பத்துக்கு பத்து அறையில் 400 ரூபாய் வாடகையில் வசித்து வருகிறார். இவரது இருப்பிடம், தொழிலகம் எல்லாமே இதுதான். அதிகாலையிலேயே எழுந்திருக்கும் இவர் மிட்டாய்களை தயாரிக்கும் பணியில் பிசியாகி விடுகிறார். வயோதிகம் காரணமாக இவரால் தேங்காய் மிட்டாய்க்கு தேய்காய்களை பூவாக திருக முடியாத காரணத்தால் அருகில் இருக்கும் பெண்கள் இவருக்குத் தேங்காய் திருகி கொடுக்கின்றனர். அதையும் இவர் இலவசமாக பெற்றுக் கொள்ளாமல் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்கி விடுகிறார்.


தயாரித்த மிட்டாய்களை மூங்கில் தட்டில் அடுக்கி, சாலைகளில் மிட்டாய் மிட்டாய் என கூவிக்கூவி விற்கும் இந்த மிட்டாய் தாத்தாவின் குரலைக் கேட்டதும் குழந்தைகள் ஓடிவந்து மிட்டாய்களை வாங்கிச் செல்கின்றனர்.


எனது வருமானத்துக்காக மட்டுமன்றி, குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும்தான் இந்த மிட்டாய் தொழிலை செய்து வருவதாகக் கூறும் இவர்,

தனது மிட்டாயின் மருந்துக் குணங்களையும் எடுத்துரைக்கிறார். இஞ்சி மற்றும் தேங்காய் மிட்டாய் உடலுக்கு ஆரோக்கியமானது, வயிற்றுப் புண்களை ஆற்றும் வல்லமையுடையது. குளுக்கோஸ் மிட்டாய் குழந்தைகளுக்கு நன்கு சக்தியளிக்கக்கூடியது என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, யாரிடமும் கையேந்தாமல் என் சொந்த காலில் நின்று உழைத்து உண்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பொய், திருட்டு போன்ற தீய குணங்களின்றி செய்யும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்கிறார். மேலும், இளைஞர்கள் வாழ்க்கையில் தீய பழக்கங்களை ஓழித்து, நன்கு உழைத்தால் நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியமாக வாழலாம் என இளைஞர் சமூகத்துக்கு அறிவுரையும் கூறுகிறார்.


113 வயதிலும் இவ்வாறு வீதிவீதியாக சென்று கடினமாக உழைத்து வரும் மிட்டாய் தாத்தாவின் பேட்டியை ஊடகங்களில் பார்த்த தஞ்சை மாவட்ட ஆட்சியர், அப்பகுதி வட்டாட்சியர் மூலம் விசாரணை நடத்தி, அபுசாலிம் தாத்தாவுக்கு மாதம் ரூ. 1000க்கான முதியோர் உதவித் தொகைக்கு உத்தரவிட்டு, உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சிறிது நாளில் குடும்ப அட்டைக்கும் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் கூறிச் சென்றுள்ளனர்.

தாத்தா1

மிட்டாய் தாத்தாவுக்கு முதியோர் உதவித்தொகை

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் இப்போதுதான் எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வித்த என் வாழ்க்கையில் இப்போதுதான் இனிமையான ஓர் நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. இருப்பினும் எனது இறுதி மூச்சு உள்ளவரை இந்த மிட்டாய் தொழிலை விடாமல் செய்வேன் என உறுதியோடு தெரிவிக்கிறார் குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த இந்த மிட்டாய் தாத்தா.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India