பதிப்புகளில்

’வலியை வென்ற சாதனை’- இந்தியாவின் புதிய தங்க மங்கை ஸ்வப்னாவின் ஊக்கமிகு கதை!

ஏழ்மையான ரிக்‌ஷா இழுப்பவரின் மகள், இரு கால்களிலும் ஆறு விரல்கள், சரியாக பொருந்தாது ஷூ, பல் வலியால் தாடையில் வீக்கம் என பல சவால்களை தாண்டி தங்கத்தை வென்ற ஸ்வப்னா!

cyber simman
30th Aug 2018
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

’வலி தற்காலிகமானது. ஆனால் கீர்த்தி என்பது நிலையானது’. 

யோகேஷ் தாஹியா என்பவர் டிவிட்டரில் தெரிவித்திருந்த இந்த கருத்து, இந்தியாவின் புதிய தங்க மங்கையாக உருவெடுத்துள்ள ஸ்வப்னா பர்மன் சாதனை சிறப்பை கச்சிதமாக உணர்த்துகிறது. உண்மை தான் ஸ்வப்னா வலியை வென்று நிலைத்து நிற்க கூடிய புகழ் பெற்றிருக்கிறார்.

வலியை வென்ற தங்க மங்கை ஸ்ப்னா 

வலியை வென்ற தங்க மங்கை ஸ்ப்னா 


இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வீராங்கனை, ஹெப்டத்லான் விளையாட்டில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றிருக்கிறார். ஹெப்டத்லான் என்பது ஓட்டப்பந்தையம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பலபிரிவுகளை கொண்ட கடினமான விளையாட்டு.

இந்த விளையாட்டில் தான் ஸ்வப்னா தங்கம் வென்றிருக்கிறார். அதுவும் எப்படி தெரியுமா? 

பாதங்களில் உண்டான தாங்க முடியாத வலியை பொறுத்துக்கொண்டு தங்கம் வென்றிருக்கிறார். இதை சாதனை மேல் சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

ஸ்வப்னாவின் சாதனையை புரிந்து கொள்ள வேண்டும் எனில், கால் விரல்கள் இறுக்கமான ஷூவுக்குள் சிக்கி இருக்கும் நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் விரல்கள் வலிக்க நடக்கவே கஷ்டமாக இருக்கும் அல்லவா? அப்படியொரு நிலையில் தான் ஸ்வப்னா இந்த பல் விளையாட்டு பிரிவில் முதலில் வந்து அசத்தியிருக்கிறார்.

ஸ்வப்னாவுக்கு இரண்டு கால் பாதங்களிலும் ஆறு விரல்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எந்த ஷூவை அணிந்து கொண்டாலும், விரல்கள் இறுக்கப்பட்டு அவருக்கு வலி ஏற்படும். ஆசிய போட்டியிலும் இந்த நிலையில் தான் பங்கேற்று சாதித்திருக்கிறார்.

வலியையும், வேதனையையும் வென்று சாதித்த மகிழ்ச்சியை தான் ஸ்வப்னா தனது டிவிட்டர் பக்கத்தில், 

“வலி தான் சிறந்த ஊக்க சக்தி. ஆசிய விளையாட்டு போட்டி 2018 ல் எனது தாய்நாட்டிற்காக வரலாற்று சிறப்பு மிக்க ஹெப்டத்லான் தங்கத்தை வென்றது குறித்து பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி,” என குறிப்பிட்டிருந்தார். 

கண்ணில் நீர் வர வைக்க கூடிய இந்த டிவீட் தான் கிட்டத்தட்ட 10,000 முறை லைக் செய்யப்பட்டு, 3 ஆயிரம் முறை ரிடீவிட் செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் ஸ்வபனாவின் சாதனை குறித்து தங்கள் கருத்துக்களை வாழ்த்துகளாக பதிவு செய்துள்ளனர். அதில் ஒன்று தான் மேலே பார்த்த டிவீட்.

வலியையும், வரம்புகளையும் வென்ற தனது செயல்பாடு மூலம் ஸ்வப்னா டிவிட்டரை தெறிக்க விட்டிருக்கிறார். நெட்டிசன்கள் முதல் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் வரை பலரும் அவரது சாதனையை பாராட்டியுள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்ய வர்தன் ரத்தோர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மிக பொருத்தமாக, அவரது பெயர் என்பது சூப்பர் வுமன் என்பது போல ஒலிக்கிறது என டேபயன் சென் என்பவர் குறிப்பிட்டிருந்தார்.

பல டிவிட்கள் அவரது ஏழ்மையான பின்னணி மற்றும் போட்டியின் போது அவர் எதிர்கொண்ட வேதனையான சூழலை தெரிவிக்கின்றன. ஸ்வப்னா ஹெப்டத்லான் போட்டியில் பங்கேற்ற நிலை பற்றி தெரிந்து கொள்ளும் போது அவரது சாதனை இன்னும் வியப்பளிக்கிறது.

பெருமித தருணம் 

பெருமித தருணம் 


ஸ்வப்னா, மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ரிக்‌ஷா இழுப்பவரின் மகள். குடும்பத்தின் வறுமையான சூழலை மீறி அவர் விளையாட்டுத் துறையில் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் அவர் 5942 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றாலும், அதன் பிறகு லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் இதைவிட 500 புள்ளிகள் குறைவாக பெற்று சொதப்பினார்.

பயிற்சியாளர் துணையோடு இந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்தவர் ஆசிய போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தனது அபிமான விளையாட்டான உயரம் தாண்டுதலில் பயிற்சி பெறுவதை நிறுத்திவிட்டு மற்ற விளையாட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தி தயாரானார்.

ஆனால் சோதனையாக ஆசிய போட்டி துவங்குவதற்கு முன் அவருக்கு பல் வலி உண்டானது. பல்லை அகற்ற போதிய நேரம் இல்லை என்பதால் அவர் வலி நிவாரணி எடுத்துக்கொண்டு சமாளித்தார். ஹெப்டத்லான் போட்டியின் போது அவரது தாடை வீங்கி நிலைமை மோசமானது. ஏற்கனவே 12 விரல்கள் பிரச்சனையால் அவதிப்பட்டவர் இந்த வலியையும் பொறுத்துக்கொண்டு தான் களமிறங்கி கலக்கியிருக்கிறார்.

இந்த மகிழ்ச்சியை தான் அவர் டிவிட்டரில் ’வலி தான் மிகப்பெரிய உந்துசக்தி’ என குறிப்பிட்டு நெகிழ வைத்துள்ளார்.

12 விரல்கள் இருப்பதால், ஆரம்பத்தில் இருந்தே வலியோடு பயிற்சி செய்து வருவதாகவும் அவர் ஸ்கிரோல் இதழுக்கான பேட்டியில் கூறியுள்ளார். வழக்கமான ஷூவை அணிந்து பயிற்சி செய்வது மிகுந்த அசெளகர்யமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்வப்னாவின் கால்களுக்கு ஏற்ற பிரத்யேக ஷுக்களை வடிவமைத்து பெற உள்ளூரில் முயற்சி செய்ததாகவும் ஆனால் அவற்றின் தரம் திருப்தி அளிக்கவில்லை என அவரது பயிற்சியாளர் சுபாஷ் சர்கார் கூறியுள்ளார். இந்த கோரிக்கையை சர்வதேச நிறுவனங்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆசிய போட்டி சாதனையாவது கவனத்தை ஈர்க்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பட உதவி: Zee News

பட உதவி: Zee News


”தேசிய விளையாட்டு தினத்தின் போது இந்த தங்கம் வென்றுள்ளேன். இது சிறப்பானது. நான் ஐந்து விரல் கொண்டவர்கள் அணியும் ஷூ அணிகிறேன். இது மிகக் கடினமாக உள்ளது, “

என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்துள்ள ஸ்வப்னா, ஷூ தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக ஷூவை தயாரித்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே டிவிட்டரில் ஸ்ப்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருபவர்கள் மத்தியில், ஹர்ஷிதா என்பவர், தான் ஆக்ராவை சேர்ந்த ஷு வடிவமைப்பாளர் என்றும், இந்தியராக தன்னை பெருமிதம் கொள்ள வைத்த ஸ்வப்னாவுக்காக, பிரத்யேக ஷூவை வடிவமைத்து தருவதில் பெருமிதம் கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்ப்னா தங்கத்தை மட்டும் அல்ல இந்தியர்களின் மனங்களையும் வென்றுள்ளார்.

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags