பதிப்புகளில்

அன்று மீண்டேன்... இன்று மீட்கிறேன்: நம்பிக்கையூட்டும் 'லிவ் லைஃப் எஜூகேஷன்' கண்ணன் கிரீஷ்

"குறைந்தது 100 முதல் 200 வரையிலான அரசுப் பள்ளிகளில் உரிய மாற்றங்களைக் கொண்டுவரும் வரை ஓயமாட்டேன்..." என்கிறார் மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்.

5th Jan 2018
Add to
Shares
1.2k
Comments
Share This
Add to
Shares
1.2k
Comments
Share

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையுடன் வாழ்வியல் சார்ந்த கல்வி அளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் 'லிவ் லைஃப் எஜூகேஷன்' (Live Life Education) நிறுவனத்தின் துவக்கப் புள்ளி ஓர் அதிர்வுமிகு நிகழ்வு.

மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்

மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்


"ஓர் அம்மா தன் எட்டு வயது குழந்தையை அழைத்து வந்தார். அந்தச் சிறுவனுக்கு கவனக் குறைவும், அதிகப்படியான துறுதுறு செயல்களையும் உள்ளடக்கிய குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தேன். அதற்கு உரிய சிகிச்சை முறைகளை விவரித்தேன். நீண்ட நேரம் துறுதுறுவென இருந்த அந்தச் சிறுவன் கிளம்பும்போது திடீரென அமைதியாக அம்மாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான். நான் திகைத்துவிட்டேன். ஒருவேளை நான் கண்டறிந்த குறைபாடு தவறோ என்று எண்ணினேன்.

அந்தச் சிறுவன் தன் அம்மாவிடம் சன்னமாகச் சொன்னான்: "ம்மா... என்னென்னே தெரியலம்மா... ஏன் இப்படி இருக்கேன்னே தெரியலை. இதனால எல்லாருமே என்னைத் திட்றாங்க. நீயும் என்னைத் தீட்டாதம்மா. உன்னை ரொம்பப் பிடிக்கும்மா. என்னை வெறுத்துட மாட்டியேம்மா?!"

கண்கலங்கிவிட்டேன். "உனக்கு ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லைப்பா. நாம சில பயிற்சிகள் எடுத்துப்போம். மருந்து சாப்பிடுவோம். சீக்கிரமே சரியாகிடும்" என்று அந்தச் சிறுவனிடம் சொன்னேன்.

ஒருவாரம் கழித்து அந்தக் குழந்தையை அழைத்து வருமாறு அம்மாவிடம் சொன்னேன். ஆனால், ஆறு மாதம் கழித்துதான் அந்த அம்மாவை வேறொரு மருத்துவப் பிரிவில் சந்திக்கிறேன். என்னைப் பார்த்தவுடன் அழ ஆரம்பித்துவிட்டார். "என்னம்மா ஆச்சு..? சொல்லுங்க" என்றேன். அவரோ அழுகையை நிறுத்தவே இல்லை. பிறகு நடந்ததைச் சொன்னார்.

என்னைச் சந்தித்த மறுநாளே அப்பா பள்ளிக்குச் சென்று டி.சி. வாங்கியிருக்கிறார். பள்ளியில் குழந்தையைச் சமாளிக்க முடியவில்லை என்று காரணம் சொல்லிவிட்டார்களாம். வீட்டுக்கு வந்த அப்பா மிகுந்த கவலையுடன் கோபமுற்று பையனை அடித்திருக்கிறார். அப்போது அந்தச் சிறுவன் சிரித்துக்கொண்டே சொன்னானாம்: 'அப்பா... எல்லாரும் என்னை அடிச்சாங்க. திட்டினாங்க. நீங்க மட்டும்தான் எதுவும் பண்ணமா இருந்தீங்க. இப்போ நீங்களும் அடிச்சிட்டீங்க. பரவால்லப்பா' என்று சிரித்தான்.

அப்பா உடைந்துபோய்விட்டார். 'மன்னிச்சிருப்பா. ஏதோ கோபத்துல அடிச்சிட்டேன். சாரிப்பா' என்று மன்றாடியிருகிறார். 'பரவால்லப்பா. நான் விளையாடப் போறேன்' என்று சொல்லிவிட்டு ஓடிய அந்தக் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தலைகீழாக குதித்தது. துயர்மிகு மரணம் அது."

சற்றே உடைந்த குரலில் இதை விவரித்த மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகருமான கண்ணன் கிரீஷ், 

"அந்த நிகழ்வு என்னை பயங்கரமாக பாதித்தது. அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் ஆனது. அன்று தீர்மானித்தேன், 'இனி எந்த ஒரு குழந்தையும் தற்கொலை என்ற முடிவால் சாகக் கூடாது' என்று. அந்த நோக்கத்தில் தொடங்கப்பட்டதே 'லிவ் லைஃப் எஜுகேஷன்,'" என்று அழுத்தமாகக் கூறினார்.

கல்வி முறையும் இன்றைய தேவையும்

இளைஞர்களிடையே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன் 2004-ல் உளவியல் படிப்பைத் தேர்வு செய்தவர், தனது துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக 'Award of Excellence in the field of psychiatry' விருதை, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பெற்றார். ஆறு ஆண்டு காலமாக இயங்கிவரும் 'லிவ் லைஃப் எஜூகேஷன்' நிறுவனத்தைத் தொடங்கியதன் பின்னணி குறித்து பகிர்ந்த கண்ணன் கிரீஷ்,

நம் கல்வி முறையில் உள்ள குறைகள் குறித்தும், அதை சரிசெய்வதற்கு தங்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட கல்விப் பயிற்சித் திட்டம் குறித்தும் விவரித்தார்.
மத்திய அரசால் கெளரவிக்கப்பட்ட மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்

மத்திய அரசால் கெளரவிக்கப்பட்ட மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்


"அன்று அந்தக் குழந்தைக்கு உரியவை கிடைத்திருந்தால் மைக்கேல் பெல்ப்ஸ் ஆகவோ, ஐன்ஸ்டீனாகவோ, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகவோ ஆகியிருக்க முடியும். அவர்களும் இதே குழந்தையைப் போன்ற குறைபாடு கொண்டிருந்தவர்கள்தான். நம் குழந்தைக்கு மட்டும் ஏன் இந்த நிலை? நம் கல்வி முறை அப்படி. 
பணியாளர்களை மட்டுமே உருவாக்கக் கூடிய பிரிட்டிஷார் கொண்டு வந்த கல்விமுறையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை என்ற ஒன்றையே இந்தக் கல்வி முறைக் கொடுப்பது இல்லை. நம் பள்ளியும் கல்லூரிகளும் தொழில்முனைவர்களையோ அல்லது கண்டுபிடிப்பாளர்களையோ உருவாக்குவதே இல்லை. ஆசிரியர் கற்றுக்கொடுப்பதை மனப்பாடம் செய்து தேர்வில் சரியாக எழுதி நல்ல மதிப்பெண் எடுத்தால் போதும், ஒரு மாணவரை அறிவாளி என்கிறோம். என்ன கல்வி முறை இது?

உலகின் டாப் 10 தொழில்முனைவர்களையோ வல்லுநர்களையோ பட்டியலிட்டுப் பாருங்கள். பில்கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க் போன்றோர் இடம்பெற்றிருப்பர். அவர்கள் அனைவருக்குமே பள்ளிக் காலத்தில் கணினியில் புகுந்து விளையாட வாய்ப்பு கிடைத்தது. பல்கலைக்கழக மாணவர்களைவிட அசத்தினர். ஆனால், நம் குழந்தைகளிடம் "கணினியைக் கொடுக்கவே கூடாது. கெட்டுப் போய்விடுவார்கள்" என்று பதறுகிறோம்.

நம் குழந்தைகளுக்கு உரிய சுதந்திரமே கொடுப்பது இல்லை. எல்லா குழந்தைகளுக்குமே படிப்பு நன்றாக வரவேண்டும் என்பது அவசியமில்லை. அப்படி வரவும் வராது. படிப்பில் நாட்டமில்லாத குழந்தைகளுக்கு வேறு பல விஷயங்களில் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பையே நாம் தருவதில்லை. எட்டாம் வகுப்பு வரை குழந்தைகளை சற்றே சுதந்திரமாக விட்டுவிடுகின்றனர். அதன்பின் ப்ளஸ் டூ வரை படிப்பு மட்டுமே. உயர்படிப்பு என்றாலே அது வேலை சார்ந்த படிப்பாக மாறிவிடுகிறது. படிப்பு அல்லாத வேறு எந்தத் திறமையையும் ஊக்குவிப்பதே இல்லை. 

இன்று ஒரு தொழில்முனைவுக் கூட்டத்தில் பங்கேற்கும் பலரும் தானாக முன்வந்து பேசக் கூடத் தயங்குகிறார்கள். ஏனெனில், அவர்கள் வாழ்க்கையில் ரிஸ்கே எடுப்பதில்லை. கம்ஃபர்ட் ஸோனைவிட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள். இதுபோன்ற பின்னடைவை ஏற்படுத்துவதே நம் கல்வி முறைதான். எனவேதான் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும் படைப்பாற்றலும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் 'லிவ் லைவ்' எஜுகேஷன் தீவிரம் காட்டுகிறது.

வெளிநாட்டுக்குச் சென்று 'சிக்கன் சூப் ஃபார் த சோல்' நூலாசிரியர் ஜாக் கான்ஃபீல்டு உடன் ஓர் ஆண்டு காலம் பணிபுரிந்தேன். பின்னர் உலகப் புகழ்பெற்ற 'எஸ்ட்' (EST) பயிற்சிகளை நடத்திய வர்னர் ஹெர்ஹார்டிடம் சில காலம் இருந்தேன். அங்குக் கற்றுக்கொண்டதை நம் இந்தியச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து தொடங்கிய நிறுவனம்தான் 'லிவ் லைஃப் எஜூகேஷன்'. இன்று கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 1.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயலாற்றியிருக்கிறோம்" என்றார் கண்ணன் கிரீஷ்.

கல்வித்திட்ட முக்கிய அம்சங்கள்

தங்கள் நிறுவனம் அளித்து வரும் வாழ்வியல் கல்விப் பயிற்சியின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் கூறும்போது, 

எவர் ஒருவர் தன் பெற்றோரை நேசிக்கிறாரோ என்றுமே தப்பு செய்யமாட்டார். எப்போது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றுகிறதோ, பெற்றோர் மீதான நேசம் மங்கிவிடுகிறோ அப்போதுதான் வேறு எதிர்மறை விஷயங்களை நாடும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் எங்களது மூன்று நாள் பயிற்சித் திட்டத்தில் 'நன்றி பாராட்டுதல்' என்பதை மிக முக்கிய அம்சமாக முன்வைக்கிறோம்.
தன் நிறுவனக் குழுவினருடன் கண்ணன் கிரீஷ்

தன் நிறுவனக் குழுவினருடன் கண்ணன் கிரீஷ்


முதலில் மற்ற மாணவர்களுடன் எப்படிப் பழகுவதை என்பதைச் சொல்லித் தருவோம். இரண்டாவதாக, தன்னுடையை வாழ்க்கையை தாமே கட்டமைத்துக்கொள்ளும் முறையைச் சொல்லித் தருவோம். பொறுப்புணர்வு என்பது இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. மூன்றாவதாக, இலக்கு. நம் இலக்கை நிர்ணயித்துக்கொள்வதையும், அதை நோக்கிய திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள வழிகாட்டுகிறோம். நான்காவதாக, நன்றி பாராட்டுதல். ஒவ்வொரு மாணவரும் எங்கள் பயிற்சி முகாம் நிறைவடையும் நாளில் தங்கள் பெற்றோரிடம் சென்று நன்றி பாராட்ட வேண்டும். நிச்சயம் அப்படிச் செய்வார்கள்.

நமிதா என்ற பெண் குறித்து இங்கே பகிர விரும்புகிறேன். ஒரு பயிலரங்கில் அந்தப் பெண் மிக உன்னிப்பாக கவனித்து வந்தாள். உணவு இடைவேளையின்போது அந்தப் பெண்ணைச் சூழ்ந்து பலரும் நின்றிருந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கையும் காலும் சுருண்டநிலையில் நடக்கிறாள் என்று. அவருக்கு ஆறு வயதில் இருந்தே செரிபரல் பால்சி. ஒன்பது வயதில் அப்பா விட்டுப் போய்விட்டார்; 11 வயதில் சிலர் அவளிடம் தவறாக நடந்திருக்கிறார்கள்; 18 வயதில் மன அழுத்தத்தால் தற்கொலை முயற்சிக்குப் போய் மீண்டிருக்கிறார். 'எனக்காக நீ வாழ வேண்டும்' என்ற அம்மாவின் ஒற்றை வேண்டுகோளுக்காக தன் முடிவை மாற்றிக்கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள ஆர்மபித்தார். 23 வயதில் எங்கள் நிகழ்ச்சிக்கு வந்தாள். 'கிராட்டியூட்' குறித்த செஷன் முடிந்த மறுநாள் நமீதா மேடையில் ஏறி மைக்கைப் பிடித்துப் பேசினார்:

"டாக்டர் நேற்று பயிற்சி வகுப்பு முடிந்தபிறகு நேராக வீட்டுக்குச் சென்றேன். கண்ணாடி முன்பு நின்றேன். என் கண்களைப் பார்த்து 'ஐ லவ் யூ' என்று முதல்முறையாக எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என் உருவத்தை பார்த்து வெறுப்படைந்ததால்தான் என் வாழ்க்கை முழுவதுமே துயரத்தோடு கடத்தி வந்தேன். இப்போதுதான் நான் உணர்ந்தேன். மன ரீதியாக என்னிடம் இருந்த ஊனம்தான் இதெற்கெல்லாம் காரணம். அதை நேற்றோடு விட்டுவிட்டேன்," என்றார்.

நாங்கள் நெகிழ்ந்துவிட்டோம். அத்துடன் அவர் நிற்கவில்லை. "இந்த மேடையில் நான் நடனம் ஆட வேண்டும்" என்று கேட்டுவிட்டு ஆடத் தொடங்கினாள். நம்பமாட்டீர்கள்... 45 நிமிடம் தொடர்ச்சியாக ஆடினாள். பார்வையாளர் அனைவருமே வியப்பில் வாயடைத்துவிட்டனர். எம்.சி.ஏ.வை கோல்டு மெடலுடன் முடித்த நமீதா இப்போது பெங்களூருவில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் உயரிய பதவி வகிக்கிறார்.

நம் குழந்தைகளிடம் இன்று இருக்கின்ற மிகப் பெரிய பிரச்சினையை தன்னைத் தானே நேசிக்காததுதான். தனக்குப் பிடித்த எதையுமே செய்யக் கூடிய சூழல் இல்லாததால் தன்னைத் தானே வெறுக்க நேரிடுகிறது. இதை மாற்றுவதற்கு உரிய செயல்திட்டத்துடன் செயல்படுகிறோம். நமீதா போன்றவர்கள் பலன் பெற்று முன்னேற்றம் காண்பதை நேரடியாகவே பார்க்கிறோம்," என்றார்.

இளைஞர்களை அணுகும் முறை

'லிவ் லைஃப் எஜூகேஷன்' நிறுவனத்தின் பயிற்சிக் குழுவில் உளவியல் மருத்துவர்கள், ஆலோசகர்கள் என 15 பேர் முழுநேரமாக இயங்குகின்றனர். ஒரு பயிற்சி வகுப்பில் சுமார் 120 மாணவர்கள் கலந்துகொள்வார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக பல்வேறு வழிமுறைகள் மூலம் தன்னம்பிக்கைக் கல்வி அளிக்கப்படுகிறது. உளவியல் பிரச்சினைகளை சந்திக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக ஆலோசனை வழங்காமல் ஒட்டுமொத்தமாகவே பயிற்சி வழங்கப்படுகிறது. சமூகத்தையே மாற்றுவதுதான் தனிநபர்களின் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.

முகாமின் முதல் நாளிலேயே மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளை கவனமாக அணுகி சிக்கல்களைத் தீர்த்துவருவதாக உளவியல் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.

"வாழ்வியல் கல்விப் பயிற்சித் திட்ட முறைகள் என்பது காலம் தோறும் மாறக் கூடியது. காலமும் சூழலும் மாற மாற பயிற்சி முறைகளிலும் ஆண்டுதோறும் அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை கையாள்வது பெரிய சிக்கலாக இருக்கும்போது, மீம் உள்ளிட்ட கலாய்ப்புக் கலாச்சாரம் மிகுதியாக உள்ள சூழலில் அதையொட்டிய உளவியல் அணுகுமுறையுடன்தான் எங்கள் பயிற்சி முறையை மேம்படுத்தி வருகிறோம். உதாரணமாக, இன்றைய மீம் தலைமுறையினர் நகைச்சுவை என்ற பெயரில் பிறரைத் துன்புறுத்தி, அதில் இன்பம் காணும் சாடிஸ முறையை தங்களை அறியாமல் பின்பற்றுகின்றனர். இதுபோன்ற அனைத்துச் சமூகச் சூழல்களையும் கருத்தில்கொள்கிறோம்" என்று கூறும் உளவியல் ஆலோசகர் கண்ணன் கிரீஷ் தன் அனுபவத்தில் இருந்தும் வாழ்வியல் கல்வித் திட்டத்தை உருவாக்குவதாகவும் ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டினார்.

"நான் கல்லூரியில் படிக்கும்போது காஞ்சிபுரம் சென்று காரில் திரும்பினேன். படப்பை வழியாக வழியாக வரும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது. கார் எரிந்தது. அங்கு ஓடிவந்த மக்கள் 'நான் இறந்துவிட்டேன்' என்று நினைத்துக்கொண்டு என்னை எடுத்துத் தூக்கி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கிடத்தினர். சற்றே தடுமாறி எழுந்து என் முகத்தைத் தொட்டுப் பார்த்தேன். முகத்தின் ஒரு பகுதியில் உள்ள தோல் அப்படியே என் கையில் ஒட்டிக்கொண்டது. இனி என் வாழ்க்கையை அவ்வளவுதான் என்று நினைத்தேன். பிளாஸ்டிக் சர்ஜரியும், அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு ஒரு வழியாக உயிர்பிழைத்தேன்.

மருத்துவமனையில் ஓரளவு மயக்கம் தெளிந்திருந்தது. என்னை நோக்கி ஒரு பெண் வருவது போல் இருந்தது. என்னருகில் வந்தவர், "கண்ணு... எந்த ஜென்மத்துலயும் நான்தான்டா உனக்கு அம்மா" என்றார். அது என் அம்மா. அப்போது அருகில் இருந்த அப்பா, "எவ்ளோ தடவை உன்னை திட்டிருயிருப்பேன். உன் மேல கோபப்பட்டிருப்பேன். அதெல்லாம் உன் மேல இருக்குற பாசத்தாலதான்டா. நீதான்டா என் உயிர்" என்றார். அன்று எனக்குக் கிடைத்த உத்வேகத்துக்கு அளவே இல்லை. அன்றுதான் புரிந்துகொண்டேன். பெற்றொருடன் பிள்ளைகளை நேசத்துடனும் இணக்கத்துடனும் இணைத்தல் என்ற விஷயத்தை எங்கள் பயிற்சியில் முக்கியமாகக் கொண்டுவர வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியதே தனிப்பட்ட இந்த அனுபவம்தான். நம் வாழ்வியல் அனுபவத்தில் இருந்துதான் பெரும்பாலும் பயிற்சி முறைகளைக் கட்டமைத்து வருகிறோம்," என்றார்.

கல்லூரிகளில் பயிற்சி முகாம்கள்

கல்லூரிகளில் பயிற்சி முகாம்கள்


தற்போதைய செயல்திட்டங்கள்

தற்போதையை செயல்திட்டங்கள் குறித்தும் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் அவர் கூறியவை:

* எங்கள் பயிற்சித் திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட கல்லூரிகளுடன் கரம்கோர்த்து தொடர்ச்சியாக மாணவர்களுக்கு லிவ் லைஃப் எஜூகேஷன் திட்டத்தை வழங்குகிறோம்.
* கல்லூரிகளைத் தொடர்ந்து இப்போது பள்ளிகளிலும் கவனம் செலுத்துகிறோம். ஓராண்டில் 12 பள்ளிகளில் முகாம் நடத்தினோம்.
* இந்திய ராணுவத்துடன் இணைந்து காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கான கல்வித் திட்டத்தில் பங்கு வகிக்கிறோம்.
* தாம்பரம் பகுதியில் உள்ள 20 அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஆறு மாதப் பயிற்சித் திட்டத்தை ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்கவுள்ளோம்.
* பெற்றோர், ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சிகளை அளித்து அதன் மூலம் ஒட்டுமொத்த குழந்தைகளையும் பயன்பெறத்தக்க வகையில் புதிய செயல்திட்டம் ஒன்றை வடிவமைத்து வருகிறோம்.
* நாங்களே ஒரு முன்மாதிரி பள்ளியை உருவாக்கி, அதில் வாழ்க்கைப் பாடத்துக்கு முக்கியத்துவம் அளித்து படைப்பாற்றல் மிக்க தொழில்முனைவர்களை உருவாவதற்கு வித்திடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

மறக்க முடியாத தருணங்கள்

"எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் 5.5 லட்சம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினேன். ஈரோட்டில் உரையாற்றிவிட்டு கீழிறங்கியபோது, எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் என் முன் வந்து நின்றார். "சார், நீங்கதானே டாக்டர் கண்ணன் கிரீஷ்" என்று கேட்டார். "ஆமாம்மா, சொல்லும்மா" என்றதும் உடனே காலில் விழுந்துவிட்டார். ஆயிரக்கணக்கானோர் முன்பு அந்த மாணவி இப்படிச் செய்தது ஒரு மாதிரி ஆகிவிட்டது. தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள். அதைத் திறந்து பார்த்தால் இன்னும் அதிர்ச்சி. அது ஒரு தற்கொலைக் குறிப்பு. பிறகு அவளே விவரித்தாள்:

"ஏற்கெனவே ஒருநாள் உங்களோட ஸ்பீச் கேட்டேன் சார். அதுதான் என்னை மாத்திச்சு. எனக்கு சரியா படிக்க வரலை. எல்லாரும் என்னை முட்டாள்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. உங்களோட ஸ்பீச்ல எப்படி படிக்கணும்ன்ற டெக்னிக் ஒண்ணு சொல்லித் தந்தீங்க. அதை ஃபாலோ பண்ணினேன். எனக்கு 85% மார்க் கிடைச்சுது. எங்க வீட்ல அவ்ளோ சந்தோஷம். இது ஆறு மாசம் முன்னாடி எழுதுனது. இப்ப எனக்கு அந்த மாதிரி தப்பான எண்ணமே இல்லை. ரொம்ப தேங்க்ஸ் சார்," என்றார். இதைத்தான் லிவ் லைஃப் எஜூகேஷனின் வெற்றியாக கருதுகிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான நேரத்தில் சரியான தீப்பொறி தேவை. அப்படி ஒரு தூண்டுதலை ஏற்படுத்திவிட்டால் போதும் நல்ல சமூகத்தை உருவாக்கிவிட முடியும்.

பள்ளி மாணவர்களுடன் கண்ணன் கிரீஷ்

பள்ளி மாணவர்களுடன் கண்ணன் கிரீஷ்


நாங்கள் இந்த ஆறு ஆண்டு காலம் சரியான பயிற்சிகளையே மாணவர்களுக்கு அளித்து வருகிறோம் என்பதை அவ்வப்போது பொது இடங்களிலேயே உணர முடிகிறது. எங்காவது திடீரென ஓர் இளைஞர் என் முன் தோன்றி, "சார்... நான் வாழ்க்கையை வெறுத்துப் போயிருந்தேன் சார். ஆனா, இப்போ இவ்ளோ பெரிய நிலைல மகிழ்ச்சியா இருக்கேன். இதுக்கு காரணமே நீங்கதான் சார்" எனும்போது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உணர்வேன்.

அப்படி ஒருநாள் நள்ளிரவில் என் வண்டி முன்பு ஓர் இளைஞர் மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு, "சார், என்னை நினைவிருக்கா?" என்று கட்டிப் பிடித்தார். எங்கள் முதல் பாட்ஜ் மாணவர் அவர். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், "நீங்க லிமிட்டிங் பிலிஃப் எனும் கான்செப்டை ஃபாலோ பண்ணினேன் சார். ஆவடி ஏரியாவுல சுத்திப் பார்த்தேன். நீங்க சொன்ன மாதிரியே சர்வே எடுத்தேன். அங்க நிறைய திருடு போறது தெரிய வந்ததுச்சு. ஊருக்குப் போய் ரிட்டயர்டு ஆர்மி ஜெனரல் ஒருத்தரை வெச்சு என்.எஸ்.எஸ்.ஸில் இருந்த இளைஞர்களுக்கு நான்கு மாதம் பயிற்சி கொடுத்தேன். அவர்களை சென்னைக்கு கூட்டிட்டு வந்து செக்யூரிட்டி வேலைகளில் நியமிச்சேன். இப்ப என்னோட செக்யூரிட்டி ஏஜென்சில 350 பேரு வேலை பார்க்குறாங்க..." என்றார்.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் அரியர் வைத்திருந்த அந்த மாணவர் இப்போது மிகப் பெரிய தொழில்முனைவர். இத்தகைய மாற்றம்தான் நம் சமூகத்துக்குத் தேவை என்று நம்புகிறேன்.

நம் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் இருக்கிறார்கள். மாணவர்களை அணுகுவதில்தான் சிக்கல். அதை சரிசெய்தாலே போதுமானது. அதற்கான உரிய பங்களிப்பை அளிக்கவுள்ளோம். தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி மாணவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற வெறி மிகுந்து இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். அந்த நெருப்பைக் கொழுந்துவிட்டு எரிவதற்குத் துணைபுரியும் சிறு பொறியாக இருக்கும். 100 முதல் 200 அரசுப் பள்ளிகளிலேனும் உரிய மாற்றங்களைக் கொண்டு வரும் வரை ஓயமாட்டேன்,"

என்று உறுதியாகச் சொன்னார் மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ்.

Add to
Shares
1.2k
Comments
Share This
Add to
Shares
1.2k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக