உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கக் கூடிய 12 பலன்கள்!
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் கிடைக்ககூடிய பலன்களை பட்டியலிடுகிறார் யுனிவர்சல் ஹெல்த் கிளப் நிறுவனர் பராஸ் குப்தா.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஃபிட்டாக இருக்கலாம். உடல் எடையை முறையாக நிர்வகிக்க முடியும். அதுமட்டுமின்றி உடற்பயிற்சி செய்வதால் உங்கள் சருமம் பளபளப்பாகி அழகாக தோன்றுவீர்கள்.
இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். மனதளவில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள்.
இதுபோல் உடற்பயிற்சி மூலம் கிடைக்கக்கூடிய மற்ற பலன்களை இங்கு பார்ப்போம்.
1. உடல் தோரணையை மேம்படுத்தும்
நீங்கள் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட இலக்குடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பீர்கள். அந்த இலக்கு பூர்த்தி செய்யப்படுவதுடன் உங்கள் ஒட்டுமொத்த உடல் தோரணையும் மேம்படும்.
2. மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும்
இன்றைய காலகட்டத்தில் பச்சிளம் குழந்தை முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் மன அழுத்தம் உள்ளது. பணி, படிப்பு, உறவுமுறை சிக்கல்கள், பணப் பிரச்சனை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சனையில் சிக்கித் தவிப்பதால் பதட்டமும் மன அழுத்தமும் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கமுடியாததாக மாறியுள்ளது.
இதை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதற்கு உடற்பயிற்சி சிறந்த முறையில் பலனளிக்கும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்ஃபின் சுரக்கிறது. இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. மகிழ்ச்சியான உணர்வை அளிக்கிறது.
3. சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது
வொர்க் அவுட் செய்த பிறகு முகம் பொலிவுடன் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர்வை உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கிவிடுகிறது. முகம் பொலிவடைவதற்கு இதுதான் காரணம்.
சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் இது வெளியேற்றிவிடுகிறது. இதனால் சருமம் டல்லாக இல்லாமல் பளபளப்பாகிறது. இது ஒருபுறம் இருக்க வியர்வை வந்ததும் அதை துடைத்துவிடவேண்டும் என்பது கவனிக்கவேண்டிய விஷயம். அப்படித் துடைக்காமல் விட்டுவிட்டால் முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகள் வரும் ஆபத்தும் இருப்பதால் கவனமாக துடைத்துவிடுவது நல்லது.
4. சிறந்த தோற்றமும் நம்பிக்கையும் கிடைக்கும்
உடற்பயிற்சி செல்வதால் உடல் மட்டுமின்றி மனமும் புத்துணர்வு பெறுகிறது. உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். இதனால் உங்கள் தோற்றம் பொலிவு பெறுகிறது. தன்னம்பிக்கையும் பிறக்கிறது. இது உங்கள் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிப்பதை நீங்கள் உணரலாம்.
5. நோய் எதிர்பாற்றல் மேம்படும்
உடல் ஆரோக்கியத்திற்கு நோய் எதிர்பாற்றல் மிகவும் அவசியம். எந்தவித நோயும் அண்டாமல் இது நம்மைப் பாதுகாக்கிறது. 'நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’ என்பதால் நோயின்றி வாழ்ந்து செல்வந்தர்கள் ஆக உடற்பயிற்சி செய்வோம்.
6. சரும ஆரோக்கியம் மேம்படும்
உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உங்கள் சருமத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இதனால் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியம் மேம்படும். இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் ஏற்படாமல் தடுக்கும். உங்கள் தசைகள் வலுவடையும். அத்துடன் சருமம் உறுதியாக இருக்கும்.
7. சருமம் பொலிவடையும்
உடற்பயிற்சி செய்வதால் முகப்பருக்கள் ஏற்படாமல் தவிர்க்கமுடியும். சருமத்தில் தொடர்ந்து சீபம் சுரப்பதால்தான் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. முறையான உடற்பயிற்சி செய்வதால் ஹார்மோன்களின் சமமற்ற தன்மை கட்டுப்படுத்தப்படும். மன அழுத்தம் குறையும். இதனால் சீபம் சுரப்பு தவிர்க்கப்படும். இதன் விளைவாக முகப்பருக்கள் ஏற்படாது.
சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் பிசுபிசுப்பையும் அகற்ற உடற்பயிற்சி உதவும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வர சருமம் மாசற்று, பொலிவுடன் காணப்படும்.
8. கூந்தல் ஆரோக்கியமாகும்
உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் உச்சந்தலை, கூந்தலின் வேர்க்கால் போன்ற பகுதிகளுக்கும் ஊட்டச்சத்துகளும் ஆக்சிஜனும் சென்றடையும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகும். மன அழுத்தத்தைக் குறைப்பதாலும் முடி உதிர்வைத் தடுக்கமுடியும்.
9. அமைதியான தூக்கத்தை தரும்
உடற்பயிற்சி செய்யும்போது பகலில் உங்கள் உடல் ஆக்டிவாக இருக்கும். இதனால் இரவில் அமைதியான ஆழ்ந்த உறக்கம் வரும். இரவில் ஆழ்ந்த தூக்கம் இருந்தால் மறுநாள் புத்துணர்ச்சியுடனும் எனர்ஜியாகவும் இருக்க முடியும்.
10. கருவளையம் ஏற்படாது
உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கிறது. கண்களுக்கு கீழே உள்ள சருமமும் பிரகாசமாகிறது. உடற்பயிற்சி செய்துவிட்டு நன்றாக உறங்குவதும் கருவளையம் குறைய உதவும்.
11. முகத்தில் அழகான புன்னகை பூக்கும்
முகத்தில் பற்களுக்கும் ஈறுகளுக்கும் ரத்த ஓட்டம் பரவி ஊட்டச்சத்து கிடைக்கும். இதனால் பளிச் புன்னகையுடன் ஜொலிப்பீர்கள்.
12. உங்கல் பாலியல் வாழ்க்கை மேம்படும்
நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் தோற்றத்தின் மீது தன்னம்பிக்கை ஏற்படும். உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதால் பாலியல் வாழ்க்கை சிறப்பான அனுபவமாக அமையும்.
உடல் உறுப்புகள் சீராக செயல்பட நாம் உடற்பயிற்சி செய்யவேண்டியது மிகவும் அவசியம். பிறகென்ன உடலும் மனதும் ஃப்ரெஷ்ஷாகி விடும் என்பதைத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? உடனே நீங்களும் உடற்பயிற்சி செய்து பலனடையுங்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: பராஸ் குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா