பதிப்புகளில்

டூரிஸத்தில் தனி ஒருவன்: சென்னை மிடில் கிளாஸ் சுற்றுலா நண்பன் ரவூப்

ஜெய்
3rd Apr 2016
Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share

டிரைவிங் தொழில் செய்வதில் விருப்பம், ஊர் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம், சுற்றுலா தல வரலாறு அறிவதில் நாட்டம்... இந்த மூன்றும்தான் அப்துல் ரவூப் எனும் 31 வயது சென்னை இளைஞர் டூரிஸத்தில் தனி ஒருவனாக வலம்வர உந்துதல். குறிப்பாக, சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதியில் உள்ள நடுத்தர குடும்பங்களின் சுற்றுலா கனவுகளை மெய்ப்பிக்கச் செய்வதுதான் தனது நோக்கம் என்கிறார் ரவூப்.

சென்னை - திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ஏ.ஜி.அப்துல் ரவூப். தன்னை அணுகும் வாடிக்கையாளர்களை கார், வேன் அல்லது மினி பஸ் மூலம் சுற்றுலா அழைத்துச் சென்று, அவர்களுக்கு முழுமையான அனுபவத்தை அளித்துவிட்டு, அதற்கு உரிய சரியான கட்டணத்தைப் பெறுவதுதான் ரவூபின் டூரிஸ பாணி.

கடந்து வந்த பாதையைக் கேட்டால் வெட்கப் புன்னகையுடன் பேசத் தொடங்கிய அப்துல் ரவூப், 

"2007-ல் இருந்தே டிரைவிங்தான் எனக்கு எல்லாம். என்னோட குருநாதர் கிட்டதான் தொழில் கற்றேன். ஒரு கட்டத்தில், தனியாகவே ஏதாவது செய்யலாம் என்று முடிவு செய்து களமிறங்கினேன். அப்படி வெளிவருவதற்கு முன்புதான் 'டூரிங் பேக்கேஜ்'களை கவனித்து வந்தேன். தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொண்டேன். தனியாக வந்த பிறகு, டூரிஸம் சார்ந்து இயங்குவது என்று தீர்மானித்தேன்".

முதலில் லோன் மூலம் வேன் வாங்கினேன். இப்போது சுமோ இருக்கிறது. என்னுடைய முதல் முயற்சியே மெகா தோல்வி. நண்பர்கள், உறவினர்களை நம்பி 'டூரிங் பேக்கேஜ்' திட்டம் ஒன்றை செயல்படுத்த நினைத்தேன். அதற்காக, பிட் நோட்டீஸ் எல்லாம் அடித்து எங்கள் பகுதியிலும் நண்பர்களிடமும் விநியோகித்தோம். எப்படியும் குறைந்தது பத்து ஃபேமிலி புக்கிங் ஆகிவிடும். நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனால், ஒரு புக்கிங் கூட வரலை. மிகப் பெரிய ஏமாற்றம். மனச் சோர்வு வேறு. சரி, டூரிங் பேக்கேஜ் போட்டாச்சு. முதல் அடியை பின்வாங்கக் கூடாது என்று முடிவு செய்தேன். என் குடும்பத்தையும் நண்பர்களையும் சுற்றுலா அழைத்துச் சென்றுவிட்டு திரும்பினேன். தோல்வியிலும் ஒரு வெற்றிப் பயணம் அது.

பேக்கேஜ் டூரிங்கை பொறுத்தவரை, சென்ற ஆண்டுதான் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. எனக்குத் தெரிந்தவர்கள், என்னை அறிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் என நான்கு குடும்பங்கள் சேர்ந்தனர். மூணார் அழைத்துச் சென்றேன். வாகன வசதி, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் அனைத்துக்கும் பொறுப்பு வகித்தேன். மூணார் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து முக்கியப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு நிறைவான அனுபவத்தைத் தந்ததில் மகிழ்ச்சி. முதலில் வெற்றிதான் முக்கியம் என்பதால் லாபத்தைப் பார்க்கவில்லை. அப்படியிருந்தும் ரூ.5,000 கையில் நின்றது" என்று வியப்புடன் சொல்கிறார் ரவூப்.

image


சுற்றுலா பயணத் திட்டங்களில் இரண்டு விதமான வழிமுறைகளைக் கையாள்கிறார் அப்துல் ரவூப். ஒருவர் தமது குடும்பத்துடன் இரண்டு, மூன்று தினங்களில் சில இடங்களுக்கு சுற்றுலாச் செல்ல விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடமே கார் இருக்கும் பட்சத்தில், டிரைவராகவும் வழிகாட்டியாகவும் மட்டுமே ரவூப் வருவதற்குத் தயார். அதற்கு உரிய கட்டணம் மட்டும் வாங்கிக் கொள்வார். அல்லது, வாகனமும் வேண்டும் என்றால், அதற்கு தனிக் கட்டணம். இது தனிக் குடும்பங்களுக்கு என்றால் பேக்கேஜ் முறை என்பது வேறு வகை. அதாவது, நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் அல்லது 20 பேர் கொண்ட குழுக்களை சுற்றுலா அழைத்துச் செல்ல முன்வருகிறார். வாகனம், தங்குமிடம், உணவு முதலிய சுற்றுலாவுக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் அனைத்தையுமே இவர் பார்த்துக்கொள்வார்.

"என்னுடைய டார்க்கெட்டே பெரும்பாலும் என்னைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தினர்தான். அவர்களுக்கு அதிகபட்சம் ஆண்டுக்கு இரண்டு முறை சுற்றுலா செல்ல விருப்பமும் சூழலும் இருக்கும். ஆனால், எப்படிச் செல்வது? யாரை அணுகுவது? இப்படி பல நடைமுறை சிக்கல்களும் பதற்றங்களும் இருக்கும். அதைத்தான் நான் கவனித்துக்கொள்கிறேன். அவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி சுற்றுலாவை மட்டுமே நிறைவாக அனுபவிக்கவும், வேறு எல்லா கவலைகளை மறக்கவும் இயன்றவரையில் பார்த்துக்கொள்கிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சுற்றுலா அழைத்துச் சென்று வந்திருப்பேன். தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலா தளங்களும் இதில் முக்கிய இடம். கேரளா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் சுற்றுலா அழைத்துச் செல்வேன். கொஞ்சம் அனுபவம் அதிகமாகிவிட்டதால், எந்தெந்த இடங்களை தவறவிடாமல் அழைத்துச் சென்று காட்டுவது, அந்த இடங்கள் பற்றிய குறிப்புகளை முன்கூட்டியே கொடுத்துவிடுவது, எந்த இடத்தில் தரமான உணவு, தங்குமிடமும் சரியான விலையில் கிடைக்கும், எந்தெந்த இடங்களில் நல்ல பொருட்கள் வாங்குவதற்கு கிடைக்கும் என்பது போன்ற அனைத்து விவரமும் விரல்நுனியில் வைத்திருப்பது என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தியைத் தருவதற்கு உறுதுணைபுரிகிறது.

ஒருவேளை எனக்குத் தெரியாத சுற்றுலா இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எவரேனும் சொன்னால், அந்த இடங்கள் பற்றி முதலில் ஹோம் ஒர்க் பண்ண ஆரம்பித்துவிடுவேன். நிறைய தெரிந்துகொண்டு, அங்கு எவரேனும் நண்பர்கள் இருந்தால், உணவு விடுதிகள், தங்குமிடங்கள் முதலான அனைத்தையும் விசாரித்து வைத்த பிறகே அழைத்துச் செல்வேன்" என்று விவரிக்கிறார் அப்துல் ரவூப்.

image


புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பது குறித்தும், உங்கள் தொழிலின் புரொமோஷன்கள் குறித்தும் கேட்டதற்கு சிரித்தபடியே விளக்கியவர், 

"நான் டூரிங் டிராவல்ஸ் பிசினஸ் பண்ணினாலும் தனிப்பட்ட முறையில்தான் செய்கிறேன். அலுவலகம் கூட கிடையாது. வீடுதான் எல்லாமே. என்னை புரொமோட் செய்பவர்கள் என்றால் அது என் வாடிக்கையாளர்கள்தான். அவர்கள்தான் எல்லாமே. ஒரு குடும்பத்தை சுற்றுலா அழைத்துச் செல்கிறேன் என்றால், திருப்தி அடையும் அவர்கள் தங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடம் என் செல்போன் நம்பரைத் தந்து என்னுடைய புரொமோட்டராகவே செயல்படுகின்றனர். அந்த அளவுக்கு என் அணுகுமுறை அவர்களுக்குப் பிடித்துப் போவதுதான் என் பலம்.

இப்போது எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஆரம்ப கட்டத்தில் ஒருவர் தன் குடும்பத்துடன் சபரிமலை அழைத்துச் செல்லச் சொன்னார். நான் அவர்களை அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு முழு திருப்தி என்பது எனக்குத் தெரியும். ஆனால், என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அடுத்த வருடம்தான் எனக்குத் தெரிந்தது. மறு ஆண்டும் என்னை அழைத்தனர். ஆனால், அப்போது காதல் திருமணம் - வேறு சில பொருளாதாரச் சிக்கல்கள் என என் வாழ்க்கை கடும் போராட்டக்களமாக இருந்தது. எனவே, லாங் டிரைவிங்கை சிறிது நாள் செய்யாமல் இருந்தேன். அப்போது, அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி 'சபரிமலைக்கு நீங்கள்தான் அழைத்துச் செல்ல வேண்டும்' என்று ஒற்றைக்காலில் நின்றார்கள். என் நிலைமையை எடுத்துச் சொன்னேன். அதற்கு, "உங்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் நான் தீர்த்துவைத்துவிட்டால், என்னை குடும்பத்துடன் சபரிமலை அழைத்துச் செல்வாயா?" என்கிற ரீதியில் உரிமையுடன் என்னை நெருங்கிவிட்டார். நான் அப்படியே நெகிழ்ந்துபோய்விட்டேன். அப்படியான வாடிக்கையாளர்கள்தான் என் அன்றாட வாழ்க்கை இலகுவாகச் செல்வதற்கு துணையாக இருக்கின்றனர். இந்தத் தொழிலையும் ஈடுபாட்டுடன் ரசித்துச் செய்ய முடிகிறது. இனி தென்னிந்தியா தவிர வட இந்தியாவுக்கும் பயணிக்க முயற்சிக்க போகிறேன்" என்று சிலாகிக்கிறார் ரவூப்.

சரி, வருவாய் சொல்லிக்கொள்ளும்படி வருகிறதா என்று கேட்டால், "நிச்சயமாக. முழு அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் சுற்றுலா துறையில் தனியாக செயல்படும்போதும், எதிர்பார்த்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் வருகை இருந்தால், ஆண்டுக்கு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். வாகனம் ஓட்டுவதிலும், சுற்றுலாவிலும் நாட்டம் உள்ள என்னைப் போல் தனி ஒருவர் எவராக இருந்தாலும் சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்" எனும் அப்துல் ரவூப் செல்போன் எண்கள்: 91-7200375313 / 91-9444462347

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share
Report an issue
Authors

Related Tags