பதிப்புகளில்

'உன் பெயர், உன் அடையாளம்; தொழிலுக்கு இதுவே முக்கியம்'- நேச்சுரல்ஸ் இணை-நிறுவனர் சிகே குமாரவேல்!

7th Sep 2016
Add to
Shares
1.6k
Comments
Share This
Add to
Shares
1.6k
Comments
Share

ஒரு கிளையுடன் தொடங்கி, 16வருடங்கள் கடந்து இன்று 80 நகரங்களில், 550 கிளைகள், 300க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவர்கள், 7500க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் என்று பல வெற்றிப்பக்கங்களை பதித்து, தென்னிந்தியாவில் அழகு நிலைய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய, 'நேச்சுரல்ஸ்' சிஇஓ மற்றும் இணை நிறுவனர் சிகே குமாரவேல்' உடன் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சிறப்பு நேர்காணலின் தொகுப்பு உங்களுக்காக... 

image


திருமணம் முடிந்த பெண்கள், குடும்பம், குழந்தைகளே வாழ்க்கை என்று முடங்கிப்போகாமல், தங்களுக்குள் இருக்கும் திறமைகளை எதோ ஒரு விதத்தில் வெளிக்கொணரவேண்டும் என்ற சீறிய சிந்தனையுடைய சிகே குமாரவேல், தனது மனைவியை தொழில்முனைவராக மாற ஊக்கமளித்தார். இதன் விளைவாக பெண்களுக்கே உரித்தான அழகு நிலைய தொழிலில் ஈடுபட முடிவுசெய்து 2000இல் 'நேச்சுரல்ஸ்' என்ற பெயரில் பார்லர் ஒன்றை தொடங்கினார் இவரது மனைவி வீணா குமாரவேல். அன்று முதல் மனைவியின் பக்கபலமாகவும், தொழிலை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் முனைப்போடும் நேச்சுரல்ஸ் இன் முதுகெலும்பாகவும் திகழ்ந்து வருகிறார் சிகே குமாரவேல். 

பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில் அழகு நிலையங்களுக்கு பெண்களை வரவழிப்பது ஒரு சவாலான காரியம். அதை செவ்வனே செய்து, இன்று ’நேச்சுரல்ஸ் @ஹோம்’ என்று பார்லர் அனுபவத்தை வீடுகளுக்கே கொண்டு சென்று வெற்றி கண்டுள்ளார். அதேசமயம் பெண்களை சுயமாக அழகு நிலையங்கள் தொடங்கவும் ஊக்கமளித்து, சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களை 'நேச்சுரல்ஸ்' ப்ரான்சைஸ் கிளைகளை தொடங்கவைத்த பெருமையும் இவரைச் சேரும். இத்தனை சாதனைகளையும் செய்துவிட்டு மிக எளிமையாக தோன்றும் சிகே குமாரவேல் அவர் சந்தித்த சவால்கள், வளர்ச்சிக்கான ரகசியம் மற்றும் வருங்கால விரிவாக்க திட்டங்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டவை இதோ...

வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த முதல் சவால் என்ன? நீங்கள் தொழில் தொடங்க முடிவு எடுத்தது எப்படி?

நான் என் தொழில்முனைவு பயணத்தை என் சகோதரர்களுடன் தொடங்கினேன். என்னை அவர்கள் ஏற்றுக்கொள்ளவைப்பதே எனக்கு பெரிய சவாலாக இருந்தது. நாங்கள் நடத்தி வந்த ஷாம்பூ நிறுவனத்தில் பல புதிய ஐடியா'க்களை என் சகோதரர்களிடம் சொல்வேன். ஆனால் அவர்கள் என்னை எப்பொழுதும் நிராகரித்துக் கொண்டே இருப்பர். என் எண்ணத்தை மட்டுமல்ல வயதில் இளையவன் என்று என்னையே ஒதுக்கிவிடுவர். இவையெல்லாம என் மீதே எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. உண்மையில் எனக்கென திறமை இருக்கிறதா? என்னால் எதாவது புதிதாக செய்ய முடியுமா? என பல கேள்விகள் பயமாக என் மனதில் மாறத்தொடங்கியது. அப்போதுதான், சுயமாக தொழில் தொடங்குவதே இதற்கு சரியான பதிலை தரும் என முடிவு எடுத்து தொழில்முனைவன் ஆனேன். இதுவே நான் என் வாழ்க்கையில் சந்தித்த முதல் சவால். தொழில் தொடங்குவதை பற்றி யாரிடமும் சொல்லவும் இல்லை அது நான் தனியாக எடுத்த ஒரு முடிவு.

"ஒரு முடிவை எடுப்பவன் அதைப்பற்றி முன்பே விவாதிப்பதில்லை, அதேபோல் விவாதிப்பவன் என்றைக்குமே முடிவை எடுப்பதில்லை."

தொடக்கத்தில் சலூன் துறை பற்றிய அறிவு எங்களுக்கு பெரிதாக இல்லாததால் பல தவறுகள் செய்து கற்றுக்கொண்டோம். மெல்ல மெல்ல வழியை தேடி பயணித்து வெற்றி கண்டோம். எதையும் முன்னரே ப்ளான் செய்ய முடியாது என்பதை நம்புகிறேன். ஊக்கமளிக்கும் பல உரைகளை கேட்பேன் அதிலிருந்து மீளும் யுக்திகளை கற்றேன். 

மனைவி வீணா உடன் சிகே குமாரவேல்

மனைவி வீணா உடன் சிகே குமாரவேல்


நீங்கள் வாழ்க்கை மற்றும் தொழிலில் பின்பற்றும் தத்துவங்கள் என்ன?

நம் சமூகம், பிறரின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது. அது முற்றிலும் மாறவேண்டும். நம் தேவையை, நம்முடைய முயற்சியை நாமே சிந்தித்து பரிட்சித்து பார்ப்பதே நல்லது என கூறுவேன். எல்லாவற்றிர்க்கும் மற்றவரது ஒப்புதல் தேவைப்பட்டால் சுய முடிவுகளை எடுக்க தகுதியற்றவராக நாம் மாறிவிடுவோம். இது தொழில் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

பொதுவாக, நம்மை வெளியில் உள்ளவர்கள் சுலபமாக ஏற்றுக்கொண்டுவிடுவர், ஆனால் உள்ளே உள்ளவர்கள் அதாவது நம் குடும்பம், நண்பர்கள், அலுவலக ஊழியர்கள் இவர்கள் நம்மை ஏற்றுக்கொள்வதே கடினமாக உள்ளது. ஜாக்மா கூறிய வரிகளை நினைவு கூறும் அவர்,

"உங்களை முதலில் நம்பக்கூடியவர் ஒரு அன்னியர், அடுத்து வாழும் சமூகம், மூன்றாவது உங்களின் ஊழியர்கள், கடைசியாகத்தான் உங்கள் குடும்பம்... ஆனால் நீங்கள் வெற்றி அடைந்தவுடன் அதை கொண்டாடுவது முதலில் உங்கள் குடும்பத்துடன், பின் ஊழியர்கள், நண்பர்கள் மட்டுமே, அதில் வெளியாட்கள் இருக்கமாட்டார்கள்...", 

அதனால் என்னை பொறுத்தவரை அன்னியர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வதே மிக முக்கியம் என்று சொல்வேன். அதயே நான் பின்பற்றுகிறேன்.

அதேபோல், எனக்கு கூட்டாக தொழில் புரிந்து அந்த புகழை ஏற்பதில் நம்பிக்கை இல்லை. சார்பு மனப்பான்மை இல்லாமல் ஒருவரது தனி அடையாளம் ஒரு தொழிலுக்கு அவசியம் என எண்ணுபவன். யாருமே மற்றவரை சார்ந்து இருப்பது எனக்கு அறவே பிடிக்காது. முக்கியமாக பெண்கள் தங்கள் சுய காலில் நின்று தங்களுக்கான அடையாளத்தை இந்த சமூகத்தில் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று தீவிரமாக நினைக்கிறேன். அப்பா, கணவர், சகோதரர், மகன் என்று யாரையும் சாராமல் வாழவேண்டும் ஏனெனில் ஒருவர் மற்றவரை சார்ந்து நடக்கத்தொடங்கினால் அதுவே நம்மை செயலற்ற நிலைக்கு தள்ளிவிடும்.

"உன் பெயர், உன் அடையாளம் அது வாழ்க்கைக்கும், தொழிலுக்கு மிக முக்கியம். எந்த ஒரு தனிநபரும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று எப்பொழுதும் நம்புகிறேன்." 

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமை உள்ளது, அதை அறியச்செய்தாலே அவரவர் துறைகளில் சாதித்து வெற்றி அடையமுடியும். ஒவ்வொரு தனிமனித திறன்களை நாம் தட்டி எழுப்பிவிட்டாலே போதும் ஒரு மாபெரும் சக்தி அவர்களில் இருந்து வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.  

image


பெண்கள் சுயமாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை எங்கிருந்து உங்களுக்கு வந்தது? உங்கள் முன்மாதிரிகள் யார்?

என் அம்மா தான் எனக்கு மிக பெரிய ஊக்கம். நான் சிறு வயதாக இருந்தபோதே என் அப்பா இறந்துவிட்டார். அதை தொடர்ந்து என் தாய், தனியாக எங்கள் குடும்பத்தை வழி நடத்திச் சென்ற விதம், பல விஷயங்களை கையாண்ட தைரியம், முடிவுகள் எடுக்கும் தனித்தன்மை இவையெல்லாம் என் ஆழ் மனதில் பதிந்ததை அடுத்து, எல்லா பெண்களும் இதுபோல் சுதந்திரமாக, சுயமாக செயல்படவேண்டும் என நினைக்கத் தொடங்கினேன்.

அதேப்போல் உலக பிரசித்தி பெற்ற அழகுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் பாடி ஷாப்' இன் நிறுவனர் அனிதா ராடிக் என் முன்மாதிரி. அடுத்து நான் படித்த கல்லூரியின் ஆசிரியைகள். நான் என் வாழ்வில் பார்த்த பெண்கள் அனைவருமே அவர்களுக்குள் இருக்கும் சக்தியை உணர்த்தினார்கள் என்றே சொல்வேன். பெண்களிடம் திறமை கொட்டிக்கிடப்பதால் அவர்களை மேம்படுத்தும் விதத்தில் என் தொழில் அமையவேண்டும் என்று தீர்மானித்த போதே எழுந்த யோசனை 'நேச்சுரல்ஸ் அழகு நிலையம்'. முதலில் என் மனைவியை நிறுவனர் ஆக்கினேன், பின்னர் தனிப்பட்டு அதை நாங்கள் மட்டுமே நடத்தாமல், பெண்களை தொழில்முனைவராக்கும் முயற்சியில் ப்ரான்சைஸ் முறையை அறிமுகப்படுத்தி அவர்களை உரிமையாளர்கள் ஆக்கத்தொடங்கினோம். 

நேச்சுரல்ஸ் பயணத்தில் சந்தித்த பெரிய பின்னடைவு என்ன?

2010-11 இல் நாங்கள் கவின்கேர் உடன் இணைய முற்பட்டு, கிரீன் ட்ரென்ட்ஸ் மற்றும் நேச்சுரல்ஸ் இணைக்க நடவடிக்கைகள் எடுத்தோம். நான் நினைத்தபடி அது சரிவர நடக்கவில்லாததால் நாங்கள் வெளியில் வந்து அந்த கூட்டு முயற்சியை செய்யவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்காக கிட்டத்தட்ட 30-40 ஊழியர்களை பணியமர்த்தி இருந்தோம். அவர்களை பணிநீக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது மீண்டும் எங்கள் பணியை தொடக்க எங்களிடம் மூன்று ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். பலரும் என்னை முட்டாள் என்றனர். கவின்கேர் போன்ற பெரிய நிறுவனத்துடன் மோதுவது சரி இல்லை என்றனர். மேலும் சில தொழில் யுக்திகளையும் அவர்களிடம் பகிர்ந்திருந்ததனால் நேச்சுரல்ஸ் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள்.

அப்போது என்முன் இருந்த இரண்டு வாய்ப்புகள்- சொகுசான வாழ்க்கையா? அல்லது சவாலான வாழ்க்கையா? என்பதே. நான் தேர்ந்தெடுத்தது சவாலான வாழ்க்கைப் பாதையை...”

அது ஒரு கடுமையான முடிவு இருப்பினும் நான் மீண்டும் நேச்சுரல்ஸ் அலுவலக பணிகளை கட்டமைக்கத் தொடங்கினேன். 

ப்ரான்சைஸ் முறையில் வெற்றி கண்டது எப்பது?

ப்ரான்சைஸ் முறை உலக பிரபலமானது. நான் அதை இந்தியமயமாக்கி, ஒரு பெற்றோர் அணுகுமுறையோடு அதை நடத்தி வருவதால் இன்று வெற்றி கண்டுள்ளோம். பல உரிமையாளர்களுடன் செயல்படுவதால் சில சவால்களும் உள்ளது. அவர்களோடு சேர்ந்து பார்லர் தொடங்க நாங்கள் முதலீடு செய்தோம் இது பிரான்சைஸ் முறையில் புதிய வழக்கம். அதேல்போல் பார்லருக்கு தேவையான பணியாட்கள் அமர்த்தலில் ஆதரவு அளித்தோம். இப்படி பல புதிய வழிகளை நாங்களே வடிவமைத்து செயல்படுத்தியது இன்று நூற்றுக்கணக்கான கிளைகள் அமைக்க உதவியது.

தொழில் போட்டிகளை சமாளிக்கும் விதம், வருங்கால திட்டங்கள் மற்றும் உங்கள் இலக்கு என்ன?

தொழில் தொடங்கி இரண்டாம் கட்டம் முடியும் நிலையில் இருக்கும் நாங்கள், மூன்றாம் கட்டத்திலும் அதே யுக்திகளை பின்பற்றுவது வளர்ச்சிக்கு உதவாது. எனவே சில புதிய திட்டங்களை தீட்டி வருகிறோம். ப்ரான்சைஸ் முறையிலும் சில மாற்றங்களை கொண்டுவரப் போகிறோம். எங்கள் பிராண்ட் பெயரை தக்கவைத்து கொள்ளவும், தரமான சேவை வழங்கலை உறுதி செய்யவும், ப்ரான்சைஸ் முறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளோம். ஒரு நிறுவன வளர்ச்சிக்கு முக்கியமானது இது, மேலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல பெயர் மற்றும் தரம் மிக அவசியமாகிறது. தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். 

ஒரு தொழிலில் போட்டி என்பது மிக அவசியம். போட்டி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, அது இருந்தால்தான் நாம் நம் பணியில் விழிப்பாக இருப்போம் என்பது என் கருத்து. இன்று பல துறைகளில் வரலாற்றுமிக்க கண்டுபிடிப்புகள் வருவதற்கு காரணமே சந்தையில் நிலவிவரும் போட்டி தான். சில புதிய பாடங்களையும் போட்டியின் மூலம் கற்கலாம். ஆரம்ப காலத்தில் சென்னை, சலூன் துறைக்கு ஏற்ற சந்தை இல்லை என பலரால் நம்பப்பட்டது, ஆனால் இன்று உலகிலேயே சலூன் துறை ஒழுங்குமுறையுடன் இயங்கக்கூடிய இடமாக சென்னை இருக்கிறது.

image


வருங்கால திட்டமாக இந்தியா முழுதும் குறிப்பாக வட இந்தியாவிலும், உலக அளவிலும் கால் பதித்து எங்கள் சலூன் கிளைகளை விரிவடையச் செய்து மேலும் பல பெண்களை தொழில்முனைவர்களாக்க வேண்டும்.

2020 ஆண்டிற்குள் 3000 கிளைகளுடன், 50000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி, 2025க்குள் உலகில் தலைசிறந்த சலூனாக நேச்சுரல்ஸ் உருவெடுக்கவேண்டும் என்பது எங்களின் இலக்கு.

இளம் தொழில்முனைவோருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?

பணம் மட்டும் குறிக்கோளாக இருத்தல் கூடாது, ஆனால் தோல்விகளின் போது சாய ஒரு இடம் இருப்பது நல்லது என்பது என் அனுபவம் மூலம் நான் சொல்கிறேன். ஏனெனில் நான் அவ்வாறு இல்லை அதனால் பல இழப்புகளோடு நீண்ட எல்லைவரை செல்லவேண்டி இருந்தது. ஆனால் நான் விதிவிலக்காக இருந்திருக்கலாம். இன்றைய சூழலில் முழு ரிஸ்க் எடுத்து ஒரு தொழில் முனைவர் தொழிலில் ஈடுபடவேண்டும் என்ற தேவையில்லை என்பேன். 

அடுத்து ஸ்டார்ட் அப் தொடங்கும் முன் முதலில் அனுபவம் தேவை. தொழில் தொடங்கும் முன் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து, ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். அதேப்போல் நிறுவனம் தொடங்கும் போதே முதலீடை பெற்று தொழிலை பற்றி பேசுவதை விட மதிப்பை பற்றி அதிகம் பேசுவதை நிச்சயம் தவிர்க்கவேண்டும். ஏனெனில் அது வளர்ச்சிக்கான நல்ல அறிகுறி இல்லை என்பது என் கருத்து. இளைஞர்கள் சுய முதலீட்டில் தொழில் தொடங்கவேண்டும் அதுவே அவர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தையும், வளர்ச்சியை அளிக்கும். பின்னர் அந்த வளர்ச்சியைக் கொண்டு முதலீடு பெற்றால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தேவை என்னவென்று நேரடியாக ஆராய்ந்து அறிந்துகொண்டு அதற்கேற்ப சேவைகளை வழங்குவதும் தொழில்முனைவரின் கடமையாகும்.

Add to
Shares
1.6k
Comments
Share This
Add to
Shares
1.6k
Comments
Share
Report an issue
Authors

Related Tags