பதிப்புகளில்

உத்வேக 'வெள்ளி'த்திரை | 'ஆரண்ய காண்டம்' எனும் பெருமித சினிமாவும் தமிழக தேர்தலும்!

8th Apr 2016
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

2012 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஒருநாள். 'ராணி சீதை ஹால்' அரங்கில் மதியம் 12 மணிக்கு 'ஆரண்ய காண்டம்' திரையிடல். சுமார் 400 இருக்கைகள் கொண்ட அரங்கின் வாசலில் 11.30 மணிக்கே ஏறத்தாழ 1,000 ரசிகர்கள் முண்டியடித்தனர். திரையிடல் நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் உடலன்ஸ் சிம்பொனியில் இரவு 8 மணிக்கு திரையிடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. நானும் நண்பனும் புத்திசாலிகளாக செயல்பட்டோம். உட்லன்ஸ் சிம்பொனியும் நிரம்பிவிடக் கூடும் என்பதால், முந்தைய ஷோவில் சுமாரான படம் என்றாலும் பரவாயில்லை என்று இருக்கைகளில் இருக்கமாக அமர்ந்துகொண்டோம். ஏழரை மணியளவில் தகவல் வருகிறது, 'இங்கு அல்ல... உட்லன்ஸ் அரங்கில்' என்று. ஏதோ ஒரு மொழியில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை பார்ப்பதை நிறுத்துவிட்டு சட்டென எழுந்தால், எனக்கு முன்னே நூற்றுக்கணக்கானோர் சீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தனர். உலகமே பின்பற்றும் ராஜதந்திரத்தை புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டதை எண்ணி எனக்கே சிரிப்பாக இருந்தது. உட்லன்ஸ் திரையரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருக்க திரையிடப்பட்ட 'ஆரண்ய காண்டம்'. டைட்டில் கார்டில் தொடங்கிய விசில், உத்வேகக் குரல்கள் இறுதி காட்சிகள் வரை நீடித்தது. படம் மட்டும் அல்ல... அதை தீவிர சினிமா ரசிகர்கள் கொண்டாடிய விதமும் என்னை வியக்கவைத்தது.

அப்போது தியேட்டரை விட்டு வெளியே வந்த என்னிடம் எழுந்த பல கேள்விகளில் சில:

* தியேட்டரில் 'ஓடாத' படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் இப்படி ஒரு வரவேற்பா?

* எந்த ஒரு சினிமா ரசிகர் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒவ்வொரு ஷாட்டையும் வாய்பிளந்து ரசிக்கத்தக்க ஒரு படைப்பு ஓடாதது ஏன்?

* சினிமா மீது ஓரளவு ஆர்வம் கொண்ட எனக்கு கூட இந்தப் படத்தை ரிலீஸின்போது தியேட்டரில் பார்ப்பதற்கு உரிய தூண்டுதல் கிடைக்கவில்லையே... படத்துக்கு சரியான ப்ரொமோஷன் இல்லையா அல்லது வேறு வகை அரசியலா?

image


'உனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இன்று வரையில், நீ பார்த்த தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த 10 படங்களைப் பட்டியலிடு' என்று என்னிடம் எவரேனும் கேட்டால், அந்தப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் படத்தின் பெயர் 'ஆரண்ய காண்டம்'.

என்னைப் பொறுத்தவரையில் தமிழின் பெருமித சினிமா இது. இந்தத் தொடரில் நான் முதலில் எழுத விரும்பிய படமும் இதுதான். ஆனால், இரண்டு மாத காலமாகவே நான் எழுத முயற்சி செய்து, எனக்கு 10 சதவீதம் கூட திருப்தி ஏற்படமால் டைப்பி டைப்பி டெலிட் செய்து என்னை துவளவைத்தது ஆரண்ய காண்டம். எனக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் வெற்றிகளுள் ஒன்றுதான்.

'எப்படியும் சுய திருப்தி வரப்போவது இல்லை. மனதில் உள்ள சுமையையாவது இறக்கிவைத்துவிடுவோமே' என்ற சுயநலனின் அடிப்படையில் ஆரண்ய காண்டம் பற்றி எழுதி முடித்துவிடுவது என்று தீர்மானத்தில்தான் டைப் செய்யத் தொடங்கினேன்.

கதை சொல்லும் விதம், திரைக்கதையின் நேர்த்தி, இயல்பு மீறாத வசனங்கள், பரபரப்பு மிகுதியாக இருந்தாலும் யதார்த்தம் சற்றும் குறையாத காட்சி அமைப்புகள், நடிகர்களின் பக்காவான பங்களிப்பு, ஒளி - ஒலி அமைப்புகள், கலை வடிவமைப்பு, பின்னணி இசை, ஒப்பனை... இப்படி எல்லா ஏரியாவிலும் கச்சிதத்துக்கு மேலான வார்த்தைகளைத் தேடும் அளவுக்கு ஒரு 'ப்யூர்' சினிமாவை தமிழில் பார்த்ததில்லை என்பேன்.

தியாகராஜன் குமாரராஜா குழு கையாண்ட திரை மொழி பற்றி எழுத வேண்டும் என்றால், அதற்குரிய சினிமா அறிவு எனக்குப் போதாது. அப்படியே தெரிந்த அளவில் எழுத நினைத்தாலும், அதையே ஒரு தொடராக எழுத வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அதைத் தவிர்த்து விடுகிறேன். கூகுளில் தமிழில் ஆரண்யம் காண்டம் என்று டைப் செய்தாலே அப்படத்தைப் பற்றிய அற்புதமான அலசல்கள் வாசிக்கக் கிடைக்கும். குறிப்பாக, இணையத்தில் தீவிரமாக இயங்கக் கூடிய தமிழ் சினிமா ஆர்வலர்களின் பதிவுகள், அந்தப் படத்தை ஃப்ரேம் பை ஃப்ரேம் ஆராதிப்பவை.

ஆரண்ய காண்டம் படத்தைப் பொறுத்தவரையில், நான் கொஞ்சம் பேச நினைப்பது, அந்தப் படம் முழுமையாக பேசிய 'நெகட்டிவிஸம்' எனும் எதிர்மறை மனிதர்கள் - எண்ணங்கள் - பண்புகள் பற்றியே.

image


நிழலுலகில் தன் கெத்து குறையாது பார்த்துக்கொள்ளும் முதிர்ந்த தாதா சிங்கபெருமாள். நீண்ட காலம் வலதுகரமாகவே இருந்துவிட்டு தலைமையேற்கத் துடிக்கும் பசுபதி. நடிகை ஆவதற்காக புறப்பட்டு இடையிடையே சிக்கி சீரழிந்து, சிங்கபெருமாளின் வனத்தில் மாட்டிக்கொண்ட சுப்பு. இந்தக் காட்டுக்குள் ஆண் முயலாக வலம் வரும் சப்பை. கடனில் தன் குடும்பத்தை இழந்திடாமல் மீட்பதற்கு, பணம் ஈட்டுவதற்காக சின்னப் பையன் கொடுக்காப்புளி எனும் மகனுடன் சேவல் சண்டைக்குப் புறப்படும் வாழ்ந்து கெட்ட ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த காளையன். ரத்த வாடையை நேசத்துடன் சுவாசிக்கும் இன்னொரு தாதா கோஷ்டியைச் சேர்ந்த கஜேந்திரன் - கஜபதி சகோதர்கள். போதைப்பொருள் கடத்தல் பின்னணியில், வெவ்வேறு கிளைக்கதைளைக் கொண்ட இந்தக் கதாபாத்திரங்களுக்கு தொடர்பு உண்டாகி, அவர்கள் அரங்கேற்றும் சதுரங்க ஆட்டம்தான் 'ஆரண்ய காண்டம்'.

தலை தொங்கிடும் அளவுக்கு வயதானாலும் தலைமையை விட்டுக்கொடுக்காத சிங்கபெருமாளின் கதாபாத்திரத்தின் முதன்மைப் பண்புகளை உள்ளடக்கிய மூத்த நபர்களை நம்மில் பெரும்பாலானோரும் வீட்டிலும் சமூகத்திலும் நாட்டிலும் அடையாளம் காண முடியும். எந்தச் சூழலிலும் மன உறுதியை விட்டுக்கொடுக்காத பண்பு என்பது மெச்சத்தக்கது என்று தோன்றினாலும், நமக்கான காலம் முடியும் தருவாயில், நமக்குப் பின்னே இருப்பவர்களுக்கு வழிவிடாது போனால் ஏற்படும் விளைவுகள் நம் தலையையே கொய்துவிடும் என்பதையும் அந்தக் கதாபாத்திரம் நமக்குச் சொல்கிறது.

பசுபதி... முழுத் திறமைகளையும் வளர்த்து தயார் செய்துகொண்ட பிறகும் தனக்கான இடத்துக்காக ஏங்கும் தகுதியாளன். வெறும் ஏக்கத்தோடு நிற்காமல் வேறு வழியின்றி துணிச்சலாக, எதிரி ஆன குருவை எதிர்க்கப் புறப்பட்டவன். நிஜ உலகில் பசுவாக இருக்கும் மனிதர்களுக்குள் அவ்வப்போது வெளிவரும் கொடூர மிருங்கள் போலவே நிழலுலகில் மிருகமாக வலம் வருபவர்கள் சிலரிடம் பசுக்கள் ஒளிந்து வாழ்வதை வெளிப்படுத்துபவன். ஆம், தான் அன்பு செலுத்தும் மனத்துக்காக உயிரை விடவும் தயங்காத குணம் அவனிடம் உண்டு. வேகத்துடன் விவேகம் முக்கியம் என்பதை உணர்த்தும் முக்கியமானவனும் கூட.

"புத்தருக்கு போதிபரம் மாதிரி ஒரு கேங்ஸ்டருக்கு சேஸ். எவன் போட்டுத் தள்ளுவான், எங்க போட்டுத் தள்ளுவான்ற பயம் இப்ப இல்லை. சாவு நேருக்கு நேரு பார்த்தப்புறம் எனக்கு குழப்பம் இல்லை. எல்லா கிளியரா இருக்கு." என்று அவசரத்திலும் நிதானமாக செயல்படும் உத்தியை பசுபதியிடம் இருந்து படிக்கலாம். "எதிராளிக்கு எதிராளி நமக்கு கூட்டாளி. இது அய்யா நமக்கு சொல்லிக் கொடுத்தது லெசன்" எனும்போது, ஏதோ ஓர் இடத்தில் கற்றுக்கொண்டதைப் பொருத்தமான இடத்தில் பின்பற்ற வேண்டும் என்பதை உணர முடிந்தது. ஆனாலும், அவனும் நெகட்டிவிஸம் நிரம்பியவனே.

அப்பா காளையன், சின்னப் பையன் கொடுக்காப்புளி இயல்பான மனிதத் தன்மை மிகுந்தவர்கள். தேவைக்கு மட்டுமே யாரையும் பெரிதாக பாதிக்காத அளவுக்கு 'நெகட்டிவிஸம்' நாடும் கதாபாத்திரங்கள். எல்லா சமூகத்திலும் மனிதர்களில் பெரும்பாலானோரும் இவர்களைப் போலவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான், ஓரளவு நிம்மதியாக வாழ முடிகிறது என்பது அவரவர் அனுபவம்.

எளிதில் விடுதலையாக முடியாத கூண்டுக்குள் சிக்கித் தவிக்கும் ஒருவர், தன் சர்வைவலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிவிடுவார் என்பதை உணர்த்தும் கதாபாத்திரம்தான் இளம்பெண் சுப்பு. தான் உயிர்பிழைக்க, தான் நேசிக்கும் அப்பாவி ஜீவனைக் கூட நசுக்கத் தயங்காத கல்மனம் மிரளத்தக்க நெகட்டிவிஸம். முதலில் யார் வெல்வது என்பது முக்கியம் அல்ல... கடைசியில் யார் ஜெயிப்பது என்பதே முக்கியம். தன்னை அடக்கிய ஆண்வர்க்கத்தை 'சப்பை'யாக்கிவிட்டு அசால்டாக சீறிச் செல்லும் சுப்புதான் பிரம்மிப்பூட்டும் ப்ரொட்டாகனிஸ்ட்.

காளையன், கொடுக்காப்புளிகளுக்கு அடுத்து நம் சமூகத்தில் சப்பைகளை அதிகம் பார்க்கலாம். நானும் பல தருணங்களில் சப்பையாக இருந்திருக்கிறேன் என்பதில் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. ஏனென்றால், என்னைச் சுற்றிலும் அவ்வளவு சப்பைகள் இருக்கிறார்கள். இதற்கு மேல் சப்பையைப் பற்றி என்ன சொன்னாலும் அது சப்பையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

கஜேந்திரன் - கஜபதி சகோதர்கள். வேகத்துக்கும் விவேகத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் முரட்டுத்தனத்துக்கும் உள்ள விகிதாச்சாரங்கள் மிகப் பெரிய அளவில் இருந்தால் ஏற்படும் பாதிப்புகளைப் புட்டுவைக்கும் அதீத நெகட்டிவ் கதாபாத்திரங்கள். நம் சமூகத்தில் இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பாதிப்பு அதிகம் என்பது தெளிவு.

image


ஒரு திரைப்படத்தின் அனைத்துக் கதாபாத்திரங்களிடமும் நெகட்டிவ் தன்மைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி கதை சொன்ன விதம்தான் 'ஆரண்ய காண்டம்' படத்தை முதலில் கவனிக்கவைத்தது. உலக சினிமா, உன்னத சினிமா என்று சொல்லிக்கொண்டு, சிலர் போலியான படைப்புகளைத் தரும் மலிவான உத்திகளும் இதில் இல்லை. சினிமா என்பது விஷுவல் மீடியா; அதில், எல்லாவற்றையுமே காட்சிப்படுத்தியே காட்ட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளின் சினிமாவை பலரும் மேற்கோள் காட்டுவது உண்டு.

ஆனால், சினிமா என்ற கலை வடிவம் அந்தந்த நாடுகளின் பின்புலத்தின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது என்பதை நான் நம்புகிறேன். அந்த வகையில், தமிழ் சினிமாவில் வசனத்துக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதே என் பார்வை. வசனத்தைக் குறைத்து காட்சிகள் மூலம் கதை சொல்வது என்பது நம் சூழலுக்கு யதார்த்தத்தை கொடுக்காது. ஏனென்றால், இயல்பிலேயே நாமெல்லாம் அதிகம் பேசிக்கொண்டே இருப்பவர்கள். எதையாவது யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்போம். நம்மில் பெரும்பாலானோராலும் பேசாமலேயே இருக்க முடியாது. அந்த வகையில், ஆரண்ய காண்டம் படத்தில் காட்சிகளுக்கு இணையாக வசனங்கள் - உரையாடல்கள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும். அதுதான் இது நம் சினிமா என்ற பெருமிதத்தைக் கூட்டுகிறது.

அதேபோல், நம் இந்திய சினிமாவின் தனித்தன்மைகளுள் ஒன்று பாடல்கள். அதைப் பயன்படுத்தும் விதம்தான் நம்மை குறைத்து மதிப்பிடவைக்கிறது. மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டால், நம் சினிமாவில் ஒருபோதும் பாடல்களை தவிர்க்க வேண்டிய நிலை தேவையில்லை. ஆரண்ய காண்டம் படத்தில் பாடல்கள் இல்லை என்று சொல்ல மாட்டேன். காட்சிகளின் பின்னணியில் இயல்பாக ஓடும் இளையராஜாவின் பழைய பாடல்கள் அனைத்துமே இப்படத்துக்கு உரிய பாடல்கள்தான்.

ஒரு சினிமா படைப்பு காலத்தைத் தாண்டி, வசிப்பிடம் - மாநிலம் - தேசம் கடந்து 'திரைப்பட ரசிகன்' என்ற ஒற்றை அடையாளத்தை மட்டுமே தாங்கி நிற்கும் மனிதர்களுக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பல அம்சங்கள் முக்கியமானதாக இருந்தாலும், கதை நிகழும் காலத்தின் மீதும் இடத்தின் மீதும் பார்வையாளர்களின் கவனம் குவியாத வகையிலான திரைமொழியில் கதை சொல்ல வேண்டும் என்று நம்புகிறேன். இது, ஆரண்ய காண்டம் படத்தில் மிகச் சரியாக கையாளப்பட்டிருக்கிறது. அதனால்தான் அப்படத்தில் இருந்த சிறு பிழை ஒன்றை, ஆறாவது முறையாக படம் பார்க்கும்போதுதான் கண்டறிய முடிந்தது.

கதைப்படி பாவா லாட்ஜ் இருப்பது பாண்டிச்சேரி பகுதியில். சென்னையில் இருந்து காரில் புறப்படும் சிங்கபெருமாள் ஆட்கள் பாவா லாட்ஜுக்குப் போகிறார்கள். அதேநேரத்தில், பாவா லாட்ஜில் தங்கியிருக்கும் காளையனும் கொடுக்காப்புளியும் அங்கிருந்து நடந்து சேவல் சண்டை விடும் இடத்துக்குச் செல்கிறார்கள். சென்னையில் இருக்கும் சிங்கபெருமாளும் அதே சேவல் சண்டைக்குச் செல்கிறார். அவர்கள் சந்திப்பு நிகழ்கிறது. இந்தச் சிறு பிழை, சென்னை - பாண்டிச்சேரியைத் தெரிந்தவர்களால் அறிய முடியும். ஆனால், இதை என்னால் படத்தை ஆறாவது முறையாக பார்த்தபோதே உணர முடிந்தது. அந்த அளவுக்கு நம் கவனத்தை ஒருமுகப்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்து படமாக்கிய தியாகராஜன் குமாராஜாவின் திரைத் திறமை வியக்கத்தக்கது.

கதை எதுவாக இருந்தாலும், ஒரு காட்சி கூட 'போர்' அடிக்காமல் நகர்த்தும் உத்தியை எப்படி வசப்படுத்துவது என்பதை நம் திரைப்பட மாணவர்கள், இளம் படைப்பாளிகள் 'ஆரண்ய காண்டம்' படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பார்க்கலாம். யதார்த்தம் துளியும் மீறாதா இப்படி ஒரு ரேஸியான படம் தமிழில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்லத் தோணுது.

ஆரண்ய காண்டம் படத்தின் திரை மொழி பற்றி சிலாகிப்பதை நிறுத்த முடியாது என்பதால், அந்த மேட்டருக்கு இங்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். இந்தப் படம் குறித்த மிகச் சிறப்பாக எழுதப்பட்ட சில பார்வைகளின் இணைப்புகளை மட்டும் தந்துவிடுகிறேன். இதோ...

* தியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா - ஷாஜி

* 'ஆரண்ய காண்டம்' - தமிழின் அரிய நிகழ்வு - மாமல்லன் கார்த்தி

* ஆரண்ய காண்டம் - பகுதி 1 - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா - சுரேஷ் கண்ணன்

* ஆரண்ய காண்டம் - பகுதி 2 - உலக சினிமாவின் அடையாளம் - சுரேஷ் கண்ணன்

* ஆரண்ய காண்டம் – விமர்சனம் - கருந்தேள் ராஜேஷ்

image


மீண்டும் நெகட்டிவிஸத்துக்கே வருகிறேன். நம்மை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வோம். நம்மைப் பற்றி நமக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு விதமாக தெரியும்; பழக்கமானவர்களுக்கு ஒரு விதமாக தெரியும்; கொஞ்சமாக அறிந்தவர்களுக்கு ஒரு விதமாக தெரியும். ஆனால், நம்மைப் பற்றி நமக்கு மட்டுமே தெரிந்த நம்மை யாருக்கும் தெரியாது. நம்மிடம் நாம் மறைத்து வைத்துள்ள ஈகோ, வக்கிரம், வன்மம், கோபம், கொடூரம் எல்லாம் நமக்கு மட்டுமே தெரியும். ஆரண்ய காண்டம் கதாபாத்திரங்களில் தேடிப்பார்த்தால் நிச்சயம் அவர்களுக்குள் நாம் எதோ ஒரு வகையில் தெரிவோம். அதுதான் எல்லைகளை கடந்து உலக சினிமா என்ற நிலையை எட்டவைக்கிறது.

எனக்கு 'ஆரண்ய காண்டம்' படக்குழுவை விட ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஒரு குழு. 2012-ல் தேசிய விருதுகளைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுதான் அது. தியாகராஜன் குமாரராஜாவுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும், பிரவீன் - ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு சிறந்த எடிட்டிங்குக்கான விருதும் வழங்கப்பட்டது. நெகட்டிவிஸ சினிமாவுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது என்பது இந்தியாவில் அரிதான நிகழ்வு. அது நடுவர் குழுவின் சினிமா அறிவை மட்டுமின்றி, ஆரண்ய காண்டம் படத்தின் திரைமொழி வல்லமையையும் காட்டுகிறது.

எல்லாம் சரி... தலைப்பில் சொன்ன மேட்டருக்கு இன்னுமா வரவில்லை என்று நீங்கள் கேட்பதை உணர முடிகிறது. ஆரண்ய காண்டம் படத்துக்கும் தமிழக தேர்தல் களத்துக்கும் என்ன தொடர்பு என்று புருவம் உயர்த்துகிறீர்கள். ஆரண்ய காண்டம் கதாபாத்திரங்களுடன் இப்போது தேர்தல் களத்தில் நிற்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. அது உங்கள் கற்பனைத் திறன்.

பிறகு..?

சாதாரண பார்வையாளராக ஒரு படத்தைப் பார்க்கும்போது, கதையில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள் ஒருவர் அல்லது இருவர் மீது நம் முழு கவனமும் ஈடுபாடும் இருக்கும். அந்தக் கதாபாத்திரத்துக்குதான் நம் சப்போர்ட் இருக்கும். சற்றே ஆழமாக யோசித்துப் பார்த்தால், நாம் சப்போர்ட் செய்யும் கதாபாத்திரங்களிடம் பாசிட்டிவ் அம்சங்கள் மிக அதிகமாக இருக்கும். இது இயல்புதான். ஆனால், ஆரண்ய காண்டம் கதாபாத்திரங்களில் நமது ஆதரவு யாருக்கு? நம்மைப் பொறுத்தவரையில், தனிப்பட்ட முறையில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ப்ரொட்டாகனிஸ்ட் யார்? நிச்சயம் ஒருவரை நாம் தேர்ந்தெடுத்து ரசித்து ஆதரித்திருப்போம். எந்த அடிப்படையில் தெரியுமா? யாரிடம் நெகட்டிவிஸம் சற்றே குறைவாக இருக்கிறது என்ற அடிப்படையில்!

ஆம், அப்படித்தான் நம் தேர்தலில் ஒவ்வொரு முறையும் பாசிட்டிவ் அம்சங்களே பெரிதும் இல்லாத, நெகட்டிவ் அம்சங்களில் சற்றே குறைவாக இருப்பதாகக் கருதி, ஒரு தரப்பை நம்மை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கிறோம்!

பின்குறிப்பு: இந்த அத்தியாயத்தை எழுதி முடித்த பிறகு ஒரு விஷயம் தெளிவானது. 'ஆரண்ய காண்டம்' பற்றி தெளிவாக எழுதும் அளவுக்கு எனக்கு சினிமா அறிவு எட்டுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதை உறுதிபடுத்திக்கொண்டேன்.

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

முந்தைய பதிவு: உத்வேக 'வெள்ளி'த்திரை |விடையற்ற ஒற்றை பதிலுடன் '101 கேள்விகள்'

எளிதாக கடந்திடக் கூடாத 'காதலும் கடந்து போகும்'

நம்மில் பலரது பார்வையை மாற்றும் 'குக்கூ'!

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக