தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில்முனைய ஊக்கம் அளிக்கும் பட்ஜெட்'16
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 2016 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சமர்பிக்க இரண்டு மணி நேரம் உரை நிகழ்த்தினார். இந்த பட்ஜெட்டில் அவர் விவசாயிகளுக்கான நிதி, கிராமங்களில் மின்மயமாக்கல், பால் பண்ணை திட்டங்கள் மற்றும் அரசின் விருப்ப திட்டமான தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார். அதோடு நாட்டின் தொழில்முனைவோரையும் அவர் மறந்துவிடவில்லை.
எனினும் இவற்றில் சில ஸ்டார்ட் அப் இந்தியா நிகழ்ச்சியின் போது பிரதரமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட வாக்குறுதிகளின் நீட்டிப்பாக அமைந்திருந்தன;
* ஒரு நாளில் நிறுவனங்களை பதிவு செய்யும் வகையில் கம்பெனிகள் சட்டம் 2013 ல் திருத்தம்.
பிரதமர் நரேந்திர மோடி தனது செயல்திட்டத்தில் குறிப்பிட்டிருந்த அம்சம் இது. மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலம் நிறுவனங்களை பதிவு செய்யும் வசதி பற்றி கூறியிருந்தார். மொபைல் செயலி ஏப்ரல் முதல் தேதி அறிமுகமாகலாம்.
* ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதல் ஐந்தாண்டு செயல்பாடுகளில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு முழு வரிவிலக்கு.
இதுவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த வாக்குறுதி தான். எனினும் குறைந்த பட்ச மாற்று வரி உண்டு.
புதிய அறிவிப்புகள் சில:
* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பெண் தொழில்முனைவோருக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
”தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் வேலை தேடுபவர்கள் எனும் நிலையில் இருந்து வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள் மற்றும் தொழில்முனைவோராக மாற வேண்டிய நேரம்” என ஜேட்லி குறிப்பிட்டார். அதே போல இந்த தொழில்முனைவோருக்கான தொழில்முனைவு மையங்களும் உருவாக்கப்படும் என குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு பாபாசாகிப் அம்பேத்கரின் 125 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வங்கி கிளையும் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கான இரண்டு திட்டங்களை கொண்டிருக்கும்.
* பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜானா திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு பயிற்சிக்கான ஆன்லைன் பாடத்திட்டத்தை அளிக்கும்.
தொழில்முனைவு பயிற்சி அளிக்கும் நேரத்தில் திறன் வளர்ச்சிக்காக 1500 மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இதற்காக ரூ.1,700 கோடி ஒதுக்கீடு.
* திவாலாகும் நிறுவனங்கள் தொடர்பான சட்டம்
இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் திவால் நிலை தொடர்பான சட்டம் கொண்டு வரப்படும். திவால் நிலையை, வங்கிகள், நிதி நிறுவனங்கள் கையாள இது வழி செய்யும்.
* சிறிய நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி
2015-16 கார்ப்பரேட் வரி விதிப்பு படி உள்ளூர் நிறுவனங்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. மேலும் நிறுவன நிகர லாபம் ரூ.10 கோடியாக இருந்தால் 5 சதவீத கூடுதல் வரியும் உண்டு. ஒரு கோடிக்கு கீழே இருந்தால் கூடுதல் வரி இல்லை. இவை இப்போது 29 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது.
* காப்புரிமை
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று சர்வதேச காப்புரிமை ( பேடண்ட்) பெற்றிருந்தால், அதன் மூலம் வரும் வருவாயில் 10 சதவீதம் மட்டுமே வரி விதிப்புக்கு இலக்காகும்.
இந்த பட்ஜெட் மூலம் நிதி அமைச்சகம் தொழில்முனைவோர்களின் தேவையை உணர்ந்து கொண்டிருக்கும் எண்ணத்தை அளிக்கிறது. எனினும் ஜி.எஸ்.டி மசோதா போன்றவற்றை அரசு எப்படி நிறைவேற்றுகிறது என பார்க்க வேண்டும்.
ஆக்கம்;தரூஷ் பல்லா | தமிழில்; சைபர்சிம்மன்
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
பட்ஜெட் 2016 தொடர்பு கட்டுரை:
பட்ஜெட் 2016: தொழில்முனைவுக்கு ஊக்கம் தரும் அம்சங்கள்!
வரிச் சலுகை முதல் ஆதார் வரை: சாமானியர்களுக்கான பட்ஜெட் அம்சங்கள்