பதிப்புகளில்

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் பகுதி- 9

ஸ்டார்ட்-அப் உலகில் தோல்வி என்பதே ஒரு பரீட்சை தான். அந்த பரீட்சையை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து போராடியவர் தான் ஜாக் மா.  

Karthikeyan Fastura
16th Apr 2017
Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share

உலகம் அறிந்த ஒரு சேல்ஸ் கதை ஒன்றை சொல்கிறேன். ஒரு எலெக்ட்ரானிக் நிறுவனத்தின் தலைவர் இரு சேல்ஸ்மேன்களை அழைத்து ஆப்ரிக்காவிற்கு செல்லுங்கள் அங்கு நமது டேப்ரிக்கார்டர்க்கு சந்தை இருக்கிறதா என்று பார்த்து வாருங்கள் என்று அனுப்பினார். இருவரும் ஆப்பிரிக்கா முழுதும் சுற்றிவிட்டு வந்து நிறுவனரிடம் ரிப்போர்ட் பண்ணினார்கள். 

முதல் சேல்ஸ்மேன் சொன்னார் “ நம்ம பொருளிற்கு அங்கு சந்தையே இல்லை. ஏனென்றால் அங்கு பெரும்பாலான ஊர்களில் கரண்டே இல்லை. மின்சாரவசதி இல்லாத ஊரில் எப்படி நம்ம பொருள் விற்கும்?” என்று கூறினார். இரண்டாவது சேல்ஸ்மேன் வந்தார். வரும்போதே அத்தனை மகிழ்ச்சி. “சார். நமக்கு ஆப்ரிக்காவில் பெரிய சந்தை இருக்கிறது. அங்கு ஒருத்தரிடம் கூட டேப் இல்லை. காரணம் கரண்டே இல்லை. ஆதலால் நம்ம டேப்ரிக்கார்டர்க்கு மட்டுமல்ல, நம்ம கம்பெனி ஜெனரேட்டர்க்கு, பேட்டரிக்கு, எல்லா எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் கூட அங்கு பெரிய சந்தை இருக்கிறது. இப்பவே நாம் அந்த சந்தையை பிடித்தால் நம்மை யாரும் அசைக்கமுடியாது” என்றார்.

image


ஒருவர்க்கு குறையாக தெரிந்தது மற்றொருவர்க்கு பெரிய வாய்ப்பாக தெரிந்தது. இதுதான் ஸ்டார்ட்-அப்பின் அடிப்படை. இதை கச்சிதமாக புரிந்து சாதித்தவர் தான் ஜாக்மா (Jack Ma). சீனாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர். சிறுவயதில் ஆங்கிலத்தில் பேசவேண்டி, அருகில் இருந்த நகரின் ஐந்துநட்சத்திர ஓட்டலுக்கு சென்று அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு இலவச கைடாக இருந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு பல வெளிநாட்டு நட்புகளும் கிடைத்திருக்கிறது. அது ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

மனிதர் சற்றுகுள்ளமாகவும் மிகவும் ஒல்லியான தேகமும் கொண்டவர். இதனால் பிறரின் ஏளனம் செய்து தாழ்வுமனப்பான்மை கொண்டாலும் போராடும் குணம் அவரிடம் இயல்பாகவே இருந்தது. கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மூன்று வருடம் தோல்வி நான்காவது முறை வெற்றி பெற்று BA ஆங்கிலம் சேர்கிறார். அதன்பிறகு அந்த கல்லூரியின் மாணவர் தலைவராக உருவாகும் அளவிற்கு வளர்கிறார். பின்னர் படித்துமுடித்து ஒரு பல்கலைகழகத்தில் பகுதிநேர ஆங்கில விரிவுரையாளராகவும் சேர்கிறார். அதற்குமுன் அவர் பல வேலைகளுக்கு முயற்சித்திருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது விதமான வேலைகளுக்கு முயற்சித்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. இதில் காவல்துறை உள்பட பலரும் அவரை நிராகரித்தார்கள்.

அவரது கதையை படிக்கும்போது ஓரிடத்தில் சிரித்தேவிட்டேன். அப்போது அவரது ஊருக்கு KFC வந்திருக்கிறது. வேலைக்கு ஆள் எடுத்தார்கள். அவர் உட்பட இன்டெர்வியுவிற்கு 24 பேர் வந்திருக்கிறார்கள். 23 பேரை வேலைக்கு எடுத்திருக்கிறார்கள் இவர் ஒருவரை தவிர. இது போக அவர் ஹாவர்ட் யுனிவர்சிட்டிக்கு 10 முறைக்கு மேல் விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். பின்னாளில் அதே யுனிவர்சிட்டி அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தபோது இவர் நிராகரிக்கவில்லை என்பது நகைமுரண்.

இணையம் வளர ஆரம்பித்த 1996இல் நண்பர்களுடன் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்குதான் இணையம் பற்றி தெரிந்திருக்கிறார். எதையாவது தேடிப் பார்ப்போமென்று பீர் என்று டைப் பண்ணினால் எல்லா நாட்டு பீர்களும் வந்திருக்கிறது, சைனாவை தவிர. மேலும் ஒரு சீன வெப்சைட் கூட அவர் கண்ணில் படவில்லை. என்னடா இது சீனாவிற்கு வந்த சோதனை. ஊருக்கு போறோம் முதல் வேலையா வெப்சைட் கம்பெனி தொடங்குறோம்.

நினைத்தபடியே அவர் சீனா வந்ததும் இணையதள நிறுவனம் தொடங்கி இணைய தொடர்பு கொடுத்து அதை பத்திரிகைகளுக்கு, வர்த்தகர்களுக்கு அறிமுகப்படுத்த அழைத்தார். அதுவும் ஒரு காமெடி. இணையத்தை தொடர்பு கொடுத்துவிட்டு முதல் இணைய பக்கம் லோடாக இரண்டு மணிநேரம் ஆனதாம். இப்படி ஒரு கடினமான சூழ்நிலையில் அவரது நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிற்கு இணைய உலகை அறிமுகப்படுத்தியது.

ஆரம்பகட்ட சறுக்கல்களுக்கு பிறகு அலிபாபா.காம் என்ற ஆன்லைன் வர்த்தக இணையதளத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறார் ஜாக்மா. நிறுவனத்தின் பெயர் வைக்க ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அப்போது மலேசியாவில் இருந்து முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருந்த சமயம். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது அரேபியாவின் ஆயிரத்தொரு இரவுகள் கதைகளில் வரும் அலிபாபா ஞாபகம் வருகிறது. நல்ல பெயராக இருக்கிறதே என்று யோசிக்கிறார். அவரின் டேபிளுக்கு உணவு கொண்டுவந்த பணிப்பெண்ணிடம் உனக்கு அலிபாபா பெயர் தெரியுமா என்று கேட்கிறார். ஓ தெரியுமே.. திறந்திடு சீசேம் என்று சொல்வாரே அவர் தானே. ஜாக்மாவிற்கு நம்பிக்கை பிறக்கிறது ஓகே உலகம் அறிந்த ஒரு சரியான பெயரை தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இன்னும் கண்ணில் பட்டவர் அனைவரிடமும் இதையே கேட்கிறார். எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. முடிவு செய்துவிட்டார். இது தான் நம்ம பிராண்ட்.

அடுத்து மளமளவென்று வேலை ஆரம்பித்து வளர்கிறது. அலிபாபா வளர்ச்சியின் வேகம் கண்டு அடுத்தடுத்து மூன்று நிறுவனங்கள் சுமார் 25 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்கின்றன. அடுத்து பெரிய முதலீடே கோராமல் அசுர வளர்ச்சி அடைகிறது. ஹாங்காங் பங்குசந்தையில் நுழைய அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஜாக்மாவின் வாழ்வில் முதல்முயற்சியில் எப்போதும் ஒரு தோல்வியும் அதன் பிறகு ஒரு பெரும் அசுர வெற்றியும் கிடைப்பதே வழக்கம். அதே போல ஹாங்காங் சந்தையில் கிடைக்காத அனுமதி அமெரிக்க பங்குசந்தையில் கிடைக்கிறது. வெறும் 12% நிறுவன பங்குகளை மட்டுமே பங்குசந்தையில் விடுகிறார். அலிபாபாவின் அசுரவளர்ச்சி உலகம் அறிந்த ஒன்று என்பதால் பங்கு வெளியிட்ட முதல்நாளே பங்கின் மதிப்பு எகிறியது. இன்று உலகத்திலேயே பங்குசந்தையின் மூலம் அதிக மூலதனம் திரட்டிய ஒரே நிறுவனம் அலிபாபா தான். 25 பில்லியன் டாலர்கள் நியுயார்க் பங்குசந்தையில் திரட்டப்பட்டது.

அலிபாபாவின் நுகர்பொருள் வர்த்தகம் அமேசான், ஈபே இரண்டையும் சேர்த்தாலும் அதிகம். அசுரவளர்ச்சிக்கு இன்னொரு பெயர் அலிபாபா. இன்று அலிபே, டோபோ, டிமால், அலிஎக்ஸ்பிரஸ் என்று பல கிளைநிறுவனங்களோடு மிக உறுதியாக வளர்ந்துகொண்டு வருகிறது.

தோல்விக்கு அஞ்சியே பலரும் தொழில்முனைவோராக வர தயங்குகின்றனர். உண்மை என்னவென்றால் ஸ்டார்ட்-அப் உலகில் தோல்விதான் முதல் பரீட்சை. அதை தாண்டாமல் வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. அதிலிருந்து மீண்டு வருவது தான் ஒரு ஸ்டார்ட்-அப்பின் முதல் விதி.

கதை தொடரும்...

(பொறுப்பு துறப்பு: இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக