பதிப்புகளில்

முன்னாள் கூகுள் ஊழியர்கள் சென்னையில் தொடங்கிய மெய்நிகர் தீர்வு ஸ்டார்ட் அப்!

இரு நண்பர்கள் தொடங்கிய Point105-AR என்ற நிறுவனத்தின் ஆப்ஃபேஸ்புக் ஃபில்டர்கள் 15 மில்லியன் தரவிறக்கங்கள் இதுவரை பெற்றுள்ளது!

YS TEAM TAMIL
23rd Aug 2018
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

சென்னைக்கு சென்றிருந்தபோது ஸ்டார்ட் அப் துவங்க சென்னையைத் தேர்வு செய்த சில இளம் தொழில்முனைவோரை சந்தித்தேன். சிலர் இங்கேயே வளர்ந்து வேறு பகுதிக்குச் செல்லத் தேவையெழாத காரணத்தால் இங்கு ஸ்டார்ட் அப்பைத் துவங்கியுள்ளனர். வேறு சிலர் உலகம் முழுவதும் சுற்றித்திரிந்து சென்னைக்குத் திரும்பி அங்கேயே நிறுவனம் துவங்கியுள்ளனர்.

அப்படிப்பட்ட இரு தொழில்முனைவர்கள்தான் இணைப்பு நிஜமாக்கம் என்கிற ஆக்மெண்டட் ரியாலிட்டி (AR) பிரிவில் பணியாற்றும் ஜெய் ராமாமிர்தம் மற்றும் பிரத்னயா கார்பாரி. இருவரும் பிஎச்டி முடித்திருந்தாலும் இவர்களது பெயருக்கு முன்பு டாக்டர் என்கிற பட்டத்தை பயன்படுத்துவதில்லை. 

இவர்களது பாயிண்ட்105-ஏஆர் (Point105-AR) நிறுவனம் இணைப்பு நிஜமாக்கம் சார்ந்த தீர்வுகளை வழங்குவது மட்டுமல்லாது வடிவமைப்பாளர்களும் நிறுவனங்களும் ஏஆர் சார்ந்து பணிபுரியும் முறையை மாற்றி அனைத்தையும் க்ளௌட்டிற்கு மாற்றுகிறது. அவர்களுடனான உரையாடலில் இருந்து சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பாயிண்ட்105.ஏஆர் நிறுவனர்கள்

பாயிண்ட்105.ஏஆர் நிறுவனர்கள்


ஷ்ரத்தா : பாயிண்ட்105.ஏஆர் – சமீபத்தில் நான் கேள்விப்பட்ட பெயர்களில் இது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும். நீங்கள் ஏஆர் 3டி அசெட் மேலாண்மையில் செயல்படுகிறீர்கள். இது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. ஜெய், பிரத்னயா இது குறித்து மேலும் பகிர்ந்துகொள்ளுங்கள்?

ஜெய் : ஏஆர் பகுதியில் கடந்த இரண்டாண்டுகளாக நாங்கள் மேற்கொண்ட பணியின் அடிப்படையிலேயே பாயிண்ட்105.ஏஆர் என்கிற பெயரை முடிவு செய்தோம். ஏஆர் டிஜிட்டல் அசெட்களுக்கு உயிரூட்டுகிறது. இன்று ஒரு வலைப்பக்கத்தையோ அல்லது ஒரு முகநூல் பதிவையோ பார்த்தால் அவை அனைத்துமே படங்களாக 2டி-யில் இருக்கும். 

ஏஆர் ஒரு பொருளை முப்பரிமாணத்தில் பார்க்கும் திறனை வழங்குகிறது. நீங்கள் பொருளை நகர்த்தலாம், சுழற்றலாம், பொருளின் பக்கவாட்டில் இருந்தும், பின்னால் இருந்தும், அடியில் இருந்தும் பார்க்கலாம். எந்த ஒரு பொருளையும் மெய்நிகர் உலகில் ஆறு டிகிரி கோணத்தில் பார்க்கலாம். 6 டிகிரி என்பது 0.105 ரேடியன்களாகும். நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பம் முற்றிலும் தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட பாதுகாப்பானவர்களிடத்தில் உள்ளது என்பதை உறுதிப்படுத்த விரும்பினோம். அதற்காகவே இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஷ்ரத்தா : பிரத்னயா, பெண் சிடிஓக்களை அதிகம் பார்க்கமுடியாத சூழலில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. கூகுள் நிறுவனத்தின் பணியை விட்டுவிட்டு இந்த ஸ்டார்ட் அப்பை துவங்க தூண்டுதலாக அமைந்த விஷயம் எது?

பிரத்னயா : நாங்கள் இருவருமே பிஎச்டி முடித்துள்ளோம். நான் அமெரிக்காவில் பிஎச்டி முடித்தேன். பின்னர் கூகுள் பே ஏரியாவில் இணைந்தேன். இங்கு இரண்டாண்டுகள் பணியாற்றினேன். அதன் பிறகு கூகுள் பெங்களூரு அலுவலகத்திற்கு மாறினேன். இங்கு என்னுடைய ஒரு திட்டத்திற்காக ’நிறுவனர் விருது’ வென்றேன்.

நான் தொழிநுட்பத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட நிபுணர். எனக்கு தொழில்நுட்பம் மிகவும் பிடிக்கும். எனக்கு அந்தப் பணியில் விருப்பம் இருந்தாலும் அதிக காலம் அங்கு பணியாற்றியதால் சொந்த முயற்சியில் ஈடுபட விரும்பினேன். அதற்காகவே மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் கூகுளை விட்டு விலகினேன். அந்த சமயத்தில்தான் என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னைக்கு மாற்றலாக தீர்மானித்தேன். அப்போதுதான் கூகுள் பெங்களூருவில் பணிபுரிந்த காலத்திலேயே எனக்கு அறிமுகமான ஜெய் ஓராண்டிற்கு முன்பாகவே சென்னைக்கு மாற்றலானது தெரிய வந்தது. இருவரும் இந்த நிறுவனத்தை நிறுவ தீர்மானித்தோம்.

இணைப்பு நிஜமாக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும். இது தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. முக்கிய தொழில்நுட்பப் பகுதியில் செயல்படத் துவங்குவதை நினைத்து மிகவும் உற்சாகமானேன். அப்படித்தான் இந்த முயற்சியைத் துவங்கினோம்.

ஷ்ரத்தா : இந்த மாதிரியின் தனித்துவம் என்ன? இதை மேலும் பலர் பின்பற்ற முடியாதா?

பிரத்னயா : சுருக்கமாகச் சொல்வதானால் ஏஆர் டொமெயினில் இருக்கும் 3டி அசெட்டை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்பம் தொடர்பாக நாங்கள் உருவாக்கும் IP எங்களது தனித்துவமான அம்சமாகும். ஏஆர் பிரிவில் நுகர்வோர் தரப்பில் இருந்தே எங்களது செயல்பாடுகளைத் துவங்கினோம். ஆண்ட்ராய்ட் மற்றும் iOS –ல் ‘MaskUp’ என்கிற எங்களது செயலி உள்ளது. ஃபேஸ்புக் ஏஆர் ஸ்டூடியோவில் எங்களது ஃபில்டர்ஸ் உள்ளது. உலகளவில் ஃபேஸ்புக்கில் மூன்றாம் தரப்பு டெவலப்பராக ஃபில்டரை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் நாங்கள்தான்.

எங்களது ஃபில்டர்களில் ஒன்று 15 மில்லியன் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் உங்களது முகத்தின் மேல் 3டி டிஜிட்டல் அசெட்டை சேர்ப்போம். இது குறித்து ஆழமாக ஆய்வு செய்தபோது இதிலுள்ள சில குறிப்பிட்ட தொழில்நுட்ப கூறுகள் பொழுதுபோக்கு, ஃபர்னிச்சர், பயிற்சி என பல்வேறு பிரிவுகளுக்கும் ஏஆர் பொருந்தும் என்பதை உணர்ந்தோம். எனவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்து இதைச் சார்ந்தே எங்களது IP-யை உருவாக்கினோம். இதை பல்வேறு 3டி தொழில்நுட்ப பிரிவிற்கும் SaaS சேவையாக வழங்கினோம்.

ஜெய் : அற்புதமான ஏஆர் அனுபவங்களை உருவாக்க 3டி கண்டெண்ட் கூறுகளை உருவாக்குவது அவசியம். 3டி மாடல்களை நிர்வகிப்பது மிகவும் கடினமாகும். பெரும்பாலான டூல்கள் ஆட்டோடெஸ்க் அல்லது அடோப்-ஆல் உருவாக்கப்படுகிறது. இவை ஃபைல் சார்ந்த செயல்முறைகள். இவை உங்களது டெஸ்க்டாப்பில் காணப்படும். இந்த ஃபைல்கள் நெட்வொர்க்கில் இருக்காது. இணையம் இன்னமும் 3டி துறையில் கால்பதிக்கவில்லை.

இரண்டாவதாக இமேஜ்களுக்கு JPEG போன்று ஏஆர்-க்கென பிரத்யேகமான புதிய வடிவமைப்பு மாதிரிகள் அறிமுகமாகியுள்ளன. இரு முக்கிய மாதிரிகள் அறிமுகமாகியுள்ளன. அவை GLTF மற்றும் USDZ. பெரும்பாலான நிறுவனங்களுக்கும் 3டி ஆர்டிஸ்டிற்கும் இந்த ஏஆர் மாடல்களை இந்த ஃபார்மாட்டிற்கு பொருந்தும் வகையில் உருவாக்குவது சிக்கலான விஷயமாகும். அந்த ஒட்டுமொத்த செயல்முறைகளையும் நாங்கள் தானியங்கிமயமாக்குகிறோம். அதாவது செயல்முறையை க்ளௌடிற்கு மாற்றுகிறோம். இதனால் ஒட்டுமொத்தத் திறன் அதிகரிக்கும்.

மூன்றாவதாக இந்த அசெட்களை சிறப்பாக பயன்படுத்திக்கொள்கிறோம். இதற்கான தொழில்நுட்பப் பயன்பாடு சிறப்பம்சம் பொருந்தியதாகும். 

வழக்கமாக ஒரு 3டி மாடலிங் ஆர்டிஸ்ட் 50 எம்பி, 100 எம்பி ஆகிய அளவுகளில் மாதிரிகளை உருவாக்குவார். இவை மொபைல் நெட்வொர்குகளில் பயன்படுத்துவது சாத்தியமல்ல. எனவே இந்த மாதிரிகளை வெவ்வேறு நிலைகளில் தானாகவே சுருக்கக்கூடிய டூலை உருவாக்கி வருகிறோம். இந்தப் பகுதியில் எங்களை நிலைநிறுத்துக்கொள்ள இந்த முயற்சி உதவுவதால் இதை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறோம்.

ஷ்ரத்தா : இத்தகைய செயல்பாடுகளுக்கு ஆர் & டி மற்றும் அதிகளவிலான முதலீடு தேவைப்படும். இது போன்ற தீர்வுகள் வழக்கமாக கூகுள் அல்லது அடோப் தரப்பில் இருந்தே வழங்கப்படும். ஆனால் நீங்கள் இதைக் கையில் எடுத்துள்ளீர்கள். இதற்கான முதலீடு தொடர்பான உங்களது திட்டம் என்ன?

ஜெய் : எங்களுக்கு இந்த இரண்டு ஃபார்மாட்களுமே சரியான தருணத்தில் உருவானது. பலரால் இதை புரிந்துகொள்ள முடியாது. இதற்கான செயல்முறை இன்னமும் அமைக்கப்படவில்லை. ஃபார்மாட்டிங் பணியில் ஈடுபடுவதன் மூலம் இதில் செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது முழுமையாக தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல. இதில் ஈடுபடத் துவங்கிய பிறகு பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வதன் மூலம் எங்களை நிலைநிறுத்திக்கொள்வோம். இதனால் தொழில்நுட்பத் தொகுப்பை உருவாக்குவதற்கான ஆர் & டி-யில் முதலீடு செய்யத் தேவையான வருவாய் ஈட்டப்படும்.

பிரத்னயா : நிறுவனங்களின் மாடல் உருவாக்கும் திறன் மேம்பட உதவுகிறது. எனவே இந்த மாதிரிகளின் அளவை அவர்கள் பெரிதாக்க விரும்பினால், 50 அல்லது 100 சதவீத அதிகரிப்பும்கூட சிறந்த பலனளிக்கும்.

இதில் ஒரு பகுதியிலிருந்து கிடைக்கும் பலனை அவர்கள் கண்டால் மற்ற பகுதிகளுக்கான திறன் மேம்பாடுகளுக்காகவும் இணைந்திருப்பார்கள். வடிவமைப்பாளர்கள் படைப்பாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்தலாம்.

ஷ்ரத்தா : எது உங்களை சென்னையில் செயல்பட வைத்தது?

ஜெய் : நாங்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து மாற்றலானோம். நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு இந்த இடம் பிடிக்கும். எனக்கு கடற்கரை பிடிக்கும். எனவே எனக்கு விருப்பமான இடம் மும்பை அல்லது சென்னை. ஆகவே இந்த இடத்திற்கு மாற்றலானேன்.

பிரத்னயா : நான் மும்பையில் வளரந்தேன். அவரைப் போலவே எனக்கும் கடற்கரை பிடிக்கும். என்னுடைய கணவர் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர். மூன்றாண்டுகளுக்கு முன்பு அவருடன் சென்னையிலேயே வசிக்க முடிவெடுத்தேன். எங்களுக்கு கடலை நோக்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. பெங்களூருவில் அவ்வாறு இல்லை. மிகவும் முக்கியமாக சென்னை அதிக ஸ்டார்ட் அப்களுடன் வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். தொழில்நுட்ப திறன், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றைப் பொருத்தவரை சென்னை சிறந்து விளங்குகிறது. இங்குள்ள வானிலைக்கு பழகிக்கொண்டால் இந்த நகரம் உங்களுக்கு விருப்பமான இடமாக மாறத் துவங்கும்.

ஸ்டார்ட் அப் சமூகம் உதவும் வகையிலும் கூட்டுறவுடனும் உள்ளது. நாங்கள் பெங்களூருவில் இல்லாததை நினைத்து வருந்துவதில்லை. ஏதேனும் மீட்டிங் இருந்தால் உடனே விமானம் ஏறி பறந்து சென்றுவிடும் தொலைவிலேயே பெங்களூரு உள்ளது.

ஷ்ரத்தா : இங்கு உங்களால் சிறந்த தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களை பணியிலமர்த்த முடிகிறதா?

பிரத்னயா : தற்சமயம் நாங்கள் சுயநிதியில் இயங்கி வருகிறோம். நாங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். சிறந்த தொழில்நுட்ப திறன் கொண்டவர்களை ஈர்க்கும் எங்களது திறன் மீது நம்பிக்கை உள்ளது. இண்டெர்ன்களுடன் பணியாற்றியுள்ளோம். அவர்கள் திறமைசாலிகள். அவர்களுடன் பணிபுரியும் அனுபவம் சிறப்பாகவே இருந்தது.

ஜெய் : கல்லூரி இண்டெர்ன்கள் திறமையானவர்கள். அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ் என அங்குள்ள ஃபேகல்டியுடனும் இணைந்திருந்து நாங்கள் விரும்பும் தொழில்நுட்பத்தில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக எங்களது நேரத்தில் பாதியை போக்குவரத்து நெரிசலில் செலவிடவில்லை. இதுவே மிகப்பெரிய மாற்றமாகத் தோன்றுகிறது.

ஷ்ரத்தா : வாடிக்கையாளர்களை எவ்வாறு சென்றடைகிறீர்கள்? விற்பனை நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடவேண்டிய சூழல் உள்ளதா? அல்லது உங்களுக்கு செவிமடுத்து இணைந்துகொள்கிறார்களா?

ஜெய் : நாங்கள் இன்னமும் அதிக வாடிக்கையாளர்களுடன் இணையவில்லை. இந்த ஆண்டு ’டார்கெட் ஆக்சலரேட்டரில்’ பங்கு வகிக்கிறோம். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு எங்களது வணிக செயல்பாடுகளைத் துவங்கினோம். எங்களுக்கு ஆழமான நுகர்வோர் ஏஆர் அனுபவம் உள்ளது. டார்கெட் ஆக்சலரேட்டர் நபர்களுடன் பேசினோம். நாங்கள் தீர்வுகாண முற்படும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடினோம். இந்த முயற்சி அவர்களது ஏஆர் தொகுப்பிலும் வலு சேர்க்கும் என்பதால் அவர்கள் இதில் ஆர்வம் காட்டினர். இதை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதை நடைமுறைப்படுத்திய பிறகு சிக்கல்கள் நிலவும் பகுதி குறித்த தெளிவு கிடைக்கும். அதைக் கொண்டு தொழில்நுட்பத்தை அதற்கேற்றவாறு வடிவமைத்து நிறுவனங்களுக்கு மதிப்பு கூட்டலாம். இந்த செயல்முறை மிகவும் முக்கியமானதாகும்.

ஷ்ரத்தா : இந்தப் பிரிவில் செயல்படவேண்டும் என எவ்வாறு தீர்மானித்தீர்கள்?

பிரத்னயா : இரண்டாண்டுகளுக்கு முன்பு ஏஆர் பகுதியைத் துவங்கியபோது சுவாரஸ்யமாக தோன்றியது. ஸ்நாப்சாட், போக்கிமான்கோ போன்றவை செயல்பட்டுக்கொண்டிருந்தது. இந்தத் தொழில்நுட்பம் ஆர்வமூட்டும் வகையில் இருந்தது. நுகர்வோர் பிரிவில் செயல்படத் துவங்கினோம். இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. சோதனை முறையில் இரண்டு க்ளையண்டுகளுடன் பணியாற்றியபோது இந்த குறிப்பிட்ட தொழில்நுட்ப பிரச்சனையைக் கண்டறிந்தோம். இத்தகைய பிரச்சனைகள் தொடர்ந்து ஏஆர் தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருப்பதை உணர்ந்தோம்.

ஷ்ரத்தா : ஏதேனும் ஒரு முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என நினைத்த பிறகு இந்த திட்டம் குறித்து யோசித்தீர்களா அல்லது ஏற்கெனவே ஒரு திட்டத்தை உருவாக்கிய பிறகு செயல்படத் துவங்கினீர்களா?

ஜெய் : நாங்கள் ஆரம்பத்தில் வீடியோக்களை உருவாக்கத் துவங்கினோம். குடும்ப உறுப்பினர்கள் கொண்ட வாட்ஸ் அப் குழுக்களில் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மெசேஜ் அனுப்புவதை அடிப்படையாகக் கொண்டே இந்த திட்டம் உருவானது. நாங்கள் பிறந்தநாள் வாழ்த்து மெசேஜ் தொடர்பான வீடியோவை உருவாக்கத் துவங்கினோம். நாங்கள் வீடியோ மெசேஜை நேரம் செலவிட்டு உருவாக்கத் துவங்கியதும் பலர் இத்தகைய வீடியோக்களை உருவாக்குவதை கவனித்தோம்.

எனவே இது போன்ற தருணங்களுக்காக ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கலாம் என நினைத்தோம். வீடியோவில் கவனம் செலுத்தத் துவங்கினோம். விரைவிலேயே வீடியோவிற்கு வாட்ஸ் அப் உகந்தது என்பதைக் கண்டறிந்தோம். ஆனால் அதில் வேடிக்கை என்கிற அம்சம் இடம்பெறவில்லை. பார்ட்டிக்கு அணியும் கேப், அலங்காரமாக பயன்படுத்தப்படும் ஸ்ட்ரீமர்கள், வண்ணத்தாள்கள், கேக் போன்றவை இடம்பெறவில்லை. இங்குதான் ஏஆர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவே நாங்கள் ஏஆர் பிரிவில் செயல்படத் துவங்கக் காரணமாக அமைந்தது. விரைவிலேயே இது இந்த காலகட்டத்தின் போக்கு என்பதைக் கண்டறிந்தோம்.

ஷ்ரத்தா : உங்களது மிகப்பெரிய கனவு என்ன? எது உங்களுக்கு உந்துதலாக அமைந்துள்ளது? ஒரு மோசமான நாளை சந்திக்க நேர்ந்தாலும் மனம் தளராமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரச் செய்யும் விஷயம் எது?

ஜெய் : ஃபேஸ்புக் ஏஆர் ஃபில்டர்கள் பிரபலமாகி வருவது உற்சாகமளிக்கிறது. நாங்கள் எங்களது முயற்சியில் இருந்து வருவாய் ஈட்டவில்லை. ஆனால் 15 மில்லியன் பேர் இதைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தியா முழுவதும் அனைத்து வயதினரும் பயன்படுத்தியுள்ளனர். தொழில்நுட்பம் பலரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கும்போது நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்தியாவில் அனைவரது போனிலும் முதல் முறையாக ஏஆர் ஒரு தொழில்நுட்பமாக இணைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறோம். ஆனால் ஸ்மார்ட்ஃபோன் புரட்சி ஏற்பட்டபோது நிலைமை இவ்வாறு இல்லை. ஏனெனில் அமெரிக்காவில் ஐபோன் அறிமுகமானபோது நாம் இரண்டு முதல் மூன்றாண்டுகள் பின் தங்கியே இருந்தோம். இன்று ஒவ்வொரு மொபைலிலும் ஏஆர் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று உலகின் மற்ற பகுதிகளுக்கு இணையாகவே நாமும் இருக்கிறோம்.

பிரத்னயா : இது இன்றைய நிலை. ஐந்தாண்டுகள் கழித்து பார்த்தோமானால் ஏஆர் அனுபவத்தைப் பெற பல்வேறு வடிவங்கள் உருவாகக்கூடும். நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது கண் கண்ணாடிகள், மெய்நிகர் கண்ணாடிகள் என பல்வேறு வடிவங்களில் ஏஆர் உங்களைச் சுற்றியிருக்கும். விரைவில் இதை அனைவரும் பயன்படுத்தத் துவங்கும் நிலையில் நாம் வசிக்கும் பகுதியே உற்சாகமான இடமாக மாறும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஷ்ரத்தா ஷர்மா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக