பதிப்புகளில்

2017-ல் வைரலாக பரவிய இணைய நிகழ்வுகள்!

17th Dec 2017
Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share

வீடியோக்கள், மீம்கள், டீவீட்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் என இணையத்தில் வைரலான விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் பரவலாக கவனத்தை ஈர்த்த முன்னணி வைரல் நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை:

பட உதவி: medium.com

பட உதவி: medium.com


பிபிசி தந்தை

இணையத்தில் வைரலாக பரவும் வீடியோவுக்கு திரைக்கதை எல்லாம் எழுத தேவையில்லை. அது தானாக நிகழும் என உணர்த்துவது போல அமைந்திருந்தது, பிரிட்டன் பேராசிரியர் ராபர்ட் கெல்லியை பிரபலமாக்கிய வீடியோ. தென்கொரியா அதிபர் மீதான கண்டன தீர்மானம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி பேராசிரியர் கெல்லியின் கருத்தை நேர்காணல் மூலம் கோரியிருந்தது. பேராசிரியரும் மிகுந்த சிரத்தையுடன் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். ஆனால் பின்னணியில் பார்த்தால் அவரது செல்ல மகள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து டிவி பேட்டி பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பாவிடம் பேசிக்கொண்டே இருந்தார். பேராசிரியர் காமிராவை பார்த்து பேசியபடியே செல்ல மகளை தனது ஒரு கையால் விலகச்செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார். இதற்குள் தம்பி பாப்பாவும் அறைக்குள் எட்டிப்பார்த்து குறும்பு செய்ய ஒரே ரகளையாகிவிட்டது. நல்லவேளையாக பேராசிரியரின் மனைவி வந்து பிள்ளைகளை அழைத்துச்சென்றார். பிள்ளைகள் அழுது முரண்டு பிடிக்க, பேட்டியை விட இந்த பாசப்போராட்டத்தை நேயர்கள் பெரிதும் ரசிக்க இந்த காட்சி பதிவான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி, பேராசிரியருக்கு பிபிசி டாட் எனும் பட்டப்பெயரை பெற்றுத்தந்தது.


நடிகையின் நவரசம்

விருது நிகழ்ச்சிகளில் நடிகைகள் ஆனந்த கண்ணீரோடு அல்லது முகமெல்லாம் மகிழ்ச்சியோடு போஸ் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் டேவிட் ஹார்பரின் ஏற்புறையின் போது, ஹாலிவுட் நடிகை வினோனா ரைடர், கோபம், மகிழ்ச்சி, குழப்பம், சந்தேகம் என ஒரே நேரத்தில் விதவிதமான முகபாவணைகளை வெளிப்படுத்தி அசர வைத்தார். இப்படி மொத்தம் 22 விதமான உணர்வுகளை ரைடர் வெளிப்படுத்த, அந்த கிளிக்குகளை பார்த்து ரசித்த இணையவாசிகள் அதை வைரலாக்கினர்.

image


சூப்பர்வுமன் பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் படம், தொலைக்காட்சித்தொடர் என அசத்தத் துவங்கிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல விஷயங்களுக்காக கவனத்தை ஈர்த்தாலும், மெட் கேலா எனும் நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த ஆடை தான் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் பக்கத்தில் மிக நீளமான வால் பகுதியை கொண்டிருந்த இந்த ஆடை, இப்படி ஒரு ஆடையா? என வியக்க வைத்ததோடு, இந்த ஆடையை கொண்டு பிரியங்கா பலவிதமான மாயங்களை செய்வது போன்ற மீம்களும் உருவாக்கப்பட்டு இணையவெளி முழுவதும் பரவியது. இதே போல ஆஸ்கர் விருது நிகழ்ச்சிக்காக ப்ரியங்கா அணிந்திருந்த பிரத்யேக டிசைன் கொண்ட ஆடையும் இணையத்தில் கேலிக்கு இலக்கானது.

image


இன்ஸ்டாகிராம் நாயகி

குவின் பே என செல்லமாக அழைக்கப்படும் பிரபல பாடகி பியான்ஸ் நோவல்ஸ், இன்ஸ்டாகிராம் ராணியாகவும் திகழ்கிறார். ஆண்டு துவக்கத்தில் அவர் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் புகைப்படம் மூலம் கவித்துவமாக பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படம் பத்து லட்சத்திற்கு மேல் லைக்குகளை அள்ளி, அதிகம் விரும்ப்பட்ட புகைப்படமாக ஆனது. சில மாதங்கள் கழித்து அவருக்கு இரட்டைக்குழந்தை பிறக்க, அந்த செய்தியையும் புகைப்பட்டத்துடன் பகிர்ந்து கொண்டார். அவர் இரட்டைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு கொடுத்த போஸ் பிரபலமானதோடு, அதே பாணியில் பல அம்மாக்கள் தங்கள் இரட்டைக்குழந்தைகளுடன் போஸ் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவின.

image


ஒட்டகச்சிவிங்கி லைவ்

பூனைகள் மீது இணையத்திற்கு தனி காதல் உண்டு என்பது தெரிந்த விஷயம் தான். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பூனை வீடியோக்களே இதற்கு சாட்சி. பூனைகள் மட்டும் அல்ல ஒட்டகச்சிவிங்கியும் கூட இணையத்தை மயக்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனியார் விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்படும் ஒட்டகச்சிவிங்கி, நான்காவது முறையாக இந்த ஆண்டு குட்டி போட்டது. ஒட்டகச்சிவிங்கியின் பிரசவம் இணையத்தில் லைவ்ஸ்டிரீமிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பாக லட்சக்கணக்கானோர் அந்த ஒளிபரப்பை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

யார் இந்த வாலிபர்

புதிய படம் தான் என்றில்லை, அழகான பழைய படமும் கூட இணையத்தை கவர்ந்துவிடக்கூடும். ஸ்டாக் போட்டோ வகையை சேர்ந்த ஒரு புகைப்படம் இப்படி தான் லட்சக்கணக்கானோரை கவர்ந்தது. கேர்ள்பிரண்டுடன் செல்லும் இளைஞர் ஒருவர் தன்னை கடந்து செல்லும் அழகான இளம்பெண்ணை தன்னை அறியாமல் திரும்பி பார்ப்பது போல அமைந்திருந்த இந்த புகைப்படம் திடிரென எங்கிருந்தோ எட்டிப்பார்த்து கவனத்தை ஈர்த்தது. இது ஒரு ஸ்டாக் போட்டோ என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இணையவாசிகள் இந்த படத்தை கொண்டு எண்ணற்ற மீம்களை உருவாக்கி அசத்தினர்.

image


ஒபாமா மனைவியின் கோபம்

அமெரிக்காவின் புதிய அதிரபாக டொனால்டு டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அதிபராக விடைபெறும் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மிச்செல் ஒரக்கண்ணால் கோபமாக பார்ப்பது போன்ற காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக பலவித கருத்துக்கள் நிலவிய சூழலில் அவரின் இந்த போசை வைத்துக்கொண்டு பலவிதமான மீம்கள் உருவாக்கப்பட்டன. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தினாலும், வெள்ளைமாளிகையை விட்டு பிரியும் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அழுகை பொத்துக்கொண்டு வந்ததால் அதை அடக்க முயன்றேன் என மிச்செல் இந்த படத்திற்கு விளக்கம் அளித்தார்.

உலகை குழப்பிய டிவீட்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிரடி அறிவிப்புகளால் அதிரச்சி அலைகளை ஏற்படுத்தியதோடு, தனது டிவீட்டாலும் குழப்பத்தை ஏற்படுத்தினார். பதவி ஏற்ற சில மாதங்களில் covfefe எனும் வார்த்தையை தனது குறும்பதிவில் பயன்படுத்தியிருந்தார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் எனத்தெரியாமல் டிவிட்டரில் குழம்பிய பலரும் இதை ரிடீவிட் செய்தனர். இது வார்த்தை பிழையா அல்லது விஷேச அர்த்தம் கொண்டதாக எனத்தெரியாமல் பலரும் தவித்த நிலையில் இந்த குறும்பதிவு வைரலாக பரவியது. பின்னர் டெலிட் செய்யப்பட்டுவிட்டது என்பது வேறு விஷயம்.

ஷாப்பிங் லிஸ்ட்

image


கணவர்களை கடைக்கு அனுப்பும் போது அவர்கள் சொதப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்கான மனைவிகள் கொஞ்சம் விரிவாகவே குறிப்புகளை கட்டளைகளாக அளிப்பதுண்டு. இந்தியாவை சேர்ந்த இரா கோவல்கர், இப்படி வெகு நுணுக்கமாக தயாரித்த ஷாப்பிங் லிஸ்ட் இணையத்தை வெகுவாக கவர்ந்தது. கணவர் காய்கறி வாங்கச்செல்லும் போதெல்லாம் அழுகலாகவும், தவறான அளவுகளிலும் வாங்கி வருவதால் நொந்துப்போனவர், எந்த எந்த காய்கறியை எப்படி பார்த்து, எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் வெகு நுணுக்கமாக ஒரு லிஸ்ட்டை எழுதி கொடுத்திருந்தார். இந்த லிஸ்ட் டிவிட்டரில் பகிரப்பட்டு வைரலாகி பலரையும் பேச வைத்தது.

இந்த பட்டியலில் எப்படி ஜிம்க்கி கம்மல் வீடியோவை சேர்க்காமல் இருப்பது. ஓணம் பண்டிகை விழா ஒன்றில் பாடப்பட்டு இணையம் முழுவதும் பிரபலமான இந்த நடன வீடியோவை யூடியூப் நிறுவனமே தனது வைரல் பட்டியலில் சேர்த்துவிட்டதே!

Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share
Report an issue
Authors

Related Tags