பதிப்புகளில்

நீட் தேர்வு: கேரளா, ராஜஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு ஓடோடி வந்து உதவும் நல் இதயங்கள்!

Chitra Ramaraj
4th May 2018
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இதற்கான நீட் தேர்வு நாளை, அதாவது வரும் 6ம் தேதி நாடு முழுவதும் உள்ள மையங்களில் நடைபெற இருக்கிறது.

இந்தத் தேர்வில் தமிழகத்தில் உள்ள 6500 மருத்துவ இடங்களுக்கு ஒரு லட்சத்து ஏழாயிரம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இதில், அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 9,000 பேர், தனியார் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 98 ஆயிரம் பேர் ஆகும்.

image


தமிழகத்தில் சென்னை உட்பட 10 இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள மாணவர்கள் கேரளா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் உள்ள மையங்களுக்கு நீட் தேர்வெழுத செல்ல இருக்கின்றனர். இது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை மட்டுமின்றி சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 70 சதவீத மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும், பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

நீட் தேர்வே கூடாது என கடந்தாண்டு பல போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது தமிழகத்தில் ஏன் போதிய தேர்வு மையங்களை அமைக்காமல், மாணவர்களை அலைக்கழிக்கிறார்கள் என்ற கண்டனக்குரல் வலுத்துள்ளது.

தமிழக அரசு உத்தரவு:

இதற்கிடையே, நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் தமிழக மாணவர்களை சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு அரசு செலவில் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட கல்வி முதன்மை அலுவலகர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் என்றும், நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர் மற்றும் உடன் செல்லும் ஒருவருக்கு பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் பெற்றுக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, அடையாள அட்டையை காட்டி மாணவர்கள் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்கள் 14417 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

image


கட்சித் தலைவர்கள்:

தமிழக அரசு மட்டுமின்றி, சில அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும் கட்சியின் சார்பாகவும் தமிழக மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். அவர்களின் விபரமாவது:

டி.டிவி தினகரன்: கேரள மாநிலத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கபட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்கும் வசதியும், தேர்வு மையத்துக்கு வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சித் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 9363109303, 9994211705, 8903455757, 7373855503 என மொத்தம் நான்கு போன் நம்பர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிமுன் அன்சாரி: நீட் தேர்வுக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்ல பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக தன்னை அணுகுமாறும், அவர்களுக்குத் தேவைப்படும் பொருளாதார உதவிகளை நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்வதாகவும் நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

அவரைத் தொடர்பு கொள்ள : 9940738572, 9092020923, 04365 _247788.

கேரள முதல்வர்: நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

‘நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு’ உத்தரவிட்டுள்ளார்.

நல்ல இதயங்கள்:

இது ஒருபுறம் இருக்க, மொழி தெரியாத வெளிமாநிலங்களில் தமிழக மாணவ, மாணவிகள் கஷ்டப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டவும், உதவிகள் செய்யவும், நல்ல இதயங்கள் பல தாமாக முன்வந்துள்ளன.

புனே பொறியாளர் விஜய் சோலைசாமி:

புனேயில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சோலைச்சாமி, நீட் தேர்வு எழுதும் 20 மாணவர்களுக்கு சென்னையில் உள்ள நண்பர்களின் உதவியுடன், கேரளாவுக்கும் ராஜஸ்தானுக்கும் தேர்வு எழுதச் செல்ல, விமான பயணச்சீட்டு அல்லது ரயில் பயணச்சீட்டு வாங்குவதற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என யாராவது, மாணவர்களின் ஹால் டிக்கெட்டை புகைப்படமெடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ மெயில் மூலமாகவோ தனக்கு அனுப்பி வைத்து, தேவையான உதவியைப் பெற்று கொள்ளலாம் என இவர் தெரிவித்துள்ளார்.

விஜய் சோலைசாமியை +91 8220092777 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது viji_@yahoo.com என்ற இமெயில் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

செல்வ அரன்கேசன்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வரும் செல்வ அரன்கேசன், தனது பகுதியில் தமிழக மாணவர்களுக்குத் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தால், தன்னால் இயன்ற உதவி செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

அவரை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: +91-8943268290

வின்சென்ட் சேவியர்

எர்ணாகுளத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதி மற்றும் தேர்வு மையத்துக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக வின்செண்ட் சேவியர் என்ற நபர் தெரிவித்துள்ளார். 

அவரது தொடர்பு எண் : 9788654792, 7010020380

ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம்

ராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தினர் நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் வரும் தமிழக மாணவ மாணவிகளுக்குத் தேவையான வாகன உதவி, தங்குவதற்கான வசதி, உணவு, தேர்வு நடைபெறும் இடத்தை அடைவதற்கான உதவி அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். கீழ்க்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.

திரு. முருகானந்தம் (9790783187), திருமதி. சௌந்தரவல்லி (8696922117), திரு.பாரதி (7357023549)

சமூகவலைதளங்களில் உதவி:

மொழி தெரியாத மாநிலத்தில் என்ன செய்வது என்ற மாணவர்களின் தவிப்பைக் கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதாக அறிவித்துள்ளனர். இதற்காக ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்டவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் விபரமாவது:

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர் பிரபு காந்தி, உதவிகளைப் பெற தனது எண்ணை வெளியிட்டுள்ளார். அவரது தொலைபேசி எண்: 9751172164

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் நீட் தேர்வு எழுத செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

இவரை 9788994099, 8248199895, 7598249353 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல், நீட் தேர்வுக்கான தேர்வு எழுத கேரள மாநிலத்திற்கு வருகை தருவோரின் உதவிபெற தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என ஏழு பேரின் தொலைபேசி எண்கள் இந்த ஃபேஸ்புக் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.

இவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான். இன்னும் எத்தனையோ பேர் நீட் எழுதச் செல்லும் மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

திரையுலகினர் உதவி:

சமூகத்தில் எந்தப் பிரச்சினை என்றாலும் தங்களை வாழ வைக்கும் மக்களுக்காக திரை உலகினர் குரல் கொடுக்க மறப்பதில்லை. அந்தவகையில் நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்காக தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் தங்களால் இயன்ற உதவியை செய்ய முன்வந்துள்ளனர்.

நடிகர் பிரசன்னா:

இது தொடர்பாக நடிகர் பிரசன்னாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 

“நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு என்னால் உதவ முடியும். உதவி வேண்டுவோர் உங்களின் ஹால் டிக்கெட் போன்ற விவரங்கள் மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் விவரங்களை எனக்கு அனுப்பவும். நான் உங்களின் பயண டிக்கெட்டை பதிவு செய்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

அவரை இந்த பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

காயத்ரி ரகுராம்:

நடிகை காயத்திரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், 

“என்னால் ஒரு மாணவரின் போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளைச் செய்து தரமுடியும். நான் அவ்வளவு வசதி படைத்தவள் இல்லை. இருப்பினும் என்னால் ஒருவருக்கு உதவ முடியும்,” எனப் பதிவிட்டுள்ளார்.

அவரை இந்த பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

image


நடிகர் அருள்நிதி:

இது தொடர்பாக நடிகர் அருள்நிதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“நானும், axess Film-ம் இணைந்து 20 அரசுப் பள்ளி மாணவர்கள் வெளி மாநிலத்துக்குச் சென்று நீட் தேர்வு எழுத உதவி செய்கிறோம். தொடர்புக்கு : 9841777077.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர் கூட்டமைப்பு SFI:

நீட் தேர்வெழுத கேரளம் செல்லும் தமிழக மாணவ/மாணவியருக்கான SFI (இந்திய மாணவர் கூட்டமைப்பு) உதவி செய்வதாகக் கூறியுள்ளது. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிளிலும் தேர்வு மையங்களிலும் SFI உதவி மையங்கள் செயல்படும்.

உதவி எண்கள் : எர்ணாகுளம் - ஜுனைத் - 9048364036 | கொல்லம் - ஹரி - 9495924144

பத்தனந்திட்டா - விஷ்ணு - 9496101494

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்:

கேரளா மற்றும் ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரும் முன்வந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

உதவி தேவைப்படுவோர் 9677208927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், வெளிமாநிலத் தேர்வுமைய உத்தரவால் எந்த மாணவரின் கல்வியும் தடைபட்டுவிடக் கூடாது என்ற தார்மீக கோபத்துடன் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களும் உதவ கிளம்பி இருக்கிறார்கள். இந்த நீட் தேர்வு சத்தமே இல்லாமல் ஒரு மௌன புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.  

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags