பதிப்புகளில்

அரசியலை ஈர்க்குமா ரஜினி காந்தம் !

ஊரெல்லாம் ஒரே பேச்சு, ஆனா நடக்குமா நடக்காதா என்பதே கேள்வி?

T.M.Viswanaath null
25th Jun 2017
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

ரஜினி காந்தம், தமிழ்நாட்டை ஆளும் காந்தமா?

ரஜினி உண்மையில் ஒரு காந்தம்தான்...

பெங்களூருவில் பேருந்து நடத்துனராக தன் வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் சென்னைக்கு சினிமா வாய்ப்புக் கேட்டு வந்து, தரமணி ஃபில்ம் இன்ஸ்டிடியூட்டிற்கு ஒரு முறை வந்த ஜெயலலிதாவை வியப்புடன் பார்த்தவர். ஆனால், சில ஆண்டுகளில் அதே ஜெயலலிதாவின் வீட்டருகே போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கி வசித்தவர்.

அவர் எதைச் செய்யவேண்டும் என்று முனைகிறாரோ அதில் முழு அளவு திறனை செலுத்தி வெற்றி பெறக்கூடிய ஒரு ஆளுமை கொண்டவர் ரஜினிகாந்த்.

image


ரஜினிகாந்திடம் எவரிடமும் இல்லாத 'ஸ்பார்க்' ஒன்று அணையாமல் இருந்து கொண்டே இருக்கிறது.

அவரது முதல் சினிமாக் காட்சி ஒரு இரும்புக் கதவை திறந்து கொண்டு உள்ளே வருவது என்று நினைவு. அன்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து வெற்றிமேல் வெற்றியைக் குவித்து, இந்தியாவிலேயே எந்த ஒரு சூப்பர் ஸ்டாரும் எடுத்திராத ஒரு சப்ஜெக்டான தலித் ஆளுமையை துணிச்சலாக எடுத்தவர் ரஜினி காந்த். ஆக, தனக்கு சரி என்று பட்டுவிட்டால் அதனைச் செய்து முடிக்கும் அசாதாரண உறுதி கொண்டவராகவே அவர் இருக்கிறார். 

35 வயதுக்கு மேல் பிறந்த நாள் கொண்டாடாத, தன் வயதை ரசிகர்கள் தெரிந்து கொள்ளவேகூடாது என்று கதைநாயகர்கள், கதை நாயகிகள் வலம் வந்த காலத்தில் வழுக்கைத் தலையோடு, நரைத்த தாடியோடு துணிச்சலாக தன் இயல்பான தோற்றத்தில் பொதுவெளியில் தோன்றியவர் ரஜினிகாந்த். பொதுவெளியில் நடிக்காமல் இயல்பாக இருப்பதே ஒரு பெருங்குணம். 

ரஜினி காந்தின் எல்லாத் திரைப்படங்களிலும், பேச்சுக்களிலும் எளியவரின் வலியும், வேதனையும் பிரதிபலிக்கும். இந்தப் பெரும் திறனும், பெருங்குணமும் சினிமாவுக்கும், அவரது பக்தி சார்ந்த ஆளுமைக்கும் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

ஆனால், அரசியல் என்பது அடிப்படையிலேயே இந்த குணங்களுக்கு நேர்மாறானது. வேண்டுமானால் பாரதிய ஜனதா போன்ற பெருங்கட்சியின் உறுப்பினராகி, அவர்கள் கொடுக்கும் பதவியில் அமர்ந்து கொண்டு அவர்கள் அரசியல் ஒரு அங்கமாக சுலபமாகக் காலம் நகர்த்திவிடமுடியும். 

ஆனால், ஒரு தனி அரசியல் கட்சி தொடங்கி தொண்டர்களை இணைத்து, நிர்வாகிகளை பிரித்து, போட்டி கட்சிகளைச் சந்தித்து, வாக்கு வங்கி அரசியலை உருவாக்குவது என்பது உடனே முடியாத ஒன்று.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டபோது, விஜயகாந்துக்காக, கதவை கொஞ்சமாக திறந்து வைத்து அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கை மணி அடித்தபோது, அதைப் பயன்படுத்திக்கொள்ள இயலாத நிலைக்கு விஜயகாந்த ஆளானதில் இருந்து இன்றுவரை கூட அவர் மீதான பொதுமக்கள் எதிர்பார்ப்பு அப்படியே இருக்கிறது. காரணம் விஜயகாந்திடம் மறைந்த எம்ஜிஆர் மீது பற்றுக்கொண்ட ஒரு தொண்டர் வட்டம் இருந்தது, ஒரு கட்டமைக்கப்பட்ட கட்சி இருக்கிறது.

அதன்பிறகு, சாதிக்கட்சிகளைத் தெள்ளத் தெளிவாக ஒதுக்கிய தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஜெயலலிதாவா, கருணாநிதியா என்றால் ஜெயலலிதாவுக்கே ஆதரவு அளித்தார்கள்.

அந்த ஆதரவுதான் இன்றுவரை அக்கட்சியை ஆட்சியில் அமரவைத்து இருக்கிறது. விளம்பரங்கள், ஊடகச் செய்திகள் என எத்தனை முயற்சிகள் செய்யப்பட்டாலும்கூட மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

பாஜகவின் கணிப்பு எப்படியாவது தமிழ்நாட்டில் கால் ஊன்றிவிடவேண்டும் என்பது. ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்பது. இந்த ஆசையை உண்மையில் மறைமுகமாகத் தூண்டியவர் ஜெயலலிததான். ஆனால், அவர் பாஜகவை எங்கே எவ்வளவு தொலைவில் வைத்திருக்க வேண்டும் என்பதில் மிக மிக சாதுர்யமாகவே அவர் காலகட்டத்தில் நடந்து கொண்டார்.

அவருக்குப்பின்னர், திமுக தலைவர் கருணாநிதிக்குப்பின்னர் தங்கள் கனவு எளிதில் நிறைவேறும் என்றே பாஜக எண்ணுகிறது.

பாஜகவின் கணிப்பு என்னவென்றால், தமிழ்நாட்டு மக்கள் திரைத்துறைப் பிரபலத்தை மட்டுமே தங்கள் ஆட்சியாளராக அங்கீகரிப்பார்கள். எனவே, ஒரு திரைத்துறைப் பிரபலத்தை முன்னிறுத்தினால் எளிதில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பதே.

ஆனால், தனிப்பட்ட ரீதியில் ரஜினி காந்த், பாஜகவின் இழுத்தலுக்கு வளைவாரா என்பது மிக முக்கியமான கேள்வி.

அப்படி ஒருவேளை வளைந்தால், உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தைப் போல ரஜினி காந்தை முன்னிறுத்தி வெற்றி பெற வைக்கலாம் என்றாலும்கூட அதிலும் முரண்பாடுகள் உள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசியல் ரீதியாக கடுமையாக உழைத்தவர். அவரது அரசியல் உழைப்புக்கென்று ஒரு தனி வாக்கு வங்கியே அங்கே இருந்தது, உண்மையைச் சொல்லப்போனால் பாஜகவின் உத்திரப் பிரதேச வெற்றியே யோகி ஆதித்யநாத்துக்கு கிடைத்த வெற்றிதான். எனவேதான் அவருக்கு நரேந்திர மோடி அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்.

ஆனால், ரசிகர் மன்ற பின்னணியை வைத்து மட்டும் அல்லது குழம்பிக் கிடக்கும் அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களைத் தன்வசம் ஈர்த்து காரியத்தை சாதித்து விடலாம் என்ற கோணத்தில் பார்த்தாலும்கூட, அதிமுகவின் அமைச்சரவையும், எம்பிக்களும்கூட ஏற்றுக்கொள்ளலாமே தவிர தொண்டர்கள் ரஜினியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஏதோ ஒன்று செய்து ரஜினிகாந்தை, பாஜக தமிழ்நாட்டின் முதல்வராக்கினால் அது ஒரு கொடுக்கப்பட்ட பதவியாகத்தான் இருக்குமே தவிர ரஜினிகாந்த் பெற்ற பதவியாக இருக்காது.

ரஜினி காந்தம் அதை ஒருபோதும் ஈர்க்காது என்றே எண்ணுகிறேன்...

(கட்டுரையாளர்: விஷ்வா விஸ்வநாத், ஊடகவியலாளர். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்துக்கள்.) 

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக