பதிப்புகளில்

ராமேஷ்வர மீனவர் டூ தொழில்முனைவர்... போராடும் இளைஞரின் சாதனைக் கதை!

மீனவக் குடும்பத்தில் பிறந்த ஆராக்கிய மேன்றோ, கணினி அறிவியல் முடித்து ஆன்லைனில் மீன்தொழில் தொடங்கி, சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு  முன் மாதிரியாக திகழ்கிறார்!

Naagu null
27th Jun 2017
Add to
Shares
117
Comments
Share This
Add to
Shares
117
Comments
Share

அதிகாலையில் கட்டுமரத்தில் சென்று உப்புக்காற்றில் தூக்கிவீசும் அலைகளுக்கு மத்தியில் மீன்பிடித்து வருவது கடற்கரையோரத்தில் பிறக்கும் ஒவ்வொரு மீனவரின் ஆசை. ஆனால் 26 வயது மீனவ இளைஞன் ஆரோக்கிய மேன்றோ சற்று வித்தியாசமானவர். தன்னுடைய இலக்கின் வலையை கடலை நோக்கி போடாமல், தொழில்முனைவு என்னும் வானத்தை நோக்கி விரித்து அதில் சாதிக்க எதிர்நீச்சல் எனும் துடுப்பை போடத் தொடங்கியுள்ளார். 

ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவ குடும்பத்தில் கடைக்குட்டி மகனாக பிறந்தவர் ஆரோக்கிய மன்றோ. ஒன்பது மாதக் குழந்தையாக அவர் இருந்த போதே தந்தை விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

image


ஆரோக்கிய மேன்றோவின் குடும்பத்திற்கு காவலனாகவும் தலைவனாகவும் இருந்தவரை காலன் அழைத்து சென்றுவிட, அவருக்கு அடுத்தபடியாக குடும்ப பாரத்தை சுமக்கத் தொடங்கியுள்ளனர், மேன்றோவின் இரண்டு சகோதரர்கள். தந்தை வழியிலேயே அவர்களும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து வருமானம் ஈட்டி, இளைய சகோதரர்களை படிக்க வைத்து, சகோதரிக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளனர்.

மூத்த சகோதரர்களின் அரவணைப்பிலும் தாய் விக்டோரியா அன்பிலும் வளர்ந்த ஆரோக்கிய மேன்றோ பள்ளிப் படிப்பை தங்கச்சிமடத்தில் உள்ள புனித யாகப்பா பள்ளியிலேயே படித்துள்ளார். ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பொருள் செல்வம் இல்லாவிட்டாலும் கல்விச் செல்வம் என்றும் உதவும் என்பதற்கு மேன்றோ சிறந்த உதாரணம். எட்டா நிலை கல்வியை கெட்டியாகப் பிடித்து படித்த மேன்றோ, 2007-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் படிப்பில் சேர்ந்தார்.

மீன் கூவி விற்ற வாயில் ஆங்கிலம் வருமானவென பலர் கிண்டல் செய்ய, அதையே சவாலாக எடுத்துக்கொண்ட மேன்றோ சாதித்துக்காட்டினார்.

"அதுவரை தமிழ் வழிக்கல்வியில் படித்த எனக்கு கல்லூரியில் சேர்ந்ததும் சற்று கடினமாக இருந்தது. ஏனெனில் வகுப்பில் என்னைத் தவிர அனைவருமே ஆங்கில வழியில் கற்று வந்தவர்கள். இதனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது, எனினும் நான் அஞ்சவில்லை, அச்சப்படவும் இல்லை." 

தமிழ் தெரியாத மாணவர்கள் குறிப்பாக ஆங்கிலோ இந்தியன் மாணவர்களிடம் நானாகவே சென்று பேசுவேன். தினமும் 4 ஆங்கில வார்த்தைகள் கற்பது தொடர்ந்து ஆங்கில செய்தித்தாள் வாசிப்பது என்று என்னுடைய ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டேன். என்னுடைய தொடர் முயற்சிகளின் பலனாக முதலாமாண்டு இறுதியில் ஆங்கிலம் என்பது கற்கக் கூடிய மொழி தான் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது என்று தன்னுடைய மொழிகற்றலை பற்றி கூறுகிறார் மேன்றோ.

image


கல்லூரிப் படிப்பாக கணினி அறிவியலை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தையும் அவர் முன் வைத்தார். இந்தப் படிப்பு தான் படிக்க வேண்டும் என்று சொல்வதற்கு எங்களுக்கு யாரும் கிடையாது, அதனால் நானாகவே இதில் சேர்ந்தேன். ஐடி வேறு கணினி அறிவியல் வேறு என்பது கூட எனக்கு கல்லூரியில் சேரும் வரை தெரியாது. மேலும் கணினி சார்ந்த படிப்பு என்பது எங்கள் சமூகத்திற்கே புதிதான ஒன்று என்பதாலும் இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தாகக் கூறுகிறார் மேன்றோ.

கடலில் அலைகள் தூக்கி அடித்தாலும் அதில் எதிர்நீச்சல் போட்டு பிழைப்பை நடத்தும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த மேன்றோவிற்கு நிஜவாழ்விலும் எப்படி போராடுவது என்பதை யாரும் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. வெளிநாடுகளில் இருப்பது போல கல்லூரி இறுதியாண்டில் வார இறுதி நாட்களில் பகுதி நேர வேலை செய்து பணம் ஈட்டியதாகக் கூறுகிறார் இந்த வாழ்க்கைக் போராளி.

"சனி, ஞாயிறு நாட்களில் எங்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் வீடுகளுக்கு எனக்கு தெரிந்த தொழிலான மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை வாங்கி வந்து சுத்தம் செய்து கொடுக்கும் பணியை செய்து வந்தேன். இதன் மூலம் வாரத்திற்கு ரூ.1000 சம்பாதிப்பேன் அவற்றை என்னுடைய படிப்பிற்காக வைத்துக்கொண்டேன். இது போக நல்ல மதிப்பெண் இருந்ததால் கல்வி உதவித்தொகையும் கிடைத்தது" என்கிறார்.

இளநிலைக் கல்வி முடித்த கையோடு 2011-ம் ஆண்டு (ஓராண்டு முழுவதும் விசா நடைமுறைக்காக செலவிட்டு) லண்டன் பறந்து அங்கு உயர்நிலைக் கல்வியைக் கற்றுள்ளார்.

"முதுநிலைப் படிப்பிற்காக நானே கல்விக்கடன் வாங்கி, கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து M.S கம்ப்யூட்டர் நெட்வோர்க் செக்யூரிட்டி படிக்கச் சென்றேன். அங்கும் பகுதி நேரமாகப் பணியாற்றிக்கொண்டே படிப்பை தொடர்ந்தேன்,” 

என்று 24 மணி நேரமும் கடல்அலை போல தனது போக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்துள்ளார் இந்த அலைமகன்.

படிப்பை முடித்துவிட்டு ஓராண்டு அங்கேயே பணியாற்றிவிட்டு மீண்டும் சென்னை திரும்பிய மேன்றோ, படிப்பு தொடர்பாக தொழிலைத் தொடங்கும் நோக்கில் 2015-ம் ஆண்டில் ’Be Secure’ என்ற சிறுநிறுவனம் மூலம் வீடு அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா, ஃபையர் அலாரம் பொருத்துவது அவற்றை பராமரிப்பது உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளார். என்னுடைய படிப்பு சார்ந்த சுயதொழிலாக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த ஸ்டார்ட் அப்பை தொடங்கினேன். இதற்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படவில்லை, தொடக்க முதலீடாக ரு.25 ஆயிரம் தேவைப்பட்டது, அதை என்னுடைய அக்கா நண்பர்கள் உள்ளிட்டோரிடம் வாங்கி தொடங்கினேன். ஏனெனில் வாடிக்கையாளர்களிடம் இருந்தே அட்வான்ஸ் வாங்கி செய்து விடலாம் என்பதால் அதிக முதலீடு தேவைப்படவில்லை.

’Be Secure’ ஸ்டார்ட் அப் நல்ல முறையில் போய்க்கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு வெற்றிடம் இருந்தது மேன்றோவை உருத்திக்கொண்டே இருக்க அப்போது அவருக்கு உதித்தது தான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையத்தில் மீன் வணிகம் செய்யும் நிறுவனம்.

"ஏற்கனவே இளநிலை கல்வி பயின்ற போது சென்னையில் இந்தப் பணியை சிறிய அளவில் செய்த அனுபவம் இருந்ததால் அதையே பெரிய அளவில் செய்யலாம் என திட்டமிட்டு அதன் விளைவாக உதித்ததே meenkadai.in," என்கிறார் மேன்றோ.
image


meenkadai.in தொடக்கம்

நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களை குறிவைத்து தொடங்கப்பட்ட இந்த மீன்கடையின் சிறப்பு என்னவென்றால், கடல் உணவுகளை சாப்பிட விரும்புபவர்கள் அவற்றை வாங்கி சுத்தம் செய்வதிலோ, அல்லது மார்க்கெட்டிற்கு சென்று சுத்தம் செய்து வாங்கி வரவோ நேரம் ஒதுக்க விரும்புவதில்லை. அந்த வகை வாடிக்கையாளர்களை குறி வைத்து தொடங்கப்பட்டது தான் மேன்றோவின் மீன்கடை. 

ஒரு நாள் முன்னரே ஆர்டர் செய்து விட்டால் அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்தில் ஃப்ரெஷ்ஷான மீன், இறால், நண்டு இவற்றில் எது விருப்பமோ அது சுத்தம் செய்து நல்ல முறையில் பேக் செய்து டெலிவரியும் செய்து வைக்கப்படும். மேலும் இவற்றை வாங்கி அப்படியே மசாலா போட்டு சமைத்து இறக்கி சுடச்சுட சாப்பிடலாம்.”

எப்படியாவது தொழில்முனைவராகிவிட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. என்னிடம் முதலீடு கிடையாது ஆனால் நிறைய தன்னம்பிக்கையும் நல்ல நண்பர்களும் உதவ உடன் இருந்தனர். அதனால் இந்த தொழில் தொடங்க தேவையான ரூ.3 லட்சத்தையும் அவர்களிடமிருந்து பெற்றே தொடங்கினேன். அது மட்டுமல்ல இந்த தொழில் முழுக்க முழுக்க சமூக வலைதளத்தில் பிரபலப்படுத்தப்பட்டது. இதற்கான பொறுப்பை ஒரு நண்பர், வடிவமைப்பு பொறுப்பை மற்றொரு நண்பர் என ஆளாளுக்கு கொடுத்த உத்வேகம் தான் காரணம் என்ற சிலாகிக்கிறார்.

image


சவால் மற்றும் செயல்பாட்டில் சிக்கல்கள்

2016ம் ஆண்டு மார்ச் மாதம் மீன்கடை விற்பனையை தொடங்கிய போது அவ்வளவாக புரிதல் இல்லை, அதனால் சென்னை முழுமைக்கும் என்று விளம்பரம் செய்தோம். ஆனால் இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், தற்போது அண்ணாநகரைச் சுற்றி 10 கிலோமீட்டருக்குள் உள்ளவர்களுக்கு டெலிவரி செய்து வருகிறோம் என்றார் மேன்றோ. அதற்காக அண்ணாநகர் தவிர்த்த மற்ற பகுதி வாடிக்கையாளர்களையும் விட்டுவிட முடியாது என்பதால் அவர்களை சமாதானம் செய்து குறிப்பிட்ட தினத்திற்கான டெலிவரி என்ற ரீதியில் டெலிவரி செய்து வருவதாகக் குறிப்பிடுகிறார் மெல்ல மெல்ல தொழில்முனைவு பழகும் இவர். 

இதுவரை ரீட்டெய்ல் கடை என்றெல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு சிறிய ஷெட்டில் வைத்து கடல் உணவுகளை மொத்தமாக கொண்டு வந்து அவை சுத்தம் செய்து டெலிவரி செய்யப்படுகிறது. பாயிண்ட் ஆப் சேல் என்பதில் கவனம் செலுத்தாமல் வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி விளம்பரம் செய்து ஆர்டர்களை பெற்று வருகிறார் மேன்றோ. முதலில் 2 பேருடன் விற்பனையைத் தொடங்கினோம், நாங்களே கொள்முதல் செய்து, சுத்தம் செய்து டெலிவரி செய்து வந்தோம். தற்போது 4 பேர் பணியாற்றி வருகிறோம். 

பொதுவாகவே மீன், உள்ளிட்டவற்றை வாங்கும்போது நேரில் பார்த்து வாங்க வேண்டும், அவை எப்படி சுத்தம் செய்யப்படுகிறது என்றெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு அச்சம் இருக்கும். முதலில் எங்களது வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து புரிதலை உண்டாக்கினோம். 

”முதலில் ஒரு நாளில் 10 ஆர்டர்கள் என்ற அளவில் தான் இருந்தது, பின்னர் இதனை அதிகரிக்க புதிதாக வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்பவர்களுக்கு விலையில் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை அறிவித்தோம். பின்னர் எங்கள் மீது இருந்த நம்பிக்கையால் வாடிக்கையாளர்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை வாங்கிவிடுவார்கள்.”

மீன்கடையோட தனித்துவம் என்னவென்றால் அதிகாலையில் கடல் உணவுகளை கொள்முதல் செய்து அன்றைக்கு விற்றுவிடுவது தான். பதப்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமில்லை மேலும் எந்தெந்த ஊரில் என்னென்ன சீசனில் மீன், இறால் கிடைக்கிறதோ அவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியில் சிறப்பாக கிடைக்கும் flower prawns, பழையாறில் கிடைக்கும் இறால் வகைகள், என அனைத்தும் வாடிக்கையாளர்களின் கிச்சனுக்கே கிடைக்கும். 

நாகை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், சென்னை, பழவேற்காடு என எல்லா இடத்தில் இருந்தும் மீன் வாங்குகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து இவர்களின் சொந்த டிராலரிலேயே மீன் பிடித்து அங்கிருந்து கொள்முதல் செய்து வருகின்றனர். 

image


எல்லா நேரத்திலும் எல்லா மீனும் கிடைக்காது அதற்காக கிடைப்பதை விற்றுத் தள்ளாமல் அவற்றின் சிறப்பை உணர்த்தி தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தி வருகிறோம். எங்கு புத்துணர்வோடு தரமாகவும் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து பதப்படுத்தாமல் அப்படியே வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதே meenkadai.in ஸ்பெஷாலிட்டி.

மாதத்திற்கு 10% ஆர்டர்கள் வீதம் அதிகரித்து தற்போதைய அளவில், மாதத்திற்கு 360 முதல் 400 ஆர்டர்கள் வரை டெலிவரி செய்து வருகிறார்கள். ஆட்கள் சம்பளம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவை போக மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுவதாகக் கூறுகிறார் மேன்றோ. 

“வெளிநாட்டிற்கு சென்று படித்து விட்டு வேலைக்கு சேர்ந்து கைநிறைய சம்பாதிப்பேன் என்று நினைத்த உறவினர்கள், நான் மீன் தொழிலை கையில் எடுத்ததை பார்த்து கேலி செய்ததால் என் குடும்பத்தார் கவலையடைந்தனர். ஆனால் மெல்ல அவர்களுக்கும் தற்போது புரிதல் வந்துள்ளது.” 

மொத்தமாக மீன், இறால் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து கல்வி நிலையங்கள், உணவகங்களுக்கு விற்பனை செய்து விட்டு அதில் இருந்து தினந்தோறும் 20 கிலோ வரை எடுத்த வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். சந்தை விலையைவிட சுமார் 50 ரூபாய் அதிகமாக இருக்கும் என்றாலும் இதற்கும் குறைவான விலையில் டெலிவரி செய்வது முடியாத காரியம் என்று நியாயப்படுத்தினார் மேன்றோ.

எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் உலகில் எங்களது சேவையும் இன்னோவேட்டிவாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு நல்ல புரிதல் வந்துள்ளது. எதிர்காலத்தில் செயலியை அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறும் மேன்றோ, விரைவில் இதனை ஆன்ட்ராய்டு, கூகுள் ப்ளே ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்யும் வகையில் மீன்கடை செயலி அறிமுகம் செய்யப்படும் என்கிறார்.

சென்னையில் எங்கிருந்து மீன்கடைக்கு ஆர்டர் கொடுத்தாலும் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என்ற நிலை வந்தால் தான் வாழ்வின் அடுத்தகட்டமான திருமணம் பற்றி யோசிப்பேன் என்று சொல்கிறார் முயற்சியின் திருமகன் மேன்றோ. அதுமட்டுமின்றி அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தின் முக்கிய சிட்டிகள் அனைத்திலும் மீன்கடை கிளைகள் மற்றும் ஓராண்டுக்குள் ஐதராபாத், பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட ஹைடெக் நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

கடின உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் ஜெயிக்கும் போராட்டத்தை நடத்தி வரும் முதல் தலைமுறை மீனவ தொழில்முனைவரான மேன்றோ, யாரிடமும் எந்த தயக்கமும் இன்றி அணுகி தன்னுடைய ஸ்டார்ட் அப் குறித்து பேசத் தயாராக இருக்கிறார். தயக்கம் என்னும் தடையை உடைத்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ராமேஸ்வர மண்ணின் மைந்தனின் கனவுகள் நிறைவேற தமிழ் யுவர் ஸ்டோரியின் வாழ்த்துகள்.

இணையதள முகவரி: meenkadai.in

Add to
Shares
117
Comments
Share This
Add to
Shares
117
Comments
Share
Report an issue
Authors

Related Tags