பதிப்புகளில்

'மகளிர் மட்டும்' கார்மென்ட்ஸ்: கரூரில் கலக்கும் க்ரித்தி அப்பேரல்ஸ்’

கரூர் டெக்ஸ் தொழில்நுட்பப் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ள க்ரித்தி அப்பேரல்ஸ் நிறுவனத்தில் சிஇஓ முதல் கேட்கீப்பர் வரை அனைவருமே பெண்கள். பெண்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் அதன் மேலாண் இயக்குனர் விஜயலட்சுமி சங்கர் புதிய சவாலை கையில் எடுத்துள்ளார். 

26th Jul 2018
Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share

பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்று பரந்து விரிந்துள்ளது. சமையல், அப்பளம், ஊறுகாய் தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கவனம் செலுத்தினர். பெண்களின் சுயதொழிலாக இவை மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் எல்லாத் துறைகளிலும் சமநிலையில் பணி செய்து தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இதே போன்று தொழில்முனைவிலும் ஆண்கள் துணை என்று எதுவும் இல்லை, பெண்களாலும் தனித்து எதையும் செய்ய முடியும் என்பதை உணர்த்தியுள்ளது கரூரைச் சேர்ந்த க்ரித்தி அப்பேரல்ஸ்.

கரூர் மாவட்ட ஆட்சியருடன் க்ரித்தி அப்பேரல்ஸ் சிஇஓ விஜயலட்சுமி மற்றும் ஊழியர்கள்

கரூர் மாவட்ட ஆட்சியருடன் க்ரித்தி அப்பேரல்ஸ் சிஇஓ விஜயலட்சுமி மற்றும் ஊழியர்கள்


இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் கார்மென்ட்ஸ் துறையானது முழுக்க முழுக்க ஆண்கள் நிர்வகிக்கும் துறையாகவே பார்க்கப்படுகிறது. கார்மென்ட்ஸ்களில் தையல், சூப்பர்வைரசர் என சில பணிகளில் மட்டுமே பெண்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் க்ரித்தி அப்பேரல்ஸின் சிறப்பு இந்த கார்மென்ட்ஸில் சிஇஓ முதல் காவலாளி, மெகானிக் என அனைவருமே பெண்கள்.

கரூர் டெக்ஸ்பார்க்கில் கடந்த பிப்ரவரி மாதத்தில் உதயமாகியுள்ளது க்ரித்தி அப்பேரல்ஸ். இந்த நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரும் மேலாண்மை இயக்குனருமான விஜயலட்சுமி சங்கர், க்ரித்தி அப்பேரல்ஸ் உருவான விதம் குறித்து தமிழ் யுவர் ஸ்டோரியிடம் தெரிவித்தார்.

ஏறத்தாழ 30 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு உயர்பதவிகளை வகித்து வந்துள்ளார் விஜயலட்சுமி சங்கர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ஐஐடியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். படித்து முடித்த கையோடு ஐடி துறையில் நல்ல பணியில் சேர்ந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தகவல்தொழில்நுட்பத்துறையில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

“தனித்துவமாகவும் சுதந்திரமாகவும் நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் முழுவதும் பெண்களை மட்டுமே கொண்டு ஒரு கார்மென்ட்ஸை இயக்க முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பினர், இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு க்ரித்தி அப்பேரல்ஸை நிறுவினேன்...” என்கிறார் விஜயலட்சுமி.

எங்களது குடும்பத் தொழில் ஆடைகளை உருவாக்கப் பயன்படும் அடிப்படை துணியான பாலிஸ்டரை தயாரித்துக் கொடுப்பதை செய்து வருகிறோம். பாலிஸ்டர் என்பது ஆடை வடிவமைப்பில் முதல் அடி கார்மென்ட்ஸ் என்பது இறுதி வடிவம் கொடுப்பது. ஜவுளித் துறை பற்றி நல்ல புரிதல் வந்த பிறகே அந்த அனுபவத்தை வைத்து இந்த கார்மென்ட்ஸை நடத்தலாம் என்று முடிவு செய்ததாகக் கூறுகிறார் விஜயலட்சுமி.

க்ரித்தி அப்பேரல்ஸில் டிசர்ட்டுகள், இருபாலர் மற்றும் குழந்தைகளுக்கான உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணியாற்றும் 150 பேரில் ஒருவர் கூட ஆண்களே இல்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம். 

“முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இருப்பதற்கு முக்கியக் காரணம் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்ட வேண்டும் என்பதும், நான் 30 ஆண்டுகள் பணியாற்றியதால் தொழிற்துறையில் அதிக அளவில் பெண்கள் இல்லாததை உணர்ந்து அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் நினைத்தேன்,” என்கிறார் விஜயலட்சுமி.
க்ரித்தி அப்பேரல்ஸ் ஊழியர்கள் (வலது),  சிஇஓ விஜயலட்சுமி (இடது)

க்ரித்தி அப்பேரல்ஸ் ஊழியர்கள் (வலது),  சிஇஓ விஜயலட்சுமி (இடது)


படித்த பெண்கள் தங்களுக்குத் தேவையான பணியை கண்டறிந்து கொள்ளும் திறன் உள்ளவர்கள், ஆனால் கிராமப்புற பெண்களுக்கு அதற்கான வழிகள் இல்லை என்பதோடு வாய்ப்புகள் எங்கே இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே கார்மென்ட்ஸ் துறையில் அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

பெண்களை மட்டுமே வைத்து கார்மென்ட்ஸ் நடத்த முடியுமா என்று எங்களை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர், நாங்கள் சரியான திட்டமிடல் செய்தோம். ஒவ்வொரு பிரிவிலும் பயிற்சியாளர்களைக் கொண்டு பெண்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறோம். உற்பத்தி பிரிவு மேலாளர், கட்டிங் பிரிவு உள்ளிட்ட மிடில் மேனேஜ்மென்ட் பணிகளுக்கென பட்டதாரிப் பெண்களை பணிக்கு எடுத்து அவர்களுக்கு திறன் வாய்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளித்து வருகிறோம். 

க்ரித்தியில் மெக்கானிக் கூட பெண் தான். மற்ற எல்லாப்பிரிவிற்கும் பெண்கள் பணிக்கு கிடைத்தாலும் மெஷினரி தொடர்பான பணி தெரிந்த பெண்கள் கிடைக்கமாட்டார்கள் என்ற எண்ணமே வேண்டாம், பெண் மெகானிக்குகளும் இருக்கிறார்கள் என்று பெருமையோடு கூறுகிறார் விஜயலட்சுமி. 

மாதத்திற்கு ஒரு லட்சம் தயாரிப்புகளை க்ரித்தி அப்பரேல்ஸ் செய்கிறது, இவை அனைத்தும் இந்திய ஜவுளி சந்தை மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பெண் டெய்லர்கள் கிடைத்துவிட்டாலும் சூப்பர்வைசர், மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு பெண்கள் கிடைப்பது சற்று கடினமானதாக இருந்தது. வெளி ஊர்களில் இருந்து திறமையான பெண்களை கண்டறிந்த அவர்களை இந்தப் பொறுப்புகளில் நியமித்துள்ளோம். பெண்கள் மட்டுமே பணியாற்றுவதால் க்ரித்தியில் பணியாற்றுவதை சவுகர்யமானதாக பலர் உணர்வதாகக் கூறுகிறார் விஜயலட்சுமி.

கார்மென்ட்ஸ் துறையில் ஆண்கள் சூப்பர்வைசர்களாக இருக்கும் போது பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே, க்ரித்தியில் இந்தப் பிரச்னை இல்லை. இதனால் மற்ற கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்ற பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற கம்பெனிகளில் விடுப்பு எடுத்தால் பெண்களை பணியை விட்டு நீக்கிவிடுவர், ஆனால் இங்கு அப்படியில்லை அனைவரும் பெண்கள் என்பதால் கஷ்டத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்தாற்போல விடுப்பு எடுத்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பும் இருக்கிறது.

image


பெண்கள் சுதந்திரமாக பணியாற்றும் இடமாக க்ரித்தியை பார்க்கின்றனர், நாங்களும் அவர்களை வெறும் ஊழியர்களாக பார்க்காமல் திறமைகளை தன்னகத்தே மறைத்து வைத்துள்ள சிற்பங்களாக பார்க்கிறோம். அவர்களுக்கு ஊதியம் மட்டுமின்றி, விடுப்பு எடுக்காமல் பணிக்கு வருவோர் மற்றும் ஈடுபாட்டுடன் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் அளிப்பதால் சோர்வு அறியாமல் உற்சாகத்தோடு பணியாற்றுகின்றனர் பெண்கள் என்கிறார் விஜயலட்சுமி.

பெண்களாலேயே இயங்கும் கார்மென்ட்ஸ் என்பதால் நம்முடைய திறமையை உலகிற்கு காட்ட வேண்டும் என்ற ஆர்வம் இங்கு பணி செய்யும் பெண்களுக்கும் இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் திறமையை மென்மேலும் மெருகேற்றி வளர்ச்சியை வெளிக்காட்ட வேண்டும் என்ற உறுதியோடு பெண்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவதாகக் கூறுகிறார் விஜயலட்சுமி.

கார்மென்ட்ஸ் துறையில் இருக்கும் சவாலான விஷயம் என்றால் இரவு நேரத்திலும் பணியாற்ற வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆண்கள் என்றால் இரவு, பகல் என இரண்டு ஷிப்ட் முறையில் பணியாற்றுவார்கள். பெண்களால் அதைச் செய்ய முடியாது எனவே இலக்கை எட்ட முடியாது என்றெல்லாம் பலர் நினைத்தனர். ஆனால் எங்களைப் பொருத்தவரையில் எங்களுடைய திட்டமிடல்களையும், இலக்கையும் சரியாக நிர்ணயித்துள்ளோம். அந்த திட்டத்தின் அடிப்படையிலேயே செயல்படுவதால் எங்களுக்கு கடைசி நேர அழுத்தம் என்பதும் இல்லை இதுவே க்ரித்தியை பெண்கள் விரும்புவதற்கான காரணமாக இருப்பதாக பெருமையோடு சொல்கிறார் விஜயலட்சுமி.

பெண்களுக்கு பணிப்பளு கொடுக்கக் கூடாது என்பதற்காக 2 ஷிப்ட் முறையில் க்ரித்தி செயல்பட்டு வருகிறது. எனினும் 2 ஷிப்ட் பார்க்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை, விருப்பம் இருப்பவர்கள் மட்டுமே பார்க்கலாம். குடும்பப் பெண்கள் இரவு நேரத்தில் பணி செய்ய முடியாது என்பதால் அதை நாங்கள் வற்புறுத்துவதில்லை. பெண்கள் 8 அல்லது 10 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றினால் சோர்ந்து விடுவார்கள், அவர்களின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதால் நாங்கள் எந்த வித அழுத்தத்தையும் அவர்கள் மீது திணிப்பதில்லை. எனினும் ஓவர் டைம் பார்க்க விரும்புபவர்கள் அதனை செய்கின்றனர். பெரும்பாலும் எங்கள் கார்மென்ட்ஸ்ல் ஓவர் டைம் பார்ப்பது என்பது மாதாமாதாம் நடப்பது அல்ல என்கிறார் விஜயலட்சுமி.

30 ஆண்டுகளுக்கு முன்னர் தகவல்தொழில்நுட்பத்துறையில் பெண்கள் வரும் போது பல கட்டங்களை கடந்து இன்று உயர் நிலையில் உள்ளனர். ஐடி துறையிலும் இரவு நேர வேலை செய்ய வேண்டும், குடும்பத்தினரை பார்த்துக் கொள்ள வேண்டும், வெளிநாட்டு ப்ராஜெக்ட்டுகளுக்கு செல்ல வேண்டும் என பல இக்கட்டான நிலைகளைக் கடந்து இன்று பல பெண்கள் அதே ஐடி துறையில் உயர் பொறுப்புகளில் உள்ளனர். இதே போன்று கார்மென்ட்ஸ் துறையும் மாற்றம் காணும்.

கார்மென்ட்ஸ் துறையில் க்ரித்தி தனி முத்திரை பதித்துள்ளது, எங்களது நிறுவனம் பற்றி பலரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உள்ள சூட்சமங்களைக் கற்றுக் கொண்டால் எளிதில் வெற்றியை அடைந்துவிடலாம் என்பதே என்னுடைய கருத்து.
image


ஒரு பெண் வெற்றிபெற அவரின் குடும்பம் உறுதுணையாக இருக்க வேண்டும், அந்த வகையில் என்னுடைய கணவர் சங்கர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். ரூ. 3 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள க்ரித்தி அப்பேரல்ஸில் தொழில்நுட்பத்தை புகுத்தி அனைத்திலும் ஆட்டோமேஷன் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ரூ. 100 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது விஜயலட்சுமியின் க்ரித்தி அப்பேரல்ஸ்.

”நேர்மை, கடின உழைப்பு இருந்தால் செல்வம் தானாக வந்து சேரும். பணத்திற்கு பின்னால் நான் எப்போதும் போனதில்லை, வெற்றியை மட்டுமே பின்தொடர்ந்து செல்ல விரும்புவேன். அப்பேரல்ஸ் துறையை பொருத்தவரை தரத்தை நிலையாக வைத்துக் கொண்டாலே வாடிக்கையாளர்கள் தானாக வருவார்கள்,”

என்று தனது தொழில்முனைவு பாதையை சரியான திட்டமிட்லோடு அணுகி வருகிறார் விஜயலட்சுமி.

இளம் பெண்கள் வாழ்வில் வரும் பலவிதமான சூழல்களையும் எப்படி சமாளிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பலரும் இது என்னால் முடியாது என்று ஒதுங்கிக் கொள்கின்றனர், ஆனால் மனம் தளராமல் ஒரு விஷயத்தை எப்படி செய்து முடிப்பது என்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை சரியான முறையில் கையாண்டு எப்படி வெற்றியடைய வேண்டும் என்பதை இன்றைய காலகட்ட பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

வீடு, குடும்பம் மட்டுமே வாழ்க்கையல்ல இவற்றைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு வேலை என்பது கட்டாயம் இருக்க வேண்டும். பெண்கள் தங்களின் திறமைகளை வீட்டிற்குள்ளேயே முடக்கி போட்டுவிடக் கூடாது என கருதுகிறார் விஜயலட்சுமி. 

Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share
Report an issue
Authors

Related Tags