அமேசானில் ரூ.1 கோடி ஆண்டு வருமான பணியில் சேர்ந்த விவசாயி மகன்!
ஹரியானா மாநில விவசாயியின் மகனான அமித் பிஷ்னாய், ஹிசாரைச் சேர்ந்தவர். அவருக்கு தற்போது அமெரிக்காவில் உள்ள அமேசான் தலைமை அலுவலகத்தில் 1 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்தில் பணிவாய்ப்பு கிடைத்துள்ளது. அமித் ஒரு மென்பொருள் பொறியாளர். அவரின் திறமைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசே இந்த அமேசான் வேலை.
அமிதின் தந்தை சியராம் பன்வார் பிஷ்னாய், அவரது சொந்த கிராமமான அதாம்பூரில் விவசாயம் பார்த்து வருகிறார். சிறுவயது முதல் படிப்பில் சுட்டியான அமித் பெரும்பாலும் தன் குழந்தைப்பருவத்தை தனது தாத்தா, பாட்டி வீட்டில் கழித்துள்ளார். ஆதாம்பூரில் உள்ள குரு ஜம்பாவேஷ்வர் பள்ளியிலும், சாந்தி நிகேதன் பள்ளியிலும் தன் ஆரம்பப்படிப்பை மேற்கொண்டார். பின்னர் டிஏவி-ல் 12ம் வகுப்பை முடித்தார். அப்போது ஐஐடி நுழைவுத்தேர்வு எழுதி, அதில் தோல்வியுற்றதால் சற்று சோர்வடைந்தார் அமித். பின்னர் கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் முடித்துவிட்டு, முதுகலை பட்டம் படிக்க அமெரிக்கா சென்றுவிட்டார்.
கலிபோர்னியா பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை கடந்த மே மாதம் அமித் வெற்றிகரமாக முடித்தார். மென்பொருள் வல்லுனரான அவருக்கு அமேசான் நிறுவனம் 1 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்துடன் பணிவாய்ப்பை அளித்தது. இது குறித்து பேசிய அமிதின் மாமா கிருஷ்ண கிச்டே,
“இரு ஆண்டுகளுக்கு முன் அமித்துக்கு அமெரிக்க பல்கலையில் இருந்து அட்மிஷன் கிடைத்ததாக கால் வந்தது. நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். அப்போது அவர் அங்கு சென்றார். மே மாதம் முதுகலை பட்டம் பெற்ற, உடனே அமேசானில் வேலையும் கிடைத்துவிட்டது,” என்றார்.
டிகிரி படிக்கும்போதே அமித், மெஷின் லெர்னிங், மெய்நிகர் நுண்ணறிவு குறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து படித்துவந்தார். தனது பேராசிரியருடன் இணைந்து AI-ல் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவரது இந்தத் தீவிர உழைப்பே தற்போது அமித்துக்கு ஒரு நல்ல வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும், தான் கண்ட ஐஐடி கனவு பலிக்கவில்லை என்றாலும், தனக்கு இருந்த ஆர்வத்தினாலும், கடின உழைப்பினாலும் நல்ல பணியிடத்தை அடைந்துள்ள அமித் பல இளைஞர்களுக்கு நிச்சயம் ஊக்கமாக இருக்கிறார்.