பதிப்புகளில்

'உத்வேக வெள்ளி'த்திரை: விடையற்ற ஒற்றை பதிலுடன் '101 கேள்விகள்'

1st Apr 2016
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

உங்களில் பலருக்கும் ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த அனுபவம் இருக்கும். அப்போது நிச்சயம் கவனித்திருப்பீர்கள்... ஒரு புத்தக வியாபாரி தன் இரண்டு கைகள் நிறைய புத்தகங்களை அடுக்கிவைத்திருப்பார். ஒவ்வொரு பெட்டியிலும் ஆளுக்கு 10, 20 புத்தகங்கள் என நம் பக்கத்திலேயே வைத்துவிட்டு விறுவிறுவெனச் சென்றுவிடுவார். ஐந்தோ அல்லது பத்தோ நிமிடங்கள் கழித்து வருவார். நாம் ஏதேனும் ஒரு புத்தகத்தை வாங்கத் தேர்ந்தெடுத்திருந்தால், அதற்கு உரிய ரூ.10 (இதுவரைக்கும் பெரும்பாலும் அவ்வளவுதான்) வாங்கிக் கொண்டு, மற்ற எல்லா புத்தகங்களையும் அள்ளிப் போட்டு தோளில் சுமந்துகொண்டு அடுத்தப் பெட்டிக்குக் கிளம்பிவிடுவார்.

குட்டிக் கதைகள், பொது அறிவு, சமையல் குறிப்புகள், வரலாற்றுத் தகவல்கள்... இப்படி வழக்கமானவையாக இருந்தாலும், அந்தப் புத்தகங்களில் தலைப்புகளில் சுவாரசியங்கள் நிறைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்தப் புத்தகங்களை வாங்கியிருப்போமே இல்லையோ அதில் சிலவற்றைப் புரட்டியாவது பார்த்திருப்போம்தானே! அந்தப் புத்தகங்கள் யாரால் எழுதப்படுகின்றன அல்லது தொகுக்கப்படுகின்றன என்பன போன்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தது உண்டா?

ரயில்களில் விற்கப்படும் பத்து ரூபாய் புத்தகங்கள் உருவாகும் விதத்துக்குப் பின்னேயுள்ள கதைகளைக் கொஞ்சம் ஆழமாகத் தோண்டிப் பார்த்தால் பல நல்ல படங்களுக்கான கதையும் திரைக்கதையும் கிடைக்கும் என்றே நினைக்கிறேன். மலையாளத்தில் விமர்சகர்கள் கவனத்தை ஈர்த்த '101 சோத்யங்கள்' (101 Chodyangal - 101 கேள்விகள்) என்ற படத்தை ரசித்த பிறகு, எனக்கு இப்படி ஒரு நினைப்பு வருவதில் எந்த வியப்பும் இல்லை.

image


101 சோத்யங்கள்... 2013-ல் வெளிவந்த மலையாள சினிமா. அழகும் அழுத்தமும் நிறைந்த இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் சித்தார்த்த சிவா. இப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்த மினன், அதே ஆண்டில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார். அத்துடன், கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களின் தெரிவுப் பிரிவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது இந்தப் படம்.

கேரளத்தின் திருவில்லாவில் இருக்கிறது கவியூர் என்ற கிராமம். ஓர் ஆலையின் முன்பு ஆறு பேர் கொண்ட தொழிலாளர்களின் போராட்டத்துடன் தொடங்குகிறது படம். அதில், நால்வருக்கு மீண்டும் பணி கிடைக்கிறது. சிவாநந்தனுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் மட்டும் வேலை இல்லை.

இளைஞரான ராதாகிருஷ்ணன் உடல் வலுமிக்கவரும் கூட. எளிதில் வேறு வேலை அல்லது மாற்று வேலைக்குத் தயாராகிறார். ஆனால், சிவானந்தன் அப்படி அல்ல. அந்த ஆலைதான் அவருக்கு எல்லாமே. தன்னையே அந்தத் தொழிற்சாலையின் பணிக்கு ஒப்படைத்தவருக்கு, வேலை இழப்பில் இருந்து மீளவும், புதிய பாதையை தேடவும் முடியவில்லை. ஏற்கெனவே வறுமை சூழந்த வீட்டில் நிலையோ இன்னமும் தலைகீழாக மாறுகிறது. ஒரு பெட்டிக்கடையை வீடாக மாற்றி வசிக்க வேண்டிய பரிதாபம், சிறப்புக் குழந்தையாகிவிட்ட இரண்டாவது குழந்தைக்கு போதிய மருத்துவம் பார்க்க முடியாத அவலம், ஐந்தாம் வகுப்பு செல்லும் மகனுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்ப முடியாத துயரம், வீட்டையும் பார்த்துக்கொண்டு, அன்றாட வாழ்வாதாரத்துக்காக நூறு நாள் வேலைக்குப் போகிறார் சிவானந்தனின் மனைவி.

குடும்ப நிலை இப்படி இருக்க, நம் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஐந்தாம் வகுப்புச் செல்லும் சிறுவன் அனில்குமார் பக்காரோ மீது குவியத் தொடங்குகிறது. அவனது குடும்பத்தின் வறுமை ஒரு பக்கம் இருந்தாலும், அவனது கவித்துமான அன்றாட வாழ்க்கை நம்மையும் சேர்த்து இளைப்பாறச் செய்கிறது.

எப்படி?

ஒவ்வோர் அரசு பள்ளியில் நிச்சயம் ஒரு கனவு ஆசிரியர் இருப்பார். அப்படி, அந்த கவியூர் அரசு உயர் நிலைப்பள்ளிக்கு நல்லாசிரியராய் வந்து சேர்கிறார் முகுந்தன் (இந்திரஜித்). அவர் வந்தவுடன் அந்த கிராமத்து மக்களின் நிலையை அறிகிறார். பள்ளிக்கு வரும் குழந்தைகளில் பாதி பேர் மதிய உணவு எடுத்து வருவது இல்லை. எனவே, ஒரு புதிய திட்டத்தை தன் வகுப்பறையில் நடைமுறைப்படுத்துகிறார்.

"உங்களில் யாரால் முடிகிறதோ அவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பொட்டலம் சாப்பாடு அதிகமாக எடுத்து வந்து என் அறையில் வைத்துவிடலாம். மதிய உணவு எடுத்துக்கொண்டு வர முடியாதவர்கள் தயங்காமல் அந்தப் பொட்டலத்தை எடுத்துச் சாப்பிடலாம்" என்கிறார்.

மாணவர்களிடம் பகிர்வையும் அன்பையும் விதைக்கும் என்ன அருமையான திட்டம்!

தனக்குப் பிடித்த முகுந்தன் சாரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அம்மாவிடம் உணவுப் பொட்டலம் கேட்பான் அனில்குமார். வேறு வழியின்றி எப்படியோ சமாளித்து முதல் நாள் தந்துவிடுவார். அந்த உணவுப் பொட்டலத்தையும் தன் மகன் சாப்பிடவில்லை என அறிந்து கோபத்துடன் வருந்தும் அம்மா, மறுநாள் பொட்டலம் தரமாட்டாள். இருந்தால்தானே!?

பொட்டலம் இல்லாமல் சென்றால் மதிப்பை இழக்க நேரிடும் என்று பள்ளிச் செல்ல மாட்டான் அனில்குமார். இந்த விஷயம் பற்றி அந்த ஆசிரியரிடமே அம்மா நேரில் எடுத்துச் சொல்கிறார். அந்தக் குடும்ப நிலையை நேரில் அறியும் ஆசிரியர் முகுந்தன், அனில்குமார் மீது கூடுதல் ஈடுபாடு காட்டத் தொடங்குகிறார்.

image


ஆசிரியர் முகுந்தன் கதாபாத்திரத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்த 25-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் நினைவுக்கு வருகின்றனர். அதில் இங்கே ஒருவரை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். கோவையில் பள்ளி மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டி ஏற்பாட்டாளர்களில் நானும் ஒருவன். அந்தப் போட்டியில் பங்கேற்க நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் வண்ண உடைகளில், எல்லாவித முன் தயாரிப்புகளுடன் பெற்றோர் - உறவினர்களுடன் வந்திருந்தனர். ஆனால், நான்கு மாணவர்கள் மட்டும் அரசுப் பள்ளிச் சீருடையில் வந்திருந்தனர். அவர்களை அழைத்து வந்தது அவர்களது வகுப்பாசிரியர் திருமுருகன். ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன்.

போட்டி நடந்தது. முடிந்தது. அந்த அரசுப் பள்ளி மாணவர்களில் இருவருக்கு பரிசு கிடைத்தது. திருமுருகன் சாருக்கு ஓரளவு மகிழ்ச்சி. அவரிடம் இன்னமும் தொடர்பில் இருக்கிறேன். தான் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திறமையான மாணவர்களை உருவாக்கி, அவர்கள் மாவட்ட, மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்கச் செய்து வெற்றி பெறவைத்து ஊக்கமளிப்பதுதான் அவரது முழுநேர வேலை. அதில்தான் அவருக்கு முழு திருப்தி.

ஆம், நம் அரசுப் பள்ளிகள் போதிய வசதிகள் ஏதுமில்லாத நிலையிலும், எல்லா காலக்கட்டத்திலும் அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்கி வருவதற்கு வெளியே தெரியாத ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் முகுந்தன்களும் திருமுருகன்களுமே காரணம்!

கோவையில் அன்று அரசுப் பள்ளி ஆசிரியர் திருமுருகனிடம் இருந்த அந்த நான்கு மாணவர்களிடம் கண்ட பெருமித உணர்வை, '101 சோத்யங்கள்' படத்தில் ஆசிரியர் முகுந்தன் அழைத்து அசைன்மென்ட் ஒன்றைத் தரும்போது அனில்குமாரின் கண்களில் பார்த்தேன். அவனிடம் உள்ள கேள்வி கேட்கும் ஆர்வம், திறன்களைக் கண்டுகொண்ட பிறகு அந்த அசைன்மென்டை தருகிறார்.

அனில்குமார் மீது கவனம் செலுத்த தொடங்கிய நேரத்தில்தான் ஆசிரியர் முகுந்தனுக்கு ரயில் புத்தகம் ஒன்றை தயார் செய்து தருவதற்கான ஆர்டர் அவருக்கு வருகிறது. '101 கேள்விகளும் பதில்களும்' என்பதுதான் அதன் தலைப்பு.

"அனில்... 101 கேள்விகளை உருவாக்கித் தரவேண்டும். முடியுமா?" என்று கேட்கிறார் ஆசிரியர்.

"101...ஆ? எப்படி சார்?"

"நீ டெய்லி கேட்கிற, பார்க்கிற விஷயங்கள்ல இருந்து கேள்விகளை உருவாக்கலாம். ஒரு கேள்விக்கு ஒரு ரூபாய் தருவேன்."

"சார்... அப்படின்னா, நான் ஆயிரத்தியொரு கேள்வி தர்றேன் சார்!"

"முதல்ல 101... அப்புறம் பார்த்துக்கலாம்."

image


ஒரு பக்கம் குடும்ப நிலை மென்மேலும் மோசமாகி வர, அனில்குமாரின் கேள்வித் தேடல் பயணம் தொடங்குகிறது. ஆரம்பத்தில் கேள்வியைத் தொடுக்க திணறுபவனை மலையுச்சிக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர், "அதோ பார்... வானத்தின் நிறம் நீலம்தானே? அப்புறம் ஏன் சிவந்திருக்கிறது?" என்கிறார்.

அதை அப்படியே உள்வாங்கும் அனில்குமார், "1.நீல வானம் சிவப்பது ஏன்?" என்ற முதல் கேள்வியை தொடுக்கிறான். அப்படி ஆரம்பிக்கிறது அவன் கேள்வி வேட்டை.

வயிற்றில் பசி. அப்பா அரிசி வாங்கிவருவார் என்ற காத்திருப்புடன் வீட்டில் உலை கொதிக்கிறது. அந்தப் பசியில் அடுப்பை வெறித்துப் பார்க்கிறான் அந்தச் சிறுவன். இரண்டாவது கேள்வி முளைக்கிறது. அதை தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதுகிறான். '2.தண்ணீரை சூடாக்கும்போது கொதிப்பது ஏன்?'

ஒன்று... ரெண்டு... மூன்று... முப்பது... என கேள்விகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அத்தனையும் அனில்குமார் தன் வாழ்க்கையில் கடக்கும் அனுபவத்தில் தோன்றும் கேள்விகள். தன் தங்கைக்கு காய்ச்சல் கொதிப்பதைப் பார்த்து அம்மா பதற்றத்தில், எதையாவது பார்த்து பயந்திருப்பாளோ? என்ற புலம்பலை கேள்வியாக மாற்றும் அனில், "பயம் வந்தால் காய்ச்சல் வருமா?" என்று கேள்வியாக பதிகிறான். இப்படி ஒவ்வொரு கேள்விகளுமே எளிமையும் ஆழமும் நிறைந்தது.

அன்று... வறுமைக் கொடுமையின் உச்சம், அப்பாவின் இயலாமையை அம்மா தன்னையறியாது திட்டித் தீர்த்துவிடுகிறாள். தாங்க முடியாத அனில், இதுவரை எழுதிய 60 கேள்விகளுடன் ஆசிரியரிடம் ஓடுகிறான். வீட்டில் நடந்ததைச் சொல்லி, இதுவரை உருவாக்கிய 60 கேள்விகளுக்கான தொகையைக் கேட்கிறான். தன் அப்பாவை யார் திட்டினாலும் தனக்குப் பிடிக்காது; அது தன் அம்மாவே என்றாலும் கூட என்று புலம்பித் தள்ளுகிறான். அவரும் 60 ரூபாய் கொடுக்க, வீட்டுக்குப் பறக்கிறான்.

அப்போது, சக ஆசிரியர் கேட்கிறார்... "ஏன் கொஞ்சம் கூடவே காசு கொடுத்திருக்கலாமே..!"

அதற்கு ஆசிரியர் முகுந்தன் அளித்த பதில்: "இல்லை.. உழைச்சதைவிட கூடுதலா கொடுக்கும்போது, உத்வேகம் கொறைஞ்சிட வாய்ப்பிருக்கு!"

என்ன அருமையான சொற்றொடர் அது. ஆனால், அதே முகுந்தன் சார் பிறகு சொல்வார்: "அனில் அவன் வாழ்க்கையில் இருந்து கேள்விகளை உருவாக்கியிருக்கிறான். ஒவ்வொரு கேள்வியும் ரூ.1001 தரும் அளவுக்கு மதிப்பு மிக்கது."


image


அனில்குமார் 101 கேள்விகளை உருவாக்கும் பின்னணிதான் முழு திரைக்கதையும். ஒவ்வொரு காட்சிகளும் கவிதையாகவும் மனதை வருடும் தன்மையுடனுடனும் அமைந்திருக்கும். மிக இயல்பாக நகரும் படம், ஒரு கட்டத்தில் நம் மனத்தை அழுத்த ஆரம்பிக்கும். அந்த அழுத்தத்தில் இருந்து மனநிலையை சமநிலைப்படுத்துவது கொஞ்சம் கடினமான காரியமாகவே இருக்கும்.

ஒரு சிறுவன் தன் அனுபவ ரீதியில் தேடிக் கோக்கும் 101 கேள்விகளினூடே நம் நாட்டின் ஒரு சாராரின் வறுமை நிலை, அவலச் சூழல், கடைநிலை தொழிலாளர்கள் நிலை, தொழில் சங்கங்கள் செயல்படும் விதம், அரசுப் பள்ளிகளின் நிலை, ஆசிரியர்கள், மாணவர்களின் நிலை என சமூகத்தின் பல அம்சங்களை கச்சிதமாக பதிவு செய்திருப்பது வியப்புக்குரியது.

இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கும்போது நம்மில் பலருக்கும் இரண்டு விதமான எண்ணங்கள் தோன்ற வாய்ப்புண்டு. அவை:

> "நாம எவ்ளோ சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கோம்!"
> "நாம இப்ப பட்டுட்டு இருக்கிற கஷ்டம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை!"

இந்த சிம்பிளான ஸ்டேட்மென்ட் பின்னே ஒளிந்திருக்கும் ஆழமான விஷயங்களைக் கொஞ்சம் கவனித்துப் பார்க்கத் தொடங்கினால், நம்மை அறியாமல் சமூக மாற்றத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஏனென்றால், அனில்குமாரின் 101-வது கேள்விக்கான பதிலை இன்னமும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஆம், துயரத்தின் உச்சத்தை எட்டும்போது அனில் மனதில் அந்தக் கேள்வி உதிக்கும். அதை எழுதித் தர முடியாமல், வார்த்தைகளால் பதிவு செய்வான்.

"சார்... நான் எல்லா கேள்விகளையும் எழுதி முடிச்சுட்டேன். பல கேள்விகளுக்கு எனக்கே பதில் தெரியும். பல கேள்விகளுக்கு பதில் தெரியலன்னாலும் அது பத்தி கவலைப்படலை. ஆனால், இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் வேணும் சார்..." என்று அந்த 101-வதும், கடைசியுமான கேள்வியைக் கேட்பான்.

ஆசிரியர் முகுந்தனைப் போலவே நம்மிடமும் அதிர்ச்சி வலி.

அந்தக் கேள்விக்கான பதில் நம் உள்ளத்துக்குள் கிடந்தாலும், அது உரிய வடிவம் பெற்று தொண்டையைத் தாண்டி வார்த்தைகளாக வெளிவருவது கடினம்.

படத்தின் இறுதிக் காட்சியில், அந்த ஒரு விடை தெரியா கேள்வியுடன் முடியும் தருணத்தில்தான் நாம் சமூகம் குறித்து யோசிக்க ஆரம்பிப்போம்!

அப்படி என்னதான் இருக்கு அந்தக் கேள்வியில்?

எழுத்துகளால் கச்சிதமாக சொல்ல முடியாத உணர்வுகளை காட்சிகள் மூலம் கடத்து முடிவதே அற்புத சினிமா மொழியின் தனித்துவம். அந்த மொழியில் நேர்த்தியாக அமைந்த ஒரு காட்சி தரும் உணர்வை அப்படியே எழுத்தில் கொண்டுவரும் அளவுக்கு நான் வளராததில் மகிழ்ச்சி. 101 சோத்யங்களைப் பாருங்கள். நீங்களும் அனுபவியுங்கள்.

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

முந்தைய பதிவு: உத்வேக 'வெள்ளி'த்திரை | உத்வேக 'வெள்ளி'த்திரை: எளிதாக கடந்திடக் கூடாத 'காதலும் கடந்து போகும்'

இன்றும் 'அவள் அப்படித்தான்' இருக்கிறாள்!

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக