பதிப்புகளில்

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்திக்கும் ஆரம்பகட்ட பிரச்சனைகள்...

11th Dec 2016
Add to
Shares
135
Comments
Share This
Add to
Shares
135
Comments
Share

ஸ்டார்ட் அப்கள் சந்திக்கும் ஆரம்பகால பிரச்சனைகள் என்பது அவர்களைப் பொருத்தவரை ’முதல் வருடத்தில் சந்திக்கும் சவால்களே ஆகும். தொழில்முனைவோர் இந்த ஆரம்ப காலகட்டத்தை எவ்வாறெல்லாம் அளவிடுகிறார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

image


தொடக்க நிறுவனத்தின் சவால்கள் தொடங்கும் நேரம்:

* புதிய முயற்சிக்காக செலவு செய்யத் தொடங்குவது

* தொழில் தொடங்குபவர் அல்லது தொடங்குபவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை     நிறுவனத்தில் முழுமையாக செலவிடுவது 

* ஸ்டார்ட் அப் வருமானம் ஈட்டத் தொடங்வது

* ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது விதை நிதி வாயிலாகவோ தொழிலுக்கு நிதியுதவி கிடைப்பது

இதுபோன்ற சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட உடனே தாமதிக்காமல் செயல்படவேண்டும் என்று நினைப்பார்கள். மேலே குறிப்பிட்ட அனைத்தும் முழுமையாக முறையாக நடக்கலாம் அல்லது தவறாகலாம். எப்படி இருந்தாலும் ஸ்டார்ட் அப்பின் துவக்க காலகட்டத்தில் ஆபத்து காரணிகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

என்னைப் பொருத்தவரை ஒரு ஸ்டார்ட் அப்பின் ஆரம்ப கட்ட சிக்கல்களை கீழ்கண்ட வகைகளாக பிரிக்கலாம்:

சந்தை மதிப்பீடு மற்றும் போட்டியாளர்களிடம் இல்லாத தனிச்சிறப்பு (USP)

தொடக்க நிறுவனம் என்பது புதுமையான தொழில் சிந்தனைகள் மற்றும் தொழில் மாதிரிகள், அல்லது ஏற்கெனவே இருக்கும் தொழில் மாதிரிகளை புதிய இடங்களிலோ அல்லது வேறுபட்ட விதத்திலோ முயற்சி செய்வதாக இருக்கலாம். தங்களை எப்படி வேறுபடுத்திக் காட்டுவது என்பது குறித்து அவர்கள் சிந்திக்கவேண்டும். விலை, விரைவாக வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பது, தனிப்பட்ட தேவைக்கேற்ப வடிவமைப்பது, அபாரமான தரம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வாடிக்கையாளர்கள் எதற்காக இந்த தயாரிப்பிற்காகவோ, சேவைக்காகவோ அல்லது தீர்விற்காகவோ செலவு செய்யவேண்டும் என்பதை புதிய தொழில் சிந்தனைகளை செயல்படுத்த நினைப்பவர்கள் மிகத்தெளிவாக வரையறுக்க வேண்டும். 

சாதகமான சந்தை அளவையும் சந்தையில் செயல்பட அவர்களுக்கான உரிமையையும் மதிப்பிட வேண்டும். மேலே குறிப்பிட்ட அனைத்தையுமோ அல்லது சிலவற்றையோ செய்யமுடியாததுதான் நிறுவனம் தொடங்கிய ஆரம்ப நாட்களிலோ அல்லது முதல் வருடத்திலோ ஏற்படும் மிகப்பெரிய ஆபத்தாகும்.

திட்டமிட்டமடி தயாரிப்பையோ, சேவையையோ அல்லது தீர்வையோ சந்தை ஏற்றுக்கொள்கிறதா?

தங்களது புதிய அறிமுகத்திற்கு சந்தை எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை மதிப்படுவதில் அனைத்து ஸ்டார்ட் அப்களும் அதிக கவனம் செலுத்தவேண்டும். அறிமுகப்படுத்துவதற்கு முன்பு ஆபத்துகளை எப்படி கையாள்வது என்று திட்டமிட்டிருந்தாலும், எதிர்பார்த்ததைவிட வேறுவிதமாக சந்தையோ அல்லது வாடிக்கையாளர்களோ பதிலளிக்கவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக தயாரிப்பையோ, சேவையையோ அல்லது தீர்வையோ போதுமான அளவு ஏற்றுக்கொள்ளாதது அல்லது நிறுவனம் அளிக்கும் விலையை ஏற்றுக்கொள்ளாமல் போவது போன்ற அம்சங்களில் சந்தையின் வெளிப்பாடு வேறுபடலாம். அவ்வாறு நடக்கும்போது அதிவேகமாக செயல்படுவதில்தான் தொழில்முனைவோரின் ஒட்டுமொத்த திறன் அடங்கியுள்ளது. 

சந்தையின் உண்மையான தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டு மாற்று திட்டங்களை (Plan B or C) செயல்படுத்துவதில் எவ்வளவு வேகம் காட்டுகிறார்களோ அவ்வளவு வேகமாக ஆரம்பகட்ட சிக்கல்களை கடந்துசெல்ல முடியும். 

தொழிலில் வருமானம் ஈட்டும் நேரம் 

அனைத்து ஸ்டார்ட் அப்பும் தங்களது தொழில் திட்டத்தில் சில வருவாய் மாதிரிகளை வடிவமைத்திருப்பார்கள். சில குறிப்பிட்ட அளவுகளையும் விலையையும் கருத்தில் கொண்டு இந்த வருவாய் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல தொடக்க நிறுவனங்கள் தொழில் திட்டங்களில் அதீத தீவிரமாக செயல்பட்டு விரைவில் சந்தையில் உயரவேண்டுமென எதிர்பார்ப்பார்கள். இதனால் எதிர்பார்த்ததைவிட குறைவான வரவேற்பு சந்தையில் கிடைக்கும்போது இவர்கள் மிகவும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாவார்கள். 

ஆரம்ப கட்டத்தில் எச்சரிக்கையாக செயல்படுபவர்களும் தொழில் திட்டத்தில் விற்பனை அளவு குறித்தும் வருவாய் குறித்தும் குறைவான எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் ஆபத்துகளை மிகவும் சிறப்பாக சமாளிக்க முடியும். 

ஸ்டார்ட் அப் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து குழு அமைத்து அவர்களை தக்கவைத்துக்கொள்ள முடிகிறதா?

எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றியும் அதை நடத்துபவரைச் சார்ந்ததாகவே இருக்கும். தொடக்க நிறுவனத்துக்கு இந்த விதி பொருந்தும். நிறுவனத்தை மேம்படுத்துபவருக்கோ அல்லது முதலீட்டாளருக்கோ சிறந்த தொழில் சிந்தனையோ வலிமையான நோக்கமோ மட்டும் இருந்தால் போதாது. ஆரம்ப கட்டத்தில் உருவாகும் குழுவின் தரம் ஸ்டார்ட் அப்பின் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கிறது. நிறுவனத்தின் நோக்கத்தை முறையாக புரிந்துகொண்டு நம்பிக்கையுடன் திறமையாக பணிபுரிய தயாராக இருப்பவர்களை கண்டறிவது கடினமானதாகும். குழுவில் இணையும் ஊழியர்கள் தங்கள் 200 சதவீத உழைப்பை நிறுவனத்துக்கு அளிக்கவேண்டும். குறைவான கட்டமைப்புகள் கொண்ட சூழலிலும் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிந்து சுய உந்துதலுடன் வெற்றிக்காக போராட வேண்டும்.

இப்படிப்பட்ட ஊழியர் நிறுவனம் தொடங்கிய வெகு சில நாட்களிலேயே பணியிலமர்த்தபட்டால் தொழில்முனைபவரின் கனவும் நோக்கமும் நிறைவடையும். முழுவீச்சில் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொடங்கவும் வெற்றியடையவும் கால அவகாசம் தேவைப்படும் என்று நிறுவனர் நினைப்பார். இந்நிலையில் புதிய ஊழியர்கள் பொறுமையிழந்து விடுவார்கள். 

மிகப்பெரிய ப்ராண்டுகளிலும் பிரபலமான நிறுவனங்களிலும் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டதால் தங்களது தனிப்பட்ட வளர்ச்சியும் வெற்றியும் பாதிக்கப்பட்டதாக கருதுவார்கள். தங்களது துவக்க நாட்களிலேயே பல விஷயங்களை கற்றுக்கொண்டு நல்ல திறமையானவர்களாக ஸ்டார்ட் அப்பின் வளர்ச்சிக்கு உதவும் ஊழியர்களாக மாறும் நிலையில் அவர்களை நிறுவனம் இழந்துவிடுகிறது. ஒவ்வொரு ஸ்டார்ட் அப்பும் தங்களுக்கேற்ற வகையில் இந்த சிக்கலை கையாளவேண்டும். ஊழியர்களை பங்குதாரராக்குவது அவர்களை தக்கவைத்துக்கொள்ள பின்பற்றப்படும் ஒரு பழமையான முறையாகும். ஆனால் இன்று பல இளம் திறமைசாலிகள் இருப்பதால் அதுவும் பலனளிக்காது. இதனால் ஸ்டார்ட் அப்கள் மிகச்சிறந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு சற்று அதிகம் செலவு செய்து அவர்களை தக்கவைத்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அனைவருக்கும் ஒரே விதமான அணுகுமுறை பொருந்தாது. ஆனால் குழுவினருடன் சிறந்த முறையில் ஒன்றிணைவதன் மூலம் இந்த நிலையை சமாளிக்கலாம். மேலும் தொடக்க நிறுவனங்கள் செயல்முறைகள் தொடர்பான விதிமுறைகளை தொடங்கிய விரைவிலேயே நிறுவவேண்டும். இதனால் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் காலம்தொட்டு அனுமதிக்கப்பட்டு வந்த அளவைவிட அதிகமானாலும் ஸ்டார்ட் அப்களால் நிலையை சமாளிக்கமுடியும். இன்று இப்படிப்பட்ட சூழலில் தொழில் செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.

இதுவரை மேற்கோள் காட்டியவற்றின் தொகுப்பாக ஆபத்துகளை கையாள்வதற்கான ஏழு வழிமுறைகளை காண்போம் :

1. அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் போட்டியாளர்களிடம் இல்லாத தனித்திறனை, வரையறுப்பதற்கு அதிகபட்ச நேரத்தை தொடக்க நிறுவனம் செலவிடவேண்டும். இதைத் தெளிவாக புரிந்துகொள்ளவில்லையெனில் தொழிலில் வெற்றி பெறுவது கடினம்.

2. சந்தையில் தயாரிப்பு, சேவை அல்லது தீர்விற்கான தேவையை அதிக நேரம் செலவழித்து ஆராயவும். தேவைப்பட்டால் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.

3. தொழில் திட்டங்களையும் கணிப்புகளையும் உண்மையில் செயல்படுத்தக்கூடிய வகையிலும் குறைவான எதிர்பார்ப்புடனும் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா தொழில்திட்டங்களும் எக்செல் ஷீட்டிலும் வணிக மாதிரிகளிலும் பார்ப்பதற்கு சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் நிஜ உலகில் பெரும்பாலும் தொழில்முனைவோரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே இருக்கும். உதாரணமாக திட்டத்தின் காரணம் முறையாக பொருந்தாமல் போகலாம், விலை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம், தவறு ஏதேனும் இருப்பின் உடனடியாக மாற்றம் செய்ய தயாராக இருக்கவேண்டும்.

4. நீண்டகால வெற்றிக்கு விரைவாக வெல்லும் சிந்தனைகளைத் தவிர்த்து வலிமையான அடிப்படை சிந்தனைகளை நோக்கி முன்னேறவேண்டும். 

5. அறிமுகப்படுத்தியதும் அடிக்கடி சந்தையில் தயாரிப்பு, சேவை அல்லது தீர்விற்கான மக்களின் வரவேற்பு குறித்து நேர்மையாக மதிப்பிடவும். திட்டத்திலல்லாத அல்லது அதுவரை சிந்திக்காத புதிய தேவை ஏதேனும் சந்தையில் இருப்பது தெரிந்தால் உடனடியாக அதை செயல்படுத்தவும். இதை உடனடியாகச் செய்யவேண்டியது அவசியம் ஏனெனில் ஒரு நிறுவனம் தங்களை சரி செய்துகொள்ள வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த அவகாசத்தையே அளிப்பார்கள்.

6. சந்தையின் வெளிப்பாடு எதிர்பார்த்ததற்கு மாறாக இருக்கும்போது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தாமதிக்காமல் அதிக சுறுசுறுப்புடன் மாற்று திட்டங்களை (ப்ளான் B மற்றும் C) செயல்படுத்தவேண்டும். அதே நேரத்தில் சந்தையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு சரிசெய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

7. துவக்க குழுவில் இணைந்த சரியான திறமைசாலிகளை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பணத்தால் மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்க.

ஆங்கில கட்டுரையாளர்: சுபாசிஷ் நாத்

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துக்களாகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்தை பிரதிபலிக்கவில்லை.)

Add to
Shares
135
Comments
Share This
Add to
Shares
135
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக