பதிப்புகளில்

இணையத்தை கலக்கிய ராதிகா ஆப்தே ’மீம்’கள் சொல்லும் பாடம்!

cyber simman
10th Sep 2018
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

பாலிவுட் நடிகை ’ராதிகா ஆப்தே’வை நமக்கெல்லாம் ’கபாலி’ நாயகியாகி தெரியும். ஆனால் இணையத்தை பொறுத்தவரை அவர் நெட்பிளிக்ஸ் நாயகியாக எங்கும் நிறைந்திருக்கிறார். அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மீம்களே இதற்கு சாட்சி. இதனால் அவர் மீம்கள் கொண்டாடும் நாயகியாகவும் உருவாகி இருக்கிறார். ஆனால், இந்த மீம் அலைக்குப்பின்னே இருப்பது ராதிகா ஆப்தே எனும் திறமையான நடிகையில் புகழ் மட்டும் அல்ல, மீம் எனும் டிஜிட்டல் கலை வடிவத்தை திறம்பட கையாளும் உத்தியும் தான்.

எப்படி என பார்க்கலாம்!

image


இணைய ரசிகர்கள் பலர் மீம்கள் உருவாக்க படைப்பாற்றலுடன் காத்திருப்பதால் அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம், ஒரு சிறு பொறி தான். அந்த பொறி கிடைக்கும் போது மீம்கள் அலையென பெருக்கெடுக்கின்றன. அண்மையில் ராதிகா ஆப்தேவை மையமாகக் கொண்ட மீம் அலை இப்படி தான் உருவானது.

நெட்பிளிக்ஸ் இணைய நிறுவனம் தயாரித்த மூன்று படங்களில் ராதிகா ஆப்தே தொடர்ந்து நடித்ததே இதற்கான துவக்கப்புள்ளியாக அமைந்தது. இணையம் மூலம் ஸ்டிரீமிங் முறையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை சட்டப்பூர்வமாக பார்க்க வழி செய்யும் நெட்பிளிக்ஸ் சொந்த தயாரிப்பாகவும் படங்களை உருவாக்குகிறது. நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் என இவை குறிப்பிடப்படுகின்றன.

இந்திய சந்தையில் தனி கவனம் செலுத்தும் நெட்பிளிக்ஸ், இந்திய ரசிகர்களுக்காகவும் சொந்த படங்களை தயாரித்து வருகிறது. இப்படி அண்மையில், லஸ்ட் ஸ்டோரீஸ், சேக்ரெட் கேம்ஸ் மற்றும் கோஹுல் ஆகிய மூன்று படங்கள் வெளியானது.

இணையத்தில் பெரும் கவனத்தை இந்த மூன்று படங்களிலும் ராதிகா ஆப்தே தான் நாயகி. நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் படங்களில் ஒரே நடிகை மீண்டும் நடிப்பது செய்தி மீம் படைப்பாளிகளுக்கு உற்சாகம் அளிக்க கூடியது அல்லவா? அது தான் அவர்கள், ராதிகா ஆப்தே மற்றும் நெட்பிளிக்ஸ் இடையிலான தொடர்பை மையமாகக் கொண்டு மீம்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கினர். இந்த கருத்தில் ஒரு மீம் வந்தால் போதாதா? அதே பாணியில் தொடர்ந்து மீம்கள் வெளியாவதற்கு. அது தான் நடந்தது.

பல இணையவாசிகள் நெட்பிளிக்ஸ் படங்களில் ராதிகா ஆப்தேவை இடம்பெறுவதை சுட்டிக்காட்டி நகைச்சுவை மிளிர மீம்களை பகிர்ந்து கொண்டனர். சோனாலி (@NotYourWitch__) எனும் ரசிகர், பிரெட் என்றால் பட்டர், நெட்பிளிக்ஸ் என்றால் ராதிகா ஆப்தே என குறிப்பிட்டிருந்தார்.

சர்ஜடேஜா எனும் ரசிகர் (@SirJadejaaaa) இணைய தொடர்கள் தற்காலிகமானவை, ராதிகா ஆப்தே நிரந்தரமானவர் என குறிப்பிட்டிருந்தார். அக்ஷய் கத்தாரியா (@AkshayKatariyaa) என்பவர், அடுத்த இணையதொடர் பற்றி ஆலோசனை செய்வோம் என நெட்பிளிக்ஸ் கேட்பதாகவும், உடனே ராதிகா ஆப்தே நாயகி, ராதிகா ஆப்தே அதிகாரி என பதில் வருவதாக காமிக் வடிவில் தெரிவித்திருந்தார்.

படே சோட் (@badechote ) என்பவர், அமெரிக்க தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற சிம்சன்ஸ் தொடரின் படத்தை போட்டு அதில் மைய பாத்திரமான சிம்சன் தவிர மற்ற உருவங்களை அனைத்தையும் ராதிகா ஆப்தே இருப்பது போல உருவாக்கி, இப்போதெல்லாம் நெட்பிளிக்ஸை திறந்தால் இப்படி தான் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மீம்கள் பெரும்பாலும் கேலி செய்யும் ரகத்தைச்சேர்ந்தவையாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் வகையில் இருந்தன. அதே நேரத்தில் ராதிகா ஆப்தேவின் ஆற்றலை மறைமுகமாக புகழும் வகையிலும் இருந்தன.

ஒரு நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படி மீம்கள் உருவாவது இயல்பானது தான். இதற்கு முன்னர் பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா என பலர் இப்படி மீம் புயல்களுக்கு மையமாக இருந்துள்ளனர். ஆனால், நெட்பிளிக்ஸ்+ ராதிகா ஆப்தே மீம் விவகாரத்தில் இந்த பின்னர் ஒரு அழகான திருப்பம் உண்டானது.

அடிப்படையில் இந்த மீம்கள் அனைத்தும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை நையாண்டி செய்து வெளியானவை. இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது கவனம் குவிந்தாலும், இணையவாசிகள் அந்நிறுவனத்தின் போக்கை கலைநயத்துடன் விமர்சித்துக்கொண்டிருந்தனர். நெட்பிளிக்ஸ் நிறுவனமும் இதை அறியாமல் இல்லை.

image


இந்த மீம்கள் நெட்பிளிக்ஸ் கண்டும் காணாமல் கடந்து போயிருக்கலாம். அல்லது பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால் நெட்பிளிக்ஸ் இத்தகைய வழக்கமான எதிர்வினைகளில் ஈடுபடாமல், இந்த மீம் விளையாட்டில் தானும் பங்கேற்க தீர்மானித்தது. அதாவது தன் பங்கிற்கு ஒரு மீமை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது. - https://www.instagram.com/netflix_in/

நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மீமும், வழக்கமானதாக இல்லாமல், கொஞ்சம் துணிச்சலோடு நிறுவனம் தன்னைத்தானே நையாண்டி செய்வதாக இருந்தது. நிறுவன படங்களில் ராதிகா ஆப்தே அடுத்தடுத்து நடித்ததை குறிப்பால் உணர்த்தி, அவர் நடிக்கும் புதிய தொடருக்கான அறிவிப்பை நகைச்சுவையாக வெளியிட்டிருந்தது. 

ராதிகா ஆப்தே எங்கும் நிறைந்திருப்பதை குறிக்கும் வகையில் ஆம்னிபிரஸண்ட் என தலைப்பிடப்பட்ட இந்த படத்திற்கான சுவரொட்டியிலும் ராதிகா ஆப்தே மூன்றுவித பாத்திரங்களில் இடம்பெற்றிருந்தார். கீழ கதை, இயக்கம், இசை என எல்லாமே ராதிகா ஆப்தேவாக இருந்தது. ராட்பிளிக்ஸ் தயாரிப்பு எனும் கேலி வாசகத்துடன் வெளியான இந்த சுய விமர்சன மீம் இணையத்தில் எண்ணற்றவர்களை கவர்ந்து கைத்தட்டல்களை அள்ளியது.

இந்த மீமில் இருந்த புதுமையான அம்சத்தால் கவரப்பட்ட இணைய நிறுவனமான ஜோமேட்டோ தன் பங்கிற்கு ஒரு மீமை வெளியிட்டது. பல்வேறு உணவு பொருட்களின் பெயரை வரிசையாக பட்டியலிட்டு, அவற்றின் பொதுவான அம்சமாக பனீர் இருப்பதை குறிப்பிட்டு, எங்கும் நிறைந்திருப்பது ராதிகா ஆப்தே மட்டும் அல்ல பனீரும் தான் என நெட்பிளிகிற்கு பதில் அளித்து தனக்கான விளம்பரத்தை தேடிக்கொண்டது.

நெட்பிளிக்ஸ் உடனே. இந்த பெயர் பட்டியலில் உள்ள எழுத்துக்களை கோர்த்து அதிலும் ராதிகா ஆப்தே பெயர் வருவதை சுட்டிக்காட்டி மீண்டும் அசத்தியது.- @ZomatoIN

இந்த உரையாடலை இணையம் ரசித்துக்கொண்டிருந்த நிலையில், நாக்பூர் காவல்துறை இந்த மீமை போன்ற ஒன்றை உருவாக்கி உங்களுக்காக எப்போதும் காவல்துறை என பெருமைபட்டுக்கொண்டது: @NagpurPolice

இந்த மீமிற்காக நாக்பூர் காவலதுறை பாராட்டப்பட மேலும் பலர் இந்த மீம் சங்கிலியை தொடர்ந்தனர். இணையத்தில் இந்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவன முயற்சிகள் பாராடப்பட்டன.

இதனிடையே ஆசிரியர் தினம் தொடர்பான வாழ்த்து மீமில் நெட்பிளிக்ஸ், ராதிகா ஆப்தே இல்லாமல் அடக்கி வாசித்தது. ஆனால் நெட்டிசன்கள் சும்மா இல்லாமல், ராதிகா ஆப்தேவை பல்வேறு வகையான ஆசிரியர்களாக அவதாரம் எடுக்க வைத்து மீம்களை வெளியிட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர்.

image


ஆக, நெட்பிளிக்ஸ்+ராதிகா ஆப்தே கூட்டணி மாயம் இன்னும் தொடர்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. இந்த மீம் சங்கில் பற்றி பல்வேறு ஊடகங்கள் சுவாரஸ்யமாக செய்தி வெளியிட்ட நிலையில் மிண்ட் இணையதளம், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் புத்திசாலித்தனமான மீம் பதிலடிக்கு பின், கிளிட்ச் எனும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் இருப்பதை கண்டறிந்து செய்தி வெளியிட்டுள்ளது. - https://bit.ly/2CK9jAC

இணைய யுகத்தில் சமூக ஊடகத்தின் தாக்கத்தையும், வீச்சையும் புரிந்து கொண்டு செயல்படுவதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது.

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags