கொள்ளையனை துணிச்சலாக பிடித்த இளைஞருக்கு சன்மானமாக கிடைத்த ‘வேலை’
17 வயதில் சூர்யகுமார் கொள்ளையனை விரட்டிப் பிடித்ததற்கு, கவுரவமான வேலையை தற்போது காவல்துறை அவருக்கு சன்மானமாக அளித்துள்ளது.
எதிர்பாராமல் பிறருக்கு நாம் செய்யும் உதவியின் பலனால் என்ன நன்மை என்பதை உணர்த்தி இருக்கிறது சென்னையைச் சேர்ந்த சூர்யகுமாரின் வாழ்க்கை. உயிரையும் துச்சமென மதித்து 17 வயதிலேயே கொள்ளையனை விரட்டிச் சென்று கொள்ளையடிக்கப்பட்ட 10 சவரன் தங்க நகையை மீட்டுக் கொடுத்தவருக்கு பிரபல நிறுவனத்தில் ஏசி மெக்கானிக் வேலையை வாங்கிக் கொடுத்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.
வாகன நெரிசல், எப்போதும் மக்கள் நடமாட்டமாக காட்சியளிக்கும் சென்னை மாநகரின் லட்சக்கணக்கான மக்களில் ஒருவராகத் தான் இளைஞர் சூர்யகுமாரும் வாழ்ந்து வந்தார். வறுமையான குடும்பச் சூழ்நிலையில் வாழ்ந்து வந்த அவர், பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாநகர் சிந்தாமணி பகுதியில் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பார்த்துக் கொண்டிருந்த 50 வயது பெண் மருத்துவர் அமுதாவிடம் நோயாளி போல சிகிச்சை பெற வந்த ஒருவன், அமுதாவின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினான்.
பெண் மருத்துவர் அமுதா இதனால் அதிர்ச்சியடைந்து உதவிக்குரல் எழுப்பியுள்ளார், அதற்குள் கொள்ளையன் இரு சக்கர வாகனத்தில் தப்பியோட அப்போது அந்த வழியில் வந்த இளைஞர் சூர்யா வெறும் கால்களுடனே கொள்ளையனை பிடிக்க விரட்டிச் சென்றுள்ளார். நகையை பறித்துக் கொண்டு ஓடும் கொள்ளையன் வயதில் தன்னை விட மூத்தவர் தான் பலவீனமானவன், கொள்ளையன் ஆயுதம் கொண்டு தாக்கிவிடுவானே என்றெல்லாம் அஞ்சாமல் சூர்யா துணிந்து கொள்ளையனை விரட்டிச் சென்றார்.
சூர்யாவைப் பார்த்து பொதுமக்களும் கொள்ளையனை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட கொள்ளையன் 26 வயது நபர், அது மட்டுமின்றி கொள்ளையடித்த நகையுடன் இரு சக்கர வாகனத்தில் விரைந்து செல்ல முயன்றும் சூர்யாவின் முயற்சியால் போலீசிடம் சிக்கினான்.
கொள்ளையனை பிடிக்க பொதுமக்கள் உதவினாலும் இதற்கான முதல் அடியை வைத்தது சூர்யகுமார் தான். இந்த சம்பவத்தை அறிந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இளைஞர் சூர்யகுமாரை நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். கொள்ளையர்களைப் பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதற்கு சூர்யகுமார் ஒரு எடுத்துக்காட்டு என்றும் விஸ்வநாதன் சூர்யாவை பாராட்டினார்.
பாராட்டு விழா முடிந்த பின்னர் சூர்யகுமாருக்கு என்ன உதவி வேண்டும் என்று காவல்ஆணையர் கேட்டுள்ளார், அதற்கு அவர், பணமோ பொருளோ கேட்காமல் எனக்கு ஏசி மெக்கானிக் வேலை தெரியும் எனவே ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று கேட்டுள்ளார். சூர்யாவிற்கு அப்போது 17 வயது மட்டுமே ஆகி இருந்ததால் எதையும் செய்ய முடியாமல் இருந்த ஆணையர், தற்போது சூர்யா 18 வயதை அடைந்துவிட்டதை நினைவில் வைத்து அவருக்கு பணியை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இளைஞர் சூர்யாவிற்கு டிவிஎஸ் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிஆணையை பெற்றுக்கொண்ட சூர்யா மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளார்.
“சீருடை மற்றும் கருப்பு ஷூ அணிந்து கவுரவமான வேலைக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவு, ஆனால் குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கிடைத்த வேலையை செய்து வருமானம் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். தற்போது என்னுடைய கனவு நிறைவேறியுள்ளது,”
என்று சூர்யா டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். என்னுடைய பெற்றோரை கடந்த 6 ஆண்டுகளாக நான் கவனித்து வருகிறேன், எனக்கு கிடைத்துள்ள வேலை அவர்களை மேலும் நல்ல முறையில் பார்த்துக் கொள்ளவும், என்னுடைய குடும்பத்தின் பொருளாதார நிலை வளர்ச்சியடையவும் உதவியாக இருக்கும் என்றும் சூர்யகுமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பணி மட்டுமின்றி எஸ்ஆர்எம் குழுமத்தின் ரூ. 1 லட்சம் பரிசு மற்றும் சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 2 லட்சம் பரிசும் சூர்யகுமாருக்கு கிடைத்துள்ளது. துணிந்து நின்றால் வெற்றி நம்பக்கம் என்பதை உணர்த்தும் இளைஞராக திகழும் சூர்யகுமார் இன்றைய இளம் தலைமுறையினருக்கான விடிவெள்ளி.