பதிப்புகளில்

தமிழ் வெப் சீரிஸ்: வெள்ளித் திரைக்கு வெளியே ஒரு பிரம்மாண்ட படைப்புலகம்

பெருகி வரும் வெப் சீரிஸ்கள், வெள்ளித்திரைக்கும் சின்னத்திரைக்கும் வெளியே ஒரு பிரம்மாண்டமான படைப்புலகை உருவாக்கியிருக்கிறது.

sneha belcin
10th Jul 2018
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

உரையாடல் நடக்கும் தளம் மாறும் போது பேசு பொருளும் மாறிவிடும் என்பதை தான் நிரூபிக்கிறது பெருகி வரும் வெப் சீரிஸ்கள். உலக அளவில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் என பல வீடியோ தளங்களில் பல வெப் சீரிஸ்கள் பார்வையாளர்களின் தேர்வையே மாற்றும்படிக்கு வளர்ந்திருக்கின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன், ரொமாண்டிக்-காமெடி, யங்-அடல்ட் கதைகள் என பல பிரிவுகளில் விரிந்து கிடக்கும் படைப்புகள், வெள்ளித்திரைக்கும் சின்னத்திரைக்கும் வெளியே ஒரு பிரம்மாண்டமான படைப்புலகை உருவாக்கியிருக்கிறது.

இந்திய அளவில், இந்தி வெப் சீரிஸ்கள் பல தலைப்புகளில் பேசிக் கொண்டிருக்கும் போதும், தமிழ் வெப் சீரிஸ்களில் பெரும்பான்மை காதலும் காதல் சார்ந்ததுமாக இருக்கின்றன. அவற்றில் எதாவது ஒன்றிரண்டு மட்டுமே பேசு பொருளிலுமே தனித்து நிற்கின்றன. 

image


தனித்து தெரியும் பிரபலமான தமிழ் வெப் சீரியஸ்களில் சில :

1. Livin

திருமணம் செய்து கொள்ளாமல் ‘லிவ்-இன்’ முறையில் ஒன்றாக வாழ்வதை பற்றிய வெப் சீரிஸ். சமகால உறவுகளின் யதார்த்தத்தையும், நிச்சயமின்மையும் அழகாய் எழுதப்பட்டிருக்கும் இந்த தொடர், பெருமளவு வரவேற்பை பெற்றது. மெட்ராஸ் செண்ட்ரல் சேனல் வெளியிட்ட இந்த தொடர், அதன் நடிகர்களுக்காகவும், எழுத்திற்காகவும், கதை களத்திற்காகவும் பேசப்பட்டது. பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் அம்ருதா ஸ்ரீனிவாசனும், கண்ணா ரவியும் நடித்திருக்கிறார்கள்.

2. As I am suffering from காதல்

பாலாஜி மோஹன் இயக்கத்தில், ட்ரெண்ட் லவுட் தயாரிப்பில், ஹாட்ஸ்டாரில் வெளியான வெப் சீரிஸ் ‘As I am suffering from காதல்’. இதுவும்,இளைஞர்களுக்கு இடையேயான உறவுகளை பேசுவதாகவே இருந்தது. திருமணம், லிவ்-இன், விவாகரத்து என சில தலைப்புகளில் பரந்து செல்லும் என்றாலுமே மேல்தட்டு கலாச்சாரத்தை மட்டுமே பிரதிபலித்தது பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

3. Half-boil

மில்லினியல்களின் வாழ்க்கைமுறைகளையும், வேலை வாய்ப்புகளையும் பற்றி பேசிய மெட்ராஸ் செண்ட்ரலின் வெப் சீரிஸ் half boil. கோபி மற்றும் சுதாகர் ஆகிய இரண்டு ஆளுமைகளும் வெப் சீரிஸுக்கு பெரிய பலமாக இருந்தார்கள். இளைஞர்களை கவரக் கூடியதாக தொடர் வடிவமைக்கப்பட்டிருந்தது. நிறைய இடங்களில் யதார்த்தம் இல்லாமல் இருந்தது தான் குறையாக இருந்தது என்பது பார்வையாளர்களின் கருத்து.

image


4. அமெரிக்க மாப்பிள்ளை

ட்ரெண்ட் லவுட் தயாரிப்பில், ப்ரவீன் பத்மநாபன் இயக்கத்தில் வெளியான இந்த தொடர், திருமணம் எனும் ஒப்பந்தத்தையும், ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள் மீதுள்ள சமூக வெறுப்பையும் பதிவு செய்ய முயன்றது. Zee originals படைப்பான ‘அமெரிக்க மாப்பிள்ளை தொடர்’, திருமணத்தை மறுக்க தான் ஒருபாலீர்ப்பு கொண்டவன் என்று பொய் சொல்லிய பிறகு, தன்னுடைய பாலுணர்வை கண்டுபிடிக்கும் ஒரு நபரின் கதை.

5. Ctrl+ Alt+ Del

வெப் சீரிஸ் ட்ரெண்ட் ஆகத் தொடங்கிய காலக்கட்டத்தில் வந்தது இந்த தொடர். ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் நால்வரை பற்றிச் செல்லும் கதை. திருமணம், காதல், உறவுகள் என வழக்கமான தமிழ் வெப் சீரியல் அமைப்பிலேயே பயணிப்பார்கள். டெம்பிள் மங்கீஸ் புகழ் அப்துல், மாயாநதி படத்தில் ‘பாவ்ரா மன் தேக்னே’ பாடிய தர்ஷனா ராஜேந்திரன் என திறமையான கலைஞர்களை கொண்டிருந்தது Ctrl+ Alt+ Del.

தொலைக்காட்சி தாண்டி சீரியல்கள் யூட்யூப் வழியே பிரபலமாகி வரும் இக்காலத்தில் அதன் வளர்ச்சி, வருவாய் மற்றும் போட்டி குறித்து யூட்யூப் சேனல் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டோம்.

யூட்யூபில் படைப்புகள் மூலம் வருமானம் பார்ப்பது கடினமாகிவிட்டது, ஃபேஸ்புக் மாதிரியான பிற தளங்களில் தான் இனி இயங்க வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டதை குறித்து பேசிய ஸ்மைல் சேட்டை யூட்யூப் சேனலின் ராம் குமார், 

“ஃபேஸ்புக் மட்டும்னு தான் இல்ல, மற்ற வீடியோ ப்ளாட்ஃபார்மஸ்ல பிசினஸ் பண்றது வளர்ந்திருக்கு. அதுக்குக் காரணம் மானிடைசேஷன். யூட்யூப்ல இப்போ வருவாய் மாதிரியை கொறச்சிட்டாங்க. மற்ற வீடியோ பிளார்ட்பார்ம்ல வீடியோ பண்ணிக் கொடுத்தா, அதுக்கேத்த பிசினஸ் இருக்கும்,” என்றார்.

இதன் காரணமாக யூட்யூப் சேனல்கள் இனி வெப் சீரிஸ்களை தயாரிக்காமல் இருக்குமா என்று கேட்ட போது, 

“அப்படி இல்லை. நிச்சயமாக யூட்யூப்பில் வெப் சீரிஸ்கள் வந்தபடி தான் இருக்கும். புதுசா வர்ற க்ரியேட்டர்ஸோட முதல் கண்டெண்ட், முதல் படைப்பு யூட்யூபில் தான் வரும். மற்ற வீடியோ பிளாட்ஃபார்ம் எல்லாம் யூட்யூபை பார்த்து தான் செலக்ட் பண்றாங்க,” என்றார்.
ஹாஃப் பாயில் வெப் சீரிசில் இருந்து ஒரு காட்சி

ஹாஃப் பாயில் வெப் சீரிசில் இருந்து ஒரு காட்சி


யூட்யூப், இன்னும் பல வருடங்களுக்கு சர்வதேச அளவிலேயே அடிப்படையான வீடியோ தளமாக இருக்கும் என்பது உறுதி.

இன்று, வெள்ளித்திரையில் பேச முடியாத விஷயங்களை எல்லாம் - உறவுகள், பாலியல் குறித்த பேச்சுக்கள் என எதுவாக இருந்தாலும் - அதை இணையதளங்களின் வழியே, வெப் சீரிஸ்கள் வழியே பேசிவிட முடிகிறது. இது குறித்து லிவ்-இன் சீரியஸை இயக்கிய பிரபுராம் வியாஸிடம் பேசிய போது, 

“தியேட்டருக்கு இருக்கும் பார்வையாளர்கள் குறிப்பிட்ட ஒரு கருத்தியலையே வளர்த்து வருவதால் நிறைய விஷயங்களை தியேட்டர் வழி பேச முடிவதில்லை. ஆனால், இணைய வாடிக்கையாளர்களிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் உரையாடலை நடத்துவது எளிதாக இருக்கிறது,” என்றார்.

முழுநீளப்படம் ஒன்றை எழுதுவதற்கும் வெப் சீரிஸ் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசங்களை பற்றி கேட்க, 

“ஸ்ட்ரக்சரில் தான் வித்தியாசங்கள் இருக்கும். முழுநீளப்படத்திற்கு எழுதும் போது, இண்டர்வல், ப்ரீ க்ளைமாக்ஸ், க்ளைமாக்ஸ் என்று எழுத வேண்டும். வெப் சீரியஸுக்கு எழுதும் போது இதை ஒவ்வொரு எப்பிசோடிற்குமே பண்ண வேண்டும்,” என்றார்.

சினிமாக்களில் பார்த்து பழகிய முகங்களை வெப் சீரிஸில் பார்ப்பது பற்றி கேட்ட போது, “இன்னைக்கு ராதிகா ஆப்தே, விக்கி கௌஷல், நவாசுதின் சித்திக் மாதிரி நிறைய நடிகர்கள், வெப் சீரிஸ்ல நடிக்குறதை பார்க்குறோம். சினிமாவுக்கு சமமான பிளாட்ஃபார்மா தான் வெப் சீரிஸ் இருக்கு. இதற்கென்று ஒரு ஆடியன்ஸ் உருவாகியிருக்காங்க. வெப் சீரிஸ்ஸையும் சினிமாவையும் கம்பேர் பண்ணி சொல்லணும்னா, ரெண்டுலயுமே ஒரே எஃபொர்ட் தான் போடப்படுது. டைரக்டரும், ஆக்டர்சும் ஒரே மாதிரி தான் வேலை செய்வாங்க.

லிவ் இன் சீரிஸில் நடித்த கண்ணா ரவி (இடது)

லிவ் இன் சீரிஸில் நடித்த கண்ணா ரவி (இடது)


”தயாரிப்புல வேணும்னா வித்தியாசங்கள் இருக்கலாம். லிவ்-இன் சீரியஸ்ல பட்ஜெட் கம்மி. அதனால, ஒரு விஷயத்தை கரெக்டா செஞ்சு முடிக்கிற வரை அதை திரும்ப திரும்ப செய்யலாம். நான் எப்பவுமே வெப் சீரிஸ் பண்றதுக்கு ரெடி தான்,” என்கிறார் கண்ணா ரவி, லிவ்-இன் சீரியஸின் ஹரிஷ்.

வெப் சீரிஸ்; முறையே பயன்படுத்தப்பட்டால் ஆக்கப் பூர்வமான படைப்புகள் தமிழ் பார்வையாளர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வணிக ரீதியாக மட்டுமே படைப்புகள் அணுகப்படும் எனில், பெரும்பாலான சினிமாக்களை போலவே ஏமாற்றமளிக்கும் படைப்புகளை நாம் பார்க்க வேண்டியதாக அமையலாம். 

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக