பதிப்புகளில்

ஆடம்பரமான அதே சமயம் கழிவுகளற்ற திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள உதவும் ஷியாமளா சுரேஷ்!

ஷியாமளா சுரேஷ் அவரது நண்பர்களும் உடன் பணிபுரிபவர்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் திருமண ஏற்பாடுகள் செய்ய உதவுகிறார்கள்...

16th Jul 2017
Add to
Shares
385
Comments
Share This
Add to
Shares
385
Comments
Share

இந்தியத் திருமணங்கள் பிரம்மாண்டமாய் நடத்தப்படும். கண்கவரும் அலங்காரங்கள். விதவிதமான உணவு வகைகள். இவை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இத்தகைய கொண்டாட்டங்களில் நாம் அதிகம் பதிவுசெய்யாத சில அம்சங்களும் உள்ளன. அவை திருமணங்களின்போது சேகரிக்கப்படும் கழிவுகளும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும்தான். மிஞ்சும் உணவுகள், ப்ளாஸ்டிக் ஸ்பூன்கள், தட்டுகள், கப்கள், டம்ளர்கள் என அனைத்தும் ஏற்கெனவே மலைபோல கழிவுகளைக் குவித்திருக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு கொட்டப்படுகிறது.

இப்படிப்பட்ட மோசமான நிலையில் விசேஷ நாட்களை மாறுபட்ட விதத்தில் கொண்டாடலாம் என்று ஒருவர் எடுத்துரைப்பதுடன் அதைச் செயல்படுத்தியும் காட்டுவதைப் பார்ப்பதற்கு புத்துணர்ச்சியளிக்கிறது.

image


பெங்களூருவைச் சேர்ந்த 27 வயதான ஷ்யாமளா சுரேஷ், மக்கள் சிறப்பான தருணங்களை சுற்றுச்சூழலுக்கு பாதகமின்றி உகந்தவாறு கொண்டாட உதவுகிறார்.

கழிவுகளற்ற கொண்டாட்டங்கள்

என்னுடைய நண்பர்களான டாக்டர் மீனாட்சி பரத் மற்றும் வாணி மூர்த்தி ஆகியோருடன் 2012-ம் ஆண்டு கோடை விடுமுறையை செலவழித்தேன். அப்போது கழிவுகள் குறித்தும் அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும் தெரிந்துகொண்டேன். வகைப்படுத்துதல் மற்றும் கழிவுகளை உரமாக்குதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் துவங்கினோம். இதை எங்களது வாழ்க்கையின் ஒரு பகுயாகவே மாற்றியுள்ளோம்.” என்றார் ஷியாமளா.

அதன் பின்னர் இதைச் செயல்படுத்த ஒவ்வொரு முயற்சியாக எடுத்தோம். ஒரே முறை பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் அல்லது பேப்பரினாலான கப்கள், தட்டுகள், ஸ்பூன்கள் ஆகியவற்றிற்கு பதிலாக மறுசுழற்சிக்கு உகந்த பொருட்களுக்கு மாறினோம். ஷியாமளா கூறுகையில்,

”நாங்கள் வெளியே சாப்பிடச் செல்லும் போதோ அல்லது விசேஷங்களை நடத்தும்போதோ ஸ்டீல் கட்லெரிகளை உடன் எடுத்துச் செல்லத் துவங்கினோம். இதனால் கழிவுகளற்ற நிலை ஏற்பட்டது. எங்களது குழு உறுப்பினர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. எந்தவிதக் கழிவுகளும் நிலத்தில் சென்று சேராதவண்ணம் ஒரு திருமணத்தை பார்க்க விரும்பினோம்.
image


முதல் அனுபவத்திற்குப் பிறகு ஷியாமளா ஆறு தம்பதிகளுக்கு உதவினார். இவர்கள் கழிவுகளற்ற வகையில் திருமணங்கள் ஏற்பாடுகள் செய்து மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர்.

”நாங்கள் ஒரு குழுவாக செயல்பட்டு கழிவு மேலாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறோம். திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரால் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த முயற்சி சாத்தியமாகிறது.” என்கிறார் ஷியாமளா.

பசுமையான திருமணம்

ஒரு முறை பயன்படுத்திய பிறகு அப்புறப்படுத்தப்படும் பொருட்கள் அல்லது மக்காத பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இதுவே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறுவதற்கான முதல் முயற்சியாகும். பசுமையான திருமணங்களால் இது சாத்தியமாகும்.

இளம் தலைமுறையினர் டிஜிட்டல் வாயிலாகவே அனைத்தையும் பகிர்ந்துகொள்கின்றனர். எனவே அவர்களை டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தியே அழைக்கலாம். அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்களை பெரியவர்களுக்கு மட்டும் வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறார்கள் ஷியாமளா மற்றும் அவரது நண்பர்கள். அலங்காரங்களுக்கு பளபளப்பான ப்ளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் மறுசுழற்சிக்கு உட்பட்ட பொருட்களே பயன்படுத்தப்படும். உள்ளூர் பூக்கள் அல்லது பருவகால பூக்களே பயன்படுத்தப்படும். ஏனெனில் இவைகளை எளிதாகக் கோர்த்து அலங்கரிக்கமுடியும். ஷியாமளா கூறுகையில்,

மலர்கள் பயிரிடுவதில் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் அவை நிலத்தை நச்சுத்தன்மை அடையச் செய்கிறது. இதனால் இயற்கையான முறையில் பூக்களை வளர்க்கும் விவசாயியிடமிருந்து நேரடியாக பூக்களை பெறுவதற்கான முயற்சி எடுக்கப்படுகிறது. குறைவான பூக்களே பயன்படுத்தப்படும். நுழைவாயிலில் மணமகன் மற்றும் மணமகளின் பெயர்களை எழுதுவதற்கு மறுசுழற்சிக்கு உகந்த பொருட்கள் அல்லது உரமாக்கக்கூடிய பொருட்களே பயன்படுத்தப்படுகிறது.
ஷ்யாமளா சுரேஷ்

ஷ்யாமளா சுரேஷ்


உணவு பரிமாறப்படும் டேபிளின் விரிப்புகளும் அனைத்து கட்லெரிகளும் மறுசுழற்சிக்கு உகந்ததாகும். பாட்டில் தண்ணீருக்கு பதிலாக வடிகட்டப்பட்ட தண்ணீர் பரிமாறப்படும்.

ஒரு கை தட்டினால் ஓசை வராது. அதற்கேற்ப பசுமை திருமணங்கள் சாத்தியமாக மணமகனும் மணமகளும் ஒத்துழைக்கும் நிலையில் விருந்தினர்களும் அதற்கு இணங்க நடந்துகொள்வது அவசியமாகும். குறிப்பாக பூங்கொத்துகளை அளிப்பதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அதனால் ஒரு பயனும் இல்லை. அவை வெறும் கழிவுகள் மட்டுமே.

விருந்தினர்கள் திரும்பச் செல்கையில் அவர்களுக்கு அளிக்கும் பரிசுகளை துணிப் பைகளிலோ அல்லது செய்தித்தாள்களால் செய்யப்பட்ட பேப்பர் பைகளிலோ வழங்கப்படும்.

”திருமணம் முடிந்தபிற்கு பார்த்தோமானால் மிஞ்சிய உணவுகள், வீணாக்கபட்ட உணவுகள், வாழை இலை, பூக்கள் ஆகியவை கழிவுகளாக சேர்ந்திருக்கும். மிஞ்சிய உணவுகளை தானமளிக்கப்படும். வீணாக்கப்பட்ட உணவுகள் விலங்குத் தொழுவத்திற்கோ அல்லது உரமாக்கும் யூனிட்டிற்கோ அனுப்பப்படும். வாழை இலைகள் மாட்டிற்கு அளிக்கப்படும் அல்லது உரமாக்கப்படும். பூக்கள் உரமாக்கப்படலாம் அல்லது பயோகேஸ் ஆலையில் போடலாம். மளிகைப் பொருட்கள் அடங்கிய ப்ளாஸ்டிக் பேக்கட்டுகள் தனியாக வைக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படும்.” என்றார் ஷியாமளா.

வழக்கமாக நடைபெறும் திருமணங்களுடன் ஒப்பிடுதல்

1,000 பேர் பங்கேற்கும் வழக்கமான திருமணங்களில் இரண்டு ட்ரக்குகள் நிரம்பும் அளவிற்கு கழிவுகள் சேர்ந்து நிலத்தில் கொட்டப்படும்.

”நண்பர் ஒருவரின் திருமணத்தில் ஒரு சிறிய பை இருந்தது. அவ்வளவு சிறிய பையில் என்ன இருந்தது? திருமணம் முடிந்த பிறகு சேகரிக்கப்பட்ட குப்பைகள். அவ்வளவுதான். மற்ற கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டது, உரமாக்கப்பட்டது, பயோகேஸ் ஆலைக்கு அனுப்பப்பட்டது அல்லது முற்றிலும் தவிர்க்கப்பட்டது. வழக்கமான திருமணங்களில் உணவு பரிமாறப்படும் பகுதியில் ஒரு நபர் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஏழு அப்புறப்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தியிருப்பார்கள். எனினும் ஒரு சிறு முயற்சியை மேற்கொள்வதன் மூலம் கழிவுகற்ற நிலையை ஏற்படுத்துவது சாத்தியமாகிறது.” என்றார் ஷியாமளா.

ஒரே முறை பயன்படுத்தப்படும் அப்புறப்படுத்தக்கூடிய பொருட்களை தவிர்ப்பதால் கார்பன் அடிச்சுவடுகள் நிலத்தில் சேருவதை பெருமளவு தவிர்க்கலாம். பேக்கிங், சேமிப்பு, போக்குவரத்து போன்றவற்றிற்கும் ஒரே முறை பயன்படுத்திவிட்டு நிலத்தில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகளுடன் கொண்டு சேர்ப்பதற்கான போக்குவரத்து என வளங்களும் ஆற்றலும் வீணாவதை தவிர்க்கலாம்.

ஸ்டீல் கப்களை பயன்படுத்துவதால் கார்பன் அடிச்சுவடுகள் மிகவும் குறைவாக இருக்கும். இந்த கப்களை பல்லாயிரம் முறை பயன்படுத்தலாம்.

பல செயல்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பலர் அறிவதில்லை. அவர்களுடைய செயல்களில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தினால் பாதிப்புகளை எளிதாக தவிர்க்கமுடியும் என்பதை உணர்கின்றனர். இதனால் பசுமையான சுற்றுச்சூழலுக்கு உகந்த திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்வருகின்றனர் என்றார் ஷியாமளா.

image


மேலும் வழக்கமான திருமண ஏற்பாடுகளைக் காட்டிலும் பசுமையான திருமணங்களுக்கு குறைவான செலவே ஆகும். அதன் தோற்றம், அனுபவம் போன்றவை சிறப்பாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு உண்டாகும் அபாயங்கள் தவிர்க்கப்படும். குறைந்த பணச்செலவில் திருமண ஏற்படுகள் செய்ய விரும்புபவர்களும் சற்றும் சமரசம் செய்து கொள்ளாமல் அதே அனுபவத்தைப் பெறலாம். 

”திருமண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களுக்கும் திட்டமிடுபவர்களுக்கும் மறுசுழற்சிக்கு உகந்த கட்லெரிகள், துணி சார்ந்த அலங்காரங்கள், புதுமையான முறையில் வரவேற்பு போன்றவற்றை வழங்கும்போது அழகாக தோற்றத்தைக் கண்டு இந்த மாற்றத்தை நிச்சயம் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள்.”

ஷியாமளா தற்போது மனித குடியேற்றங்களுக்கான இந்திய நிறுவனத்தில் ஆசிரியர் குழுவில் பணிபுரிகிறார். திடக் கழிவு மேலாண்மை குறித்து அவ்வப்போது கற்றுத்தருகிறார். பசுமையான திருமணங்களை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. விரைவில் அவரும் இதே பாதையில் இணைய உள்ளார். அவரது திருமண திட்டம் குறித்து கூறுகையில் விருந்தாளிகள் அனைவருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளோ அல்லது மற்ற ரசாயன கலப்பு உணவோ இன்றி இயற்கையான உணவே பரிமாறப்படும் என்றார் ஷியாமளா.

அவர் திருமண ஏற்பாடுகள் செய்பவர் அல்ல. இருந்தும் மக்கள் பசுமையான திருமணங்களை மேற்கொள்ள உதவுவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். அவரது முகநூலில் அவரை தொடர்பு கொள்ளலாம். எனினும் பசுமையான திருமணங்களை திட்டமிடும் நபரை பெங்களூருவில் அணுக கணேஷ் : ganesh@artyplanz.com என்கிற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆங்கில கட்டுரையாளர் : ஹேமா வைஷ்னவி

Add to
Shares
385
Comments
Share This
Add to
Shares
385
Comments
Share
Report an issue
Authors

Related Tags