பதிப்புகளில்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் இணைதளங்கள்!

5th Jun 2018
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

நவீன வாழ்க்கையின் தாக்கம் காரணமாக நம்முடைய பூமி பலவித பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து வல்லுனர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். பூமியின் இயற்கை வளத்தை பாதுகாக்கவும் எண்ணற்றவர்கள் உழைத்து வருகின்றனர். உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5 ) இன்று கொண்டாடும் நிலையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வோம்:

டிரிஹக்கர் (TREEHUGGER ):

image


சுற்றுச்சூழல் ஆர்லவர்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்ட இணையதளமாக 'டிரிஹக்கர்' விளங்குகிறது. இணைய இதழ் மற்றும் வலைப்பதிவு இரண்டும் இணைந்த தன்மையை பெற்றிருக்கும் இந்த தளத்தில் பசுமை முயற்சிகள் தொடர்பான செய்திகள், கட்டுரைகளை வாசிக்கலாம். குறிப்பாக பசுமை பாதுகாப்பிற்கு உதவும் வகையில் நீடித்த நிலையான வளர்ச்சி சார்ந்த செய்திகளையும், கட்டுரைகளையும் இந்த தளம் வெளியிட்டு வருகிறது.

பசுமை செய்திகள் மட்டும் அல்லாமல் சுற்றுச்சூழல் சிக்கலுக்கான தீர்வுகளையும் இந்த தளத்தில் காணலாம். வடிவமைப்பு, வாழ்க்கை, தொழில்நுட்பம், போக்குவரத்து, எரிசக்தி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கட்டுரைகளை காணலாம். பசுமை தொழில்நுட்பம் சார்ந்த இணையதளங்கள் மற்றும் செய்திகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். சுற்றுச்சூழலுக்கு நட்பான சேவைகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதற்கான புதுமையான தீர்வுகள் மற்றும் வடிவமைப்பு பரிந்துரைகளையும் காணலாம்.

வாசிக்கும் போது சுவாரஸ்யமாக உணர்வதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் பெறலாம்.

இன்ஹாபிடேட் : (https://inhabitat.com/)

கட்டிடக்கலை, வடிவமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரிவுகளில் கவனம் செலுத்தி வரும் இணையதளம். இவை எல்லாமே பசுமை முயற்சிகள் சார்ந்திருப்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். பொருத்தமான புதுமையான வடிவமைப்பு மூலம் பசுமை தீர்வுகளை உருவாக்க முடியும் எனும் நம்பிக்கையை விதைக்கும் செய்திகளையும், கட்டுரைகளையும் இதில் காணலாம். டைனி ஹவுஸ் எனப்படும் சிறிய வீடுகள் நுட்பம் துவங்கி, எரிசக்தியை மிச்சமாக்கும் குடியிருப்புக்கான நுட்பங்கள் வரை எண்ணற்ற பசுமை நுட்பங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

இதில் இடம்பெறும் கட்டிடக்கலை சார்ந்த செய்திகளும் குறிப்புகளும், புத்துணர்ச்சி அளிக்க கூடியது. சுற்றுச்சூழல் செய்திகள் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான புதிய நுட்பங்களை வழங்கும் பசுமை மற்றும் வாழ்வியல் இணையதளம் என இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது.

கிரிஸ்ட் (https://grist.org/)

சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகள் மட்டும் கட்டுரைகளை அளிக்கும் இணைய இதழ். கட்டுரைகள் தரமாகவும், ஆழமாகவும் இருப்பது தனிச்சிறப்பு. புவிவெப்பமாதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான ஆழமான அலசல் கட்டுரைகளை வாசிக்கலாம். சுற்றுச்சூழல் உலகில் அண்மை கால போக்குகளை அறியவும் இந்த தளம் உதவும். பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆவணப்படங்கள் குறித்த கட்டுரை உள்ளிட்ட பல கட்டுரைகள் கவனத்தை ஈர்க்கின்றன.

image


ஃபிரிசைக்கில் (https://www.freecycle.org/)

மறுசுழற்றி கோட்பாட்டை மையமாகக் கொண்ட இணையதளம். எந்த பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டது. ஒருவருக்கு பயனில்லாத ஒரு பொருள் இன்னொருவருக்கு பயனுள்ளதாக இருக்கும் எனும் நம்பிக்கை அடிப்படையில், பயன்படுத்திய பொருட்களை தேவையானர்வர்களுடன் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. இதை ஒரு இயக்கமாகவே இந்த தளம் மாற்றியிருக்கிறது. இந்த தளத்தில் இணைந்து, எந்த பொருளையும் தூக்கி வீசாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உலகம் முழுவதும் கிளைகளை கொண்டிருக்கிறது. இந்த குழுக்கள் பிரிசைக்கிள் குழுக்கள் என அழைக்கப்படுகின்றன.

ரீசைக்கிள் நவ் (https://www.recyclenow.com/)

மறுசுழற்சி முயற்சியை வலியுறுத்தும் இணையதளம். இங்கிலாந்தை மையமாக கொண்டது என்றாலும், மறுசுழற்சியை வலியுறுத்தும் கட்டுரைகள் மற்றும் தகவல்கள் அனைவருக்கும் பொதுவானவை. மறுசுழற்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நிச்சயம் உதவும்.

மதர்நேச்சர் நெட்வொர்க் (https://www.mnn.com/)

சுற்றுச்சூழல் தொடர்பான மற்றொரு அருமையான இணையதளம். வாழ்வியல், தொழில்நுட்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பிரிவுகளில் கட்டுரைகளை வாசிக்கலாம். இயற்கை சார்ந்த பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

திங்க் ஈட் சேவ் (http://www.thinkeatsave.org/ )

உணவுப்பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள இணையதளம். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது. உணவு பொருட்களை வீணாக்குவதை தவிர்ப்பது தொடர்பான பகுதியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வியக்க வைப்பதோடு, உணவுப்பொருட்களை வீணாக்காமல் தடுக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.வீட்டு சமையலறையிலேயே பயிர் செய்யக்கூடிய காய்கறிகள் போன்ற பயனுள்ள வழிகாட்டி கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

மோங்காபே (https://www.mongabay.com/)

image


சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை அளிக்கும் இணையதளம். சுற்றுச்சூழல் அறிவியல், வடிவமைப்பு, எரிசக்தி சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளுக்கான நம்பகமான தளமாக கருதப்படுகிறது.

எர்த் டைம்ஸ் (http://www.earthtimes.org/)

சுற்றுச்சூழல் செய்திகளுக்கான இணையதளம். வர்த்தகம், பருவநிலை, ஆரோக்கியம், எரிசக்தி, இயற்கை, மாசு என பல்வேறு தலைப்புகளின் கீழ் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்கலாம். பிளாஸ்டிக் குப்பைகளால் கடலில் ஏற்படும் எதிர்கால பாதிப்புகள் குறித்த ஆழமான கட்டுரை உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகளை காணலாம். பசுமை வாழ்க்கை வலைப்பதிவு, சுற்றுச்சூழல் சுற்றுலா வலைப்பதிவு ஆகிய பிரத்யேக பகுதிகளும் உள்ளன.

50 வேஸ் டூ ஹெல்ப் (http://www.50waystohelp.com/)

சுற்றுச்சூழலை காப்பதற்கான எளிய வழிகளை பரிந்துரைக்கும் இணையதளம். சிறிய செயல்களால் பெரிய மாற்றங்களை உண்டாக்க முடியும் என குறிப்பிடும் இந்த தளம், இதற்கான வழிகளை பட்டியலிடுகிறது.

எரிசக்தியை மிச்சமாக்கும் பல்புகளை பயன்படுத்துவது, இரவில் கம்ப்யூட்டரை அணைப்பது, தனிப்பட்ட பரிசுப்பொருட்களை பயன்படுத்துவது, உள்ளூர் பொருட்களை பயன்படுத்துவது, லைட்டருக்கு பதில் தீக்குச்சிகளை பயன்படுத்துவது என இந்த யோசனைகள் நீள்கின்றன. இந்த எளிய யோசனைகள் தரும் பலன்களும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 50 வழிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

படித்துப்பார்க்க எளிதானது என்பதோடு பின்பற்றவும் சுலபமானவை...

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags