பதிப்புகளில்

பாடகர் ஷிபானி கஷ்யபின் சூஃபி வாழ்க்கை முறை!

YS TEAM TAMIL
29th Dec 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

ஷிபானி கஷ்யப், தன்னை ஒரு சூஃபி என்றழைத்துக் கொள்கிறார். தன்னுடைய தோல்விகளைப் பற்றிப் பேசுவதில் தயக்கம் காட்டுவதில்லை. மனதில் தோன்றும் வார்த்தைகளை கத்தரிக்காமல் தெளிவாக வெளிப்படுத்துகிறார். ஷிபானியின் ஒரு சிறிய பாடல், ஏர் எஃப்.எம்மில் முதன்முறை வெளியானது, அன்று தொடங்கிய அவரது பயணம் இன்று இத்தனை தூரத்தை கடக்க வைத்திருக்கிறது என்பதை அவரோடு பேசிய ஒரு மணி நேரத்தில் உணர்ந்தேன்.

ஷிபானியின் கதையை சொல்லத் தொடங்கும் போதே,அவருடைய பாடல் ஒன்று, மெல்ல ஒலிக்கத் தொடங்குகிறது -

நான் ஒரு பெண்,
நான் ஒரு மங்கை, இது என் கதை...

இசைத் துறைக்கு அறிமுகமானது

இந்திய இசைத் துறைக்குள், பாப் இசையும் ஒரு வகையாக நுழைந்த போது தான் ஷிபானி தன் இசை பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

கடந்த பல வருடங்களில், சந்தைத் தேவைக்கேற்ப, இசைத் துறை பல மாற்றங்களுக்கு உட்பட்ட போது, ஒவ்வொருக் கட்டத்திலும், ஷிபானி தன்னை மெருகேற்றிக் கொண்டே வந்தார். தன்னை மட்டுமே சார்ந்து இயங்கும் இயல்பும், வாய்ப்புகளை தேடிப் பிடிக்கும் சாமர்த்தியமும் அவருடைய வெற்றிக்கு மற்றொரு காரணம்.

“நான் என்னை மட்டும் தான் சார்ந்திருக்கிறேன். பாடல்களை எழுதுவதும் நான் தான், இசையமைப்பதும் நான் தான். ஒரு ‘பிராண்டை’ கட்டமைப்பதென்பது, சுயத்தை கலை வடிவில் இருந்து பிரித்தெடுத்து திறன்களையும், ஆளுமையையும் மேம்படுத்தும் முயற்சி. அதே ஆளுமையில் கற்று, வளர்ந்து, முன்னேற வேண்டிய பொறுப்பு, நம்மிடம் தான் இருக்கிறது. அந்த வளர்ச்சியை பிறர் தலை நிமிர்ந்துப் பார்க்க வேண்டும்,”

வெற்றிக்கான பாதையை அமைப்பது துறையின் மீதிருக்கும் காதலும், ஆர்வமும் தான் என்கிறார் ஷிபானி.

“ஏதேனும் ஒன்றிற்கான தீவிர ஆசை உங்களிடம் இருக்குமானால், நீங்கள் நிச்சயம் அதை அடைவீர்கள். நீங்கள் கனவு கண்டால், அதை வாழ்வீர்கள். இதை நான் கண்கூட பார்த்திருக்கிறேன்.”

கருத்தோடு இசை!

வணிகமாக மட்டுமில்லாமல், இசை, சமூக மாற்றத்திற்கான, தாக்கத்திற்கான பாதையாகவும் இருந்திருக்கிறது ஷிபானிக்கு. தான் உறுதியாக உணரும் கருத்தை வெளிப்படுத்த, இசை அனுமதிப்பதாய் நினைக்கிறார். “மக்களை ஊக்கப்படுத்தி, வலிமையளிக்க இசை எனக்கு உதவுகிறது, இசையின் அர்த்தத்தை அப்போது நான் புரிந்துக் கொள்வேன்”.

மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், தீவிரவாதத்திற்கு போன்ற பல சமூக துரோகங்களுக்கு எதிராகவும், மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, பெண்களுக்கு வலிமையளித்தலுக்கு சார்பாகவும், அவருடைய இசை குரல் கொடுத்திருக்கிறது. “கலைஞர்கள் பிரசங்கம் செய்யத் தொடங்குவதை மக்கள் விரும்புவதில்லை. அதனால் தான், ஒரு மென்மையான அனுகுமுறையோடு தான் என் கருத்தை முன் வைக்கிறேன்.”

பிறர் சாராத வாழ்வு

ஒவ்வொரு கலைஞரும் தன்னை முழுமையாக கண்டறிந்து, தன் ஆர்வத்தை, கலையை, திறமையை உணர வேண்டும் என்கிறார் ஷிபானி. “ ‘சூஃபி இசை’ என்னும் அடையாளம், இங்கு தவறாக பிரயோகிக்கபடுவதாக” அவர் உணர்கிறார். தன் பாடல் நாட்டுப்புற கீதம் எனவும், தன் இசை ருஹானி என்றும் சொல்லும் ஷிபானி,“ யாரையும் சார்ந்திருக்காமல், சுதந்திரமாக, உன்னத சக்தியில் நம்பிக்கைக் கொண்டு, புவியோடு ஒன்றி வாழ நினைப்பவர் தான் சூஃபி” என விளக்குகிறார்.

ஷிபானியை ஊக்கப்படுத்தும் மற்றொரு காரணம், இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் இருக்கும் உற்சாகம். சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பல இடங்களுக்கு பயணித்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். சமீபத்தில் கயானா சென்று ஒரு மிகப் பெரிய பார்வையாளர் கூட்டத்திற்கு மத்தியில் நிகழ்ச்சி நடத்தி திரும்பியிருக்கும் ஷிபானி, எப்போதுமே தயாராகவும், நம் சிறந்த நிலையிலும் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்.

கற்றல் -ஒரு வாழ்நாள் பயணம்

தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட பிறகும் கூட ஷிபானி பயிற்சி செய்வதை விடவில்லை. மேற்கத்திய வாய்ப்பாட்டு இசையை, டில்லி இசைப் பள்ளியில் இருந்து கற்ற ஷிபானி, பியானோவும், கிடாரும் சுயமாக வாசிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார். பி.ஆர்.வர்மாவின் வழிகாட்டுதலின்படி இந்திய கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்ட ஷிபானி, இன்று வரை அவருடன் பயிற்சி செய்கிறார்.

சிறகு விரித்தல்

ராணுவக் குடும்பத்தில் வளர்ந்த ஷிபானி, லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இருந்து இலக்கியத்தில் பட்டம் பெற்றார். அவருக்கு இருந்த மிகப் பெரிய சவாலே, தான் வளர்ந்த பாதுகாக்கப்பட்ட சூழலில் இருந்து வெளியேறி, பிறரை சாராமல் வாழப் பழகுவது தான்.

“என் வாழ்வையும், என் இசையையும் கண்டுணர்ந்து, என்னை வெளிப்படுத்த தேவையான வாய்ப்பை உருவாக்க விரும்பினேன்”.

தனக்கென ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஒரு கார் வாங்கி, கார் ஓட்டக் கற்றுக் கொண்ட பிறகு, தன்னால் பல விஷயங்களை தனியாகவே சாதிக்க முடியும் என்று உணர்ந்திருக்கிறார்.

image


வாழ்வின் நிறைவின்மை

“நீங்கள் வளர வளர, உங்களுக்கான சவால்களும் வளரும்”. முதன்முறையாக பார்வையாளர்கள் முன் வரும் கலைஞருக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், வெற்றியின் ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட கலைஞருக்கு, பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும்.

விமர்சனங்களைப் பற்றிப் பேசும் போது, ஒரு கலைஞரின் தோல்வியை மட்டுமே வைத்து அவரைப் பற்றி எழுதிவிட முடியாது என்கிறார். ஒரு ‘ஹிட்’ படைப்பை கொடுக்காததற்கு, கலைஞர் மட்டுமே பொறுப்பு என பொதுவாக சொல்லப்பட்டாலும், அதில் வேறு பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். மிகச் சிறப்பான படைப்புக் கூட, சரியாக சந்தைபடுத்தாமல், விளம்பரப்படுத்தாமல் இருந்தால், அதற்கான வெளிச்சத்தைப் பெறாமல் போகும்.

தன் பாடல்களில் மூன்றில் ஒரு பங்கு பாடல்கள் தான் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றவை என்னும் ஷிபானிக்கு பிடித்த ‘கெஹ்லே கெஹ்லே’ பாடல், நிகழ்ச்சிகளில் பாடும் போதும், பலத்த பாராட்டுக்களைப் பெறுமாம். “மக்கள் அந்தப் பாட்டைப் பாராட்டுவார்கள், ஆனால் அவர்கள் அதற்கு முன் அந்தப் பாடலை ஏன் கேட்டத்திலை என்று யோசனையாக இருக்கும். சரியாக சந்தைப்படுத்தாததால் மக்களை சென்றடையாத பாடல்களில் இதுவும் ஒன்று,” என்கிறார்.

ஒரு திரைப்படத்தில் சேர்க்கப்படவிருந்த தன் பாடல், இறுதியில் சேர்க்கப்படாததையும் நினைவுகூறுகிறார். சில தினங்கள் கவலையாய் இருந்தாலுமே, எதற்குமே சளைக்காத அவருடைய இயல்பு அவரை மீட்டிருக்கிறது. “சில வெற்றிகளும், சில தோல்விகளும் இருக்கும் என்பது நான் அறிந்தது தான். அது தான் வாழ்க்கை”, என்கிறார்.

ஆதரவு

ஷிபானிக்கு பலத்த ஆதரவாய் இருப்பது அவருடைய தாய், சகோதரர் மற்றும் கணவர். நினைத்ததை அடையும் பழக்கத்தை அவருக்கு ஊட்டியது அவருடைய தாய் தான். “ஒரு வாய்ப்பிலிருந்து தான் இன்னொன்று கிடைக்கும் என்று அம்மா எனக்கு சொல்லியிருக்கிறார்”, என்கிறார் ஷிபானி.

image


முன் எடுத்து வைத்து நடக்க அவருக்கு உதவும் விமர்சனங்களில், அவருடைய சகோதரரின் விமர்சனங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. அவருடைய கணவரும் நடிகருமான ராஜீவ் ரோடா பற்றி பேசுகையில், “ என் இசையின் மதிப்பை எனக்கு உணர்த்தக் கற்றுக் கொடுத்திருக்கிறார். என் நேரத்திற்கும் மதிப்பில்லாத புராஜெக்ட்களையும், வணிக ரீதியாக சிறப்பில்லாத புராஜெக்ட்களையும் மறுக்க நான் கற்றிருக்கிறேன் ”

படைப்பாற்றலும், வணிகமும்

பெரும்பாலும், கலைஞர்கள் வணிகத்தில் தெளிவாக செயல்படாமல், பிறரால் சுரண்டப்படுவர். இந்தியாவில், இசைத் துறையில் மேலாளர்கள் பற்றாக்குறை இருப்பது மிகப் பெரிய பின்னடைவு. ஷிபானி, தன் பயணத்தை தொடங்கிய போது, அவருடைய கவனம் முழுக்க இசையின் மீது மட்டும் தான் இருந்திருக்கிறது.

image


இருப்பினும், கலைஞர்கள் தங்களை தாங்களே பாதுகாக்க ஆரம்பித்தவுடன், இந்திய இசைச் சூழலியலில் மாற்றம் ஏற்பட்டது. “இன்று இருக்கும் நிலவரப்படி, உங்கள் இசையை புரிந்துக் கொண்டு, அதை சந்தைப்படுத்தி, விளம்பரப்படுத்தி, உங்கள் ஸ்டைல், அடையாளம் மற்றும் கலை சிறப்படையும் வண்ணம் செயல்பட ஒரு வணிக நிபுணர் தேவை” என்று அறிவுறுத்துகிறார்.

உங்களுக்கு உண்மையாய் இருங்கள்

வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு அவர் சொல்வது, பிரபலம் ஆவதை விட, திறமைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதே. “ஒரு கலைஞராக, நீங்கள் ஜொலிக்க வேண்டுமென்றால், அது நிச்சயம் பயிற்சி மூலம் மட்டுமே சாத்தியம். உங்களுடைய தனித்தன்மையை கண்டுபிடித்து அதைத் தான் வளர்க்க வேண்டும். பிற பிரபலங்களின் ஸ்டைலை பிரதிபலிக்க முயற்சிக்கக் கூடாது.”

அரசும், பொதுமக்களும் இணைந்து குர்கவுனை எப்படி மேம்படுத்தலாம் என ஷிபானி பேசிய ‘தி குர்கவுன் ஸ்டோரியில்’ அவரை, யுவர்ஸ்டோரி சார்பாக சந்தித்தோம். நிகழ்ச்சியின் பகுதிகள் சில :


ஆக்கம்: தன்வி துபே | தமிழில்: ஸ்னேஹா

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags