பதிப்புகளில்

சீனப் பெருஞ்சுவரை ஊடுருவி இந்திய நிறுவனங்கள் கால் பதிக்க முடியுமா?

29th Apr 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

சோஃபியா கோப்லாவின் 'லாஸ்ட் இன் ட்ரான்ஸிலேஷன்' படத்தில் வரும் ஒரு காட்சி - பாப் ஹாரிஸ் டோக்கியோவுக்கு ஒரு படப்பிடிப்புக்காக வருகை தருவார். ஜப்பானிய இயக்குனர் பத்து வரிகளில் தரும் விளக்கத்துக்கு இவரது மொழிபெயர்ப்பாளரோ ஒரே ஒரு வரி மட்டுமே சொல்வார். பாப் குழம்பித் தவிப்பதில் அவரால் அந்த விளம்பர படப்பிடிப்பில் சரிவர உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே முடியாது போய்விடும்.

நமக்கு முன்பின் அறிமுகமானவர்கள் இல்லாத, வேற்றுக் கலாச்சாரம் உள்ள, அன்னிய மொழி பேசும் ஒரு நிலத்தில் விடப்படும் யாரும் இக்காட்சியோடு தன்னை இணைத்துப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் அப்படியான முற்றிலும் புதிய நிலத்தில் நீங்கள் தொழில் நடத்த நினைத்தால்? ஆசியக் கண்டத்தில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் சீனாவில் தொழில் தொடங்குவது மற்ற நாட்டினருக்கு மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. கூகிள், ஃபேஸ்புக் போன்ற அமெரிக்க ஜாம்பவான்களையே சற்று எட்டி நிற்க வைத்திருக்கிறது சீனா. ஆம், அதன் கெடுபிடிகளும், கடுமையான தணிக்கைகளும் மற்ற நாடுகளை கோட்டுக்கு வெளியிலேயே நிறுத்தி வைத்திருக்கிறது எனலாம்.

image


இன்மொபி (InMobi) எனும் மொபைல் விளம்பர தளம் தவிர மற்ற இந்திய நிறுவனங்கள் சீனாவை கவனமாக தவிர்த்தே வருகின்றன. சோஸ்டல் (Zostel) எனும் விடுதி நிறுவனம் ஆகஸ்ட் 2015ல் வியட்நாமில் கால்பதித்தது. லாஜிநெக்ஸ்ட் (LogiNext) எனும் டேட்டா அனலடிக்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் ஆறு மாதங்களுக்கு முன் தன் சேவையைத் துவங்கியது. மருத்துவ ஆலோசனைக்கான நேரம் ஒதுக்குவதற்கான தளமான பிராக்டோ (Practo )வும் தன் சேவைகளை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு விஸ்தரித்துள்ளது. ஆனால் சீனப் பெருஞ்சுவரோ அன்னிய தொழில் முனைவோருக்கு சற்றும் இளகாது எதிர்நிற்கிறது. சற்று கடினமானது எனினும், உழைப்புக்கு தக்க பலனை அளிக்கும் வாய்ப்புள்ள சீன மார்க்கெட்டை ஏன் இந்தியக் கம்பெனிகள் குறிவைப்பதில்லை?

சீனாவின் முக்கியத்துவம்

இந்தியாவில் விற்பனையாகும் பொருட்கள் பெரும்பான்மையும் உற்பத்தியாவது சீனாவில். இங்கிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி ஆகும் அளவென்று பார்த்தால் அது வெறும் 14.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் சீனாவிலிருந்து நமக்கு இறக்குமதி ஆவதோ 51பில்லியன் டாலர் பெறுமதியுள்ள பொருட்கள். சீனாவின் விசி நிறுவனம் இந்திய தொழில் முயற்சிகளில் முதலீடு செய்ய ஆர்வமாகவே உள்ளது. 2014-2015 காலகட்டத்தில் 72பில்லியன் மதிப்புள்ள முதலீடுகள் சீனா மூலம் இந்தியாவுக்கு கிடைத்தது. சிடிரிப் (Ctrip) - மேக் மை டிரிப் (Makemytrip), அலிபாபா (Alibaba) - ஸ்னாப் டீல் (Snapdeal) & பேடிஎம் (Paytm), டிடி கௌதி (Didi Kuaidi) - ஒலா (Ola), டென்செண்ட் (Tencent) - பிரக்டோ (Practo) போன்ற முதலீடுகள் அதில் அடக்கம். சோமோட்டோ (Zomato), புக்மைஷோ (Bookymyshow), பிக்பேஸ்கட் (Big Basket) போன்ற நிறுவனங்களும் இந்த முதலீட்டுப் பட்டியலில் காத்திருக்கின்றன. சீட்டா மொபைல்( Cheetah Mobile) நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் அலெக்ஸ் யோ அடுத்த மூன்று ஆண்டுகளில் தங்களது முதலீட்டை அதிகரிக்கப் போவதைப் பற்றி உற்சாகத்தோடு பகிர்கிறார்.

மெக்கின்ஸி நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி சீனாவின் வளர்ந்து வரும் உயர் மத்தியதர வர்க்கத்தினர் அடுத்த பத்தாண்டுகளில் நுகர்வு கலாச்சாரத்தின் முழுமையாக பங்கெடுப்பர் என்று தெரிவிக்கிறது. 2012ல் நகர்ப்புறங்களில் வீட்டு விற்பனையில் 14% இந்த உயர் மத்தியதர வர்க்கத்தினர் மூலமே நடந்தது. 2022ல் இந்த எண்ணிக்கை 54%மாக உயரும் என்று நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்களைக் கொண்டுள்ள நாடு என்ற பெருமையும் சீனாவுக்கே. எனவே தொழில்நுட்பத் தொடர்பான தொழில்களூம் அங்கு செழித்து வளர வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவைப் போலவே சீனாவிலும் மொபைல் மோகம் அதிகம். மொபைல் சார்ந்த தொழில்துறை சந்தைகளில் சீனா இந்தியாவின் அடியொற்றியே நடக்கிறது. யுவர் ஸ்டோரி குழுவினிரிடம் பேசிய இன்மொபி சைனா (InMobi China) நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜெஸ்ஸி யங், ”இங்கு பயனாளர்கள் பெரும்பாலும் மொபைல் மூலமாகவே எல்லா தளங்களிலும் இயங்க விரும்புகின்றனர். எனவே பணப்பரிமாற்றங்கள் கூட இப்போதெல்லாம் பெரும்பாலும் மொபைல் மூலமாகவே நடைபெறுகிறது. எனவே இந்தியாவிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய” என்கிறார். இந்த இன்மொபி நிறுவனமே இப்போதைக்கு சீனாவின் தலைசிறந்த மொபைல் விளம்பர தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் கடந்தாக வேண்டிய தடைகள்:

அன்னியர்களுக்கு சீனாவின் வியாபார உலகம் அவ்வளவு எளிதில் இடம் கொடுப்பதில்லை. அமெரிக்காவின் தலைசிறந்த பிராண்டுகளான ஆப்பிள், உபெர், ஸ்டார்பக்ஸ் போன்ற ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து சீனாவில் காலூன்றிய வேற்று நாட்டு நிறுவனங்கள் ஏதுமில்லை. இந்த ஜாம்பவான்களுமே கூட சீனாவில் தங்கள் தொழிலை நடத்துவதற்குத் தரும் விலை ரொம்ப அதிகம். எடுத்துக்காட்டாக உபெர் வருடத்திற்கு கிட்டத்தட்ட 1பில்லியன் டாலர் வரை நஷ்டத்தை சந்திக்கிறது. இந்த நட்டத்திற்கு காரணம் சீன நிறுவனமான திதி கௌதியுடன் போட்டியிட வேண்டியிருப்பதே ஆகும்.

சீன அரசின் கண்காணிப்பு, கடுமையான சட்டதிட்டங்கள் போன்றவையும் அன்னிய முதலீட்டை கடினமானதாக ஆக்குகின்றன. 2010ல் கூகிள் நிறுவனம் தங்கள் தேடு பொறியின் முடிவுகளை சீன அரசின் தணிக்கைக்கு உட்படுத்த மறுத்ததன் விளைவாக சீனாவிலிருந்து வெளியேறியது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் வரை அரசின் தணிக்கைக்கு உட்பட்டிருந்த கூகிள் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று எண்ணி, சீனாவிலிருந்தே வெளியேறியது. உள்ளூர் நிறுவனமான பைடு (Baidu) கூகிளின் தேவையை ஒரளவுக்கு சமாளிக்கிறது எனலாம்.

வாட்ஸப் (WhatsApp), ஃபேஸ்புக்(Facebook) என எல்லா சமூக வலைதள நிறுவனங்களின் விதியும் சீனாவைப் பொறுத்தமட்டில் ஒன்றுதான். விதிவிலக்காக சீன அரசின் கடும் சட்டதிட்டங்களுக்குட்பட்டு நல்ல பிள்ளையாக இன்று வரை காலம் தள்ளும் ஒரே நிறுவனம் லிங்க்ட் இன் (LinkedIn) ஆகும்.

image


மும்பையை தலைமையிடமாகக் கொண்ட லாஜிநெக்ஸ்ட் (LogiNext) நிறுவனம் 2013ல் சீனாவில் கால்பதிக்க நினைத்தபோது அதன் நிறுவனர்களான துருவில் ஷங்வியும் மனிஷா ரசிங்கானியும் சீனா சென்று அங்குள்ள நிலவரத்தைப் புரிந்து கொள்ள நினைத்தார்கள். ஆனால் அங்கு தங்கியிருந்த ஒரு மாதகால அனுபவங்கள் அவர்களை தங்கள் முயற்சியிலிருந்து பின்வாங்கவே வைத்தன. கூகிள் மேப் அப்ளிகேஷனும் வேலை செய்யவில்லை, உள்ளூர் ஆப் ஆன பைடுவோ சீன மொழியில் மட்டுமே இயங்குமென்ற நிலையில் மிகவும் தடுமாறிப் போயினர். ஷாங்காய் ஒரு பெருநகரத்துக்குரிய தோற்றத்தோடு இருந்தாலுமே கூட உற்பத்தி நடக்கும் தொழிற்பேட்டையில் யாருக்குமே ஆங்கிலம் புரிவதில்லை என்பதையும் துருவில் பதிவு செய்கிறார்.

சீனாவுக்கு ஏன் இந்த அலட்சியம்

ஃபினான்சியல் டைம்ஸின் கூற்றினபடி வீசேட் (WeChat)ன் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை 650 மில்லியனைத் தொடுகிறது. வாட்சப்பே இப்போதுதான் பில்லியன் பயனர்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் வீசேட்டின் வளர்ச்சி ஆச்சரியகரமான ஒன்றே. அலெக்ஸ் யோ கூறுவது போல சீனாவின் தொழில் முயற்சிகள் தொழில்நுட்ப ரீதியில் சற்றுப் பின்தங்கியிருந்தாலும் கூட வாடிக்கையாளர் சேவையில் மிகவும் தரம் வாய்ந்தவையாக உள்ளன.

பெரும்பாலானோர் இந்திய தொழில் துறை சீனாவில் தடம் பதிக்க இணையம் சார்ந்த தொழில்கள் ஏற்றதில்லை என்றே கருதுகின்றனர். பெயர் வெளியிட விரும்பாத சீன முதலீட்டாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ”இணையம் சார்ந்த எந்தவொரு தொழில் பிரிவிலும் சீன நிறுவனங்கள் அதன் இந்திய போட்டியாளர்களை விட மிகவும் வலிமையானவர்களாக இருக்கின்றனர். புது கண்டுபிடிப்புகள், சந்தைப்படுத்தும் யுக்திகள் என எல்லா கோணத்திலும் அவர்கள் அசைக்க முடியாத அமைப்புகளாக தலையெடுத்தாயிற்று. முதலீடுகளும் அவர்களுக்கு தடையற்று கிடைக்கிறது.” 

பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட சீட்டா மொபைல் (Cheetah Mobile) நிறுவனத்தின் 70 சதவீத வாடிக்கையாளர்கள் சீனாவுக்கு வெளியிலிருப்பவர்கள். “மற்ற நாடுகளில் உள்ள எங்கள் போட்டியாளர்களைக் காட்டிலும் எங்களுக்கு நிறைய வளங்கள் உள்ளன - ஊழியர்களின் குறைவான சம்பளம், முதலீட்டை திரட்டும் வசதி, தொழில்நுட்பத் திறமை உள்ள ஊழியர்கள் என அவை நீளூம்” என்கிறார் அலெக்ஸ் யோ.

சீனர்களின் பழக்கவழக்கங்கள் இந்தியர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவை என்பதை இங்கு வர நினைக்கும் நிறுவனங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன் ப்ளஸ் (One Plus)ன் நிறுவனரான பேடே லௌ கூறுகையில், “சீனாவுக்குள் காலெடுத்து வைக்க நினைக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே இங்கிருக்கும் நிறுவனங்களிலிருந்து எந்த வகையில் மேம்பட்ட சேவையை பயனாளர்களுக்கு தன்னால் வழங்க முடியும் என்பதை நன்கு சிந்தித்தபிறகே முடிவெடுக்க வேண்டும்”என்கிறார்.

சீனாவில் தொழில் தொடங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு

சீனாவின் சந்தையைப் புரிந்து கொள்ள அத்தேசத்தின் வளமான, நெடிய கலாச்சாரத்தை உற்று நோக்குவது மிகவும் அவசியம். “சீனர்கள் அதிகாரப் படிநிலைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எனவே மேலிருந்து கீழ் என்கிற வரிசையில்தான் நமது தகவல் தொடர்புகள் இருக்க வேண்டும். அதாவது மேலதிகாரியிடம் முதலில் பேசிய பிறகே அவருக்கு கீழிருப்பவர்களை நாம் அணுக வேண்டும்.” என்கிறார் இன்மொபி நிறுவனத்தின் ஜெஸ்ஸி யங்க்.

தரமான நிபுணர்களும், தகுந்த உள்ளூர் ஆதரவும் சீனாவில் ஜெயிக்க மிகவும் தேவை என்கிறார் அக்ஷய் மலிவல். இவர் சீனாவிலும், பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளிலும் தனது அடட்ஸ்போர்ட் (AddedSport) எனும் விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவர். சீனாவில் தொழில் தொடங்க நினைக்கும் இந்திய நிறுவனங்கள் அவசியம் செய்ய வேண்டியது தகுதியான, நம்பகமான உள்ளூர் பங்குதாரரை கண்டடைவதே என்கிறார் இவர்.

இன்மொபி நிறுவனமோ தகுந்த உள்ளூர் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தியதே தங்கள் வெற்றிக்கு காரணம் என்று சொல்கிறது. கூட்டுத் தொழில் என்பது சீன சந்தையின் இயல்பைப் புரிந்து கொள்ள உதவினாலும் கூட, தன்னிச்சையாக செயல்பட முடியாது செய்துவிடும் வாய்ப்பிருக்கிறது. தனித் தொழில் முயற்சி என்பது ஆரம்பத்தில் சற்று பிரமிப்பூட்டினாலும் கூட போகப் போக உள்ளூர் பங்குதாரர்களின் தலையீடின்றி செயல்பட முடிவது நல்ல பலனளிக்கிறது என்கிறார் அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஜெஸ்ஸி யங்க். உள்ளூர்வாசிகளில் திறமையுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து பணியமர்த்துவது மேலும் நல்ல லாபத்தை தருகிறது என்றும் ஜெஸ்ஸி தெரிவிக்கிறார்.

ஐடிஜி நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபாகர் இந்தியாவின் இப்போதைய மார்க்கெட் ஒரு காலத்தில் சீனாவின் மார்க்கெட் எப்படியிருந்து என்பதன் இன்னொரு வடிவமே என்கிறார். சீனாவில் ட்ரெண்ட் என்பது ஆறு மாதங்களொருக்கொரு முறை மாறி வருவது என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்கிறார் அலெக்ஸ் யோ.

இந்தியா மட்டும் போதுமா?

அமேசான் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஒ ஆன அமித் அகர்வாலை பேடே லௌ சந்தித்த போது அவர்கள் கம்பெனியின் அடிப்படைத் தத்துவம், அதன் இயங்குமுறைகளைப் பற்றியே அதிகம் பேசினர். அவற்றில் கருத்தொற்றுமை ஏற்பட்டபின்னரே முறைப்படி ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. சீனர்கள் எல்லைகளைத் தாண்டியும் கலாச்சாரப் புரிந்துணர்வு கொண்டவர்கள் என்று பெருமிதம் கொள்கிறார் பேடே லௌ.

உலகளாவிய சந்தையில் சாதிக்க விரும்பும் யாரும் சீனாவை தவிர்த்துவிட முடியாது என்பதே நிதர்சனம். சீனாவின் உள்ளூர்க் கலாச்சார்த்தை நன்கு புரிந்து கொள்வது இந்தியக் கம்பெனிகளுக்கு கட்டாயமான தேவை. இ-காமர்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறை போன்றவற்றிக்கு சீனாவில் வளமான எதிர்காலம் உண்டு. அதே போல் ஒரு வளரும் நிறுவனமாக இருந்தால் முதலில் இந்திய மார்க்கெட்டில் காலூன்றுவதே முக்கியம். அதற்குள் சீனாவிலும் நுழைய முற்பட்டால் குறிக்கோள் சிதறும். முதலில் ஒரு சந்தையில் நிறுவனத்தின் பெயரை நிலைநிறுத்தினால் இன்னொரு இடத்திற்கு தாவுவது எளிதாக இருக்கும்.

image


ஆனால் வெகுவிரைவில் நிலைமை மாறுவதற்கான நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. சீனாவும், இந்தியாவும் 2015ல் ஒரே ஜிடிபியைத் தான் எட்டியுள்ளன் - 6.9. இது இந்தியாவுக்கு நல்ல மதிப்பெண்தான், ஆனால் சீனாவுக்கு கடந்த வருடத்தை விடவும் பின்னடைவுதான் (2014ல் சீனாவின் ஜிடிபி 7.3 சதவீதம்). எனவே இன்னும் வெகுகாலத்திற்கு சீனா தன் கதவுகளை உலகிற்கு மூடியே வைக்க முடியாது. வெளிநாட்டு முதலீடுகளுக்கும், தொழில்நுட்ப உதவிகளுக்கும் சீனா வரவேற்பளித்தே ஆக வேண்டிய நாள் நெருங்குகிறது. லிங்க்ட் இன் தளத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே அத்தளம் தரும் வாடிக்கையாளர் சேவையைத் தரும் எந்த சீன நிறுவனமும் இல்லை என்பதுதான். பைடு, வீசேட், வீபோ என எல்லா நிறுவனங்களையும் சேர்த்தாலும் கூட அவர்களால் லிங்க்ட் இன்னின் சேவையை தோற்கடிக்க முடியவில்லை என்பதே யதார்த்தம். இதுவே நமக்கான படிப்பினையாகும். 1.7 பில்லியன் மக்கள் சீனாவில் இருக்கினறனர். அவர்கள் இது வரை அனுபவித்திராத புதிய சேவைகளை அவர்களூக்கு அறிமுகப்படுத்துவதே நமது வெற்றிக்கான தாரக மந்திரமாக இருக்க முடியும்.

ஆக்கம்: ஆதிரை நாயர் | தமிழ்லி: பாலகிருஷ்ணன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ஆங்கிலத்தை மட்டுமே நம்பிய காலம் இனி இல்லை, தொழிலில் மேம்பட தாய்மொழி போதுமே!

இளம் தலைமுறைக்காக தாய்மொழியில் பதிப்புச்சேவையை வழங்கி வழிகாட்டும் 'பிரதிலிபி'

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக