பதிப்புகளில்

ஃப்ளிப்கார்ட்டை தொடர்ந்து 6 மாத மகப்பேறு விடுப்பை அறிவித்தது 'மைக்ரோசாப்ட் இந்தியா'

YS TEAM TAMIL
7th Feb 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக நீட்டிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனை அடுத்து மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் தங்கள் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை இருமடங்காக அறிவித்துள்ளது. அதாவது மூன்று மாதங்களாக இருந்த விடுப்பை பிப்பரவரி 1, 2016 முதல் ஆறு மாதங்களாக உயர்த்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், புதிய தாய்மார்களுக்கு மூன்று மாதம் வரை ஊதியம் இல்லாத விடுப்பும் இரண்டாண்டுகள் வரை சற்றே நெகிழ்வான வேலை வசதிகளும் அமைத்துத்தரப்படும். மேலும் இந்த புதிய திட்டத்தின்கீழ், ஆண் ஊழியர்களுக்கு இரண்டு வாரகாலமும் குழந்தையை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு எட்டு வாரகாலமும் ஊதியத்துடன் கூடிய விடுப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“மகப்பேறு விடுப்பு நீட்டிக்கப்படுகிறது. வேலை நேரமும் தளர்த்தப்படுகிறது. பெண் ஊழியர்கள் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமன்படுத்த இது நிச்சயமாக பலனளிக்கும். மகப்பேறு காலம் முடிந்து பெண்கள் பணியிடத்துக்கு திரும்புகிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் முன்னேற உகந்ததாக இருக்கும்.” 

என்று யுவர் ஸ்டோரியுடனான நேர்காணலில் தெரிவித்தார் மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைத்தலைவர் ரோஹித் தாகூர்.

image


“புதிய தாய்மார்களுக்கு வலி மற்றும் வேதனையுடன் கூடிய பேறுகால அனுபவதிலிருந்து மீண்டு வர நிறைய நேரமும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. அத்துடன் பச்சிளம் குழந்தையை வளர்க்கவேண்டிய பொறுப்பும் கூடுகிறது. இது போன்ற நேரத்தில் அவர்கள் தங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.” என்கிறார் ரோஹித் தாகூர்.

________________________________________________________________________

தொடர்பு கட்டுரை:

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் ஆரோக்கியத்தை இழக்காமல் இருக்க 14 ஆலோசனைகள்!

________________________________________________________________________

மகப்பேறு விடுப்பு குறித்த வரலாறு

1961 மெட்டர்னிட்டி பெனிபிட் ஆக்டில் திருத்தம் செய்து தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு ஆறரை மாதங்களாக உயர்த்தப்படவேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் முடிவுசெய்தது. இது குறித்து பல பங்குதாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. WCD அமைச்சர் மேனகா காந்தியும் இதேக் கருத்துடன் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு எட்டு மாதங்களாக உயர்த்தப்பட வேண்டும் என்று விவாதித்தார். ஒரு WCD அதிகாரி,

“அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு எட்டு மாத மகப்பேறு விடுப்பு அவசியமானது. கேபினெட் செக்ரெடேரியட்டுக்கு இது குறித்து நாங்கள் நிச்சயம் விண்ணப்பிப்போம். குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைப்பதற்கும், ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்றவற்றை எதிர்த்து போராடவும் தாய்ப்பால் இன்றியமையாததாகும். குறைந்தது ஆறு மாதங்களாவது குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம்.” என்கிறார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறைந்தபட்ச மகப்பேறு விடுப்பாக 14 வாரங்களை பரிந்துரைக்கிறது. இருப்பினும் 18 வாரங்களாக நீட்டிக்கலாம் என்பது அவர்களது அதிகாரபூர்வமற்ற வாதம். தற்பொழுது 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்ட நிலையில், 18 வாரங்களுக்கு மேல் மகப்பேறு விடுப்பளிக்கும் முதல் 42 நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது. முன்பிருந்த நாலரை மாதகால விடுப்புக்கு பதிலாக அரசு ஊழியர்களுக்கும் மத்திய சிவில் சேவை (விடுப்பு) விதிகள் 1972, 2008-ல் திருத்தப்பட்ட விதியின்படி ஆறுமாதம், ஊதியத்துடன்கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

பல ஆய்வுகளின் அடிப்படையில்தான் மகப்பேறு விடுப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முதல் ஆய்வின் முடிவின்படி பெண்கள் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கும் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவதற்கும் குறைவான விடுப்பே முக்கியக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இரண்டாவது ஆய்வின்படி தாய்மார்களின் விடுப்பு நாட்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்ததோ, அவ்வளவு குழந்தை இறப்பு எண்ணிக்கை குறைவானது. மூன்றாவது ஆய்வின்படி, இந்தியாவில் 26 மில்லியன் குழந்தைகளில் 14.5 மில்லியன் குழந்தைகளுக்கு தாய்பால் குடிக்கும் வரம் கிடைப்பதில்லை.

குடும்ப வாழ்க்கையையும் பணியிடத்தையும் சமன்படுத்தும் புதிர்

தற்போது ஒரு முரண்பாடான நிலைமை காணப்படுகிறது. முன் காலத்தில் பெண்கள் வெளியில் வேலைக்கு செல்வது அவமானமாக கருதப்பட்டது. சமுதாயத்துக்கு பயந்து பெண்களின் வாழ்க்கைப் பாதை முடக்கப்பட்டது. தொழில்துறையில் சிறந்து விளங்கிய பிரபல இந்திரா நூயி மற்றும் நாயினா லால் கிட்வாய் போன்றோர்கூட தாங்கள் “மோசமான தாய்” என்று முத்திரை குத்தப்படுவதாக கலங்கினார்கள். நிலைமை மாறியது. மகப்பேறு விடுப்பு எனும் திட்டம் தொடங்கப்பட்டது. பெண்கள் தங்கள் குடும்பத்தையும் பணியிடத்தையும் சமன்படுத்த உதவியது. ஆனாலும் அவர்களை அவமானப்படுத்துவது நிற்கவில்லை. நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கிறார்கள், அவர்கள் குடும்பத்திற்குதான் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் போன்ற விமர்சனங்களுக்கு ஆளானார்கள்.

தற்போதுள்ள மகப்பேறு விடுப்பான மூன்று மாதங்கள் முடிந்து வெகுவிரைவில் பணிக்கு திரும்பவேண்டும் என்று பொறுமையிழந்து துடிக்கும் பெண்களுக்கானதில்லை இந்த புதிய திட்டம் என்கிறார் ஹெட் ஹண்டர்ஸ் இந்தியாவின் நிறுவனர் மற்றும் மேலாளர், கிரிஸ் லக்ஷ்மிகாந்த்.

“சந்தா கோச்சார்ஸ் மற்றும் மரிசா மேயர்ஸ் போன்ற கார்ப்பரேட் உலகைச் சேர்ந்தவர்களுக்கானதில்லை இந்த திட்டம்.” என்கிறார் அவர். இன்றைய பெண்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைதான் என்கிறார். சிறந்த நடைமுறைக்கேற்ற கொள்கைகளை அமைப்பதற்கு திட்டங்களை மாற்றியமைத்தால் போதாது, மக்களின் கருத்துகளிலும் நம்பிக்கைகளிலும் மாற்றம் ஏற்படவேண்டும்.

“குழந்தை வளர்ப்பில் கணவனின் பங்கு அதிகமில்லாத நிலையில் இந்திய பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு சற்று அதிகமாக தேவைப்படுகிறது. இதை குறைவான வேலை நேரமாக கருதக்கூடாது. எதிர்கால பொருளாதார அடிப்படையிலான நீண்டகால முதலீடாக கருதவேண்டும்.”

என்கிறார் செண்டர் ஃபார் சோஷியல் ரிசர்ச் அமைப்பின் தலைவர் ரஞ்சனா குமாரி.

பேறுகால விடுப்பை எட்டுமாதங்களாக உயர்த்தியதற்கு ஐஎல்ஓ எதிர்ப்பு தெரிவித்தது. பெண்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் என்றது. இது பிற்போக்குத்தனமானது, உணர்வற்றது பாரபட்சமானது என்றார் மேனகா காந்தி. இந்த பாரபட்சத்தை எதிர்த்து போராட முயற்சி மேற்கொண்டு ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம். 

“தாய்மார்களுக்கு பலனளிக்கும் பல கொள்கைகளை வகுத்துள்ளோம். அவர்களுக்கேற்ற சூழலை அமைத்துக்கொடுக்கிறோம். மகப்பேறு விடுப்பு குறித்தும் மற்ற விவரங்கள் குறித்தும் ஊழியர்களுக்கு எடுத்துரைக்க கட்டாய பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்திருக்கிறோம். ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் வாடிக்கையாளர்களும், எங்களுடன் இணைந்திருக்கும் பங்காளர்களும் இதன் மூலம் பயன்பெறலாம்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை சார்ந்த கலாசாரத்தை பணியிடத்தில் ஊக்குவிக்கும் வகையில் 'இன்க்லூஷன் வீக்' நடத்தப்படுகிறது. நாடக குழுக்கள் மூலம் ஆண்-பெண் பாரபட்சம் குறித்த விழிப்புணர்வை ஊழியர்களுக்கு ஏற்படுத்துவதை புதிய முயற்சியாக மேற்கொண்டுள்ளோம்.

பேறுகால விடுப்பு முடிந்து பெண்கள் பணிக்கு திரும்பும்போது, இடைவெளி காரணமாக அவர்களின் செயல்திறன் பாதிக்கக்கூடும். இதற்காக 'ரிடர்ன்ஷிப் ப்ரோக்ராம்' நடத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு ப்ரோக்ராம் தான் ஸ்பிரிங்போர்ட். இதன் மூலம் ஊழியர்கள் இலகுவாக மீண்டும் முழு நேரமாக வேலைகளில் ஈடுபட பயிற்சியும் வழிகாட்டலும் அளிக்கப்படுகிறது. வீட்டிலிருந்தே பணிபுரிவது, பகுதி நேரமாக பணிபுரிவது போன்ற வாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது.

மற்ற நிறுவனங்களின் இயக்கம்

ஏழு மாதங்களுக்கு முன்பே, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கர்பமான பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 24 வார விடுப்பும் நான்கு மாத தளர்த்தப்பட்ட பணி நேரங்களும் அறிவித்தது. மேலும் பிரசவத்திற்கான செலவில் ஒரு பகுதியையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. 

2015-ல் ஆக்சென்சர் இந்தியா நிறுவனமும் தங்கள் பகுதிநேர மற்றும் முழுநேர ஊழியர்களுக்கு ஊதியத்துடன்கூடிய மகப்பேறுவிடுப்பை 12 வாரங்களிலிருந்து 22 வாரங்களாக (5 மாதம்) உயர்த்தியுள்ளது. இதேப்போல ஆறு மாத விடுப்பை அறிவித்த சில நிறுவனங்கள் கோட்ரேஜ், HCL டெக்னாலஜிஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலிவெர் (HUL). SAP லேப்ஸ் மற்றும் கூகுள் நிறுவனமும் 20 வார ஊதியத்துடன்கூடிய விடுப்பை அறிவிக்கவில்லை. ஆனால் கூகுள் நிறுவனத்தில், கர்பமான பெண்களுக்கு பங்கு மற்றும் போனஸ் அளிக்கப்படுகிறது. மேலும் ரத்தசம்பந்தமில்லாத பெற்றோர், ஓரின தம்பதிகள், குழந்தையை தத்தெடுக்கும் தம்பதிகள், வாடகைத்தாய் போன்றோருக்கும் இந்த கொள்கை பொருந்தும்.

யுவர் ஸ்டோரியின் கருத்து

மேனகா காந்தி சமூக அளவில் மாற்றத்தை ஏற்படுத்த போராடுகிறார். தொழிலாளர் அமைச்சகம் கொள்கை அளவில் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது. பெண் ஊழியர்களுக்கான முற்போக்கு கொள்கைகளில் முன்னனி நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது. இருப்பினும் கொள்கைகளைத் தாண்டி மனிதனின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டாலன்றி மொத்த முயற்சியும் பயனற்றதாகிவிடும். மேலும் இந்தியாவில் இது போன்ற கொள்கைகளைப் பொருத்தவரை ஒருவரிடன் காணப்படும் மாற்றம் அடுத்தவரிடம் போய் சேர்வதில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல பெண்கள் குடும்பத்தைத் தவிர்த்து வேலைக்கு செல்வதற்காக அவமானப்படுத்தப்பட்டார்கள். 

இந்த கலாச்சாரம் மாறி இப்பொழுது பெண்கள் மகப்பேறு விடுப்பு எடுத்து குடும்பத்துடன் தற்காலிகமாக இருந்தாலும், பணியைத் தவிர்த்து குடும்பத்துக்கு முக்கியத்துவமளிக்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் எல்லா பிரச்சனைகளையும் எதிர்த்துநின்று சமாளித்தாலும், சமுதாயம் அவர்களை குற்றம்சாட்டுகிறது. இதை பொய்யாக்க, பல கொள்கைகளை மாற்றியமைத்து அவற்றை மக்களுக்கு எடுத்துரைத்து பணியிடத்தில் பெண்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ஆக்கம் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற பெண்கள் பணி இடைவேளை குறித்த தொடர்பு கட்டுரைகள்:

நீண்ட இடைவேளைக்கு பின் பணியைத் துவங்கும் தாய்மார்களுக்கு 10 உற்சாகக் குறிப்புகள்!

வீடு-வேலை சமன்பாட்டை பெண்களுக்கு எளிதாக்கிய 'ஷீரோஸ்.இன்'

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக